பேரிடர்கால
வாசிப்புக்கான சில பரிந்துரைகள்
ஜி.குப்புசாமி
விடுமுறைகள் நமக்களிக்கும் சாத்தியங்கள் அளவற்றவை. பணிநாட்களில்
செய்யமுடியாமல் ஒத்திப்போட்ட வேலைகள், அல்லது வெறுமனே சோம்பிக்கிடந்து பகற்கனவு, அல்லது
வேலைகளை அடுத்த விடுமுறை தினத்துக்கு ஒத்திப்போடுவது என விடுமுறை தினங்கள் என்பவை சுகமாக
அனுபவிக்கவும், ஓய்வெடுக்கவும் நமக்கு அளிக்கப்படுபவை.
ஆனால் இப்போது நம்மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்த வீடடங்கு,
விடுமுறை அல்ல. கிட்டத்தட்ட வீட்டுச்சிறை. அல்லது கண்ணுக்குத் தெரியாத எதிரியின் படையெடுப்புக்கு
அஞ்சி தலைமறைவாய் ஒளியவைத்திருக்கும் பதுங்கல். இந்த நாட்களின் அமைதியில் நம்மால் லயித்திருக்க
முடிவதில்லை. எந்நேரமும் தீவினை ஒன்று தெருமுனையில் காத்திருப்பதுபோன்ற பிரமை பீடித்திருக்கையில்
விடுமுறையின் சுகத்தை அனுபவிக்க முடிவதில்லை, ஒத்திவைத்த வேலைகளை கவனிக்க முடிவதில்லை,
சங்கீதம் கேட்க விருப்பமிருப்பதில்லை, தொலைக்காட்சியில் மனம் குவிவதில்லை,
இன்று உலகெங்கும் மனிதர்கள் அனுபவிக்கும் சித்திரவதைதான் இது.
நம்மை நாமே இந்த அழுத்தத்திலிருந்து மீட்டெடுத்துக்கொள்ள பற்பல ஆலோசனைகள் உளவியல் நிபுணர்களால்
இப்போது தரப்பட்டுவருகின்றன. யோகாசனத்துக்கு
அடுத்து நிபுணர்களால் பரிந்துரைக்கப்படுவது வாசிப்பு.
புத்தகங்களைப்போன்ற சரணாலயம் எதுவுமில்லை. புத்தகங்களைப்போல
நம்மை உற்சாகப்படுத்தும், எத்தகைய ஆழத்திலிருந்தும் மனதை மீட்டெடுத்து நம்பிக்கையளிக்கும்
தோழன் யாருண்டு? புத்தகங்கள் பொய்யான மயக்கத்தில்
ஆழ்த்தி கவலையை தற்காலிகமாக மறக்கவைக்கும் லாகிரி வஸ்துக்கள் அல்ல. துவண்டிருக்கும்
உள்ளத்துக்கு புத்தகங்களைப்போல அருமருந்து ஏதுமில்லை.
ஆனால் இப்போது நம்மைச் சூழ்ந்திருக்கும் இப்பேரிடர் காலத்தில்
எப்படிப்பட்ட நூல்களை வாசிப்பது? எத்தகைய நூல்கள் நமக்குள் நம்பிக்கை ஒளியை நிரப்பக்கூடியவை?
இந்தத் தேர்வில்தான் நாம் கவனமாக இருக்கவேண்டியிருக்கிறது. எவ்வளவு உன்னதமான இலக்கியமென்றாலும்
இருள் கவிந்துவரும் இந்நாட்களில் நம் அச்சங்களை மேலும் அதிகரித்துவிடாதவொன்றாக வாசிக்கும்
நூல் இருக்கவேண்டும். நாம் இப்போது அனுபவித்து வரும் சிக்கலைப்போலவோ, அல்லது அதைவிட
அதிகமான துயரங்களையோ விஸ்தாரமாக வர்ணிக்கும் நூல்கள் நம்மை மேலும் சோர்விழந்துபோகச்
செய்துவிடலாம்.
இந்நிலையில், நான் வாசிப்பதற்கு தேர்ந்தெடுத்து என் மேசையில்
எடுத்து வைத்திருக்கும் நூல்களை அறிமுகம் செய்கிறேன். இவற்றை என் பரிந்துரைகள் என்றும்
எடுத்துக்கொள்ளலாம். என் தேர்வு தமிழ் நூல்கள்தான். ஆங்கில வாசிப்புக்கு ஏனோ மனம் ஒப்பவில்லை.
மேலும் அவை அனைத்துமே நான் ஏற்கனவே படித்த புத்தகங்கள்.
தெரியாத பிசாசை தலைமேல் ஏற்றிக்கொள்வது அபாயகரமானது. எந்தெந்த
புத்தகங்கள் என் கண்ணில் படும்போதெல்லாம் எனது உள்விழிகள் அனைத்தும் அகல விழித்துக்கொள்கின்றனவோ,
என் மன உயரம் மானசீகமாக நூறடி உயர்ந்துவிடுகிறதோ, இவ்வுலக மக்கள் எல்லோரையும் அன்பால்
அரவணைத்துக்கொள்ளவேண்டுமென்று எந்தப் புத்தகம் தோன்றவைத்து என்னை உன்னதமானவனாக்குகிறதோ,
அந்தப் புத்தகங்களை மட்டும் மறுவாசிப்புக்காக எடுத்துவைத்து வாசித்துக்கொண்டிருக்கிறேன்.
இது என்னைப் பொறுத்தவரை ஒருவித உளவியல் சிகிச்சை.
இச்சிகிச்சையில் சில நூல்கள் என்னை தேவனாக்குகின்றன. கடவுளுக்கு அருகில் கொண்டுசெல்கின்றன.
என் மனதின் அழுக்குகள், கறைகளை துடைக்கின்றன. இவை எனக்கு வெறும் கதைப்புத்தகங்கள் அல்ல,
புனித நூல்கள்.
இப்போது என் கையில் இருப்பது ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம். இந்நாவலின்
ஹென்றி என் ஆதர்சம். என் பதினேழு வயதில் எனக்குள் வியாபிக்கத் தொடங்கியவன் ஹென்றி.
ஒரு பரிபூர்ண மனிதன். கிட்டத்தட்ட சாத்தியம் இல்லாத அளவுக்கு உன்னதமானவன். ஆனால் அவனைப்போல மாறிவிடமுடியும் என்ற நம்பிக்கையையும்
அளிப்பவன். ஹென்றியாக மாறிவிடுவது மிக எளிதான காரியமென்றும், அவனைப்போல் இல்லாமல் சாதாரணர்களாக
இருப்பதுதான் கடினமான விஷயம் என்றும் நாவலின் முடிவில் தோன்ற வைப்பவன். என் புனித நூல்களில்
முதன்மையானது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்.
எனது அடுத்த வேதநூலாக இருப்பது லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
என்ற வழக்கறிஞரை மகாத்மாவாக ஆக்கிய நூல்களில் ஒன்று. ‘என் ஆன்மீக குரு’ என்று காந்தி
அறிவிக்கும் தல்ஸ்தோயின் கடைசி பெரும் படைப்பு புத்துயிர்ப்பு. நெஹ்லூதவ் ஓர் உயர்குடி பிரபு. அவரது இளம்பிராயத்தில்
பண்ணையில் பணியாற்றவந்த கத்யூஷாவை காதலித்து, பின் கைவிட்டபிறகு அவளை பல வருடங்கள்
கழித்து விலைமகளாக குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில்
நிறுத்திவைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார். அந்த வழக்கில் நெஹ்லூதவ் ஒரு ஜூரியாக
நியமிக்கப்பட்டிருப்பது அவரது குற்றவுணர்வை மேலும் அதிகரிக்கிறது. அதன்பிறகு அவர் அடைகின்ற
மாற்றங்கள் இந்நாவலை மகத்தான படைப்பாக்குகின்றன. மனிதன் உண்டாக்கிய விதிகள், ரஷ்ய சர்ச்சுகளின்
செயல்பாடுகள், கடவுளின் புனித ஆணைகள் என்பவை என்ன என்பதையெல்லாம் தல்ஸ்தோய் கேள்விக்குட்படுத்துகிறார்.
ஒருவகையில் இந்நாவல் ஓர் ஆன்ம பரிசோதனை. வாசிப்பின்போது
நமக்குள் பல்வேறு கதவுகளை தல்ஸ்தோய் திறந்துகொண்டேசெல்கிறார். ஒன்றைமட்டும் நிச்சயமாகச்
சொல்லலாம். இந்நாவலை வாசிக்க ஆரம்பித்தபோது இருந்த வாசகன் வாசித்து முடித்தபோது பழைய
மனிதனாக இருக்கமாட்டான். அந்த மாற்றமடைந்த மனிதனின் அக உயரம் தல்ஸ்தோய் என்ற மகா கலைஞனால்
பல அடிகள் உயர்ந்திருக்கும். ஒவ்வொரு வாசிப்பிலும் நம்மை புத்தாக்கம் செய்துகொண்டே
இருக்கும்.
நான்காண்டுகளுக்கு முன்தான் ஒரு நாவல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வந்தது. ஆனால் கிட்டத்தட்ட கடந்த
நாற்பதாண்டுகளாக இந்த ஆச்சரிய படைப்பு தமிழிலக்கிய உலகில் பேசப்பட்டும், வியந்தோதப்பட்டும்
வந்திருக்கிறது. இந்நாவலாசிரியரின் பெயர் நாவலை அதற்குமுன் கண்ணாலும் பார்த்திராதவர்களுக்கும்
பரிச்சயமாகியிருந்தது. தனிமையின் நூறு ஆண்டுகள்
என்ற அப்படைப்பு உலகெங்கும் பல கோடி வாசகர்களின் ஆகச்சிறந்த செல்லம். காப்ரியெல் கார்சியா
மார்கேஸ் அளவுக்கு சென்ற நூற்றாண்டில் நேசிக்கப்பட்ட நாவலாசிரியர் இருந்திருக்க முடியாது.
எழுதப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை மாறிவரும் ஒவ்வொரு தலைமுறை வாசகனுக்கும் பிரியமான
படைப்பாக இருந்துவரும் இந்நாவலைத்தான் இந்நாட்களில் மீண்டும் மீண்டும் எடுத்து படித்துக்கொண்டே
இருக்கிறேன். பல வருடங்களுக்கு முன் ரபாசாவின் ஆங்கில மொழிபெயர்ப்பு அளித்த அதே சிலிர்ப்பு
ஞாலன் சுப்பிரமணியன் மற்றும் சுகுமாரனின் தமிழ் மொழிபெயர்ப்பில் கிடைக்கிறது. ஆனால் இந்நாவலை வாசிக்க முற்படும் நண்பர்களுக்கு
ஓர் எச்சரிக்கை. என்னைப்போலவே அறைக்கதவை இறுக மூடிக்கொண்டு படிக்கவேண்டும். மார்கேஸ்
என்ற மந்திரவாதி நாவலின் வரிகளிலிருந்து வீசியெறியும் ஆச்சரியங்கள் உங்களை ஆஹாவென்று
வியப்பொலி எழுப்பவைக்கலாம், வெடித்து சிரிக்க வைக்கலாம், இருக்கையிலிருந்து உங்களை
மாயம்போல கூரை வரை இந்நாவல் உயர்த்திச்சென்றாலும் ஆச்சரியமில்லை. மேலும் நானூறு பக்கங்கள்
கொண்ட இந்நாவலை படித்து முடித்ததும் மீண்டும் முதலிலிருந்து படிக்க உந்துதல் ஏற்படும்.
இந்த வகையில் நீங்கள் மார்கேஸுக்கு ‘அடிக்ட்’ ஆவதற்கும் வாய்ப்பிருப்பதால் கவனமாக இருக்கவேண்டும்.
மார்க்கேஸின் இந்த மாய நாவலுக்கு இணையாக உலகெங்கும் வாசகர்களால்
நேசிக்கப்பட்ட ஒரு ‘குட்டி’ நாவல் அந்த்வான் செந்த்-எக்சுபெரியின் குட்டி இளவரசன். எக்சுபெரி இரண்டாம் உலகப்
போரில் பிரெஞ்சு விமானப்படையில் விமானியாகப் பணியாற்றியவர். குட்டி இளவரசன் குழந்தைகளுக்காக
எழுதப்பட்ட நாவல். ஆனால் ஆலீஸின் அற்புத உலகத்தைபோல பெரியவர்களும் காதலோடு வாசித்துவரும்
நாவல் இருநூறு மொழிகளுக்குமேல் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இந்நூலை வாங்கிய காலத்திலிருந்து
இன்றுவரை குறைந்தது ஐம்பது முறையாவது ரசித்து ரசித்து படித்திருப்பேன். ஆனாலும் இந்நூலை
துல்லியமாக வர்ணிப்பது கடினம். ஒவ்வொருவரும் இந்நூலை தேடியெடுத்து அந்த அலாதியான அனுபவத்தில்
திளைக்கவேண்டும். விமானம் ஒன்று பழுதாகி சஹாரா பாலைவனத்தில் இறங்கிவிடுகிறது.
தனியாகத் தவித்துக்கொண்டிருக்கும் விமானியிடம் எங்கிருந்தோ தோன்றிய ஒரு சிறுவன் ஆடு
ஒன்றை வரைந்து கொடுக்குமாறு கேட்பதில் தொடங்குகிறது ஒரு வியப்பூட்டும் கதை. அச்சிறுவன்
எங்கிருந்து வந்தான் என்று விமானிக்குத் தெரியவில்லை. அவன் வேறொரு கிரகத்திலிருந்து
வந்தவன் என்று தெரிகிறது. அவன் ஒரு கிரகத்திலிருந்து மற்றொரு கிரகத்துக்கு செல்பவனாக
இருக்கிறான். ஒவ்வொரு கிரகத்திலும் நிகழும் அனுபவங்களை விமானியிடம் சொல்கிறான். நாவல்
முழுக்க அக்குட்டி இளவரசன் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் மந்திரச் சொற்களாக வாசகன் மனதுக்குள்
காலகாலத்துக்கும் சுற்றிக்கொண்டேயிருக்கும்.
இன்றைய வீடடங்கு தினங்களில் மட்டுமல்ல, என் மனநிலை எப்போதெல்லாம்
புகைமூட்டமாக குழம்பிக்கொள்கிறதொ, அ[ப்போதெல்லாம் எனக்குள் அமுத மழையைப் பொழியச்செய்து
என்னைத் துளிர்க்க வைப்பவர்கள் வண்ணநிலவனும் வண்ணதாசனும். வண்ணநிலவனின் கம்பாநதியும் ரெயினீஸ் ஐயர் தெருவும்
கடல்புரத்திலும் திரும்பத் திரும்ப வாசிக்கவைக்கும் தமிழின் ஆகச் சிறந்த நாவல்கள். அவருடைய ஒட்டுமொத்த
சிறுகதைகள் தொகுப்பு இப்போது வந்துள்ளது. இன்றைய வாசகர்களும் இளம் எழுத்தாளர்களும்
ஆழ்ந்து பயிலவேண்டிய சிறுகதைகள் அவை. அயோத்தி,
பலாப்பழம், எஸ்தர், கரையும் உருவங்கள், குழந்தைகள் ஆண்டில் என அவருடைய அற்புதமான
சிறுகதைகளைப் படித்துகொண்டேயிருக்கும்போது வண்ணதாசனின் வரிகள் நினைவில் ததும்பத் தொடங்குகின்றன.
உடனே வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பை எடுத்துக்கொண்டு வருகிறேன்.
நண்பர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் வண்ணதாசனின் சிறுகதைகளில்
என் அபிமான கதைகள் எவையென்று கேட்டார். நான் சொல்லத் தொடங்கினேன்: தனுமை, மலர்களுக்கு, மிச்சம், ஞாபகம், நிலை, பெயர்
தெரியாமல் ஒரு பறவை, போய்க்கொண்டிருப்பவள், நடுகை, பெருக்கு…என்று சொல்லிக்கொண்டே
போக, நண்பர் ஒரு கட்டத்தில் “ நான் அவருடைய மொத்த சிறுகதைத் தலைப்புகளையும் ஒப்பிக்கவா
சொன்னேன்?” என்றார். ஆம், வண்ணதாசனின் எல்லா சிறுகதைகளுமே என் அபிமானவைதான். மனிதனின்
உன்னதங்களை மட்டுமே பார்க்கத் தெரிந்த வண்ணநிலவனையும் வண்ணதாசனையும் இத்தினங்களில்
நம் வாசிப்பறைக்கு அழைத்துவருவதைவிட உகந்த காரியம் ஏதுமில்லை.
இவ்விரண்டு எழுத்தாளர்களையும் வாசித்து முடித்ததும் என் கைகள்
எடுப்பது சௌந்தர்யக் கலைஞன் தி.ஜானகிராமனை. திஜாவை வாசிப்பது சங்கீத அனுபவம் என்று
பலரும் சொல்வர். அது நாவல் வாசிப்புக்குப் பொருந்தக்கூடிய வர்ணனை. திஜாவின் நிஜமான
மேதமை அவர் சிறுகதைகளில் தெரியும். தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த சிறுகதைகளில் ஜானகிராமனின்
பெரும்பாலான கதைகள் அடங்கும்.
இப்போது மட்டுமல்ல, எப்போதும் என் மேசைமீது நிரந்தரமாக இருக்கும்
நூல் சுந்தர ராமசாமியின் ஜேஜே சில குறிப்புகள்.
இன்னும் பல நூறாண்டுகளானாலும் தமிழில் எழுதப்பட்ட முக்கிய நாவல் வரிசையில் ஜேஜே பிரதானமான இடத்தை பெற்றிருக்கும்.. புதிய
வாசகர்களுக்கு மறக்கமுடியாத வசிப்பு அனுபவத்தைத் தரும் இந்நாவல் தமிழின் பெருமிதம்.
மலையாள எழுத்தாளனாக சித்தரிக்கப்படும் ஜேஜே ஒரு கற்பனை பாத்திரம் என்று சொல்லமுடியாத
அளவுக்கு நிஜமாக இருகிறான். அவனது நாட்குறிப்பில்
மிகவும் கூருணைர்வு கொண்ட எழுத்தாளன் ஒருவனின் சிந்தனைகள் சகல திசைகளையும் தழுவிச்
செல்கின்றன. நாவலை வாசித்த ஒருவனுக்கு வாழ்நாள் முழுவதும் ஜேஜேவின் வரிகள் எல்லா சந்தர்ப்பங்களிலும்
நினைவுக்கு வந்துகொண்டே இருக்கும்.
இப் பரிந்துரைப் பட்டியலில் நான் கவனமாகத் தவிர்க்கும் ஒரு பெயர்
தஸ்தயேவ்ஸ்கி. தல்ஸ்தோயை விட மனதின் ஆழங்களுக்குச் செல்லக்கூடியவர். நான் எப்போதும்
தஞ்சமடையும் நூல்களில் அவரது நூல்கள் முக்கியமானவை. ஆனால் வாசிப்புப் பயிற்சியற்ற ஒருவருக்கு
தஸ்த்யேவ்ஸ்கி பரிந்துரைக்கக்கூடிய எழுத்தாளர் அல்ல.
பேரிடர் காலமானாலும் பெருமகிழ்வு காலமானாலும் வாசிப்புக்கு உகந்த
மாபெரும் கலைஞன் அசோகமித்திரன். அவரது ஒற்றன்,18ம்
அட்சக்கோடு, தண்ணீர் ஆகிய நாவல்களோடு அவரது மொத்த சிறுகதை தொகுப்பும் என் மேசையில்
காத்திருக்கிறது. அசோகமித்திரன் கணையாழி இதழில் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியபோது
‘இன்னொரு மாதம் கழிந்தது’ என்றொரு பத்தி
எழுதிவந்தார்.
இந்தக் கொடுங்காலமும் இம்மாதத்தோடு கழிந்துவிடும் என்று அவர்
புத்தகத்தை எடுக்கும்போது சொல்வது கேட்கிறது.
***************************************************************************************************************
( இந்து தமிழ் 12 ஏப்ரல் 2020 )
கருத்துகள்
கருத்துரையிடுக