எட்கார் கெரெட் - குறுங்கதைகள்
வெளியே
எட்கார் கெரெட்
(தமிழில்: ஜி.குப்புசாமி)
ஊரடங்கு முடிந்து
மூன்று நாட்கள் கடந்தபிறகும், யாரும் வீட்டைவிட்டு வெளியேற விரும்பாமல் இருக்கிறார்கள்
என்று தெளிவாகத் தெரிந்தது. புரிந்துகொள்ளமுடியாத ஏதோ சில காரணங்களுக்காக மக்கள் தனியாகவோ,
அல்லது குடும்பத்தினருடனோ வீட்டுக்குள்ளேயே இருக்க விரும்பினார்கள். எல்லோரிடமிருந்தும்
தனித்திருப்பதே நல்லது என்று அவர்கள் கருதுகிறார்கள் போல. வேலைக்குச் செல்லாமல், அங்காடிகளுக்குச்
செல்லாமல், நண்பர்களோடு காபி அருந்தச் செல்லாமல்,
உங்களோடு எப்போதோ ஒருமுறை யோகா வகுப்பில் கலந்துகொண்ட ஒருவரிடமிருந்து நடுத்தெருவில் எதிர்பாராத, விரும்பத்தகாத கட்டித்தழுவல்களைப்
பெறாமல் வீட்டுக்குள்ளேயே அடைந்து நிறைய நாட்களைக்
கழித்துவிட்டதால் எல்லோரும் அந்தத் தனிமைக்குப் பழகிவிட்டிருந்தார்கள்.
மக்கள் பழைய நிலைக்குத்
திரும்புவதற்கு அவகாசம் தேவைப்படுமென்று அரசாங்கமும்
சில நாட்கள் பொறுத்திருந்தது. ஆனால் எதுவும்
மாறுவதற்கான அறிகுறியே தென்படாததால் அரசுக்கு வேறு வழியில்லாமல் காவலர்களையும், ராணுவத்தினரையும் அனுப்பியது. அவர்கள்
வீட்டுக்கதவுகளைத் தட்டி மக்களை வெளியே வரும்படி உத்தரவிடத் தொடங்கினர்.
120 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்ததால்,
அதற்குமுன் நீங்கள் என்ன வேலை செய்துகொண்டிருந்தீர்கள் என்பதே உங்களுக்கு மறந்துவிட்டிருந்தது.
நீங்களும் நினைவுக்குக் கொண்டுவர முயலாமலில்லை. அதிகாரமட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் கோபத்துடன் ஈடுபட்டிருந்த ஏராளமானோர்
சம்பந்தப்பட்ட பணி என்பது மட்டும் உங்களுக்கு நிச்சயமாகத் தோன்றுகிறது. ஒருவேளை ஏதாவது
பள்ளியாக இருக்குமோ? அல்லது சிறைக்கூடமோ? மெலிதாக மீசை அரும்பத் தொடங்கியிருந்த ஒல்லிப்
பையன் ஒருவன் உங்களை நோக்கி ஒரு கல்லை வீசியெறிந்தது உங்களுக்கு இலேசாக ஞாபகத்துக்கு
வருகிறது. அல்லது நீங்கள் ஒரு தொண்டு இல்லத்தில் பணியாற்றிய சமுதாயப் பணியாளரோ?
நீங்கள் உங்கள்
கட்டிடத்திற்கு வெளியே நடைபாதையில் நின்றுகொண்டிருக்கிறீர்கள். ராணுவவீரர்கள் உங்களை
நிற்காமல் நடந்துபோகச் சொல்லி சைகை காட்டுகின்றனர். எனவே நீங்கள் அங்கிருந்து நகர்கிறீர்கள்.
ஆனால் எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்று உங்களுக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.
உங்கள் செல்பேசியை வெளியே எடுத்து அதிலிருக்கும் இதற்கு முந்தைய அப்பாயிண்ட்மெண்ட்டுகள்,
மிஸ்டு கால்கள், கவன ஈர்ப்புப் பகுதியில் இருக்கும் முகவரிகள் போன்ற தகவல்கள் உங்களுக்கு
உதவிகரமாக இருக்குமாவென்று பார்க்கிறீர்கள். மக்கள் உங்களைக் கடந்து விரைந்துகொண்டிருக்கிறார்கள்.
சிலரைப் பார்க்கும்போது உண்மையிலேயே கலவரமடைந்திருப்பவர்கள் போலத் தெரிகிறது. அவர்களுக்கும்
எங்கே போகவேண்டுமென்று தெரியவில்லை. தெரிந்திருந்தாலும் அங்கு செல்வதற்கான வழியோ, அங்கு
சென்றதும் என்ன செய்வதென்றோ புரியாமல் இருந்தனர்.
உங்களுக்கு உடனடியாக
சிகரெட் தேவைப்படுகிறது. வீட்டிலேயே வைத்துவிட்டிருக்கிறீர்கள். ராணுவ வீரர்கள் உள்ளே
தடதடவென்று வந்து உங்களை வீட்டைவிட்டு வெளியேறுமாறு கத்தியபோது உங்களுக்கு சாவியையும் பர்ஸையும் மட்டும் எடுத்துக்கொள்ளத்தான் சமயம் இருந்தது. உங்கள் வெயில்கண்ணாடியைக்கூட மறந்துவிட்டீர்கள்.
மீண்டும் வீட்டுக்குள்
நுழைய முயன்றிருக்கலாம், ஆனால் ராணுவவீரர்கள் பக்கத்து வீடுகளின் கதவுகளை பொறுமையின்றி
இடித்துக்கொண்டிருந்தார்கள். அதனால் நீங்கள் தெருமுனைக் கடைக்கு நகர்ந்தீர்கள். ஆனால் நீங்கள் பர்ஸைத் திறந்து பார்க்கும்போது வெறும்
ஐந்து ஷெக;ல் நாணயம் மட்டுமே இருக்கிறது. கடையில் இருந்த அந்த உயரமான இளைஞன் உங்களிடம்
அப்போதுதான் தந்திருந்த சிகரெட் பெட்டியை சடக்கென்று பிடுங்கிக்கொள்கிறான்: ”இதை உங்களுக்காக
இங்கேயே வைத்திருக்கிறேன். பணத்தை எடுத்துக்கொண்டு வாருங்கள்,” என்கிறான். கடன் அட்டை
மூலம் பணம் தரட்டுமாவென்று நீங்கள் கேட்டபோது, நீங்கள் ஏதோ ஜோக் சொல்லிவிட்டதைப்போல
சிரிக்கிறான். உங்களிடமிருந்து சிகரெட் பெட்டியைப் பிடுங்கியபோது அவன் கை உங்கள் கை
மீது பட்டது. அவன் கை நிறைய முடி அடர்ந்திருந்தது. எலியைப்போல. உங்களை கடைசியாக ஒருவர்
தொட்டு நூற்றி இருபது நாட்களாகியிருந்தன.
உங்கள் இதயம் வேகமாக
அடித்துக்கொள்கிறது. உங்கள் நுரையீரல்களிலிருந்து சீழ்க்கையடிப்பதைப்போல காற்று வெளியேறுகிறது.
உங்களால் சமாளிக்கமுடியுமாவென்று சந்தேகமாக இருக்கிறது. ஏ.டி.எம். அருகே அழுக்கு உடைகளில்
ஒருவன் உட்கார்ந்திருக்கிறான். அவனுக்குப் பக்கத்தில் ஒரு தகரக் குவளை. இந்த சந்தர்ப்பத்தில்
நீங்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டுமென்று உங்களுக்கு ஞாபகம் வருகிறது. அவன் சாப்பிட்டு
இரண்டு நாட்களாகின்றன என்று உங்களிடம் கரகரப்பான குரலில் கேட்கும்போது நன்கு பயிற்சியெடுத்திருப்பவரைப்
போல அவன் பார்வையை சந்திக்காமல் எதிர் திசையில் தலையைத் திருப்பிக்கொண்டு அவனை வேகமாகக்
கடந்து செல்கிறீர்கள். பயப்படுவதற்கு ஒன்றுமில்லை. சைக்கிள் ஓட்டுவதைப் போலத்தான் இது:
உங்கள் உடம்பு அனைத்தையும் நினைவில் வைத்திருக்கிறது. நீங்கள் தனிமையில் இருந்தபோது
இளகியிருந்த உங்கள் இதயம் வெகுவிரைவில் மீண்டும் இறுகிவிடும்.
************
இயக்குநரின்
முடிவு
எட்கார் கெரெட்
(தமிழில்: ஜி.குப்புசாமி)
மாஷெக் ஸ்மோலான்ஸ்கி
ஒரு திரைப்பட இயக்குநர், தொழில் முனைவர், தத்துவவியலாளர். இவையனைத்துக்கும் மேலாக அவர்
ஒரு பரிபூரணத்துவர். அதனால்தான் அவர் ஒரு மனிதனின் மொத்த வாழ்க்கையையும் ஒரு நிமிடம்
விடாமல் மூன்று காமிராக்களில் படம்பிடிக்கப்போவதாகச் சொல்லி அவரது புதிய திரைப்படம்
’வாழ்க்கை’யை அறிவித்தபோது ஒருவரும் ஆச்சரியப்படவில்லை. திரைப்படத்தின் அகவய இயல்பினனான
நாயகன் மாத்யூஸ் க்ரோட்டோக்ஸவுஸ்கி பிறந்ததிலிருந்து
தொடங்கி திரைப்படமாக்கல் எழுபத்திமூன்று வருடங்கள்
நீண்டது. படத்தின் இறுதிக் காட்சியில் மாத்யூஸ் தனக்கு ப்ராஸ்ட்ரேட் சுரப்பியில் புற்று
நோய் இறுதிக்கட்டத்தில் இருப்பதையறிந்து வீட்டின் அடித்தளத்தில் தூக்கிட்டுத் தற்கொலை
செய்துகொண்டபோது, படக்குழுவினர் அனைவரும் தாங்கமுடியாமல் அழுதார்கள். ஒலிப்பதிவாளர்
அவர்களை சத்தமெழுப்பாமல் இருக்கச்சொல்லியும் அவர்களின் கண்ணீரை நிறுத்தமுடியவில்லை.
பின்னுருவாக்கப்பணிகள்
நூற்றுப் பதினான்கு வருடங்கள் பிடித்தன. இப்பணியைத் தொடங்கி சில மாதங்கள் கழித்து மாஷெக்
வயது முதிர்வில் இறந்துபோனார். ஒலித்தொகுப்பு மேலும் தொண்ணூற்றியாறு வருடங்கள் நடந்தது.
ஆனாலும், திரைப்படம் வெளியானபோது சமூக ஊடகங்களில் இப்படம் அவசரகதியில் ஏனோதானோவென்று
உருவாக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன.
திரைப்படத்தின்
முதல் திரையிடலுக்கு முன்னணி விமர்சகர்கள் அனைவரும் அழைக்கப்பட்டனர். பொதுமக்களுக்காக
ஒதுக்கப்பட்டிருந்த ஒரு சில நுழைவுச்சீட்டுகளும் கருப்புச்சந்தையில் அநியாயமான விலைக்கு
விற்கப்பட்டன. ஏற்கனவே அறிவித்திருந்ததைப்போல திரைப்படத்தின் நீளம் எழுபத்திமூன்று
வருடங்களாக இருந்தது. கடைசிக்காட்சிக்குப் பிறகு படக் கலைஞர்களின் பெயர் வரிசை ஓடிமுடிந்ததும்
அரங்கத்தின் விளக்குகள் போடப்பட்டன. திரையரங்க ஊழியர்கள் உள்ளேவந்து பார்த்தபோது ஒரேயொருவரைத்
தவிர பார்வையாளர்கள் அனைவரும் இறந்துபோயிருப்பதைக் கண்டனர். பெரும்பாலோரிடமிருந்து
சகிக்கமுடியாத அழுகிய நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. இந்த அழுகிக்கொண்டிருந்த பிரேதங்களுக்கு நடுவே உயிரோடிருந்த
அந்த ஒற்றைப் பார்வையாளன் நிர்வாணமாக, வழுக்கைத் தலையோடு குழந்தையைப்போல தேம்பித்தேம்பி
அழுதுகொண்டிருந்தான். கண்ணீர் வடிவது நின்றதும், அவன் கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்து
அமைதியாக வாசலை நோக்கி நடந்தான்.
இந்தக் கிழவன்
ஒரு பிரபலமான திரைப்பட விமர்சகரின் மகன். அவளுக்கு இத்திரைப்படத்தைப் பார்க்கவந்தபோது
கர்ப்பமாக இருந்தது தெரியாது. படம் ஆரம்பித்து எட்டு மாதங்கள் கழித்து அந்தத் திரையரங்கத்தில்
அவன் பிறந்தான். அந்த இருட்டு அரங்கத்தில் திரையைப் பார்த்தபடியே வளர்ந்தான். இப்போது
வாசற்கதவைத் திறந்ததும் சூரிய வெளிச்சத்தில் அவன் கண்கள் கூசின. அரங்கத்துக்கு வெளியே காத்திருந்த ஏராளமான நிருபர்கள்
அவனிடம் ஒலிவாங்கிகளை நீட்டி, இத்திரைப்படத்தைப் பற்றி அவனுடைய கருத்து என்னவென்று
கேட்டனர். “திரைப்படமா?” என்று வெளிச்சத்தில் கண்கொட்டியபடி திக்கித் திணறினான். இவ்வளவு
காலமாக அதை வாழ்க்கை என்றே அவன் நினைத்துவந்திருக்கிறான்.
****
கிறுக்குப் பசை
எட்கார்
கெரெட்
(தமிழில் : ஜி.குப்புசாமி)
‘’அதைத் தொடாதீர்கள்,”
என்றாள்.
“இது என்ன?”, என்றேன்.
“பசை,” என்றாள்.
“விசேஷமான பசை. சூப்பர் பசை.”
“எதற்காக இதை வாங்கி
வந்திருக்கிறாய்?”,
“எதற்காகவென்றால்
எனக்குத் தேவைப்படுகிறது. ஒட்டவேண்டியவை எவ்வளவோ இருக்கின்றன.”
‘’ஒட்டுவதற்கு
எதுவும் இங்கே இருக்கவில்லை. இதைப்போன்ற குப்பைகளையெல்லாம் நீ எதற்காக வாங்கிக்கொண்டு
வருகிறாய் என்று எனக்குப் புரியவில்லை.”
“உங்களை எதற்காகக்
கல்யாணம் செய்துகொண்டேனோ, அதே காரணத்துக்காகத்தான்,” என்றாள் வெடுக்கென்று. “பொழுதைக்
கழிக்க.”
புதிதாக ஒரு சண்டையைத்
தொடங்குவதற்கு தெம்பு இல்லை என்பதால் பேச்சை அத்துடன் நிறுத்திக்கொண்டேன். அவளும் அமைதியானாள்.
கொஞ்ச நேரம் கழித்து, “இந்தப் பசை உண்மையிலேயே அவ்வளவு சிறப்பானதா?’’ என்று கேட்டேன்.
அவள் அந்தப் பசையின் பெட்டியில் அச்சிட்டிருந்த படத்தைக்காட்டினாள். அந்தப் படத்தில்
இருந்தவன் உத்தரத்திலிருந்து தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தான். யாரோ அவன் காலணிகளின்
அடிப்பகுதியில் அந்தப் பசையைத் தடவிவிட்டிருக்கிறார்களாம்.
“எந்தப் பசையாலும்
ஒரு மனிதனை இப்படி தலைகீழாக ஒட்டித் தொங்கவைக்கமுடியாது,” என்றேன். “படத்தை தலைகீழாக
எடுத்திருக்கிறார்கள். இவன் தரையில்தான் நின்றுகொண்டிருக்கிறான். உத்திரம் போலத் தெரியவேண்டுமென்பதற்காக விளக்கைத் தரையில் பொருத்தியிருக்கிறார்கள். இந்தச்
சன்னல் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தாலே தெரிந்துவிடுகிறது. திரைச்சீலையின் கொக்கி
தலைகீழாக இருக்கிறது. இதைப் பார்,” என்று படத்திலிருந்த சன்னலை அவளிடம் காட்டினேன்.
அவள் பார்க்காமல் தலையைத் திருப்பிக்கொண்டாள். “சரி, இப்போதே மணி எட்டாகிவிட்டது. நான்
அலுவலகத்துக்கு ஓடவேண்டும்,” என்றபடி பிரீஃப்கேசை எடுத்துக்கொண்டு அவள் கன்னத்தில்
முத்தமிட்டேன். “ நான் வருவதற்கு தாமதமாகும். எனக்கு _”
“தெரியும்,” என்று
குறுக்கிட்டாள். “உங்களுக்குத் தலைக்கு மேல் வேலை இருக்கிறது.”
அலுவலகத்திலிருந்து
மிண்டியை அழைத்தேன். “இன்று என்னால் வரமுடியாது. வீட்டுக்கு சீக்கிரம் போகவேண்டியிருக்கிறது.”
“என்ன ஆயிற்று?
ஏதாவது பிரச்சனையா?”
“அதெல்லாம் இல்லை…
ம்ம்ம்… ஆமாம். அவள் ஏதோ சந்தேகப்படுகிறார்போல இருக்கிறது.” நீண்ட மெளனம். எதிர்முனையில்
மிண்டியின் கனமான மூச்சிறைப்பு கேட்டது.
“நீங்கள் ஏன் இன்னும்
அவளோடு ஒன்றாக இருக்கிறீர்கள் என்று எனக்கு விளங்கவில்லை,” அவள் குரல் கிசுகிசுப்பாக
ஒலித்தது. “நீங்கள் இரண்டு பேரும் எந்த விஷயத்திலும் ஒத்துப்போவதில்லை. சண்டைபோடுவதற்குக்கூட
உங்களிடையே ஆர்வமில்லாமல் போய்விட்டது. இவ்வளவு
அலட்சியத்தோடும், அக்கறையில்லாமலும் எதற்காக நீங்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறீர்கள்
என்று எனக்குப் புரியவில்லை. உங்கள் இருவரையும் எது அவ்வளவு இறுக்கமாகப் பிணைத்துவைத்திருக்கிறது
என்று எனக்குத் தெரியவில்லை.” என்றாள். சில நொடிகள் கழித்து மறுபடியும் “எனக்கு ஒன்றுமே தெரியவில்லை,” என்றாள். அவள் அழத்
தொடங்கினாள்.
“மிண்டி, அழாதே,’
என்றேன். “இதைக் கேள், யாரோ வந்திருக்கிறார்கள். நான் போகவேண்டும்,” என்று பொய் சொன்னேன்.
“ நாளை கட்டாயம் வருகிறேன், சத்தியம். அப்போது பேசலாம்.”
வீட்டுக்கு சீக்கிரமாகவே
வந்துவிட்டேன். கதவைத் திறந்துகொண்டு ஹலோ என்றபடியே உள்ளே நுழைந்தேன். பதிலே இல்லை.
ஒவ்வோர் அறையாகச் சென்று பார்த்தேன். அவள் எதிலும் இல்லை. சமையலறை மேசையில் அந்தப்
பசை முற்றிலும் அழுத்தியெடுக்கப்பட்டு ட்யூப்
காலியாக இருந்தது. உட்காருவதற்காக ஒரு நாற்காலியை இழுத்தேன். அது நகரவேயில்லை. மீண்டும்
முயன்றேன். ஒட்டிக்கொண்டிருந்தது. நாற்காலியை தரையோடு ஒட்டவைத்திருக்கிறாள் என்று புரிந்தது.
ஃப்ரிட்ஜ்ஜைத் திறக்க முடியவில்லை. அதன் கதவையும் ஒட்டிவிட்டிருக்கிறாள். எதற்காக இப்படியொரு
கரடிவித்தை செய்திருக்கிறாளென்று எனக்குப் புரியவில்லை. அவள் இப்படிப்பட்டவளே அல்ல. இதைப்போன்ற கிறுக்குத்தனங்களை அவள் செய்ததேயில்லை.
போன் செய்வதற்காக வசிப்பறைக்குச் சென்றேன். அவளுடைய அம்மா வீட்டுக்குச் சென்றிருக்கலாமென்று
நினைத்தேன். தொலைபேசியின் ஒலிவாங்கியை எடுக்க முடியவில்லை. இதையும் அந்தப் பசையால்
ஒட்டிவிட்டிருக்கிறாள். ஆத்திரத்தோடு தொலைபேசி
மேசையை எட்டி உதைத்ததில் கால் விரல்கள் கிட்டத்தட்ட
முறிந்துவிட்டன. இருந்த இடத்தைவிட்டு மேசை
அசையவேயில்லை.
அப்போதுதான் அவள்
சிரிப்பது கேட்டது. சத்தம் என் தலைக்கு மேலிருந்து வந்தது. நிமிர்ந்து பார்த்தேன்.
திடுக்கிட்டேன். வசிப்பறையின் உயரமான உத்தரத்தில் அவள் பாதங்கள் ஒட்டிக்கொண்டிருக்க,
தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தாள். ”அடச்சே! உனக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா?”.
அவள் பேசாமல் புன்னகைபுரிந்தாள். அவள் புன்னகை மிகவும் இயல்பாகவே இருந்தது, அவள் தொங்கிக்கொண்டிருக்கும்
விதத்தைப் போலவே. ஏதோ அவள் உதடுகள் மட்டும் புவியீர்ப்பு சக்திக்கு ஆட்பட்டிருப்பதைப்போல.
“கவலைப்படாதே,” என்றேன். “உன்னைக் கீழே இறக்கிவிடுகிறேன்,” என்று அலமாரியிலிருந்து
சில புத்தகங்களை எடுத்துவந்தேன். கலைக்களஞ்சியத்தின் சில தொகுதிகளை ஒன்றன் மேலொன்றாக
அடுக்கி, அவற்றின் மீது ஏறினேன். விழுந்துவிடாமல் பேலன்ஸ் செய்துகொண்டே, ”இது கொஞ்சம்
வலிக்கலாம், பொறுத்துக்கொள்,” என்றேன். அவள் தொடர்ந்து புன்னகைத்தபடியே இருந்தாள்.
என்னால் முடிந்தவரை பலமாகப் பிடித்து இழுத்தேன், ம்ஹூம், ஒன்றும் நடக்கவில்லை. ஜாக்கிரதையாக
கீழே இறங்கினேன். “கவலைப்படாதே. பக்கத்து வீட்டுக்குச் சென்று யாரிடமாவது உதவி கேட்டு
போன் செய்கிறேன்,” என்றேன்.
”சரி,” என்றாள்.
சிரித்தாள். “எங்கேயும் போய்விடமாட்டேன்.” அதைக்கேட்டு எனக்கும் சிரிப்பு வந்தது. உத்திரத்திலிருந்து
அவள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கும் விதம் மிகவும் அழகாக, மிகவும் சிரிப்பாக இருந்தது.
அவளுடைய நீண்ட கூந்தல் அவிழ்ந்து வீழ்ந்திருக்க, வெள்ளை டி-சர்ட்டுக்குள் அவள் மார்புகள்
கச்சிதமான அளவில் கண்ணீர்த் துளிகள் போல வார்ப்பெடுத்து சரிந்திருந்தன. எவ்வளவு அழகு! நான் மீண்டும் புத்தக அடுக்கின் மீதேறி
அவளை முத்தமிட்டேன். அவள் நாவை என் நாவின் மீது
உணர்ந்தேன். புத்தகங்கள் என் பாதங்களுக்கடியிலிருந்து சரிந்தன. நான் எதையும்
பிடித்துக்கொள்ளாமல், அவள் உதடுகளோடு மட்டும் ஒட்டிக்கொண்டு அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்தேன்.
***************************************
கருத்துகள்
கருத்துரையிடுக