பார்வையை விரிவாக்கும் மொழிபெயர்ப்புகள்

ஜி.குப்புசாமி

     மொழிபெயர்ப்புகளை மட்டும் தேடித்தேடி வாசிக்கும் வாசகர்கள் எல்லா தலைமுறைகளிலும் இருந்து வருகிறார்கள். தாய்மொழி படைப்புகள் மீது கொண்டிருக்கும் ஒவ்வாமையால் அல்ல. உண்மையில் தமது சொந்த மொழியின் படைப்பெல்லைகளை அயல்மொழி இலக்கியங்களினால் விரிவுப்படுத்திக் கொள்ளும் முயற்சிதான் அது. எனக்கும் அம்மோகம் எனது கல்லூரி தினங்களில் பீடித்திருந்தது. ரஷ்ய மொழி இலக்கியங்கள் ராதுகா பதிப்பகத்தின் மூலம் வெள்ளமாக வந்துகொண்டிருந்த காலகட்டம் அது. விலையும் மிகக்குறைவாக இருக்கும். மாணவப்பருவத்தில் ‘ கதைப் புத்தகங்கள் ‘ வாங்குவதற்கு வீட்டில் காசு அதிகமாகக் கிடைக்காது. ரஷிய நூல்களை வாங்குவதற்காகவே சாப்பாட்டு செலவை , காபி, டீ யைக் குறைத்து பணம் சேகரித்து புத்தகங்கள் வாங்கிய எங்களைப் போன்ற தியாகச் செம்மல்களின் பரம்பரை 90 களுக்கு முந்தைய காலம் வரை இருந்தது.

      ரஷிய மொழி இலக்கியங்களில் தமிழுக்குக் கிடைத்த மிக அற்புதமான படைப்புகள் என விளாமெதீர் கொரலேன்கா வின் ‘கண் தெரியாத இசைஞனையும் லேவ் தல்ஸ்தோயின் ‘ புத்துயிர்ப்பு‘ வையும்  என் தனிப்பட்டத் தேர்வாகச் சொல்வேன். இவ்விரு நூல்களையும் மொழிபெயர்த்த ரா. கிருஷ்ணையாவின்  எழுத்துத்திறன் மீது அந்த வயதில் எனக்கு உண்டான கவர்ச்சிதான் பின்னாட்களில் மொழிபெயர்ப்புத் துறையைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

      ‘ கண் தெரியாத இசைஞன் ‘ ஒரு மிகச்சிறிய நாவல். பிறவிக்குருடனான பியோத்தருக்கு தான் இழந்திருப்பது என்னவென்று புரிவதேயில்லை. அவனது அவகவுலகத்தில் இசை உண்டாக்கும் மாற்றங்கள், அவனைப் பெரும் இசைக்கலைஞச்னாக உருவாக்குகிறது. எங்கிருந்தோ அவனை வந்தடையும் வாத்தியஇசை அவனிடம் உண்டாக்கும் பதற்றம் , யதேச்சையாக சூரியனை அண்ணாந்து பார்க்கும்போது அந்தக் குருட்டுக் கண்களுக்குள் நிகழும் சலனங்கள், தோழியுடன் ஏற்படும் கோபம்…. எத்தனை வருடங்களானாலும் மறக்கமுடியாத மகத்தான படைப்பு கொரலேன்கோ வின் ‘ கண் தெரியாத இசைஞன் ‘

      இன்று வரை நான்வாசித்த நாவல்களில் முதலிடத்தை வகித்திருப்பது ‘ புத்துயிர்ப்பு ‘. மகாத்மா காந்திக்கும் மிகப்பிடித்தமான நாவல் இதுவே. தன்னைச் சந்திக்க வந்த பலருக்கும் புத்துயிர்ப்பு பிரதிகளை அன்பளித்து வாசிக்கச் சொல்வார். இளவரசன் டிமிட்ரி நெஹ்லூதவ் மூலமாக தல்ஸ்தோய் தனது வாழ்வின் ஆன்மீகத்தேடலை விரிவாக நிகழ்த்திச் சொல்கிறார். என்னைப் பொறுத்தவரை இந்நாவலை விஞ்சக்கூடிய கலைப்படைப்பு எந்நாளும் சாத்தியமில்லை என்பேன்.

      வெறும் 117 பக்கங்கள் மட்டுமே இருக்கின்ற  (அதில் கிட்டத்தட்ட பாதி  பக்கங்களுக்கு படங்கள்) ஒரு நாவல் காலத்தால் அழியாத படைப்பு என்று பெயர் பெற்றிருக்கிறது. இரண்டாம் உலகப் போர் காலத்தில் பிரஞ்சு மொழியில் அந்த்வான் து செந்த் – எக்சூபெரியால் எழுதப்பட்ட ‘ குட்டி இளவரசன் ‘ இன்றளவும் உலகின் மகத்தான நாவலில் ஒன்றாக அறியப்பட்டு வருகிறது. இதுவரை கிட்டத்தட்ட நூற்றிஎழுபத்தைந்து மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு எட்டு கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ள இந்நாவல்  க்ரியா பதிப்பக வெளியீடாக வெ.ஸ்ரீராம் , ச. மதனகல்யாணி ஆகியோரின் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்துள்ளது.  குட்டி இளவரசன் ஒவ்வொரு கிரகத்துக்காகச் செல்கிறான். அங்கே பூ , பாம்பு , நரி போன்றவையோடு உரையாடுவதுதான் நாவல். இந்த உரையாடக்களின் மூலமாக நாம் அடையும் மனவெழுச்சி அசாதாரணமானது. இது குழந்தைகளுக்கான புத்தகத்தைப் போலிருந்தாலும் “ அற்புத உலகில் ஆலிஸ் “ ஸைப் போலவே ஆழமான தத்துவங்களையும், வாழ்வின் புதிர்த் தன்மையையும் சொல்லும் நாவலாக இருக்கிறது.

      ஃபிரான்ஸ் காஃப்காவின் பிரசித்தி பெற்ற “ உருமாற்றம் “ என்ற குறுநாவலைப் பற்றி  புதுமைப்பித்தனே கடிதம் ஒன்றில் குறிப்பிடுகிறார். க.நா.சு இந்நாவலைப்பற்றி  அறிமுகக் கட்டுரை எழுதியிருக்கிறார். கிரிகோர் சாம்சா என்று விற்பனைப் பிரதிநிதி கடுமையான மன அழுத்தத்தில் வாழ்கிறான். குடும்பத்துக்காக கடுமையாக உழைக்க வேண்டியிருப்பவன். அவனைச் சுற்றிலும் சுயநலக்காரர்கள். திடீரென ஒருநாள் தூங்கியெழும் போது அவன் ஒரு மிகப்பெரிய அசிங்கமான பூச்சியாக மாறிவிட்டிருப்பதைக் காண்கிறான். இந்த விநோதமான கதை நூற்றுக் கணக்கான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இன்றளவும் விவாதிக்கப் பட்டு வருகிறது. சில திரைப்படங்களும் எடுக்கப் பட்டுள்ளன. முரகாமி இந்நாவலின் தொடர்ச்சியாக ஒரு சிறுகதையும் எழுதியுள்ளார். ருஷ்டியின் நாவல்  ஒன்றில் இப்பாத்திரம் இடம்பெறுகிறது. காஃப்காவைப் படிப்பதும், தூக்கத்தில் துர்சொப்பனத்தில் ஓர் உலகத்தைக் காண்பதும் ஒன்றுதான் என்று க.நா.சு எழுதுகிறார். தமிழில் மிக அற்புதமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் நூல்களில்  “ உருமாற்ற“ மும் ஒன்று. மொழிபெயர்ப்பாளர் ஆர்.சிவக்குமார் இம்மொழிபெயர்ப்பை பலமுறை செப்பனிட்டு வழங்கியிருக்கிறார். ( தமிழினி பதிப்பகம் )

      சுகுமாரன் மொழிபெயர்ப்பில் 2011 இல் ‘  காலச்சுவடு ‘ பதிப்பக வெளியீடாக வந்துள்ள துருக்கிய நாவலான “ அஸிஸ் பே சம்பவம் “ (அய்ஃபர் டுன்ஷ் ) கடந்த பத்தாண்டுகளில் வெளிவந்துள்ள மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்தக்க நூல். இசைக்கலைஞன் ஒருவனின் தோற்றம், வளர்ச்சி , வீழ்ச்சி என வெவ்வேறு தளங்களில் விரியும் நுட்பமான கதையாடல் தேர்ந்தெடுத்த சொற்களாலும் நேர்த்தியான வாக்கிய அமைப்புகளாலும் அஸிஸ் பே என்ற இசைஞனின் அகவுலகை அற்புதமாக வாசகனிடம் கடத்தப்படுகிறது,

      என் வாசிப்பில் முக்கியமான மொழிபெயர்ப்பு நூல்கள் எனப்பட்டியலிட்டால் அது நீளமாகச் செல்லும் . குறிப்பிட்டு சொல்வதென்றால் வெ.ஸ்ரீராம் பிரெஞ்சு மொழியிலிருந்து  நேரடியாக மொழிபெயர்த்துள்ள க்ரியா பதிப்பக வெளியீடுகள் ஆல்பெர் காம்யு வின்  ’முதல் மனிதன்’ , ’அந்நியன்’ பியரெத் ஃப்லுசியோவின் ’சின்ன சின்ன வாக்கியங்கள்’ எக்சூபெரியின் ’காற்று, மணல் , நட்சத்திரங்கள்’ ஆகிய நூல்களையும் கீழ்வரும் சிலபுத்தகங்களையும் சொல்லலாம்.

      ஹொஸே ஸரமாகோ போர்ச்சுகீஸைச் சேர்ந்த எழுத்தாளர். 1998 இல் நோபல் பரிசு பெற்றவர். இடதுசாரி சிந்தனையாளர். இவரது ’அறியப்படாத தீவின் கதை’ ஆனந்த் அவர்களால் அற்புதமாக , சரமாகோவின் பிரத்தியேக நடையை ஒட்டி தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

      உலகின் மிகஅதிகமாக விற்பனையான ‘ சோஃபியின் உலகம் ‘ (யொஸ்ட்டைன் கார்டர் )  இளம் வாசகர்களுக்கான நாவல். உலகின் பல்வேறு சிந்தனை மரபுகளை ஓர் இளம்பெண்ணுக்கு சுவாரஸ்யமாக விளக்கிச் சொல்வதுபோல் அமைந்த நாவல். ஆர்.சிவக்குமாரின் மொழிபெயர்ப்பு. ( காலச்சுவடு )

      கடந்த நாற்பதாண்டுகளாக எல்லா நாடுகளிலும் மிகவிருப்பத்துடன் வாசிக்கப் படுகிற  நாவல் காப்ரியல் மார்க்கேஸின் ‘ தனிமையின் நூறு ஆண்டுகள் “ சுகுமாரன் மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியீடு.

      இந்திய மொழிநாவல்களில் குர் அதுல் ஜன் ஹைதரின் ‘ அக்னி நதி ‘ யும் , அதீன் பந்தியோ பாத்யாய வின் ‘ நீலகண்ட பறவையைத் தேடி ‘ யும் பிபூதி பூஷனின் ‘ பதேர் பாஞ்சாலி ‘ யும் ஓ.வி விஜயனின் “ கஸாக்கின் இதிகாச‘ மும்  தமிழில் வந்திருக்கும் ஏராளமான நல்ல மொழிபெயர்ப்புகளில் சில.

 

( இந்து தமிழ் 19 ஜனவரி 2018 )

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாணவனின் மனைவி

எட்கார் கெரெட் - குறுங்கதைகள்

ஒரு சின்ன நல்ல விஷயம் - ரேமண்ட் கார்வர்