மொழிபெயர்ப்பாளனின்
மூன்று பாவங்கள்
ஜி.குப்புசாமி
அயல்மொழி
இலக்கியங்களின் மீதான வரவேற்பு கடந்த பதினைந்து ஆண்டுகளில் தமிழ் இலக்கியசூழலில் அதிகமாகியிருக்கிறது.
மூலப்படைப்புகளுக்கு இணையாக மொழிபெயர்ப்புகளின் எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது. இந்நிலையில்
வாசகர்களும் விமரிசகர்களும் சக எழுத்தாளர்களும்
இம்மொழிபெயர்ப்புகளை எப்படி அணுகுகிறார்கள் , என்ன பயன் பெறுகிறார்கள் என்பதையெல்லாம்
விரிவாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது . வாசகர்களைப் பொறுத்தவரை – பெரும்பாலான விமரிசகர்களையும்
சேர்த்தே சொல்லலாம் – நல்ல மொழிபெயர்ப்பு எது என்பதற்கு சில ஆயத்தமான தகுதிகளை வைத்திருப்பதாகத்
தோன்றுகிறது.
வாசிப்பதற்கு எளிமையாக
இருக்கவேண்டும்
தமிழிலேயே எழுதப்பட்டது
போல இருக்கவேண்டும்
பாத்திரங்கள் ,
இடங்களின் பெயர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்க்கும் போது தமிழநாட்டிலேயே கதை நடப்பதைப்
போல இருக்கவேண்டும்.
நடை சரளமாக இருக்கவேண்டும்.
இவையெல்லாமே ஒரு
மொழிபெயர்ப்பாளனை பெரும் அயர்ச்சியில் ஆழ்த்தக்கூடிய
கோரிக்கைகள்..
.
நூறாண்டுகளுக்கு
மேல் நவீன இலக்கிய மொழிபெயர்ப்புப் பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ்நாட்டில் மொழிபெயர்ப்பு
முறைகள் , வகைகள் , பிரதியை அணுகுவதில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து தொடர்ந்தேர்த்தியான
விவாதம் இருந்திருக்க வேண்டும். எது சரியான மொழிபெயர்ப்பு என்பது பற்றி பல தளங்களில்
கருத்துப்பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்க வேண்டும் ஆனால் இன்றுவரை மிகத்தட்டையான , எளிமையான
கருத்துக்கள் மட்டுமே ‘ கோட்பாடுகளாக ‘ நம்மிடையே நிலவி வருகின்றன.
இலக்கிய மொழிபெயர்பபுக்
கோட்பாடுகளைப் பற்றியும் ரஷ்ய இலக்கிய மொழிபெயர்புகளைப் பற்றியும் மிகத்தீர்கமான கருத்துக்களை
, ஆணித்தரமான பாணியில் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே பேசியும் எழுதியும் வந்தவர் ஒருவர்
உண்டு.
விளாதிமீர் நபக்கோவ்
(1899 – 1977 ) என்ற பெயர் தமிழ் வாசகனுக்குப் பரிச்சயமான பெயர்தான். தமிழில் இதுவரை
அவருடைய நூல் எதுவும் மொழிபெயர்த்திருக்கப் பட்டிருக்கவில்லை என்றாலும் ‘ லோலிடா ‘ என்ற அவரது பிரசித்தி பெற்ற ( மிகவும்
சர்ச்சைக்குள்ளாக்கப் பட்ட ) நாவலும் , அதே பெயரில் வெளிவந்த திரைப்படமும் பெரும்பாலோர்
அறிந்தவை. ரஷியாவில் பிறந்த நபக்கோவ் இந்நாவலை ஆங்கிலத்தில்தான் எழுதினார். அக்டோபர்
புரட்சிக்கு முந்தைய ரஷியாவில் பெரும் செல்வச் செழிப்பான மேட்டுக்குடியில் பிறந்த நபக்கோவ்
ரஷிய மொழியோடு பிரெஞ்சும் ஆங்கிலமும் அறிந்தவர். அவர் குடும்பமே வீட்டுக்குள் இம்மூன்று
மொழிகளிலும் உரையாடிக்கொள்ளும் உயர்குடிக் குடும்பம். முதல் உலகப்போருக்குப்பின் ரஷியாவிலிருந்து
புலம் பெயர்ந்த நபக்கோவ் இங்கிலாந்தில் முதலில் குடியேறினார். ஆரம்பத்தில் கேம்பிரிட்ஜ்
பல்கலைக்கழகத்தில் விலங்கியல் ( பூச்சியியல் – குறிப்பாக வண்ணத்துப் பூச்சியியல் )
படித்து , பின் இலக்கியத்திற்கு நகர்ந்து வந்தவர். ( இந்த ஒரு காரணத்துக்காகவே தனிப்பட்ட
முறையில் எனக்கு அணுக்கிமாகிப் போனவர் )
நபக்கோவ் ஆங்கிலத்திலும்
ரஷிய மொழியிலும் பல சிறுகதைகள் , நாவல்கள் , கவிதைகளை எழுதியவர். அவரது தலைமுறையைச் சேர்ந்த வேறெந்த படைப்பாளியை விடவும்
மொழிபெயர்ப்பு நுட்பங்களைப் பற்றி அதிகம் பேசியிருக்கிறார். மொழிபெயர்க்கப்பட்ட பிரதியை
எவ்விதக் கேள்விக்கும் உட்படுத்தாமல் நம்பி ஏற்றுக் கொண்டிருந்த ஒரு பாரம்பரியத்தை
வேரோடு அசைத்துப் பார்த்தவை நபக்கோவின் கூர்மையான விமரிசனங்கள். அவர் சரியென்று நம்புகிற
மொழிபெயர்ப்பு கோட்பாடுகள் அவை முன்வைக்கப்பட்டு அறுபது ஆண்டுகளுக்குப் பிறகும் தாண்டிச்
செல்லமுடியாதவைகளாகத்தான் இருக்கின்றன.
அதுவரை ரஷிய இலக்கியங்கள்
என்றாலே கான்ஸ்டன்ஸ் கார்னெட்டின் மொழிபெயர்ப்புகள்தான் என்று ஆங்கில வாசகர்கள் நினைத்து
வந்த கருத்தை பலமாக தகர்த்தெறிந்தது நபக்கோவ்தான். கார்னெட் தனது நாற்பதாவது வயதில்
மொழிபெயர்க்கத் தொடங்கி எழுபதுக்கும் மேற்பட்ட ரஷிய இலக்கியங்களை மொழிபெயர்த்தவர்.
தஸ்தயேவ்ஸ்கி , தல்ஸ்த்தோய் ஆகியோரின் அநேகமாக எல்லா படைப்புகளையும் அவர்தான் மொழிபெயர்த்திருந்தார்.
இவற்றைத்தவிர செகாவின் பலநூறு கதைகள் , துர்க்கனேவ் என்று ஒரு மிக நீண்ட பட்டியல்.
அவரது மொழிபெயர்பை
ரஷிய இலக்கியத்திற்கு செய்திருக்கும் அவமரியாதை என்று நபக்கோவ் வர்ணித்தார். ‘‘ ஒரு
கண்ணை தஸ்தயேவ்ஸ்கியிலும் மறுகண்ணை கடிகாரத்தின் மீதும் வைத்துக்கொண்டு மொழிபெயர்த்தவர்
கார்னெட் ‘‘
நபக்கோவின் பிரதான
புகார் , கார்னெட் தன்னுடைய குரலிலேயே எல்லோருடைய கதைகளையும் சொல்கிறார் என்பதுதான்.
வேறு வார்த்தைகளில் சொன்னால் கார்னெட் செய்தது மொழிபெயர்ப்பு அல்ல மறுகூறல் என்பது
. ரஷிய இலக்கியங்களைப் பற்றி எழுதும்போது தல்ஸ்தோய் , தஸ்தயேவ்ஸ்கி ஆகியோர் பயன்படுத்தும்
நடை , வார்த்தைப் பிரயோகங்களைப் பற்றி மிகவிரிவாக உதாரணங்களுடன் பேசுகிறார். உதாரணத்திற்கு
தல்ஸ்தோயின் மொழி நடை நாம் மொழிபெயர்ப்புகளில் காண்பதைப் போல அத்தனைச் சரளமானதோ , அழகானதோ
அல்ல என்பது . உண்மையில் தல்ஸ்தோய் அழகான மொழிநடைக்குச்
சொந்தமானவர் அல்ல என்பதை நபக்கோவ் உதாரணங்களுடன் விளக்கும்போது நமக்கு முதலில் அதிர்ச்சியாவே
இருக்கிறது. ஒரே சொல்லைத் திரும்பத் திரும்ப பயன்படுத்துவது அவருடைய வழக்கமாக இருந்திருக்கிறது.
சற்று திக்கித் திணறியபடி செல்லும் நடை. ஆனால் கார்னெட் ஆற்றொழுக்கான நடையில் தல்ஸ்தோய்
தனது நாவல்களை எழுதியிருப்பதைப் போன்ற தோற்றத்தை தனது மொழிபெயர்ப்பு நடையில் ஏற்படுத்திவிடுகிறார்
என்கிற நபக்கோவ், தஸ்தயேவ்ஸ்கியின் சொற்தேர்வும்
நடையும் செறிவானது என்கிறார் . கார்னெட்
‘ கரமஸோவ் சகோதரர்கள் ‘ மொழிபெயர்ப்பில்
தஸ்தயேவ்ஸ்கி பயன்படுத்திய பல்வேறு குரல் வேறுபாடுகளை , தொனிகளை , மழுங்கடித்து
தட்டையாகத் தந்திருக்கிறார் என்றார்.
அலெக்ஸாண்டர் புஷ்கினின் ‘ யூஜின் ஒனேகின் ‘ ஒரு ரஷிய காப்பியம் . வால்டர்
ஆர்ன்ட் இதனை ஆங்கிலத்தில் கவிதையாகவே மொழிபெயர்த்திருந்தார்.
கேள்வியே கேட்கப்படாமல் கொண்டாடப்பட்ட ஆங்கில மொழியாக்கம் அது. நபக்கோவ் இந்த மொழிபெயர்ப்பை
விமரிசிக்கப் புகுந்ததை வெண்கலக்கடையில் யானை புகுந்ததற்கு ஒப்பிடலாம். பிரசித்திபெற்ற
அந்தப்பிரதியை கருணையே இல்லாமல் நார்நாராகக் கிழித்தெறிந்து தனது வாதங்களை நபக்கோவ்
முன்வைக்கிறார். மூலப்படைப்பின் கவித்துவத்தையும் ஒலிநயத்தையும் மொழிபெயர்ப்பில் கொண்டுவருவதற்காக
சொற் பொருள்துல்லியத்தையும் இலக்கியத்தன்மையையும் வால்டர் ஆர்ன்ட் பலிகொடுத்திருப்பதாக குற்றம் சாட்டினார். ‘ யூஜின்
ஒனேகின்னை எப்படி மொழிபெயர்க்க வேண்டும் என்று உலகத்திற்கு உணர்த்துவதற்காக அவரே மொழிபெயர்த்துக்
காட்டினார்.
நபக்கோவ் தனது மொழிபெயர்ப்பில்
புஷ்கினின் எழுத்தில் இருந்த இசைத்தன்மையையும் , ஒலியையும் முற்றிலுமாகத் துறந்துவிட்டு
மூலப்படைப்பின் அகப்பிரதியை ஆங்கிலத்துக்கு மாற்றியிருந்தார். இந்த மொழிமாற்றத்தின்
போது நபக்கோவ் கையாண்ட உத்திகள் பெரும் விமரிசனத்துக்குட்பட்டன. குறிப்பாக நபக்கோவின்
நெருங்கிய நண்பரான எடமண்ட் வில்சன் ‘ நியூயார்க ரிவ்யூ ஆஃப் புக்ஸ் ‘ இதழில் மிகக்கடுமையாகத்
தாக்கி எழுதினார். ஆங்கிலத்தில் பெரும்புலமை வாய்க்கப் பெற்றவர்களே வரிக்கொருமுறை அகராதியைப்
புரட்ட வேண்டியிருப்பதைப் போல மிகமிகக் கடினமான சொற்களைப் பயன்படுத்தியருப்பதாகவும்
, திருகலான சொற்றொடர்களையும் பொருத்தமற்ற வாக்கியங்களையும்
பிரயோகித்து வாசகனையும் தன்னையும் ஒருசேர சித்ரவதைக்குள்ளாக்கியிருப்பதாகவும் விமரிசித்தருந்தார்.
நபக்கோவ் இத்தகைய விமரிசனங்களை எவ்வளவு முரட்டுத்தனத்தோடு எதிர்கொள்வர் என்பதை மிகநன்றாகவே
அறிந்திருந்த அவருடைய நெருங்கிய நண்பரான வில்சன் மிகத்துணிச்சலாக “ தவறான ஆங்கிலம் “ “ தேவையில்லாத ஏடாகூடமான நடை “ “ ஆபாசமான சொற்றொடர்கள் “ “ என்றெல்லாம் தனது கட்டுரையில் எழுதிவிட்டார்.
இதழ் வெளிவந்ததும் கட்டுரையை படித்த நபக்கோவ் ‘ ரிவ்யூ ‘ இதழின் துணை ஆசிரியர் பார்பரா எப்ஸ்டீனுக்கு
தந்தியடித்தார் : “ அடுத்த இதழில் என் இடிமுழக்கத்துக்கு
போதிய இடத்தை ஒதுக்கி வையுங்கள். “
வில்சனின் குற்றச்சாட்டுகளுக்கு
நபக்கோவ் அளித்த பதில் வெறும் கோடையிடி முழக்கம் மட்டுமல்ல , அவர் நம்புகிற மொழிபெயர்ப்பு சித்தாந்தம் அதிர்ச்சி மதிப்புக்கானது அல்ல என்பதையும்
, இலக்கிய மொழிபெயர்ப்பு என்ற இயலை அவர் எவ்வளவு ஆழ்ந்தும் விரிவாகவும் கற்றுத் தேர்ந்திருக்கிறார்
என்பதையும் அது காட்டியது. அவர் அளித்த பதிலின் சாரம் இதுதான்:
‘ புறத்தோற்றத்தை
மட்டும் காட்டுவது இலக்கிய மொழிபெயர்ப்பாகாது. மூலப்படைப்பில் பயன்படுத்தப்பட்ட புராதனச்
சாயலை மொழிபெயர்ப்பிலும் கொண்டுவருதலே சரியான உத்தி. ஆங்கிலத்தில் வாசிக்கும்போது உங்கள்
செவிகளில் ரஷிய மொழியில் அது ஒலிக்க வேண்டும். அதுவே சரியான மொழிபெயர்ப்பு.‘
தான் நம்புகிற மொழிபெயர்ப்பு
கோட்பாடுகளைக் குறித்தும் , பிற மொழிபெயர்ப்புகளைப்
பற்றிய விமரிசனங்களையும் மிக வலுவான அபிப்பிராயங்களோடு உரத்த குரலில் தெரிவித்து வந்த
நபக்கோவ் எவ்வளவு நுட்பமான கலைரசனையாளர் என்பது அவருடைய ‘ மொழிபெயர்ப்புக் கலை ‘ என்ற
கட்டுரையில் புலப்படுகிறது. பல இலக்கிய ஆய்வாளர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டு
வருகிற இக்கட்டுரையின் பிரபல்யத்துக்கு முக்கிய காரணம் , இதில் நபக்கோவ் பட்டியலிடுகிற
‘ மொழிபெயர்ப்பாளர்கள் புரியும் மூன்று பாவங்கங்கள் ‘ என்ற பகுதிதான். பாவம் : அ
முதல் பாவம்: அறியாமையும் தவறான புரிதலும்
இந்தப் பாவச்செயலுக்கு
முக்கிய காரணம் அயல் மொழியறிவில் போதாமை. ஒரு சாதாரண சொற்றொடரைக் கூட மூல ஆசிரியர்
கனவிலும் நினைத்துப் பார்த்திடாத வாக்கியங்களாக்கிவிடுவது. ஆன்டன் செகாவின் கதை ஒன்றின்
ஜென்மானிய மொழிபெயர்ப்பில் , ‘ வகுப்பறைக்குள்
நுழைந்த ஆசிரியர் செய்தித்தாளை விரித்துப் படிக்கத் தொடங்கினார் ‘ என்று இடம் பெறுகிறது. செகாவ் குறிப்பிட்டது தினசரி பாடங்களையும் மாணவர்
செயற்பாடுகளையும் பதிவு செய்யும் ‘ கிளாஸ்ரூம் ஜர்னல் ‘ . ஜெர்மானிய மொழிபெயர்ப்பாளர் ஜர்னல் என்றால் செய்தித்தாள் என்று புரிந்து கொண்டிருக்கிறார்.
அதே போல ஒரு சாதுவான ஆங்கில நாவலில் இடம்பெற்ற ‘ First Night ‘ , ‘ public house ‘
என்ற சொற்கள் ரஷிய மொழிபெயர்ப்பில் ‘ nuptial night ‘ ( திருமணம் முடிந்த முதலிரவு
) என்றும் ‘ Brothel house ‘ ( விபச்சார விடுதி ) என்றும் மாறியிருக்கிறது!
பொதுவாக திறமைக்குறைவான
மொழிபெயர்ப்பாளர்களை வழுக்கிவிழச்செய்பவை மரபுத்தொடர்கள் . அந்நிய கலாச்சாரம் , அம்மொழி
புழங்கும் நிலம் போன்றவற்றின் ஆதிக்கத்திலிருந்து எழுகின்ற மரபுத்தொடர்களை இன்னொரு
மண்ணுக்கு அதே வடிவத்தில் கைமாற்றிக் கொடுப்பது கடினம். அதற்கிணையான இலக்கு மொழியின்
மரபுத் தொடரை அப்படி ஏதேனும் இருந்தால் - பயன்
படுத்தலாம். ஆனால் அம்மரபுத் தொடரில் இலக்கு மொழியின் கலாச்சாரக் கூறுகளோ , உள்ளூர்
வழக்கோ இடம்பெற்றிருக்கக் கூடாது.
இரண்டாவது பாவம் : புரியாத சொற்களை தவிர்த்து விடுதல்
ஒரு படைப்பாளி தனது
படைப்பை கிட்டத்தட்ட நனவிலி நிலையிலிருந்துதான் எழுதுகிறான் . பல எழுத்தாளர்களும் சொல்வதைப்போல
கதையை அவன் எழுதுவதில்லை. கதை அவனைக் கொண்டு தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது. அத்தகைய
படைப்பு நிலையில் அவனால் தர்க்க நியாயங்களுக்கு கட்டுப்பட்டு சொற்களையும் வாக்கியத்
தொடர்களையும் தேர்ந்தெடுக்க இயலுவதில்லை. தன்னெழுச்சியாக வந்து விழும் சொற்களின் பிரவாகத்தில்தான்
அவனது கலையுணர்வும் படைப்பின் இச்சா சக்தியும் கலந்திருக்கிறது. திருகலான வாக்கிய பிரயோகங்களின்
சூட்சமத்தை நுட்பமான வாசகனால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடிகிறது. மொழிபெயர்ப்பாளனுக்கு
அந்தச் கூர்மையான வாசச மனம் இல்லாத நிலையில் அந்த வரிகள் மூட்டமாகவே தென்படும். அத்தகைய அவனுக்கு புரியாத குழப்பமான பகுதிகளை மொழிபெயர்ப்பாளன்
விட்டுவிடுவது மகத்தான இரண்டாவது பாவம் என்கிறார் அவர்.
புரியாத சொற்களை
மொழிபெயர்க்காமல் விட்டுவிடுதல் ஒரு வகை என்றால் , மொழிபெயர்ப்பாளருக்கு உவப்பானதாக
இல்லாமலிருக்கும் சொல்லை தணிக்கை செய்வது அல்லது மாற்றி எழுதுவது இன்னொரு வகை என்கிறார்
அவர்.
அன்னா கரீனினாவின்
ஆரம்பகால ஆங்கில மொழிபெயர்ப்பு ஒன்றில் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் தனது ‘ விக்டோரிய நாணம் ‘ மேலிட அன்னாவின் வசனம் ஒன்றை
உருமாற்றி விடுகிறார். விரான்ஸ்கி அன்னாவிடம் ‘ உன் உடம்புக்கு என்ன ? ‘ என்று கேட்க
, அவள் , ‘ I am beremenna ‘ என்கிறாள். வாசகர்கள்
இது என்ன ஒருவகைத் தொற்று நோயோ என்று சந்தேகப்படக்கூடாது. அன்னா உண்மையில் சொன்னது
“ நான் கர்ப்பமாக இருக்கிறேன். “ “ I am
pregnant என்று அப்பட்டமாக எழுதிவிட்டால்
கதையைப் படிக்கும் பரிசுத்த ஆங்கில ஆன்மாக்கள்
அதிர்ச்சியடைந்து விடுவார்கள் என்று மொழிபெயர்ப்பாளர் கருதி கர்ப்பத்துக்கான ரஷியச்
சொல்லையே பயன்படுத்தி விட்டார் போல என்று எள்ளலாகக் குறிப்பிடுகிறார்.
மூன்றாவது பாவம் : பிரதியை எளிமைப் படுத்திவிடுவது
/ தட்டையாக்கிவிடுவது.
மூன்று பாவங்களில்
மிகப்பெரிய பாவமாக நபக்கோவ் சொல்வது ஒரு மகத்தான படைப்பை இலக்குமொழி வாசகர்களின் கலாச்சார
, பண்பாட்டுக்கேற்றார் போல வடிவத்தை மாற்றி விடுவதும் , எளிமைப் படுத்திவிடுவதும்
, தட்டையாக்கி விடுவதும் . ஆதிகாலத்தில் பைபிளை
மொழிபெயர்த்தவர்களைக் கழுவில் ஏற்றியதைப் போல இத்தகைய மொழிபெயர்ப்பாளர்களையும் கழுவில்
ஏற்றிவிடலாம் என்கிறார் கோபத்தோடு .
ஷேக்ஸ்பியரை ரஷிய
மொழியில் மொழிபெயர்க்கும்போது ரஷியாவில் காணக்கிடைக்காத ஆங்கிலேயே மலர்களை ரஷியப் பூக்களாக
மாற்றிவிட்டதையும், கோகல் , எட்கர் ஆலன் போ , சார்லஸ் புத்லெயே ஆகியோரின் கவிதைகளையும் கதைகளையும் பிறமொழிகளில் மொழிபெயர்க்கும்போது
, பிரதி எளிமையாக்கப்பட்டு இலக்கு மொழித் தன்மையை மேலேற்றி உருமாற்றி கொண்டுசெல்லப்பட்டதையும்
எடுத்துக்காட்டும்போது வெளிப்படுகிற நபக்கோவின் சீற்றம் ரசிக்கத்தக்கது. நபக்கோவ் பல
விமரிசகர்கள் வர்ணிப்பதைப்போல தடாலடிப் பேர்வழி அல்ல என்பதை அவர் பிரயோகிக்கும் சொற்களைப்
பொருட்படுத்தாமல், அவர் முன்வைக்கும் கருத்துக்களை மட்டும் கவனித்துப் பார்த்தால் புரியும்.
மொழிபெயர்ப்பு என்பது கதையைக் கடத்துவது மட்டுமல்ல என்பதுதான் நபக்கோவின் ஆதார கருத்து. மொழிபெயர்ப்பாளனின் நேர்மை தகவல்களை
விடுதலின்றி கொண்டுசேர்ப்பது மட்டுமல்ல , உட்பிரதியையும் , உணர்விழைகளையும் விடுபடாமல்
மொழிமாற்றத்தில் கொண்டுவருவதுதான். அதற்கு அம்மொழிபெயர்பாளன் படைப்பாளியின் ஆன்மாவை
தன் அகமெங்கும் நிரப்பி வைத்துக்கொண்டு, தன்
மொழியில் அப்படைப்பை மறுஉருவாக்கம் செய்வதற்கு தன்னை ஒப்புக்கொடுப்பதுதான் மொழிபெயர்ப்பாளனுக்கு
விதிக்கப்பட்ட அறம். அதைத்தான் நபக்கோவ் வாழ்நாள் முழுக்கவும் சொல்லிக்கொண்டிருந்தார்.
மிக நுட்பமான விஷயங்களை மத்தாப்பூ பொறியைப் போலசீறும் தனது வண்ணமயமான சொற்பிரயோகங்களால்.
ஆம், விளாமதிர் நபக்கோவ் என்ற கலைஞன் ஒரு ரசிக்கக்கூடிய ஆர்ப்பாட்டக்காரர் மட்டுமல்ல,
கவனித்துக் கேட்கவேண்டிய ஆழமான சிந்தனையாளரும்கூட.
( க்ளைமேட் , மே
2019 )
கருத்துகள்
கருத்துரையிடுக