ஸரமாகோவின் உலகுக்கு ஒரு வழிகாட்டி

ஜி.குப்புசாமி

கடந்த நூறு ஆண்டுகளாகவே உலக எழுத்தாளர்கள் தமிழில் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டு எழுத்தாளர்களிலிருந்து சமகால படைப்பாளிகள்வரை அவர்களின் சிறுகதைகளும் நாவல்களும் மொழிபெயர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் ஒன்றிரண்டு நாவல்களையும் சில சிறுகதைகளையும் மட்டும் படித்துவிட்டு ஒரு எழுத்தாளனின் முழு உயரத்தையும் வாசகனால் அளந்துவிடமுடியாது. அதற்கு அவனுடைய மொத்த படைப்புகளையும், அவை எழுதப்பட்ட காலம், அந்த எழுத்துக்களில் பொதிந்திருக்கும் பின்னணிச் செய்திகள், ஒளிந்திருக்கும் உட்பிரதி ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு எழுத்தாளனை அறுதியிட வேண்டியிருக்கிறது.

அத்தகைய இமாலய அலசல் முயற்சிகள் நவீனத் தமிழ் உலகில் அரிதாகவே நடந்திருக்கின்றன. எஸ்ரா பவுண்ட், பெர்டோல்ட் ப்ரெக்ட் ஆகியோரைப் பற்றி பிரம்மராஜனும், காஃப்கா, காம்யூ, கால்வினோ ஆகியோரைப் பற்றி சா.தேவதாஸும் எழுதிய நூல்கள் உண்டு. குறிப்பிட்ட சில நாவல்களை அலசி ஆராய்ந்த பதிவுகளும் நிறையவே உண்டு. ஆனால் தமிழ் உலகம் இதுவரை கண்டிராத பெரும் நிகழ்வாக, மூத்த எழுத்தாளரும் மார்க்ஸிய பெரியாரிய அறிஞருமான எஸ்.வி.ராஜதுரை (எஸ்.வி.ஆர்) போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த ஜோஸே ஸரமாகோ என்ற நோபல் பரிசு பெற்ற உன்னதமான எழுத்தாளருக்கு எழுதியிருக்கும் ’ஸரமாகோ: நாவல்களின் பயணம்’ என்ற மிக விரிவான ‘தனி வரைவு’ தொகைநூல் இப்போது வெளிவந்துள்ளது. இதுவரை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள ஸரமாகோவின் 17 நாவல்கள், மற்றும் ஒரு குறுநாவல் ஆகியவற்றின் சுருக்கத்தோடு, ஆழமான அலசல்கள், அந்நாவல்களின் சம்பவங்களோடு தொடர்பு கொண்ட, ஆனால் நாவலில் குறிப்பிட்டிராத சரித்திர நிகழ்வுகள், இடையிடையே தெறித்து விழும் பூடகமான வரிகளுக்குப் பின்னால்   அடங்கியுள்ள செய்திகள், சில நாவலின் பகுதிகள் மற்ற சில நாவல்களோடு தொடர்பு கொண்டிருக்கும் மாயவலைப் பின்னல்கள் என ஒரு முழுமையான விமர்சன, மதிப்புத் திரட்டாக வாசகர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நாவல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்கள் அளித்த பேட்டிகளின் இணைய இணைப்புகள், நாவலில் இடம்பெற்றுள்ள சரித்திர சம்பவங்களின் பின்னணி, நமக்கு இதுவரை பரிச்சமாகியிருக்காத அயலக பண்பாட்டு, கலாச்சார அம்சங்கள், நாவலைப்பற்றி ஸரமாகோ தெரிவித்த கருத்துக்கள் என அனைத்தையும் தேவைப்பட்ட இடங்களில் அடிக்குறிப்புகளாக வழங்கப்பட்டிருக்கிறது. கடுமையான உடல் நலிவுக்கு இடையிலும் இப்படிப்பட்ட முனைப்பையும் பேருழைப்பையும் கொட்டியிருக்கும் எஸ்.வி.ஆரின் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது.

   ஸரமாகோ வாசிப்பிற்கு எளிதான எழுத்தாளர் அல்ல. கேள்விக்குறிகள், உரையாடலுக்கான மேற்கோள்குறிகள் போன்ற மரபான நிறுத்தல் குறிமுறையை ஸரமாகோ பயன்படுத்துவதில்லை. இரண்டு அல்லது மூன்று பாத்திரங்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது எவர் ஒருவரின் வசனங்களையும் தனித்துக் காட்டாமல், இடைவெளியின்றி அடுத்த வசனத்தோடு சேர்த்தே எழுதிக்கொண்டு செல்வார். மேலும் நிகழ்காலம் கடந்த காலம் ஆகியவற்றுக்கிடையில் அவரது எடுத்துரைப்பானது ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குத் தாவிக்குதிக்கும். ’சொல்லப்படுவது அனைத்தும் கேட்கப்படுவதற்காகவே என்ற நம்பிக்கையில் அமைந்தது ஸரமாகோவின் உரைநடை பாணி’ என்கிறார் ஸரமாகோவின் மொழிபெயர்ப்பாளரான பேர்னடிய்ரோ. இந்த அலாதியான எழுத்து முறையைப் பற்றி ஸரமாகோ தனது நோபல் உரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “படிக்கவோ எழுதவோ தெரியாத விவசாயிகளின் கதைகளை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் எனக்குச் சொன்ன கதைகளை அவர்களுக்குச் சொல்வதற்காக எனக்கு நிறுத்தல் குறிகள் தேவைப்படவில்லை.“

கவித்துவமான நடையில் எழுதப்பட்ட ஸரமாகோவின் நாவல் ‘மண்ணிலிருந்து தோன்றியவர்கள்‘ (Raised From the Ground). இந்நாவலில் பூடகமாக குறிப்பிட்டுள்ள பல அரசியல் கருத்துக்கள் எஸ்.வி.ஆரின் அடிக்குறிப்புகளின் வழியே துலக்கமாகின்றன. “கோதுமை அப்படிப்பட்டதல்ல; அறுவடை செய்யப்பட்ட பிறகு அதில் கொஞ்சம் உயிர் எஞ்சியிருக்கும். கார்க் ஓக் மரமும் இப்படிப்பட்டதுதான். இறுமாந்திருப்பினும் உயிர் நிறைந்தது; தோல் உரித்தெடுக்கும் போது கதறி அழுவது,“ என்ற வரிகள் குறிப்பிடுவது பண்ணைத் தொழிலாளிகளைத்தான் என்பது விளங்குகிறது..

ஓர் உண்மையான இடதுசாரியாக இருந்து கொண்டு, கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்களை ஸரமாகோ விமர்சிப்பதைவிடவும் அவர் அதிகமாக நையாண்டி செய்வது கத்தோலிக்கத் திருச்சபையினரையும் கிறித்துவ மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளையும். ஆனால் இவற்றை விட அதிகமாக அவர் எள்ளி நகையாடுவது விவிலியத்தில் இடம்பெற்றுள்ள பல கதைகளையும் சம்பவங்களையும். ஏசு கிறிஸ்து எழுதிய சுவிசேடம் (Gospel According to Jesus Christ) நாவல் கடவுளின் மகிமையை உயர்த்திக் காட்டுவதற்காக ஏசு காவு கொடுக்கப்பட்டவராக காட்டுகிறது. மூன்று வயதுக்கு குறைவான குழந்தைகள் அனைவரையும் கொன்றுவிடும்படி ஏராது மன்னன் உத்தரவிட்டிருப்பதை அறிந்த ஏசுவின் தந்தை ஜோசப், மற்ற பெற்றோர்களுக்கு அதைத் தெரிவிக்காமல் தன் மனைவி குழந்தை ஏசுவோடு மட்டும் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிடுவது பெரும் குற்றவுணர்ச்சியாக மாறி ஜோசப்பை இறக்கும்வரை சித்திரவதை செய்து வருவதாக விவிலியத்தில் இல்லாத ஓர் அம்சத்தை ஸரமாகோ நாவலில் உருவாக்கிக் காட்டுகிறார். இதே நாவலில் விவிலியத்தில் கூறப்படும் ஏசுவின் அதிசயங்கள் பலவற்றையும் ஸரமாகோ விமர்சிக்கிறார். பேய் பிடித்தவரை குணமாக்கும் போது, அந்த மனிதரின் உடம்பில் புகுந்திருந்த எண்ணற்ற பேய்களை மலையில் மேய்ந்து கொண்டிருந்த பன்றிகளின் உடம்புக்குள் புகுத்திக் கொன்றுவிடுவதை மேரி மக்தலீனா ஏசுவிடம் குற்றம் சாட்டுகிறாள். பசித்த வயிற்றுக்கு பழம் தராத அத்திமரத்துக்கு ஏசு சாபம் கொடுத்தது நியாயமா என்றும் கேட்கிறாள். இந்நாவலில் மட்டுமன்றி ‘சாலமனின் பயணம்‘(The Elephant’s Journey) ‘பல்தஸாரும் பிலிமுன்டாவும்‘ (Baltasar and Blimunda), ‘இடைவெளிகள் விட்டு மரணம்‘ (Death at Intervals) போன்ற நாவல்களிலும் கத்தோலிக்க திருச்சபை பரப்பிவரும் மூடநம்பிக்கைகளை ஸரமாகோ கிண்டல் செய்கிறார். அவை எல்லாவற்றையும் நுட்பமாகப் புரிந்துகொள்வது நாவலைப் படிக்கும் எளிய வாசகனுக்கு சாத்தியமில்லை. ஆனால் எஸ்.வி.ஆர் அந்த மறைமுகச் செய்திகள் அனைத்தையும் விவிலியம் மட்டுமன்றி பல கிறித்துவ மதநூல்களையும் ஆதாரமாகக் காட்டி, அடிக்குறிப்புகளில் விரிவாக விளக்கங்களும் அளிக்கிறார்.

   நான் பல வருடங்களுக்கு முன் ஸரமாகோவின் Gospel According to Jesus Chirist (ஏசு கிறிஸ்து எழுதிய சுவிசேடம்) நாவலை வாசித்தபோது, முதலில் என்னைக் கவர்ந்தது அந்த அலாதியான நடையும் கதை சொல்லல் பாணியும். ஆங்கில மொழிபெயர்ப்பிலேயே இந்தளவுக்கு வசீகரம் இருக்கிறதென்றால் மூல்ப்படைப்பில் போர்த்துகீஸிய மொழி எப்படி பயன்படுத்தப்பட்டிருக்கும் என்ற வியப்பிலேயே முழுநாவலையும் படித்து முடித்தேன். அது ஒரு முழுமையான வாசிப்பு என்று சொல்லமுடியாது. நாவலின் பல இடங்கள் மூட்டமாக இருந்தன. ஏதோ ஒன்று பூடகமாக இந்த வரிகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கிறது என்று தோன்றினாலும் அது என்னவென்று புரிந்து கொள்ளமுடியாமலேயே பக்கங்கள் புரண்டன. இந்தச் சிக்கல் மற்ற நாவல்களிலும் இருந்தன. Stone Raft (கல்தெப்பம்), Blindness (பார்வையிழத்தல்) ஆகிய நாவல்களை நான் முழுமையாக உள்வாங்கியிருக்கவில்லை என்பது எஸ்.வி.ஆரின்  இந்நூலைப் படிக்கும் போது புரிகிறது. உத்தேசமாக கற்பனை செய்துவைத்திருந்தவை இப்போது எஸ்.வி.ஆரின் அடிக்குறிப்புகள் சிலவற்றால் உறுதியாகியிருக்கின்றன.

   2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கோவிட் பெருந்தொற்று உலகத்தை தாக்கிய நேரத்தில் ஸரமாகோவின் ‘பார்வையிழத்தல்‘ நாவல் பலரால் நினைவுகூரப்பட்டது. இந்த நாவலில் கற்பனையாக சொல்லப்பட்ட பல விஷயங்கள் உண்மையில் எல்லா நாடுகளிலும் அரங்கேறி வருவது நாவலை வாசித்தவர்களுக்கு திகிலூட்டத் தொடங்கியது.

இது ஒரு ‘துய உலகத்தையும் நல்ல உலகத்தையும்‘ உருவாக்குவதற்குத் தேவையான விழுமியங்களுக்கும் அறவொழுக்கங்களுக்குமான தேடலில் ஈடுபட்டுள்ள ஆண்களையும் பெண்களையும் நமக்கு காட்டும் நாவல். எனவே இதை ‘நற்கற்பனை – utopian ‘ நாவலென்றோ, ‘தீக்கற்பனை – dystopian ‘ என்றோ கறாறாக வரையறுப்பது கடினம் என்று இந்நாவலின் அறிமுகத்தில் எஸ்.வி.ஆர். குறிப்பிடுகிறார்.

பெயர் குறிப்பிடாத ஏதோ ஒரு நவீன நகரத்தில் மக்கள் திடீரென பார்வை இழக்கிறார்கள். குருடாவது என்றாலே இருட்டாவது அல்ல. காட்சிகள் மறைந்து எல்லாமே வெள்ளையாகத் தெரிகிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில், சிக்னலில் நின்றிருக்கும் ஒரு காரோட்டி முதலில் பார்வையை இழக்கிறான். அவனிடம் தொடங்கிய அந்த விநோத நோய் படுவேகமாக நகரத்தில் உள்ள மற்றவர்களுக்கும் பரவுகிறது. முதலில் பார்வையிழந்தவனின் மனைவிக்கு மட்டும் பார்வை பறிபோவதில்லை. இந்த நாவலில் சொல்லப்படும் நகரத்தைப் போலவே கதாபாத்திரங்களுக்கும் பெயர் இல்லை.

பெருந்தொற்று காலக்கட்டத்தில் ஒவ்வொரு நாட்டிலும் அரசாங்கங்களும் மருத்துமனைகளும் எப்படி நடந்து கொண்டனவோ, 1995இல் எழுதப்பட்ட இந்நாவலிலும் அப்படியே நடந்துகொள்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தனிமைப் படுத்தப்படுகிறார்கள். அரசின் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். இந்த நாவலிலும் மதக்காவலர்கள் ஸரமாகோவினால் கிண்டல் செய்யப் படுகின்றனர்.  தேவாலயங்களில் மக்கள் பெருங்கூட்டமாகத் தஞ்சமடைகின்றனர். அங்குள்ள தெய்வீக உருவங்கள், சிலைகள், துறவிகள், கடவுள்களின் கண்கள் வெள்ளைத் துணியால் கட்டி மறைக்கப்பட்டிருக்கின்றன.

போர்த்துகேய இலக்கிய படைப்புகளை ஆய்வுகளை மேற்கொண்டு வரும் இலக்கிய விமர்சகர் ஸ்காட் லாலினிடம் ஸரமாகோ இந்நாவலைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “நாம் உண்மையிலேயே பகுத்தறிவுடையவர்களாக இருப்பின், என்னிடமும் என் வாசகர்களிடமும் இந்தப் புத்தகத்தின் மூலம் நமது பகுத்தறிவுத் தன்மையைப் பற்றிக் கேள்வியெழுப்ப விரும்புகிறேன்..“ இந்த நாவல் சித்தருக்கும் ‘பார்வையின்மை’ என்பது 1932 லிருந்து 1968 வரை போர்த்துகல்லை ஆண்ட கொடுங்கோலர் அந்தோனியோ தெ ஒலிவராவின் பாசிச ஆட்சிக்கு மட்டுமான குறியீடு அல்ல என்கிறார் எஸ்.வி.ஆர். மேலும் விளக்கும்போது, சாதாரண நாட்களில்கூட தன் விகார முகத்தை வெளிப்படுத்தும் ஜனநாயக அரசுகள், இருண்ட காலங்களில் தன் சுயரூபத்தை ஒளிவுமறைவின்றி காட்டுகின்றன என்பதை இந்நாவல் சித்தரிக்கிறது என்கிறார்.. வாழ்க்கையில் ஏற்படும் அதீதமான சூழ்நிலைகளில் அதிகாரம் படைத்தோர் மட்டுமல்ல, அதிகாரமேதுமற்ற சாதாரண மக்களும்கூட விலங்கு நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அதேசமயம் அதீதமான சூழ்நிலையிலும் கூட அன்பு,கருணை,மனிதநேயம்,மனிதமாண்பு ஆகியவற்றைத் தக்கவைத்துக் கொள்வது சாத்தியம் என்பதை சில பாத்திரங்கள் காட்டுகின்றன.

ஸரமாகோ நோபல் உரையின் ஒரு பகுதி இங்கு எடுத்துக்காட்டப்படுகிறது: “நாம் பார்வையற்றவர்கள்‘‘ என இந்த மாணவன் நினைத்தான். பின்னர் உட்கார்ந்து ‘ பார்வையிழத்தலை‘ எழுதினான் – அதைப் படிக்கக் கூடிய வாசகர்களுக்கு இவற்றை நினைவூட்டுவதற்காக: நாம் வாழ்க்கையை அவமதிக்கையில் அறிவு வக்கரித்துப் போகும்படி செய்கிறோம்; நமது உலகில் அதிகாரம் படைத்தோர்களால் மானுட மாண்பு ஒவ்வொரு நாளும் இழிவு படுத்தப் படுகிறது ; பன்முக உண்மைகளுக்கு மாற்றீடாக உலகளாவிய பொய் வந்துவிடுகிறது; மனிதன் ஜீவிராசிகளுக்கு உரிய மரியாதையைத் தவறவிடும்போது, அவன் தன்னை மதிப்பதையே நிறுத்திவிடுகிறான்.“

ஸரமாகோவின் நாவல் ‘பார்த்தல்‘ (Seeing ) ‘பார்வையிழத்தல்‘ நாவலின் தொடர்ச்சி. இதில் பார்வையிழப்பதிலிருந்து மீண்ட மக்கள் தேர்தலில் வாக்களிக்கும்போது எந்தக் கட்சிக்கும் வாக்களிக்காமல், கிட்டத்தட்ட எல்லோரும் செல்லாத வாக்குகளை பதிவுசெய்வதும் ஸரமாகோவின் மற்றொரு பகடி. அராஜக அரசுகளுக்கு எதிராக ஒன்றிணைந்த மக்கள் சக்தி எழுவதையே ஸரமாகோ இந்நாவலில் சித்தரிப்பதாக எஸ்.வி.ஆர் குறிப்பிடுகிறார். இந்நாவலில் கவனப்படுத்தப்படும் விஷயங்களைப் பற்றி ஸரமாகோ பல்வேறு நேர்காணல்களில் குறிப்பிட்டுள்ளவை அனைத்தையும் எஸ்.வி.ஆர் தொகுத்தளிக்கிறார். ”ஜனநாயகம் என்பதன் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது… நான்காண்டுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல்களுக்கு இடைப்பட்ட காலத்தில் அரசாங்கம் தான் விரும்புவதைச் செய்துகொள்கிறது,” என்ற ஸரமாகோவின் கூற்று ஆழ்ந்து சிந்திக்கக் கோருவது.

எனது சுயத்தேர்வின்படி ஸரமாகோவின் நாவல்களில் மிக முக்கியமானது ‘கல் தெப்பம்’ (Stone Raft). இந்நாவலைப்ப் பற்றி எஸ்.வி.ஆர். ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருந்தாலும், அது மேலும் விரிவாக்கப்பட்டு இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளது.

1986இல் வெளிவந்த இந்நாவலின் அதீதமான கற்பனைக்குப் பின்னால் உலக அரசியலும் அடங்கியிருக்கிறது. ஐரோப்பாவின் தென்மேற்கு மூலையில் ஸ்பெயின், போர்த்துகல், அண்டோரா, பிரான்ஸின் தென் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறு நிலப்பரப்பு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ‘ஐபீரிய’ தீபகற்பம் ஐரோப்பாவிலிருந்து துண்டித்துக்கொண்டு அட்லாண்டிக் பெருங்கடலில் ஒரு பிரமாண்டமான கல்தெப்பம் போல மிதந்து செல்லத் தொடங்குகிறது. இது நகர்ந்துகொண்டே வந்து அஸோரஸ் தீவுகளின் மீது மோதப்போவதாக அனைவரும் கருதுகின்றனர். அமெரிக்கா தனது வழக்கமான அரசியல் சூழ்ச்சிகளை செயல்படுத்தத் தொடங்குகிறது. ‘மனிதாபிமான’ உதவிகள் செய்ய முன்வருகிறது. போர்த்துகல் அரசு உள்நாட்டுக் குழப்பங்களைத் தீர்க்க முடியாமல் திணறுகிறது.

திடீர் திருப்பமாக ஐபீரியா தனது பயணத் திசையை மாற்றிக்கொண்டு கனடாவை நோக்கிச் செல்லத் தொடங்குகிறது. அமெரிக்கா அவசர அவசரமாக கனடாவுடன் தனக்குள்ள நட்பை உறுதிசெய்துகொள்கிறது. ஆனால் ஐபீரிய கல்தெப்பம் திடீரென்று தனது பயணத்தை நிறுத்திக்கொண்டு ஒரே இடத்தில் நிலை கொண்டுவிடுகிறது.

இந்த வினோதமான கற்பனைக்குப் பின்னால் இருக்கும் அரசியல் கருத்தாக்கத்தை எஸ்.வி.ஆரின் மூலம் அறிந்துகொள்கிறோம்: ‘ஒரே தீபகற்பத்தைச் சேர்ந்த ஸ்பெயினும் போர்த்துகல்லும் ஒன்றாக இணைந்து ஒரே நாடாக உருவாகவேண்டும் என்ற ‘ஐபீரியனிஸம்’ என்றழைக்கப்பட்ட ஒரு கருத்து நீண்டகாலமாகவே இரு நாடுகளிலும் பகிர்ந்து கொள்ளப்பட்டு வந்தது. இக்கருத்துக்கு அண்மைக்காலத்தில் உறுதியான ஆதரவு தந்து அதன் காரணமாக தன் சொந்த நாட்டிலேயே எதிர்ப்பை சந்தித்துக்கொண்டவர் ஸரமாகோ. இதற்குக் காரணம் அவரது ‘ஐபீரியனிஸம்’ கம்யூனிசத் தன்மை கொண்டது என்பதே. இரு நாடுகளும் இணைந்த ஒரு புதிய தேசிய அடையாளம் என்று அவர் கூறிவந்தது வழக்கமாகப் பலரும் ‘தேசியவாதம்’ என்பதற்குக் கொண்டிருக்கும் பொருளைக் கொண்டது அல்ல. (அந்தத் தேசியவாதம் ‘ரிக்கார்டோ ரைஸ் இறந்த ஆண்டு’ (The Year of the Death of Ricardo Reis) நாவலில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.) ’கல் தெப்பம்’ நாவலில் இவ்விரு நாடுகளுக்கும் உள்ள பொதுவான பண்புகளைச் சுட்டிக் காட்டுகிறார். கல்தெப்பத்தில் போர்த்துகேயர்களும் ஸ்பானியர்களும் ஒன்றிணைந்து நெருக்கடிக்குத் தீர்வு காண முயல்கிறார்கள். இரு நாடுகளின் ஐக்கியத்தின் மூலம் அவற்றைவிட அரசியல் பொருளாதார பண்பாட்டு வலிமையுடைய மேற்கு ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றின் ஆதிக்கத்திலிருந்து விடுபட முடியும் என்பதே ஸரமாகோவின் கனவு.’

இருபது ஆண்டுகளுக்கு முன் இந்த நாவலைப் படித்த நாள் முதலாக எனக்குள்ளும் ஒரு கனவு அவ்வப்போது தோன்றி மறைந்துகொண்டிருக்கிறது. ஸ்பெயின், போர்த்துகல் என்ற இரு நாடுகளின் இடத்தில் தமிழகமும், ஈழமும் வந்துவிடும். இந்திய நிலப்பரப்பிலிருந்து தமிழகமும், இலங்கையிலிருந்து ஈழமும் துண்டுகளாகப் பிரிந்து, ஒன்றாக இணைந்துகொண்டு இந்துமாக்கடலில் மிதந்து மிதந்து பூமத்திய ரேகையைத் தாண்டி தெற்கே நகர்ந்து, அண்டார்டிகா வரையில் சென்றுவிடாமல், மிதமான தட்பவெப்பம் நிலவும் ஓரிடத்தில் நிலைபெற்று நின்றுவிடுவதைப்போல அந்தக் கனவு வளரும், புன்னகை மலரும், பின் கலையும். உன்னதமான நாவல்களை வாசிப்பதன் உபவிளைவு அதீதக் கனவுகளை உண்டாக்குவதுதானே!

ஜோஸே ஸரமாகோவின் ஆதர்ச எழுத்தாளர்கள் ஆர்ஜென்டைன் நாட்டின் ஜோர்ஜ்  லூயிஸ் போர்ஹெஸ்ஸும் போர்த்துகல்லின் ஃபெர்னாண்டோ பெஸ்ஸோவும். இவ்விருவருடைய அரசியல் அல்லது அரசியலற்ற நிலைப்பாட்டை ஸரமாகோ ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் இந்த இரண்டு இலக்கிய மேதைகளைச் சிறப்பிப்பதற்காக போர்த்துகேய இலக்கிய மரபு, நவீனத்துவ இலக்கிய பாணி இரண்டிலும் காலூன்றி நிற்கும் வகையில் எழுதப்பட்டது ‘ரிக்கார்டோ ரைஸ் இறந்த ஆண்டு’ நாவல்.

இந்நாவலை அறிமுகப்படுத்தும் கட்டுரையின் ஆரம்பத்தில் போர்ஹெஸ், பெஸ்ஸோவா ஆகிய இரு படைப்பாளிகளின் விசேஷத்தன்மைகளை விரிவாக எடுத்துரைக்கிறார் எஸ்.வி.ஆர். இவர்களின் எழுத்துமுறையை அறிந்து கொள்ளாமல் இந்நாவலை வாசிப்பது முழுமையான புரிதலைத் தராது. சில கற்பனைப் பாத்திரங்களைப் படைத்து, அவற்றை நிஜம் போலவே சித்தரித்து, அவற்றோடு உண்மையான படைப்புகளையும் முன்னிறுத்தும் போர்ஹெஸ்ஸின் ‘ஹெர்பெர்ட் க்வெய்னின் படைப்புகலைப் பற்றிய ஆய்வு’ , ‘பியெர் மெனார், டான் கியோட்டே நாவலின் ஆசிரியர்’ ஆகிய சிறுகதைகளையும், டேனிஷ் தத்துவவியலாளர் ஸொரென் கீர்க்கெகாடின் கட்டுரை நூல்களையும், பெஸ்ஸோவா பல்வேறு மாற்றுப் பெயர்களில் எழுதிய கவிதைகள், கட்டுரைகள், இந்த மாற்றுப் பெயர்களில் பதினேழு பேருக்கு தனித்தனியாக எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகளையும் மிக விரிவாக அறிமுகப்படுத்தி பிரமிக்கவைக்கிறார் எஸ்.வி.ஆர். பெஸ்ஸோவாவின் ‘மெய்நிகர் நகல்க்’ளில் ஒருவர் ரிக்கார்டோ ரைஸ் என்பதையும் எஸ்.வி.ஆர். மூலம் அறிந்துகொள்கிறோம்.

அண்டைநாடான ஸ்பெயினில் ஏற்படும் ஆட்சி மாற்றம், போர்த்துகல்லின் இடதுசாரி இயக்கம், பிரான்ஸின் சோசலிஸ்ட் கட்சியின் ஏற்பாட்டில் நடந்த கூட்டணி அரசாங்க முயற்சிகள், எதியோப்பிய கலவரம் என பல வரலாற்று நிகழ்வுகள் நாவலில் இடம்பெறுகின்றன. இவை ஒவ்வொன்றின் சுருக்கமான வரலாறும், பின்னணியும் எஸ்.வி.ஆரால் அடிக்குறிப்புகளில் விளக்கப்படுகின்றன. போர்த்துகல்லின் காலனி ஆதிக்கத்தை ஸரமாகோ விமர்சிப்பதும், எதிர்ப்பதும் இந்நாவலில் குறியீடுகளாகவே அமைந்திருப்பது எஸ்.வி.ஆரின் குறிப்புகளிலிருந்து புரிகிறது.

ஸரமாகோவின் மற்றொரு புகழ்பெற்ற நாவல் ‘பல்தஸாரும் பிலிமுண்டாவும்’ (Balthasar and Blimunda). மேலோட்டமாகப் பார்த்தால் இது 18ஆம் நூற்றாண்டில் நடக்கும் காதல் கதையைப் போலத் தோற்றமளித்தாலும், அதிகற்பனையும் மாய யதார்த்த உத்தியும் கொண்ட இந்நாவல் உண்மையான வரலாற்று ஆவணங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்ட நிகழ்கால அரசியல் நாவல் என்பது பின்னர் புரிகிறது. இந்நாவலின் முக்கியமான சில பகுதிகளின் மொழியாக்கங்களோடு, கதைச் சுருக்கத்தை பத்து பக்கங்களில் தொகுத்தளிக்கிறார் எஸ்.வி.ஆர்.

பிலிமுண்டா என்ற நாவலின் முக்கியமான பெண் கதாபாத்திரத்துக்கு பொருட்களின் உள்ளே இருப்பவற்றைப் பார்க்கும் அதிசய சக்தி இருக்கிறது. அந்த சக்தியைக் கொண்டு மனிதர்களின் உடலுக்குள்ளே இருக்கும் மனத்திட்பத்தை வெளியே எடுத்து சேமித்து வைக்கிறாள்.  இது ஒரு பறக்கும் இயந்திரத்துக்கான எரிபொருளாகிறது. இவை வெறும் மாய யதார்த்த உத்தி மட்டுமல்ல, மானுடர்கள் தங்கள் மனோதிட்பத்தையும் சங்கற்பத்தையும் கொண்டே விடுதலை பெற முடியும் என்பதே இதன் பின்னால் இருக்கும் செய்தி என்பதை எஸ்.வி.ஆரின் அடிக்குறிப்புகளின் மூலம் அறிந்துகொள்கிறோம். ”அரசன், மதகுருக்கள் போன்ற ‘உயர்குல’ மனிதர்களைப் பற்றிய சித்தரிப்புகளைத் தொடக்கத்தில் கொண்டிருக்கும் இந்நாவல், பின்னர் படிப்படியாக சாமானிய மக்கள் மீதே தன் கவனத்தைக் குவிக்கிறது. மதமும் அரசும் சேர்ந்து சாமானியர்களை எப்படியெல்லாம் வஞ்சிக்கின்றன என்பதைத்தான் இந்நாவல் எடுத்துக் காட்டுகிறது,” என்று மதிப்பிடுகிறார் எஸ்.வி.ஆர்.

ஒரு வெளியீட்டகத்தால் கொண்டுவரவிருந்த வரலாற்று நூலை மெய்ப்பு சரிபார்க்கும்போது வேண்டுமென்றே செய்யப்படும் ஒரு தவறு, குறிப்பிட்ட வரலாறு ஒன்றை (அல்லது நாவலை) எழுதுவதற்கான தூண்டுதலாக அமைந்துவிடுவதைச் சொல்கிறது ‘லிஸ்பன் மீதான முற்றுகை பற்றிய வரலாறு’ (The History of the Siege of Lisban) என்ற நாவல்.

மூர்கள் எனும் அல்மோராவிட் முஸ்லிம்களின் ஆட்சியிலிருந்து லிஸ்பன் நகரைக் கைப்பற்ற அன்று தன்னை போர்த்துகல் அரசன் என்று அழைத்துக்கொண்டிருந்த டோம் அல்ஃபோன்ஸா ஹென்ரிக்ஸின் படைகளோடு இரண்டாம் சிலுவைப் போரில் ஈடுபட்டிருந்த ஐரோப்பியப் படைவீரர்களும் இணைந்து நடத்தியது ‘லிஸ்பன் போர்’ என்றழைக்கப்படுகிறது. இச்சரித்திர நிகழ்வுக்குப் பின்னால் இருந்த ஏராளமான  உண்மைகள் இந்நாவலைப் பற்றிய எஸ்.வி.ஆரின் அறிமுகக் கட்டுரையில் நமக்கு விளக்கப்படுகின்றன.

ஐரோப்பிய சிலுவைப் போர்வீரர்களிடம் போர்த்துகல் மன்னன் அன்று முஸ்லிம்களின் (மூர்களின்) ஆட்சியின் கீழிருந்த லிஸ்பனை முற்றுகையிட்டுக் கைப்பற்ற உதவி கேட்பதாகவும், அதற்கு அவர்கள் இசைவு தந்ததாகவும் எழுதப்பட்டிருந்த வரியை (அது வரலாற்று உண்மையாக இருந்தபோதிலும்) அவன் ‘இசைவு தரவில்லை’ என்று மெய்ப்பு சரிபார்ப்பவன் லிஸ்பன் நகர முற்றுகை பற்றிய நாவலை சரிபார்த்துக்கொண்டிருக்கும்போது மாற்றிவிடுகிறான்.

பின்பு அவன் செய்த தவறு கண்டுபிடிக்கப்படுகிறது. அதற்கு தண்டனையாக, அத்தவறான திருத்தத்தை வைத்தே ஒரு நாவலை எழுதும்படி அவன் உத்தரவிடப்படுகிறான்.

மேற்சொன்ன நாவல்களைப்போலவே ‘குகை’ (The Cave), ’அனைத்து பெயர்களும்’ (All the Names), ‘அறியப்படாத தீவின் கதை’ (The Tale of the Unknown Island), ‘நகல் மனிதன்’ ( The Double) ஆகிய நாவல்களையும் முழுமையாகப் புரிந்துகொள்ள எஸ்.வி.ஆரின் விளக்கங்கள் வழிகாட்டியாக உதவுகின்றன.

ஸரமாகோவின் நாவல்களை ஏற்கனவே படித்தவர்களுக்கும் எஸ்.வி.ஆரின் மூலம் புதிய வெளிச்சங்கள் கிடைக்கலாம். புதிதாக வாசிக்க முற்படுபவர்கள் இக்கட்டுரைகளைப் படித்துவிட்டு நாவலுக்குள் நுழைவது பலனளிக்கும்.

இந்த அறிமுகக் கட்டுரைகளில் ஒவ்வொரு நாவலின் கதைச் சுருக்கமும் இடம்பெறுவதைக் குறையாகச் சொல்லிவிட முடியாது. ஸரமாகோவின் நாவல்களில்  ( ’நகல் மனித’னைத் தவிர) ‘உடைத்துவிடக்கூடாத சஸ்பென்ஸ்’ ஏதும் இருப்பதில்லை. மேலும் வாசிப்பின்பத்தைக் கூட்டுவதாகவே எஸ்.வி.ஆரின் விளக்கங்களும் விமர்சனங்களும் அமைந்திருக்கின்றன. ‘பொதுப்புத்தி’யின் கூற்றுகளின் வழியாகவும், எடுத்துரைப்பாளரின் கருத்துக்கள் வழியாகவும் ஸரமாகோ வழங்கும் அறிவு நீரோடையை இந்நூல் வற்றிவிடச் செய்வதில்லை. மாறாக புதிய ஊற்றுக்கண்களைத் திறந்துவிடுகின்றன.

இந்நூலை வாசித்து முடித்ததும் இயல்பாகவே நம்முள் எழும் கேள்வி, ஏன் ஸரமாகோவின் மீது எஸ்.வி.ஆருக்கு இவ்வளவு ஆழமான ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது, என்பதே. உடனே இருவருக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள் நமக்குப் புரியத் தொடங்குகின்றன. இருவரும் இடதுசாரிகள், கம்யூனிஸத்தில் அசையாத நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் என்பவை மட்டும் முதன்மையான காரணமல்ல. இவர்கள் இருவருமே சுதந்திரச் சிந்தனையாளர்கள்; கம்யூனிஸ்ட் கட்சியின் வழுவல்களையும் கம்யூனிஸ்ட்டுகளின் முரண்பாடுகளையும், அவர்களின் தேர்தல் தந்திரங்களையும் வெளிப்படையாக விமர்சிப்பவர்கள்; நவீன சிந்தனைகளை முழு மனதையும் திறந்துவைத்துக் கொண்டு அணுகுபவர்கள். இந்த பொதுத்தன்மைகள்தாம் ஸரமாகோவிடம் தனது அம்சங்களை எஸ்.வி.ஆருக்கு அடையாளம் காட்டியிருக்கக்கூடும். அதனால் நம்மைப் பொறுத்தவரையில் ஸரமாகோவைப் படிப்பதென்பது எஸ்.வி.ராஜதுரையையும் சேர்த்து வாசிப்பதே.

8888888888888888888888888888888888888888888888888888888888888888888

      

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாணவனின் மனைவி

எட்கார் கெரெட் - குறுங்கதைகள்

ஒரு சின்ன நல்ல விஷயம் - ரேமண்ட் கார்வர்