சின்ன விஷயங்களின் 25 வருடங்கள்

ஜி.குப்புசாமி

அருந்ததி ராயின் நாவல் God of Small Things வெளிவந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகின்றன. மிகப் பரவலான கவனத்தை இந்நாவல் பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தது இதற்குக் கிடைத்த புக்கர் பரிசு. சர்வதேச அளவில் மிகவும் பெருமைமிக்க மேன் புக்கர் பரிசை ஓர் இந்திய நாவல் வெல்வது அதுவே முதல்முறை.

நாவலின் களம் கேரளத்தில்  அய்மனம் என்ற  சிறு நகரம். மீனச்சல் என்ற காட்டாறு நாவலின்  பாத்திரமாகவே வருகிறது. மிகவும் துயரார்ந்த சம்பவங்களுக்கு  ஆறு சாட்சியாக இருக்கிறது. சிலவற்றில் பங்கெடுத்துக் கொள்ளவும் செய்கிறது. அந்த துர்நிகழ்வுகளுக்குப் பிறகு எஸ்தா என்ற எஸ்தப்பன் கல்கத்தாவில் இருக்கும் அவனுடைய அப்பாவிடம் தனியாக மெட்ராஸ் மெயிலில் அனுப்பிவைக்கப் படுகிறான். இருபத்தி மூன்று வருடங்கள் கழித்து அய்மனத்துக்கே திருப்பி அனுப்பப்படுகிறான். எஸ்தாவை பல வருடங்கள் கழித்து சந்திக்கும் அவனுடைய இரட்டைச் சகோதரி ராஹேலுக்கு அடையாளம் தெரியாத அளவுக்கு அப்போது  மாறிப்போயிருக்கிறான். உருவத்தில் அல்ல, இயல்பில்.

ஆனால் 25 வருடங்கள் கழித்து அவனுடைய கதையை இப்போது மீண்டும் திரும்பப் படிக்கும்போது, முதல் வாசிப்பு பயணித்த அதே அலைவரிசை சற்றும் பிறழாமல் இப்போதும் இருப்பதை உணர முடிகிறது. இந்நாவலை உலகத்திலேயே அதிக முறை படித்தவன் என்றும், எஸ்தாவின் இணைப் பிரதி நான்தான் என்றும் நினைத்துக்கொண்டிருந்த எனக்கு இது வியப்பை உண்டாக்கவில்லை.

நாவல் வெளிவந்த வருடம் 1997. ஆனால் நான் வாசிக்க எடுத்தது ஒரு வருடம் கழித்து. ‘வானத்திலிருந்து தலைமேல் விழுந்த சம்மட்டியைப்போல  என்னைத் தாக்கிய நாவல் அது. அதற்குமுன் எந்த நாவலும் அந்தளவுக்குதனிப்பட்டமுறையில் பாதித்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால், அந்த நாவலின் சம்பவங்களைப்போல என் வாழ்வில் எதுவும் நடந்ததேயில்லை.

 

ஒரு நாவலோடு வாசகன் அத்தனை நெருக்கமாக ஒன்றிப்போவதை கிறுக்குத்தனம் என்று புறந்தள்ளிவிடவும் முடியாதல்லவா? அந்நாவலுக்கும் எனக்கும் தர்க்கபூர்வமாக  நிரூபிக்க முடியாத பிணைப்பு தொடர்ந்துகொண்டே இருந்தது. 1998ஆம் வருடம் முழுக்க God of Small Things – மட்டுமே படித்துக்கொண்டிருந்தேன். முதலிலிருந்து கடைசிவரை நான்கைந்துமுறை. பின்பு, அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும், ஏதோவொரு பக்கத்தை விரித்து வைத்துக் கொண்டு இரவு உணவுக்கு மனைவி அழைக்கும்வரை. இந்த விநோத வழக்கம் 99ஆம் ஆண்டின் பாதி வரை தொடர்ந்தது. கடைசியில் பொறுக்க முடியாமல் மனைவி கேட்டேவிட்டார்.  ஆமாம், திரும்பத் திரும்பப் படித்துக்கொண்டிருக்கிறேன்என்றேன். “ஏன், புரியலையா?” என்று கேட்டார்! அதன் பிறகுதான் வாசிப்பை நிறுத்தினேன்.

இந்த நாவலில் அப்படி என்ன இருக்கிறது என நாவலை வாசித்தவர்களும், வாசிக்காதவர்களும் கேட்கக்கூடும். சங்கீதத்தைப் போலவே இலக்கியத்திலும் காரணகாரியங்களை மீறி ஒரு பாடலோ, ஒரு படைப்போ நமக்கே நமக்கானதென்று சொந்தமாகிவிடுகிறது. இந்த நாவல் எனக்கே எனக்கானதென்று நம்பிக்கொண்டிருந்தேன்.

God of Small Things நாவலைப் பொறுத்தவரை அது ஒரு நேர்க்கோட்டில் செல்லும் நாவல் அல்ல. நாவலின் முதல் அத்தியாயத்திலேயே இருபத்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறார்.  பிறகு வரும் அத்தியாயங்களில் முதல் அத்தியாயத்தில் சொல்லப்பட்ட விஷயங்களே விரிவாக சொல்லப்படுகின்றன. நாவலின் ஆரம்பத்திலேயே மொத்த கதையும் தெரிந்துவிடுவதால் ஒவ்வொருவருக்கும் அடுத்து நடக்கப்போவது  தெரிந்தே இருக்கிறது. ஆனால் கதையில் சுவாரஸ்யம் குறைவதில்லை. எஸ்தா, ராஹேல் என்ற அச்சிறார்களின் உலகம் அவர்களுடைய பார்வையில், அவர்களுக்கே உரித்தான மொழியில் சொல்லப்படும்போது அவர்களின் துயரமும் சந்தோஷங்களும் நம்முடையவையாகிவிடுன்றன.

மிகவும் புத்திசாலிக் குழந்தைகள் அவர்கள். சுற்றியுள்ள பெரியவர்களை எரிச்சல்படுத்தும் அளவுக்கு புத்திசாலிகள். அவர்களுக்கும், அவர்களின் தாய் அம்முவுக்கும் வாய்த்த அன்பற்ற, கரிசனமற்ற சூழல் அவர்களுடைய கற்பனைகளுக்கும், குறும்புகளுக்கும் தடையாக இருப்பதில்லை. அவர்களுக்கு ஆங்கிலப் புலமை அசாதாரணமாக இருக்கிறது. சொற்களை வைத்து, குறும்பு விளையாட்டு விளையாடுகிறார்கள்.  எல்லா சொற்களையும் வலம், இடமாக படிக்கிறார்கள். இந்தத்தலைகீழ்விளையாட்டு நாவலில் நகைச்சுவைபோல சொல்லப்பட்டாலும், அதில்  அவர்களின் நிராதரவான நிலையும், நிச்சயமற்ற எதிர்காலமும் தோய்ந்திருக்கிறது. அவர்களின் விளையாட்டுகளைப் போல வெகு சீக்கிரத்திலேயே அவர்களுடைய வாழ்க்கையும் தலைகீழாய் புரட்டிப் போடப்படுகிறது. அறியா வயதில் இருக்கும் அப்பாவிச் சிறுவனுக்கு பாலியல் அத்துமீறல் நடக்கிறது, சமூகத்தின் சட்டத்திட்டங்களை மீறிய அவர்களுடைய அம்மாவின் காதல் பல துர்ச்சம்பங்களுக்குக் காரணமாகிறது, தாழ்த்தப்பட்டவனுக்கு  பொதுவுடமைத் தோழர்களும் துணை நிற்பதில்லை, போலீஸ் அராஜகத்தில் அந்த அப்பாவி கொல்லப்படுவதோடு ஒரு குடும்பமும் சிதைகிறது.

 

இந்நாவல் உலக அளவில் எல்லோரின் கவனத்தையும் ஈர்த்ததற்கு முதல் காரணம், அருந்ததி ராயின் அலாதியான மொழிநடை. இவ்வளவு கனமும், துயரமும் செறிந்த நாவலை இவ்வளவு வேடிக்கையும், குறும்பும் கலந்த வண்ணமயமான ஆங்கிலத்தில் எழுத முடியுமா என்ற வியப்பை பல ஆங்கில, அமெரிக்க எழுத்தாளர்கள், விமரிசகர்களிடம் எழுப்பிய நடை. எளிதில் வகைப்படுத்த முடியாத நாவலாசிரியராகவே அவர் பலருக்கும் தெரிந்தார்.  வேண்டுமென்றே இலக்கணப் பிழையான வாக்கியங்களை எழுதுவது,  தவறான இடங்களில் தலைநீட்டும் தலைப்பெழுத்துக்கள், வினைச்சொற்களாக உருமாறும் பெயர்ச்சொற்கள் என அருந்ததி ராய் நடத்தும் வார்த்தை விளையாட்டு சிலருக்கு கவன ஈர்ப்பு உத்திகளாகத் தெரிந்தன. அவரை விமர்சிப்பதற்கு அவற்றைப் பயன்படுத்திக் கொண்டார்கள்.  .எம்.எஸ். நம்பூதிரிபாடுவை, ராய் விமர்சிப்பதால் நாவலை எதிர்ப்பதா, அல்லது சர்வதேச அங்கீகாரமும், விருதுகளும் அவர்களின் சொந்தச் சகோதரிக்குக் கிடைத்திருப்பதால் பாராட்டுவதா என்ற குழப்பம் கேரள மக்களிடையே நீடித்தது. மேலும் அச்சமயத்தில் அருந்ததி ராயின் தாய் , மேரி ராய் பெண்களுக்கு சமமான சொத்துரிமை தேவையென்று தொடுத்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்ததால் கொதிப்படைந்த சனாதனவாதிகள் கோபத்தை மகளின் மீது காட்டத் தொடங்கினர்.  நாவலில் இடம்பெற்றிருந்த பல வரிகளை  சுட்டிக்காட்டி, இது மிகவும் ஆபாசமான நாவல், தடைசெய்யவேண்டும் என்று வழக்கு தொடுத்தனர். ஆனால் அத்தனை தடைகள், சர்ச்சைகளையும் மீறி , இலக்கியத்தகுதி ஒன்றின் பலத்தைக்கொண்டே இம்மகத்தான படைப்பு காலத்தை வென்று நிற்கிறது.

                                    *******

கணக்கற்ற முறை வாசித்து, நாவலின் அத்தனை வரிகளும் அருந்ததி ராயின் குரலிலேயே தமிழில் அடிமனதில் பதிந்திருந்த எனக்கு,  சற்றும் எதிர்பாராத விதமாக தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு  கிடைத்தபோது, நானாகத் தேடிச்செல்லாமல் அந்த நாவலே என்னோடு பிணைத்துக்கொள்ள வந்திருப்பதாகத் தோன்றியது. நான் மிக எளிதாக மொழிபெயர்த்து முடித்த நாவல் அது. மிகவும் சிக்கலான மொழிநடையைக் கொண்ட நாவலாகக் கருதப்படும் அதனை வெறும் ஆறே மாதத்தில் சொந்த நாவலை எழுதுவதைப்போல மொழிபெயர்த்து முடித்தேன்.

அருந்ததி ராயின் ஆங்கிலம் வரிக்கு வரி தனது முகத்தை மாற்றிக்கொள்ளும். மிகத் தீவிரமான நடையில் எழுதப்பட்ட வரிக்கு அடுத்து, மிகக்கூர்மையான பகடியோ, சிலேடையோ பளிச்சிடும். எஸ்தாவைப் பின்தொடரும் வரிகளில் அவனது குறும்புத்தனம் ராயின் மொழியிலும் பிரதிபலிக்கும். ஒன்றிரண்டு இடங்களில் அல்ல, நாவல் முழுக்க இந்த விநோதப் பிரயோகங்கள் வந்துகொண்டே இருக்கும். இத்தகைய இலக்கணப் பிழையான ஆங்கிலத்தைத் தமிழ் மட்டுமல்ல, எந்த மொழியிலும் மூலப்பிரதியின் தொனியிலேயே மொழிபெயர்ப்பது மிகச்சவாலான ஒன்றுதான். இந்தச் சவால் எனக்கு மிகவும் சுவாரஸ்யமாகவும், எளிதாகவும் இருந்தது.

 

நாவல் வெளியீட்டுக்கு சில மாதங்களுக்கு முன் முதல்முறையாக அருந்ததி ராயை சந்தித்தபோது அவருடைய நாவல் எனக்குள் இறங்கியிருக்கும் மாயத்தை மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டிருந்தேன். எஸ்தாவைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தபோது அருந்ததியின் அகலமான கண்களில் நீர்த்திரையிடுவதைக் கண்டு திடுக்கிட்டு பேச்சை வேறு திசைக்கு மாற்றினேன். அனுமதிக்கப்படாத எல்லைக்குள் பிரவேசித்துவிட்டேனோ என்று சங்கடமாக இருந்தது. ஆனால் அவர் அவர் அவ்வாறு நினைக்கவில்லை என்பது அடுத்த சில நிமிடங்களிலேயே தெரிந்தது. அவரது புதிய கட்டுரைத் தொகுப்பை எனக்கு அளிக்கும்போது, முதல் பக்கத்தில் ‘ To Kuppuswamy, Who is inside my head’ என்று எழுதிக் கையெழுத்திட்டுத் தந்தார்.

ஆனால்சின்ன விஷயங்களின் கடவுள்வெளியீட்டு விழாவில்  எனது பிரதியில் அவர் பொறித்துத் தந்த வாசகத்தைக் கண்ணுற்றபோது என் கண்களில் நீர்த் திரையிட்டது:  For Kuppuswamy Esthappen, With Love, Arundhati Rahel.

                                      ************

இருபத்தைந்து வருடங்கள் கடந்துவிட்டன. முதல் நாவல் வெளிவந்து இருபது ஆண்டுகள் கழித்து வெளிவந்த அவரது அடுத்த நாவலையும், இன்னொரு கட்டுரைத் தொகுப்பையும் மொழிபெயர்த்துவிட்டேன். ‘சின்ன விஷயங்களின் கடவுளுக்குப் பிறகு வெவ்வேறு ஆசிரியர்களின் பத்து நூல்களை மொழிபெயர்த்திருக்கிறேன். ஆனாலும் எனது ஆகச்சிறந்த மொழிபெயர்ப்பாகசின்ன விஷயங்களின் கடவுளை  மட்டுமே சொல்வேன். படைப்பாளியின் தலைக்குள்ளிருக்கும் மற்றொரு எஸ்தப்பனால் மொழிபெயர்க்கப்பட்ட பிரதியை வேறொன்று எப்படிக் கடந்து செல்ல முடியும்?

                       _______________________________________

  

 

 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாணவனின் மனைவி

எட்கார் கெரெட் - குறுங்கதைகள்

ஒரு சின்ன நல்ல விஷயம் - ரேமண்ட் கார்வர்