மாணவனின் மனைவி
மாணவனின் மனைவி
ரேமண்ட் கார்வர்
                        
                                    (தமிழில்: ஜி.குப்புசாமி)
தன் அபிமானக்
கவிஞரான ரில்கேவை அவளுக்காக அவன் வாசித்துக் காட்டிக்கொண்டிருந்தபோதே தலையணையில்
சாய்ந்து தூங்கிப்போனாள். அவனுக்கு வாய்விட்டு உரக்க வாசிக்கப் பிடிக்கும்.
நன்றாகவும் வாசிப்பான் – தன்னம்பிக்கை மிகுந்த கணீரென்ற குரல். சில முறை
தாழ்ந்து  துயரார்ந்தும், சிலமுறை
உயர்ந்தும், சிலமுறை துடிப்போடும் ஒலிக்கும். வாசிக்கும்போது நூலின் பக்கத்திலிருந்து அவன்
பார்வை விலகவே விலகாது. மேசையிலிருந்து சிகரெட்டை எடுப்பதற்காக மட்டும் வாசிப்பு
தடைப்படும். அந்தக் கம்பீரக் குரல் ஏதோவொரு கோட்டை நகரின் மதிற்சுவரைக் கடந்து
கூண்டுவண்டிகளில் தாடிக்கார மனிதர்கள் சாரிசாரியாக வந்துகொண்டிருந்த அவளது
கனவுக்குள் கசிந்து உசுப்பி எழுப்பியது. சில நிமிடங்களுக்கு அவன்
வாசித்துக்கொண்டிருந்ததைக் கேட்டாள். பின் கண்களை மூடி தூக்கத்துக்குள் நழுவினாள்.
அவன் தொடர்ந்து
உரக்க வாசித்துக் கொண்டிருந்தான். குழந்தைகள் முன்பே தூங்கிவிட்டன. அவ்வப்போது
வெளியே ஈரச் சாலையில் கார்களின் டயர்கள் கிறீச்சிடும் ஒலிகள். சற்று நேரம் கழித்து
புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, விளக்கை அணைக்கத் திரும்பினான். அவள் திடீரென்று
கண்களைத் திறந்தாள். திடுக்கிட்டவள் போல இரண்டு மூன்று முறை கண்களைக்கொட்டி மலங்க
மலங்க விழித்தாள். கண்ணாடியைப் போலிருந்த நிலைகுத்திய கண்களின் மீது மூடி மூடித்
திறந்த அவளின் கண்ணிமைகள் வினோதமாகக் கருத்தும், பருத்தும் தெரிவதாக அவனுக்குத் தோன்றின. அவளை
உற்று நோக்கினான்.
“கனவு கண்டுகொண்டிருந்தாயா?” என்று கேட்டான்.
அவள்
தலையசைத்தாள். கையை உயர்த்தி தலையில் இரு பக்கங்களிலும் செருகியிருந்த பிளாஸ்டிக்
முடிச் சுருட்டிகளைத் தொட்டுப் பார்த்துக்கொண்டாள். நாளை வெள்ளிக்கிழமை.
உட்லேண்ட்ஸ் அபார்ட்மெண்ட்ஸில் உள்ள நான்கிலிருந்து ஏழு வயதுள்ள குழந்தைகளை நாள்
முழுவதும் கவனித்துக்கொள்ளவேண்டிய தினம். ஒரு கையை படுக்கையில் ஊன்றிக்கொண்டு
அவளையே பார்த்துக்கொண்டு, மற்றொரு கையால் படுக்கை விரிப்பின் சுருக்கங்களை
நீவிவிட்டுக்கொண்டிருந்தான்.  எடுப்பான
கன்னத்து எலும்புகளோடு மிகவும் மென்மையான முகச்சருமம் அவளுக்கு. அந்தக் கன்னத்து
எலும்புகள், கால்வாசி நேஸ் பெர்ஸாக*  இருந்த
அவளுடைய அப்பாவிடமிருந்து பெற்றவை என்று சில முறை அவளுடைய நண்பர்களிடம்
வாதாடிருக்கிறாள்.
பிறகு: “மைக், எனக்கு ஏதாவது
கொஞ்சம் ஸாண்ட்விச் அல்லது ரொட்டியில் வெண்ணெயும் லெட்டூஸ் கீரையும் உப்பும்
சேர்த்துக் கொண்டுவாயேன்.”
அவன் எதுவும்
செய்யாமல் எதுவும் சொல்லாமல் இருந்தான். அவனுக்கு இப்போது தூங்கவேண்டும். கண்களைத்
திறந்து பார்த்தான். அவள் நன்றாக விழித்துக்கொண்டு அவனையே
கவனித்துக்கொண்டிருந்தாள். 
“நீ இன்னும் தூங்கவில்லையா, நான்?” என்றான் மிகவும் அக்கறையோடு. “நேரமாகிவிட்டது.”
“எனக்கு இப்போது ஏதாவது சாப்பிடவேண்டும்,” என்றாள். “எதனாலோ என் கால்களும் கைகளும்
ரொம்பவும் வலிக்கின்றன. பசியும் எடுக்கிறது.”
அவன் மிகையாக
முனகிக்கொண்டு கட்டிலிலிருந்து இறங்கிச் சென்றான். 
ஸாண்ட்விச்
தயாரித்துக்கொண்டு ஒரு தட்டில் எடுத்துவந்தான். அவன் படுக்கையறைக்குள் நுழைந்ததும், அவள் எழுந்து
உட்கார்ந்து புன்னகைத்தாள். ஒரு தலையணையை முதுகுக்குப் பின்னால் வைத்துக்கொண்டு
தட்டை வாங்கினாள். வெண்ணிற நைட்கவுனில் அவளைப் பார்ப்பதற்கு மருத்துவமனையில்
இருக்கும் நோயாளியைப் போல அவனுக்குத் தோன்றியது. 
“என்னவொரு வேடிக்கையான கனவு” என்றாள்.
அவன் கட்டிலில்
ஏறி, அவளைத்
தாண்டிக்கொண்டு தன்னுடைய பக்கத்துக்கு வந்து, “என்ன கனவு கண்டுகொண்டிருந்தாய்?” என்றான்.
கட்டிலையொட்டியிருந்த நைட்ஸ்டாண்டை வெறித்தான். கண்களை மெதுவாக மூடிக்கொண்டான். 
“அதைக் கேட்க உண்மையாகவே விருப்பமா உனக்கு?”
“நிச்சயமாக” என்றான்.
________________________________________________________________________________
* அமெரிக்காவின் வடமேற்கு பீடபூமியின் பூர்வகுடிகள்: நேஸ் பெர்ஸ்.
அவள் தலையணையில்
சௌகரியமாக சாய்ந்துகொண்டாள். உதட்டிலிருந்து ஒரு ரொட்டித் துண்டை
துடைத்தெறிந்தாள்.
“அது முடிவேயில்லாமல் நீண்டுகொண்டு எல்லாவிதமான உறவுமுறைகளும்
வந்துபோய்க்கொண்டிருந்த கனவாக இருந்தது. ஆனால் இப்போது கொஞ்சம்தான் ஞாபகத்தில்
இருக்கிறது. தூக்கம் கலைந்தபோது தெளிவாக இருந்தது, ஆனால் இப்போது மங்கலாகிக்கொண்டிருக்கிறது.
எவ்வளவு நேரம் தூங்கியிருப்பேன், மைக்? சரி, எப்படியோ போகட்டும். நாம் ஏதோவோரிடத்தில் இரவு
தங்கியிருக்கிறோம். குழந்தைகள் எங்கேயென்று தெரியவில்லை, நாம் இருவர்
மட்டும்தான் ஏதோவொரு சின்ன ஹோட்டலிலோ எங்கேயோ தங்கியிருக்கிறோம். அது எனக்குப்
பரிச்சயமில்லாத ஏரி ஒன்றின் கரையில் அமைந்திருக்கிறது. நம்மோடு இன்னொரு வயதான
தம்பதிகளும் இருக்கிறார்கள். அவர்கள் செல்லப்போகும் ஒரு மோட்டார் படகில் நம்மையும்
வரச்சொல்லி அழைக்கிறார்கள்.“ அவள் அதை நினைத்து தலையணையிலிருந்து முன்னால்
சாய்ந்து சிரித்தாள்.  “அடுத்து ஞாபகத்தில்
இருப்பது நாம் அந்தப் படகுத்துறையில் நின்றிருக்கிறோம். அப்புறம் பார்த்தால், அந்தப் படகில்
ஒரேயொரு இருக்கைதான் காலியாக இருக்கிறது. அதுவும் படகின் முனையில் மூன்றுபேர்
மட்டுமே உட்காரும்படியான ஒரு பெஞ்ச்.  அந்த
ஒரு இடத்தில் யார் உட்காருவது, யார் பின்பகுதியில் இடுக்கிகொண்டு உட்கார்வது
என்று நீயும் நானும் வாக்குவாதம் செய்கிறோம். நீதான் உட்காருவாய் என்று நீயும்
நான்தான் உட்காருவேன் என்று நானும் பிடிவாதம் பிடிக்கிறோம். கடைசியில் நான் படகின்
பின்பகுதியில் நெருக்கிக்கொண்டு உட்காருகிறேன். அந்தக் குறுகலான இடத்தில்
உட்கார்ந்து என் கால்களெல்லாம் வலிக்கின்றன. 
படகுக்குள் தண்ணீர் 
வந்துவிடுமோவென்று பயமாக இருக்கிறது. அப்புறம் விழித்துக்கொண்டேன்.”
“நல்ல கனவுதான்” என்றான் தூக்கக் கலக்கத்தை சமாளித்துக்கொண்டு. இன்னும் ஏதாவது
சொல்லியாகவேண்டும் என்று தோன்றியது. “உனக்கு போனி ட்ராவிஸ்ஸை ஞாபகம் இருக்கிறதா? ஃப்ரெட்
ட்ராவிஸ்ஸின் மனைவி. அவளுக்கு நிறங்களோடு கனவுகள் வரும் என்று சொன்னாள்.”  
அவள் கையில்
வைத்திருந்த ஸாண்ட்விச்சைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதை ஒரு வாய்
கடித்துக்கொண்டாள். மென்று விழுங்கிவிட்டு நாக்கை உதடுகளுக்குப் பின்னால்
துழாவிக்கொண்டாள்.  தட்டை தொடை மீது ஆடாமல்
வைத்தபடியே பின்னால் நகர்ந்து தலையணையை சரிசெய்துகொண்டாள். அவனைப் பார்த்துப்
புன்னகைத்தாள். மீண்டும் தலையணை மீது சாய்ந்துகொண்டாள். 
”நாம் டில்டன் ஆற்றங்கரையில் ஒரு நாள் இரவு தங்கியிருந்தோமே, உனக்கு
ஞாபகமிருக்கிறதா, மைக்? நீ கூட அடுத்த நாள் காலை ஒரு பெரிய மீனைப்
பிடித்தாயே?” அவன் தோளைத் தொட்டாள். “உனக்கு ஞாபகம் இருக்கிறதா?” என்றாள்.
அவளுக்கு ஞாபகம்
இருந்தது. கடந்த சில வருடங்களில் எப்போதாவது அவள் நினைவில்
தட்டுப்பட்டுக்கொண்டிருந்த அந்தத் தினம் இப்போது அடிக்கடி வரத் தொடங்கியிருந்தது.
அது அவர்களுக்குத் திருமணமாகி ஓரிரு மாதங்கள் கழித்துச் சென்ற ஒரு வார இறுதிப்
பயணம். அன்றிரவு ஆற்றோரத்தில் சின்னதாக நெருப்பு மூட்டிக்கொண்டு அந்த ‘கேம்ப்
ஃபயர்’ முன்பாக அமர்ந்திருந்தார்கள். ஐஸாகக் குளிர்ந்திருந்த ஆற்றில் தர்ப்பூசணிப்
பாசி மிதந்துகொண்டிருந்தது. அவள் இரவு உணவுக்கு ஸ்பாமும், முட்டைகளும், பட்டாணிகளும்
சமைத்தாள். அடுத்த நாள் காலையில் கரி படிந்த அதே வாணலியில் பான்கேக்குகளும், ஸ்பாமும்
முட்டைகளும் சமைத்தாள். இரண்டு முறையும் ஒரே வாணலியில் சமைத்ததால் அவளால் காபி
தயாரிக்க முடியாமற்போனது. ஆனாலும் அவர்களுக்கு அந்த இரு நாட்களில் உன்னதமான
அனுபவம் வாய்த்திருந்தது. அன்றிரவு அவன் அவளுக்கு என்ன வாசித்துக் காட்டினான்
என்பதுகூட அவளுக்கு ஞாபகமிருக்கிறது: எலிசபெத் பிரௌனிங்கும், ரூபையாத்திலிருந்து
சில கவிதைகளும். அவர்கள் போர்வைகளுக்கு மேல் போர்வைகளாகப்
போர்த்திக்கொண்டிருந்தார்கள். அவற்றின் பாரத்தில் அவளால் கால்களைக்கூட நகர்த்த
முடியாமல் இருந்தது. அடுத்த நாள் அவன் ஒரு மிகப் பெரிய ட்ரௌட் மீனைப் பிடித்தான்.
அந்த மீனோடு அவன் விளையாடிக் கொண்டிருந்ததை ஆற்றோரச் சாலையில்
சென்றுகொண்டிருந்தவர்கள் கார்களை நிறுத்திவிட்டு வேடிக்கை பார்த்தனர். 
“என்ன? உனக்கு ஞாபகம்
இருக்கிறதா இல்லையா?” என்று அவன் தோளைத் தட்டினாள். “மைக்?”
“நினைவிருக்கிறது,” என்றான். சற்று ஒருக்களித்துக் கொண்டு கண்களைத்
திறந்தான். அவனுக்கு எல்லா விஷயங்களும் நினைவில் இருப்பதாகத் தோன்றவில்லை.
ஞாபகத்தில் இருப்பதெல்லாம் அவன் தலைமுடியை கவனமாக வாரிக்கொண்டிருந்ததும், வாழ்க்கை, கலை பற்றிய அரைவேக்காட்டுத்தனமான
கருத்துக்களை வைத்துக்கொண்டிருந்ததும் மட்டுமே. அவற்றை ஞாபகப்படுத்திக்கொள்ள அவன்
விரும்பவில்லை. 
“அதெல்லாம் பல வருடங்களுக்கு முன் நடந்தவை, நான்,” என்றான்.
“நாம் உயர்நிலைப் பள்ளியை அப்போதுதான் முடித்திருந்தோம். நீ கல்லூரியில்
சேர்ந்திருக்கவில்லை,” என்றாள்.
அவன் அமைதியாகக்
காத்திருந்தான்.  கைகளை ஊன்றி எழுந்து அவளை
நோக்கித் திரும்பினான். “ஸாண்ட்விச்சை சாப்பிட்டு முடித்துவிட்டாயா, நான்?” அவள் இன்னமும்
படுக்கையின் மீது உட்கார்ந்துகொண்டுதான் இருந்தாள்.
அவள்
தலையசைத்துவிட்டு அவனிடம் தட்டைக் கொடுத்தாள்.
“விளைக்கை அணைத்துவிடுகிறேன்.”
“சரி.”
அவன் மீண்டும்
நன்றாகப் படுத்துக்கொண்டு அவள் கால்களைத் தொடுமளவுக்கு கால்களை நீட்டிக்கொண்டான்.
தன்னைத் தளர்த்திக்கொண்டு ஒரு நிமிடம் அசையாமல் படுத்திருந்தான். 
“மைக், நீ
தூங்கிவிடவில்லையே?”
“இல்லை,” என்றான். “அதெல்லாம் ஒன்றுமில்லை.”
“எனக்கு முன் தூங்கிவிடாதே, நான் மட்டும் தனியாக விழித்துக்கொண்டிருக்க
விரும்பவில்லை.”
அவன்
பதிலளிக்கவில்லை. ஆனால் அவள் பக்கமாக சில அங்குலங்கள் நகர்ந்துகொண்டான். அவள் தன்
கையை எடுத்து அவன் மார்பின் மீது வைத்துக் கொண்டாள். அவள் விரல்களை எடுத்து
மெதுவாக அழுத்தினான். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அவனுடைய கை தளர்ந்து சரிந்தது.
பெருமூச்செறிந்தான்.
“மைக்? அன்பே? என் கால்களைப்
பிடித்துவிடுங்களேன். கால்கள் வலிக்கின்றன,” என்றாள். 
அவன் அடங்கிய
குரலில்,”கடவுளே”
என்றான். “நான் நல்ல தூக்கத்தில் இருக்கிறேன்.”
“சரி, என் கால்களைப்
பிடித்துவிட்டுக்கொண்டே பேசிக்கொண்டிருங்களேன். என் தோள்பட்டைகளிலும் நல்ல வலி.
முக்கியமாக கால்களில்.”
அவன் திரும்பிப்
படுத்துக்கொண்டு அவள் கால்களை அழுத்திவிடத் தொடங்கினான். கொஞ்ச நேரத்திலேயே அவன்
கை அவள் இடுப்பின் மேல் துவண்டு சரிந்தது. தூங்கிவிட்டிருந்தான்.
”மைக்?”
“என்ன, நான்? என்னவென்று
சொல்.”
“என் உடம்பு முழுக்கப் பிடித்துவிடு என்று சொன்னேன்,” என்றபடி
திரும்பிப் படுத்தாள். “கால்கள் இரண்டுமே இப்போது கடுமையாக வலிக்கின்றன.”
போர்வைக்குள்ளிருந்த கால்களை உயர்த்த, அது கூடாரமாகியது.
அந்த
இருட்டறையில் அவன் கண்களை ஒரு கணம் திறந்து மூடிக்கொண்டான். “வலி எல்லா
இடங்களுக்கும் பரவிக்கொண்டேயிருக்கிறது போல?”
“கடவுளே, ஆமாம்,” என்றபடி கால்விரல்களை மடக்கி நீட்டிக்கொண்டாள். அவனைத் தூக்கத்திலிருந்து
எழுப்பிவிட்டதில் மகிழ்ந்தாள். “எனக்கு பத்து பதினோறு வயதாக இருந்தபோது வேகமாக
வளரத் தொடங்கியிருந்தேன். இப்போது இருக்கும் உயரத்தை அப்போதே அடைந்துவிட்டேன். நீ
என்னைப் பார்த்திருக்க வேண்டுமே! அவ்வளவு வேகமாக வளர்ந்துகொண்டிருந்தபோது கைகளும்
கால்களும் எந்நேரமும் வலியெடுத்துக் கொண்டேயிருக்கும். உனக்கு?”
“எனக்கு, என்ன?”
“நீ வளரும்போது அப்படி இருந்ததா?”
“எனக்கு ஞாபகமில்லை.”
கடைசியில்
முழங்கையை ஊன்றிக்கொண்டு எழுந்து ஒரு தீக்குச்சியைப் பற்றவைத்து கடிகாரத்தைப்
பார்த்தான். தலையணையை அதன் குளிர்ந்த பக்கத்துக்கு திருப்பிப் போட்டு மீண்டும் படுத்துக்கொண்டான்.
“நீ தூங்குகிறாய், மைக். பேசமாட்டேனென்கிறாயே.”
அவன் படுத்த
நிலையிலிருந்து அசையாமல், ”சரி,” என்றான்.
”என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்க வை. என்னால் தூங்க முடியவில்லை,” என்றாள்.
அவள் சுவர்ப்
பக்கமாகத் திரும்ப, அவன் திரும்பி, கையை அவள் தோள் மீது வைத்தான்.
“மைக்?”
அவள் பாதத்தை
கால் விரல்களால் தட்டினான்.
“உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும், பிடிக்காது என்று சொல்லேன்.”
“இப்போது எதுவும் தோன்றவில்லை. நீ வேண்டுமானால் சொல்லு,” என்றான்.
“நீ எனக்கு சொல்வதாக வாக்களித்தால் நானும் சொல்கிறேன். சரியா?
அவள் பாதத்தை
மீண்டும் தட்டினான்.
”சரி,” என்று
சந்தோஷத்தோடு மல்லாந்து படுத்தாள். ”எனக்கு நல்ல உணவு வகைகள், ஸ்டீக், மாமிச நிற
உருளைக்கிழங்குகள், இவையெல்லாம் பிடிக்கும். இரவு நேரங்களில்
ரயிலில் நல்ல புத்தகங்கள், பத்திரிகைகள் படிக்கப் பிடிக்கும், அப்போதெல்லாம்
நான் விமானத்தில் பறப்பதைப்போல உணர்வேன்.“ அவள் நிறுத்தினாள். ”இவையெல்லாமே
எனக்குப் பிடித்த வரிசையில் இருப்பதல்ல. பிடித்தவற்றை வரிசைப்படுத்திச் சொல்வதற்கு
யோசிக்கவேண்டும். விமானத்தில் பறப்பது பிடிக்கும். தரையை விட்டு மேலெழும்பும்
தருணம் இருக்கிறதே, அப்போது எது வேண்டுமானாலும் நடக்கட்டுமே என்று
தோன்றும்.” அவனுடைய கணுக்காலின் மீது காலைப் போட்டுக்கொண்டாள். ”இரவில் வெகுநேரம்
விழித்திருக்கப் பிடிக்கும், காலையில் வெகுநேரம் கழித்து எழுந்திருக்கப்
பிடிக்கும். இதை நாம் எப்போதோ சில முறையல்ல, எப்போதும் செய்யவேண்டும் என்று விரும்புவேன்.
அப்புறம் செக்ஸ் பிடிக்கும். நான் எதிர்பாராத நேரங்களில் அவ்வப்போது என்னைத்
தொடவேண்டும். திரைப்படங்களுக்குச் செல்லவும், அதன் பிறகு நண்பர்களோடு பியர் அருந்தவும்
பிடிக்கும். எனக்கு நண்பர்கள் நிறைய இருக்கவேண்டும். ஜேனிஸ் ஹெண்ட்ரிக்ஸ்ஸை
மிகவும் பிடிக்கும். வாரத்துக்கு ஒருமுறை நடனமாடச் செல்லப் பிடிக்கும். எப்போதும்
நேர்த்தியாக உடையணிந்துகொள்ளப் பிடிக்கும். குழந்தைகள் எப்போதெல்லாம் புது உடைகள்
கேட்கிறார்களோ, தள்ளிப்போடாமல் உடனே அவர்களுக்கு வாங்கித்தரப் பிடிக்கும். ஈஸ்டருக்கு புது
உடை லாரிக்கு இப்போதே எடுத்துத் தரவேண்டுமாம். கேரிக்கும் சின்னதாக ஒரு ஸூட்
எடுக்கவேண்டும், அவனும் பெரியவனாகிவிட்டான். நீயும் புது ஸூட் வாங்கிக்கொள்ளவேண்டும்.  அவனைவிட உனக்குத்தான் அது முக்கியமாகத் தேவை.
அப்புறம் நமக்கு சொந்தமாக ஓர் இடம் வேண்டும். ஒவ்வொரு வருடமும், இரண்டு
வருடங்களுக்கொரு முறையும் வீடு மாறிக்கொண்டே இருப்பது ஒரு முடிவுக்கு வரவேண்டும்.
எல்லாவற்றையும்விட முக்கியமாக…” என்று இடைவெளி விட்டு, “…நாமிருவரும்
பணத்தை பற்றி, செலவுக் கணக்கை பற்றி கவலைப்படாமல் ஒரு நேர்மையான, உண்மையான
வாழ்க்கையை நடத்தவேண்டும். நீ தூங்கிவிட்டிருக்கிறாய்,” என்றாள்.
”இல்லை,” என்றான்.
“வேறு எதுவும் தோன்றவில்லை. சரி, நீ இப்போது சொல். உனக்குப் பிடித்தவையெல்லாம்
என்னென்ன?”
“தெரியவில்லை. நிறைய விஷயங்கள்,” என்று முனகினான்.
“சரி, சொல்லு. பேசிக்கொண்டிருக்கிறோம், இல்லையா?”
”என்னைத் தொந்தரவு செய்யாதே, நான்.” அவன் மீண்டும் திரும்பிப்
படுத்துக்கொண்டு கையை கட்டிலின் விளிம்பின் மீது வைத்துக்கொண்டான். அவளும்
திரும்பிக்கொண்டு அவனோடு ஒட்டிக்கொண்டாள்.
“மைக்?”
“”ஏசுவே,” என்றான். பின்: “சரி. ஒரு நிபிடம் நன்றாக காலை நீட்டிப் படுக்கிறேன், பிறகு
எழுந்துகொள்கிறேன்.” 
சற்று நேரம்
கழித்து, “மைக்? தூங்கிவிட்டாயா?” என்று கேட்டாள்.
அவன் தோள்களை மெதுவாக உசுப்பினாள். அவனிடமிருந்து அசைவே இல்லை. அவனுக்குப்
பக்கத்தில், தன்னைக் குறுக்கிக்கொண்டு கொஞ்ச நேரத்துக்குப் படுத்திருந்தாள். தூக்கத்தில்
அமிழ்ந்துவிட முயன்றாள். முதலில் உடம்பை அசைக்காமல், ஆழமாக மூச்சிழுக்காமல், இலேசாக, மிகவும் சீரான
இடைவெளியில் மூச்சுவிட்டாள். ஆனால் அவளால் தூங்க முடியவில்லை.
அவன்
மூச்சிரைப்பை பொருட்படுத்தாமலிருக்க முயன்றாள். ஆனால் அது அவளைத்
தொந்தரவுக்குள்ளாக்கத் தொடங்கியது. அவன் மூச்சு விடும்போது அவனுடைய
நாசிக்குள்ளிருந்து ஏதோவொரு சத்தம் வந்துகொண்டிருந்தது. அவனுடைய சுவாசத்துக்கேற்ப
தன்னுடைய உள்மூச்சையும் வெளிமூச்சையும் விடுவதற்கு முயன்று பார்த்தாள். அது
பலனளிக்கவில்லை. அவன் நாசியிலிருந்து வரும் சத்தம் எல்லா முயற்சிகளையும்
கெடுத்தது. அவன் மார்புக்குள்ளிருந்தும் ஒரு கீச்சொலி வந்துகொண்டிருந்தது. அவள்
திரும்பிக்கொண்டு அவன் முதுகோடு முதுகாக ஒட்டிப் படுத்துக்கொண்டாள். கையை நீட்டி
கட்டிலையொட்டி இருந்த சில்லிட்ட சுவரை விரல் நுனியால் தொட்டாள். படுக்கையின்
கால்மாட்டில் போர்வை சுருண்டு  கால்களை
நகர்த்தும்போது  உறுத்தியது. அடுத்த
குடியிருப்பின் படிகளில் இரண்டு பேர் ஏறிச்செல்லும் சத்தம் கேட்டது. கதவைத்
திறப்பதற்குமுன் யாரோ ஒருவர் அடித்தொண்டையிலிருந்து சத்தமாகச் சிரித்தார். பிறகு
நாற்காலி ஒன்றை தரையில் இழுக்கும் சத்தம். மீண்டும் திரும்பிப் படுத்தாள். அடுத்த
வீட்டுக் கழிவறையில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் சத்தம். பின் மீண்டும் தண்ணீர்
பீய்ச்சும் சத்தம். மீண்டும் திரும்பி மல்லாந்துப் படுத்தாள். தன்னை
இலகுவாக்கிக்கொள்ள முயன்றாள். முன்பு பத்திரிகை ஒன்றில் படித்த கட்டுரை
ஞாபகத்துக்கு வந்தது: உடலில் உள்ள எல்லா எலும்புகளும் தசைகளும் பரிபூரண
ஒத்திசைவில் அமைதியுற்றால் தூக்கம் கிட்டத்தட்ட நிச்சயமாக வந்துவிடும். அவள்
நீளமாக மூச்சை இழுத்துவிட்டாள், கண்களை மூடிக்கொண்டாள், கைகளை உடம்போடு
ஒட்டி நீட்டியபடி அசையாமல் படுத்திருந்தாள். இறுக்கம் தளர்வதற்கு முயன்றாள். அவள்
கால்கள் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதைப்போலவும், கீழே ஏதோவொரு
மென்துணி வலை விரிக்கப்பட்டிருப்பதைப்போலவும் கற்பனை செய்துகொண்டாள். கவிழ்ந்து
படுத்தாள். கண்களை மூடினாள், மீண்டும் திறந்தாள். அவள் உதடுகளுக்கருகில் அவள்
விரல்கள் போர்வையோடு சேர்ந்து சுற்றிக்கொண்டிருப்பதை உணர்ந்தாள். விரல்களை நீக்கி, போர்வையின்
சுருக்கத்தை நீவி விட்டாள். விரலை உயர்த்தினாள், பின் போர்வைக்குத் தாழ்த்தினாள். மோதிர விரலில்
இருந்த திருமண வளையத்தை கட்டைவிரலால் வருடினாள். 
திரும்பிப் படுத்தாள், மீண்டும் திரும்பினாள்.  அவளுக்கு திடீரென்று பயமெடுக்கத் தொடங்கியது.
காரணமில்லாத ஓர் ஏக்கத் தருணத்தில், தூக்கம் வருவதற்காக கடவுளை வேண்டினாள். 
கடவுளே, தயவுசெய்து
எனக்கு தூக்கம் கொடு.
தூங்குவதற்கு
முயன்றாள்.
“மைக்.” என்று கிசுகிசுத்தாள்.
பதில் இல்லை.
அடுத்த அறையில்
அவளுடைய குழந்தைகளில் ஒன்று படுக்கையில் புரண்டு சுவரில் இடித்துக்கொள்ளும் சத்தம்
கேட்டது. சற்று நேரத்துக்கு உற்றுக்கேட்டாள் அதன் பிறகு எந்த சத்தமும்
எழவில்லை.  இடது மார்பின் அடியில் கையைப்
பதித்து இதயத் துடிப்பு அவள் விரல்களுக்குப் பரவுவதை உணர்ந்தாள். கவிழ்ந்துப்
படுத்து அழத் தொடங்கினாள். தலையணையிலிருந்து தலையை சரித்து, வாயை போர்வையின்
மீது அழுத்திக்கொண்டாள்.  அவள் அழுதாள்.
பின் கட்டிலின் கால்மாட்டுப் பக்கமாக கீழே இறங்கினாள். 
குளியலறைக்குச்
சென்று கைகளையும் முகத்தையும் கழுவிக்கொண்டாள். பல் விளக்கினாள். முகத்தைக்
கண்ணாடியில் பார்த்தாள். வசிப்பறைக்கு வந்து அறையின் வெப்பத்தை அதிகப்படுத்தினாள்.
சமையலறை மேசைக்கு வந்து உட்கார்ந்தாள். இரவு உடைக்குள்ளிருந்து கால்களை
உயர்த்தினாள். மீண்டும் அழுதாள். மேசையிலிருந்த சிகரெட் பெட்டியிலிருந்து ஒன்றை
எடுத்துப் பற்றவைத்தாள். சில நிமிடங்கள் கழித்து படுக்கையறைக்குத் திரும்பி
மேலங்கிக்கு மாறிக்கொண்டாள். 
குழந்தைகளிடம்
சென்று பார்த்தாள். போர்வையை மகனின் தோளுக்கு மேல் இழுத்துவிட்டாள். மீண்டும்
வசிப்பறைக்குச் சென்று அந்தப் பெரிய நாற்காலியில் உட்கார்ந்தாள். ஒரு பத்திரிகையை
எடுத்துப் புரட்டினாள், படிப்பதற்கு முயன்றாள். படங்களை மட்டும்
பார்த்துக்கொண்டிருந்தாள். மீண்டும் படிப்பதற்கு முயன்றாள். அவ்வப்போது வெளியில்
கார்கள் செல்லும் சத்தம் கேட்கும்போதெல்லாம் தலையை உயர்த்திப் பார்த்தாள். ஒவ்வொரு
காரும் கடந்த பிறகு சற்று நேரம் வேறு சத்தங்களுக்காகக் காத்திருந்தாள். பின்
மீண்டும் அந்தப் பத்திரிகையைப் பார்த்தாள். நாற்காலியை அடுத்திருந்த அலமாரியில்
பத்திரிகைகள் அடுக்கப்பட்டிருந்தன. அவை எல்லாவற்றையும் எடுத்துப் புரட்டினாள்.
வெளியே
வெளிச்சம் பரவத் தொடங்கியதும் எழுந்து சன்னலுக்குச் சென்றாள். தூரத்து மலைத்
தொடருக்கு மேலிருந்த மேகங்களற்ற வானம் வெளுக்கத் தொடங்கியிருந்தது. அவள்
பார்த்துக்கொண்டிருக்கும்போதே மரங்களும் எதிர் வரிசையின் இரண்டடுக்கு வீடுகளும்
உருவம் பெறத் தொடங்கின. வானம்  மென்மேலும்
வெளுத்துக்கொண்டே வர, மலைகளுக்குப் பின்னாலிருந்து ஒளி வேகமாக
விரிந்து எழுந்து வந்தது. அவளுடைய குழந்தைகளில் ஏதாவது ஒன்று சீக்கிரம்
விழித்துவிட்ட நேரங்களில் மட்டுமே சில சூர்யோதயங்களை அவள் பார்த்திருக்கிறாள் (
அவையும் அதிக முறை நிகழ்ந்தவையல்ல; பெரும்பாலும் அவள் வெளியே பார்த்ததேயில்லை. உடனே
படுக்கைக்கோ, சமையலறைக்கோ சென்றுவிடுவாள்), அவள் வாழ்க்கையில் பார்த்த சூரிய உதயங்கள் அவள்
சிறுமியாக இருந்தபோது பார்த்தவை. அவை எதுவுமே இதைப் போல இருந்ததில்லை. படங்களிலோ, புத்தகங்களிலோ
அவள் பார்த்திருந்த, கேள்விப்பட்டிருந்த எந்த சூரிய உதயமும் இந்தச்
சூரிய உதயம் அளவுக்கு பயங்கரமாக இருந்ததில்லை. 
சற்று நேரம்
கழித்து கதவுக்கு வந்து பூட்டைத் திறந்து வெளியே முற்றத்துக்கு வந்தாள்.  மேலங்கியின் கழுத்தை இறுக்கிக்கொண்டாள். காற்று
ஈரமாகவும் சில்லென்றும் இருந்தது. சுற்றுப்புறம் படிப்படியாக துலங்கிக்கொண்டே
வந்தன. எதிரே குன்றின் மேலிருந்த வானொலி கோபுரத்தின் சிவப்பு விளக்குகள் மங்கும்
வரை  ஒவ்வொன்றையும் நிதானமாகப்
பார்த்துக்கொண்டே வந்தாள்.
                   
-------------------------------------
திரும்ப
வீட்டுக்குள் நுழைந்தாள். மங்கலான நடையைக் கடந்து படுக்கையறைக்குள் சென்றாள். அவன்
படுக்கையின் நடுவில் சுருண்டு கிடந்தான். போர்வைகள் அவன் தோள்களின் மீது
சுருண்டிருக்க, தலையணைக்குள் பாதி முகம் புதைந்திருந்தது. அந்த ஆழ்ந்த தூக்கத்தில் கைகள்
இரண்டும் அவளுக்கான இடத்தில் நீட்டிக்கொண்டிருக்க, இறுகிய தாடைகளோடு அவன் நிராதரவான நிலையில்
இருப்பவனைப்போலத் தெரிந்தான். அவள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அறையின்
வெளிச்சம் அதிகரித்துக்கொண்டே வந்தது. வெளிர் நிற திரைச்சீலைகள் அவள் கண்ணுக்கு
எதிரிலேயே வெளுத்தன.
அவள் உதடுகளை
ஈரப்படுத்திக்கொண்டாள். மண்டியிட்டு அமர்ந்தாள். படுக்கையின் மீது கைகளை
நீட்டினாள்.
“கடவுளே, கடவுளே, எங்களுக்கு உதவுவாயா கடவுளே?” என்றாள். 
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
      
 
   
       
 
  
 
   
 
  
கருத்துகள்
கருத்துரையிடுக