நிலாக்காற்று
ஜி.குப்புசாமி
கிருஷ்ணா நகர் நிறுத்தம் அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது.
ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு சிறிய திருமண மண்டபமாக இருந்த கட்டிடம் இப்போது ஷாப்பிங்
காம்ப்ளக்ஸாகியிருக்கிறது. அநேகமாக எல்லா கடைகளும் உருமாறியிருந்தன. சாலையை சுலபத்தில்
கடக்கவிடாமல் சீறும் வாகனங்கள். அந்த பழக்கடை மட்டும் மாறாமல் இருக்கிறது. புரொபசருக்கு
அன்னாசிப் பழம் பிடிக்கும். கடைக்காரரிடம் ஐநூறு ரூபாய்க்குச் சில்லரை இல்லை. “ஜி.பே.
பண்ணிடுங்க சார்.”
முதல் பிரதானச் சாலைக்குள் நுழையும்போதே சற்று குளிரெடுப்பதுபோன்ற
உணர்வு. இடதுசாரியில் அரை கிலோமீட்டர் தூரத்துக்கு நீளும் பிராட்டஸ்டண்ட் கிறித்துவர்களுக்கான
கல்லறைத் தோட்டத்தின் மதிற்சுவர். இத்தனை வருடங்கள் கழித்து வரும்போதும் இந்த இடத்தைக்
கடக்கும்போது தலையைத் திருப்பி சிலுவைகள் ஊன்றப்பட்ட கல்லறைகளைப் பார்த்தபடியே நடக்கும்
பழக்கம் மட்டும் மாறியிருக்கவில்லை. ஒவ்வொரு கல்லறையும் நன்கு பரிச்சயமானதாவே தெரிவதும்
மாறவில்லை. பழைய கல்லறைகளுக்கிடையே பீறிட்டு வளர்ந்திருக்கும் புதிய பசுஞ்செடிகள்.
புரொபசரின் வீடு இருக்கும் மூன்றாவது குறுக்குத் தெருவின் ஆரம்பத்தில்
டீக்கடை இருந்த இடத்தில் இப்போது அருண் ஐஸ்க்ரீம் பார்லர். தெருவே புதுசாக, புரொபசரின்
வீட்டை எளிதில் அடையாளம் காணமுடியாமல் மாறியிருக்கிறது. வீட்டை நெருங்கும்போது எதிரில்
பிரமாண்டமாக உயர்ந்து நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு திடுக்கிட வைத்தது. நான்கு
கிரவுண்டுக்கு காலியாக இருந்த இடம் இது. அரைகுறையாக
கட்டப்பட்டிருந்த மூன்றடி சுற்றுச்சுவர் மட்டும் இருக்கும். இப்போது ‘மகாவீர் அபார்ட்மெண்ட்ஸ்’.
அந்தத் தெருவில் புரொபசரின் வீட்டைத் தவிர எல்லா வீடுகளுமே பலமாடிக்கட்டிடங்களாகி இருக்கின்றன
இந்த ஐந்து வருடங்களில்.
வீட்டு வாசலில் மாட்டியிருந்த தனது பெயர்ப்பலகையை புரொபசர் எடுத்துவிட்டிருக்கிறார்.
அந்த இடத்தில் அவருடைய இஞ்சினியர் மகனுடைய பெயர்ப் பலகை. அழைப்புமணி மாறாமல் இருக்கிறது.
அதே பறவைக் கிறீச்சிடல். எந்த அசைவும் இல்லை. ஐந்து நிமிடத் தயக்கத்துப்பின் மீண்டும்
மணியை அழுத்த சற்று நேரம் கழித்து திரைச்சீலை அசைந்தது. விலக்கிகொண்டு வெளியே எட்டிப்
பார்த்த பேராசிரியருக்கு உடனடியாக அடையாளம்
தெரியவில்லை. மெதுவாக வெளியே வந்து கண்களைச் சுருக்கிப் பார்த்து, “அடடே… வா வா…“ எவ்வளவு
வயதானாலும் சுருக்கம் விழாத சிரிப்பு.
எங்களுக்கு ட்யூஷன் எடுத்த முகப்பறையின் கதவைத் திறந்து உள்ளே
அழைத்துச் சென்றார். ஓய்வு பெற்றபிறகு ட்யூஷன் எடுப்பதில்லையென்று தெரிந்தது. அந்த
நீளமான ஸ்டீல் பெஞ்ச்சுகள், கரும்பலகை எதுவும் இல்லை. இப்போது அந்த அறையில் ஏ.ஸி. இருக்கிறது.
மிக அழகான கருப்பு சோபாவில் உட்காரச்சொல்லிவிட்டு, அவரும் பக்கத்திலேயே உட்கார்ந்துகொண்டார்.
சற்று உடல் சிலிர்த்தது. இதுவரை என் பக்கத்தில் இவ்வளவு நெருக்கமாக புரொபசர் அமர்ந்ததில்லை.
கவனமாக அமைத்துக்கொண்ட ஒரு நெருப்பு வளையம் அப்போது அவரைச் சுற்றி இருந்தது. வலிந்து வரவழைக்கப்பட்ட அந்த முகக் கடுமை பொய்யானது
என்று எங்களில் சிலருக்குத் தெரியும். எனக்கு நன்றாகவே தெரியும். இதே அறையில் அவருடைய
சிவந்த, அகலமான கண்கள் கசிந்து, அந்த கம்பீரக்குரல் தழுதழுத்திருக்கிறது. ஒற்றை சாட்சியாக
நான் இருந்த அந்தத் தினம் நேற்றுபோல இருக்கிறது.
ஆசிரியராக இருந்தவர், இப்போது பாசமான தாத்தாவின் குரலில் விசாரிக்கத்
தொடங்கினார். எனது ஆய்வுப் பணிகளைப் பற்றி கறார்த்தன்மை இல்லாமல் நுட்பமாகக் கேள்விகள்
கேட்டுத் தெரிந்துகொண்டார். அவரிடம் காட்டுவதற்காகக் கொண்டுவந்த எனது ஆய்வேட்டை கண்கள்
ஒளிர வாங்கிக்கொண்டு, பிரித்துப் பார்ப்பதற்குமுன் என் கையை இழுத்து இறுக்கமாகக் குலுக்கினார்.
அறுபத்தொன்பது வயது தெரியாத வலுவான கைக்குலுக்கல்.
ஆய்வேட்டை அவர் நிதானமாகப் படிக்கத்தொடங்க, சன்னலுக்கு வெளியில்
தெரியும் காட்சிகளுக்கு என் பார்வை நகர்ந்தது.
ட்யூஷன் தினங்களில் தெரிந்தவை இப்போது இல்லை. அப்போது அந்த காலியிடம் தெரியும்.
அந்த மூன்றடி உயர காம்பவுண்ட் சுவர் தெரியும். சில நேரங்களில் அந்த காம்பவுண்ட் சுவரின்
மீது உட்கார்ந்திருக்கும் அவன் தெரிவான். எண்ணெய் காணாமல் செம்பட்டையாக சுருள் சுருளாக
கலைந்திருக்கும் அடர்ந்திருக்கும் முடி. அழுக்கு ஜிப்பா, பைஜாமா. ஆனால் கிழிந்த துணி
அணிந்து பார்த்ததில்லை. எப்போதும் இரண்டு பெரிய பைகளை வைத்திருப்பான். எப்போதுமே தெருவுக்கு முதுகைக் காட்டி உட்கார்ந்திருப்பான்.
சில நேரங்களில் அந்தக் குறுகலான சுவரின் மீது அபாயகரமாக கால் நீட்டிப் படுத்திருப்பதைப்
பார்த்திருக்கிறேன். அந்த சுற்றுச் சுவர் மீது உட்கார்ந்துகொண்டுதான் புல்லாங்குழலும் வாசிப்பான்.
“என்ன பாக்குற?’’ புரொபசர் ஆய்வேட்டிலிருந்து தலையை நிமிர்த்தாமல்
கேட்டார். என்ன பதில் சொல்வது? அவன் எங்கே என்று கேட்பதா?
பலமுறை அவர் வகுப்பெடுப்பது தடைப்பட்டிருக்கிறது. அந்த எதிர்
மனையிலிருந்து புல்லாங்குழலோசை கேட்கத் தொடங்கும்போதெல்லாம் புரொபசரின் பாடம் இடறியிருக்கிறது.
சட்டென்று நிறுத்திவிடுவார். கைகள் புத்தகத்தைத் தானாக மூடிவிடும். பார்வை குவிக்காமல்
எங்களைத் தாண்டி எதையோ வெறிப்பார். “இன்னிக்கு சீக்கிரமே ஆரம்பிச்சிட்டான்” என்பார்.
என் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் செந்தில் ரகசியமாக தியாகுவைப் பார்த்து, கிண்டலாக
கண்ணிமைத்துச் சிரிப்பான். வெளியிலிருந்து அந்தக் குழலோசைக் கேட்டவுடன், புரொபசரிடம்
ஏற்பட்டுவிடுகின்ற மாற்றம் அப்போது எங்களிடையே கிண்டலுக்கான விஷயமாக மாறியிருந்தது.
ட்யூஷன் முடிந்து செல்லும்போது என் நண்பர்கள் உரக்க சிரித்துக்கொண்டு அவரை நக்கலடிப்பதையெல்லாம்
புரொபசர் அறிந்திருக்கமாட்டார்.
ஒரு மழை நாளில் மற்ற மாணவர்கள் யாரும் வராமல், நான் மட்டும்
ட்யூஷனுக்குச் சென்றிருந்தபோதுதான் அவர் சில விஷயங்களைச் சொன்னார். அவர் தயாரித்து
வைத்திருந்த பாடக் குறிப்புகளை என்னிடம் நகலெடுக்கச் சொல்லிவிட்டு, உள்ளே சென்றிருந்தபோது
என் முதுகுக்குப் பின்னாலிருந்த சன்னலுக்கு மிக அருகில் அந்தக் குழலோசை ஒலித்தது. திடுக்கிட்டுத்
திரும்பிப் பார்த்தேன். மழை நின்றிருந்தது. அவன் புரொபசர் வீட்டு காம்பவுண்ட் சுவர்
மீது சாய்ந்தபடி வாசித்துக் கொண்டிருந்தான்.
திகைப்பு அடங்கியதும், அந்த சங்கீதம் உள்ளுக்குள் நிரம்பத் தொடங்கியது. அந்தப் புல்லாங்குழல்
இறைஞ்சியது. ஏக்கத்துடன் நீளமாகக் கேவியது. கண்ணீரில்லாமல் தேம்பியது. உயிரை உருக்கும்படியாக
இது என்ன கானம்!
அறைக் கதவு திறந்தது. புரொபசர் அவசரமாக வந்து சன்னலருகே நின்றார்.
சன்னல் கம்பிகளைப் பற்றிக்கொண்டு எதையோ சத்தமில்லாமல் வாயசைத்தார். இடது கையால் என்
தோளைத் தொட்டு எழுந்திருக்கும்படி சாடை செய்தார். எழுந்து நின்றேன். தெருவிலிருந்து அலையலையாக உள்ளே
நுழைந்து எங்களைத் தழுவிக்கொண்டு அறையை நிரப்பியது சங்கீதம். புரொபசர் நகர்ந்து சென்று
மின்விசிறியை நிறுத்தினார். இப்போது அந்தக் குழலோசையின் ஆலிங்கனம் எங்களிருவரை மட்டுமன்றி
அறைக்கலன்கள் எல்லாவற்றையும் தங்கமயமாக்கிவிட்டிருப்பதைப் போலிருந்தது.
சட்டென்று கானம் நின்றது. சம்பிரதாயமான முடிவு அல்ல அது. ஒரு
திடீர் வெட்டு. எதிர்பாராத அறுபடல்.
அவன் இரண்டு பைகளையும் தூக்கிக்கொண்டு வேகமாக, கிட்டத்தட்ட ஓட்டமாக
ஓடுவது தெரிந்தது.
“அவனுக்கு சாப்பாடு கொடுக்கக் கூப்பிட்டிருப்பாங்க. அதான் ஓடறான்,”
என்றார்.
அப்போதுதான் அவனைப் பற்றி என்னிடம் சொன்னார்.
அந்தத் தெரு முழுக்கவும் அவனுடைய சொந்தக்காரர்கள்தான். மார்வாரிகள்.
நகரத்தில் இருக்கும் மிகப்பெரிய நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள், லாட்ஜுகள் எல்லாம் அவர்களுடையதுதான்.
அந்தக் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவன்தான் அவன். அவனுடைய பெற்றோர்கள் ஒரு விபத்தில்
போய்விட்டபிறகு, அவனுடைய சித்தப்பாக்களும் பெரியப்பாக்களும் அவனுடைய சொத்துக்களை ஏமாற்றி
கைமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவனும் சற்று மனநிலை பிறழ்ந்தவனாக இருந்தது சவுகரியமாகப்
போய்விட்டிருக்கிறது. ஆனால் மூன்று வேளையும் அவனுக்கு யாராவது சாப்பாடு போட்டுவிடுகிறார்கள்.
எதிரில் இருக்கும் இடம் அவனுக்குச் சொந்தமானதுதான் என்றார். எப்போதுமே அங்குதான் இருக்கிறான்.
இரவு பக்கத்து வீட்டு கார் ஷெட்டில் படுத்துக்கொள்கிறானாம்.
“நாள் முழுக்க இங்கே ஒவ்வொரு தெருவா சுத்தி வருவான். சாயந்தர
நேரத்துலதான் வாசிக்கிறான். அதுவும் தினமும் கிடையாது. நடு ராத்திரிலகூட வாசிப்பான்.
நீ அவன் வாசிக்கிற பாட்டையெல்லாம் கேட்டிருக்கே இல்லே? எப்பவுமே முகேஷ் பாட்டைத்தான்
வாசிக்கிறான். முகேஷ் தெரியுமில்லையா?” என்றார்.
என் கவனம் இந்திப் பாடல்களுக்கு அதிகம் திரும்பியதில்லை. ரஃபிக்கும்
கிஷோர் குமாருக்குமே வித்தியாசம் தெரியாது.
“இப்போ அவன் வாசிச்சது மேரா நாம் ஜோக்கர் படப்பாட்டு. ‘ஜானே
கஹான் கயே ஓ தின்’. கேட்டதில்லையா நீ?” என்றார்.
முகேஷ் என்ற பெயர் எனக்கு அறிமுகமானது அன்றுதான். அதன்பிறகுதான்
முகேஷின் பாடல்களைத் தேடித்தேடி கேட்டதும், சேகரித்ததும் தொடங்கியது.
இப்போது அவன் எங்கே என்று கேட்பதற்கு தயக்கமாக இருந்தது.
“என்ன சாப்பிடறே? காபியா, ஜூஸா?”
நான் என்ன சொன்னேன் என்று எனக்கே உறைக்கவில்லை. அவர் உள்ளே சென்றதும்
எழுந்து சன்னல் வழியாகப் பார்த்தேன்.
கலைந்த தலையோடு முகேஷை குழல் வழியே பிரவாகித்துக்கொண்டிருந்தவனை
அறிந்திருக்காதவர்கள் குடியிருக்கும் மகாவீர் அபார்ட்மெண்ட்ஸிலிருந்து ஒரு சொகுசுக்
கார் வெளியே வந்தது. இரண்டு சிறுவர்கள் கால்பந்தை
உதைத்துக்கொண்டே வெளியே ஓடிவந்தனர்.ச்
புரொபசர் வீட்டு காம்பவுண்ட் சுவரின் மீது ஒரு கிண்ணத்தில் வைத்திருந்த
அரிசி மணிகளை நான்கு சிட்டுக்குருவிகள் சண்டை போடுவதைப்போல கீச்சிட்டுக்கொண்டு கொத்திக்கொண்டிருந்தன.
இந்தச் சுவரின்மீது சாய்ந்துகொண்டுதான் அன்று அந்த சந்திரோதயத்தைப் பார்த்ததும்.
அடிக்கடி மின்தடை ஏற்பட்டுக்கொண்டிருந்த காலம் அது. ஜெனிடிக்ஸ்
பாடத்தின் நடுவில் அறைவிளக்குகள் அணைய, புரொபசர் பாடத்தை நிறுத்தினார். வழக்கமாக ஏழுமணிக்கு
விடுகின்ற இடைவேளையை அரைமணி முன்னதாகவே அளித்தார். எல்லோரும் வெளியேறினோம். அது சிலர்
தேனீர் அருந்தவும், சிலர் புகை பிடிக்கவும் சிலர் பாடச்சுமை ஏறிய தலைப்பாரத்தை அரட்டையில்
இறக்கி வைத்துக் கொள்வதற்குமான நேரம். படியிறங்கும்போதுதான் கவனித்தேன். கிழக்கே அடிவானத்தில்
அந்த நேரத்து ஒற்றை சத்தியமாக பௌர்ணமிச் சந்திரன். தெரு முழுதும் இருட்டில் மூழ்கியிருக்க
மௌனப்புன்னகையோடு எழுந்துவரும் அரங்கேற்றம். கால்கள் நகராமல் உடம்பு காம்பவுண்ட் சுவரில்
சாய்ந்துகொண்டது. தெளிவான வானம். மெதுவான இளங்காற்று. தூரத்திலிருந்து கேட்கும் என்
நண்பர்களின் சிரிப்புச் சத்தம்.
திடீரென்று எனக்குப் பின்னாலிருந்து குழலோசை. திரும்பிப் பார்த்தேன்.
அவன் இருக்கும் இடம் தெரியவில்லை. அந்த மதிற்சுவருக்குப் பின்னால் இருக்கிறான் போல.
சுற்றிச் சுற்றி நீலப்புகை போல அவனுடைய குழலோசை சுழலத் தொடங்கியது. எப்போதும்போல எனக்குத்
தெரியாத ஏதோவொரு இந்திப் பாடல். ஆனால் இதில் சோகத் தொனி இல்லை. வாசிப்பே வேறுவிதமாக
இருந்தது. மென்மையாக மேலுயர்ந்து லயிப்புடன் கொஞ்ச நேரம் சஞ்சாரித்துவிட்டு, வழுக்கிக்கொண்டு
சரிந்தது. மீண்டும் மெதுவான எழும்பல். தளும்பாத பரவசத்தில் தனக்குள் மூழ்கி வாசித்துக்கொண்டிருந்தான்.
அந்த இசை காற்றில் கலந்து, வானேறி, அந்தப் பௌர்ணமி நிலவை நெருங்கி, அதன் கைகளைப் பற்றி
மேலேற்றிக்கொண்டிருந்தது. அவன் வாசிக்க ஆரம்பித்ததுமே சந்திரனின் பிரகாசமும் அதிகரித்துக்கொண்டே
வருவதை கவனித்தேன். கண்களை மூடிக்கொள்ளக் கேட்டது அந்த சங்கீதம். தன்னிடமிருந்து பார்வையை
மூடிக்கொள்ள வேண்டாமென்றது நிலவு. கொஞ்சநேரத்தில் அந்த நிலவும் அவன் சங்கீதமும் ஒன்றாகக்
கலந்துகொண்டன. குழலிசை குளிர்ஒளியாகப் பரவியது. ’இந்த கணத்திலேயே அப்படியே செத்துப்போய்விட்டால்தான்
என்ன’ என்ற வரி உள்ளே ததும்பியது.
என் தோளில் ஒரு கை அழுத்த, சிலிர்த்துக்கொண்டு திரும்பினால்,
புரொபசர். அந்த இருட்டிலும் அவர் முகத்தின் லயிப்பு புலப்பட்டது. கிசுகிசுப்பான குரலில்,
“நிலாக் காற்றைக் கொண்டு தருகுவதோ, எங்கிருந்து வருகுவதோ, ஒலி யாவர் செய்குவதோ?” என்றார்.
சற்று நேரத்துக்குப் பின், அவனுடைய இசையைக் காயப்படுத்திவிடாத மென்மையான குரலில் ”சந்தன்
சா பதன்…. இதுவும் முகேஷ்தான்,” என்றார்.
திடுக்கென்று விளக்குகள் எரிந்தன. பக்கத்துத் தெரு கோயில் ஒலிபெருக்கி
கமறியபடி உயிர்பெற்றுக்கொண்டது. அவன் வாசிப்பு
சட்டென்று நின்றது. உற்சாகமாகப் பொலிந்துகொண்டிருந்த நிலவின் முகம் இருண்டது.
புரொபசரைத் திரும்பிப் பார்த்தேன். ”Fleeting
bliss’’
என்று முனகியபடியே தலையைக் குனிந்தபடி அவர் உள்ளே சென்றது இன்னும் என் மனதில் அழியாச்
சித்திரம்.
***
கண்ணாடிக் கோப்பைகளில் பழச்சாறோடு வந்தார். மெலிதாகப் புன்னகைத்தார்.
நான் எதையோ கேட்கத் தவித்துக்கொண்டிருப்பதை உணர்ந்திருப்பவர் போலத் தோன்றினார். என்னை
இலகுவாக்குவதுபோல எனது எதிர்காலத் திட்டங்களைப் பற்றி விசாரித்தார். உயர் ஆய்வுகளுக்கு
விண்ணப்பிக்க புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களைப் பரிந்துரைத்தார். மீண்டும் உள்ளே சென்று
ஒரு பெரிய புத்தகத்தோடு வந்து மேலும் சில கல்லூரிகளைப் பற்றிய விவரங்களைக் காட்டினார்.
கோப்பையை வைத்துவிட்டு, “எதிரில் புல்லாங்குழல் வாசிப்பானே,
அவன் இப்போ எங்கே சார்?” என்றேன்.
கண்ணாடிக் கோப்பையை இடது கைக்கு மாற்றிக்கொண்டு, மூன்று விரல்களைக்
காட்டினார்.
மூன்று வருடங்கள்!
ஒருவிதத்தில் எதிர்பார்த்ததுதான். அவன் இன்னமும் இங்கே இருந்திருந்தால்தான்
அதிர்ச்சியடைந்திருப்பேன் என்று தோன்றியது.
“ ஏதோ ஆஸ்பத்திரியில சேர்த்தாங்க. ரொம்ப களைச்சுப் போயிதான்
திரும்பி வந்தான். இங்கே எதிரிலேயேதான் படுத்துக்கிட்டிருந்தான். அவன் உடம்புக்கு என்ன
வந்ததுன்னு தெரியல. ஒரு சின்னப்பொண்ணு தினமும் தட்டுல சாப்பாடு எடுத்துக்கிட்டு வந்து
கொடுத்துக்கிட்டு இருந்தது. அவனால வாசிக்க முடியல போலிருக்கு. நாலைந்து நாள் கழிச்சு
ஒரு நாள் ராத்திரி அவன் ஊதுற சத்தம் கேட்டுது. ஊதறதாத்தான் இருந்தது. வாசிப்பாவே இல்லை.
திணறித் திணறி கொஞ்ச நேரம் ஊதிக்கிட்டிருந்தான். காலையிலே எழுந்திருக்கவேயில்ல. போயிட்டான்.”
மிச்சமிருந்த பழச்சாறை குடிக்காமல் மேசை மீது வைத்தார்.
”அவங்க ஆளுங்க பெருசா எந்த சடங்கும் பண்ணாம அவனைக் கொண்டுபோய்,
இங்கே பின்னாலே ரயில்வே லைனையொட்டி இருக்கே, அந்த மயானத்துல புதைச்சுட்டாங்க.”
சன்னலுக்கு வெளியே காக்கைகளின் சத்தம் நாராசமாகக் குறுக்கிட்டது.
ஆறேழு காக்கைகள் விதம்விதமான ஆணிக்கீறல்களாகக் கரைந்துகொண்டிருந்தன. சொல்லிவைத்தாற்போல
அரை கிலோமீட்டர் தூரத்தில் அப்போது கடந்துசெல்லும் ரயிலின் சத்தம் கேட்டது.
புரொபசர் பக்கவாட்டுச் சன்னல் வழியே வெளியே பார்த்தார். அங்கிருந்து
பார்க்கும்போது ரயில் தெரியாது, சத்தம் மட்டும்தான் கேட்கும். ஆனாலும் அந்த சத்தம்
அடங்கும் வரை அந்தத் திக்கிலேயே பார்த்துக்கொண்டிருந்தார்.
“அவனைப் புதைக்கும்போது அவன் வெச்சிருந்த பைகளையும் சேர்த்துப்
புதைச்சிட்டாங்க,” என்றார்.
அதிர்ந்து போய் அவரைப் பார்த்தேன். மெதுவாகத் தலையசைத்து, “ஆமாம்,”
என்றார். “அவன் புல்லாங்குழல்களும் அவனோட மண்ணுக்குள்ள போயிடுச்சு.”
எதுவும் பேச முடியாமல் நானும் அந்தச் சன்னலுக்கு வெளியே வெறித்தேன்.
“அவன் ஆறு புல்லாங்குழல்களை வெச்சிக்கிட்டு இருந்திருக்கான்.
வெவ்வேற சைஸ்ல. பையன் பார்த்துட்டு சொன்னான். அப்புறம்தான் தோணுச்சு, அந்தப் புல்லாங்குழல்கள்ள
ஒண்ணை கேட்டு வாங்கி வெச்சுக்காமப் போயிட்டமேன்னு.”
***
கிளம்பும்போது, புரொபசர் மூன்று
குறுந்தகடுகளைக் கொடுத்தார்.
“ஹரி பிரசாத் சௌரஸ்யா. இப்பல்லாம்
என்னால கேட்க முடியறதேயில்ல. நீயாவது கேளு.”
***
வந்த வழியே செல்லாமல் திரும்பி
கிருஷ்ணா நகரின்உட்பகுதியை நோக்கி நடந்துகொண்டிருந்தேன். வெயில் உக்கிரமாக இறங்கிக்
கொண்டிருந்தது. ஆறாவது குறுக்குத் தெருதான் கடைசி. அதற்கப்பால் காட்டுச் செடிகள் மண்டியிருந்த
இடுகாடு. அங்கங்கே உதிரியாக சமாதிகள். பின்னால் மேட்டு நிலமாக உயர்ந்து இருப்புபாதையின் விளிம்பு வெயிலில் பளிச்சிட்டது.
அவனையும் புல்லாங்குழல்களையும்
புதைத்த இடம் எதுவென்று அவனைப் புதைத்தவர்களுக்கே அடையாளம் காட்டமுடியாது என்று தோன்றியது.
சாம்பல் நிறக் குருவி ஒன்று என்னெதிரே படபடத்துச் சென்று இருபது அடி தூரத்தில் உட்கார்ந்தது.
என்னைத் திரும்பிப் பார்த்தது. ஒரு திடீர் காற்று சீறலுடன் கடந்தது. பரிச்சயமில்லாத
மணத்தை உணர்ந்தேன். வியர்வை புருவத்திலிருந்து கண்ணுக்குள் இறங்கியது.
ரயில் கூவும் சத்தம் கேட்டது.
பறவை பறந்து சென்றது. ரயில் எந்தப் பக்கத்திலிருந்து வருகிறதென்று தெரியவில்லை. மீண்டும்
ரயில் கூவும் ஒலி.
ஒரு நிமிடம் கழித்து ரயில் புலப்பட்டது.
மெதுவாக வந்துகொண்டிருந்தது. வேகம் இன்னும் குறைந்து நின்றது. ஐந்து நிமிடங்கள் கழித்து
மெதுவாக நகரத் தொடங்கியது.
ரயில் கடந்துசெல்லும்வரை அங்கேயே
நின்றிருந்தேன்.
திரும்பி நடக்கும்போது அந்த சாம்பல்
பறவை எனக்கு முன்னால் வழிகாட்டிக்கொண்டே பறந்து சென்றது.
*******************************************************************************************************************
கருத்துகள்
கருத்துரையிடுக