நிலத்தில் ஒரு சுருக்கம்

                                         பென் ஓக்ரி

                                   (தமிழில்: ஜி.குப்புசாமி)

அவன் எதிரே வருவதைப் பார்த்ததும் ஒரு பெண் அவசரமாகத் திரும்பி சாலையின் எதிர்சாரிக்குக் கடந்துசென்றபோதுதான் முதன்முறையாக தன்னிடம் ஏதோ சரியில்லையென்று அவனுக்குத் தோன்றியது . அது யதேச்சையாக நடந்தவொன்றாகத்தான்  நினைத்தான். ஆனால் அது மீண்டும் நடந்தது.

தன்னைச் சுற்றியிருப்பவர்களை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். ஒருநாள் சுரங்க ரயிலில் அவனுக்கு மூன்று இருக்கைகள் தள்ளி அமர்ந்திருந்த பெண் தன்னைப் பார்த்ததும் அவளது கைப்பையை எடுத்து மறுபக்கத்தில் வைத்துக் கொண்டாள். அவள் எதற்காக அப்படிச் செய்தாள் என்று அவனுக்குப் புரியவில்லை.

இதைப்போலவே நான்கைந்து முறை நடந்ததும், கண்ணாடியில் தன்னைப் பார்த்துக்கொண்டான். எல்லோரையும் போலவே தானும் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. ஆனால் இவனைப் பார்த்ததும் தமது கைப்பைகளை உடம்போடு சேர்த்து இறுக்கிப் பிடித்துக்கொள்பவர்களின் கண்களின் வழியாகப் பார்க்கும்போது தன்னுடைய முகம் தான் நம்பிக்கொண்டிருப்பதைப்போல சாதாரணமாக இல்லை என்று புரியத் தொடங்கியது.

முகத்தில் என்ன சரியில்லாமல் இருக்கிறது என்று அவனுக்குத் தெரியவில்லை, ஆனால் வெகுநேரத்துக்கு உற்றுப் பார்க்கப் பார்க்க, அவனுக்குப் புலப்படாத ஏதோவொரு தப்பு அவனிடம்  இருப்பதாக நிச்சயமாகத் தோன்றத் தொடங்கியது . இதற்குமுன் அவன் கவனித்திருக்காத அம்சங்களை கண்ணாடி வெளிப்படுத்தியது. அவற்றில் எந்த அம்சம் தன்னைப் பார்த்ததும் எதிரில் வருபவர்களை அவனிடமிருந்து ஒதுங்கி சாலையின் குறுக்கே கடந்து செல்ல வைக்கிறது?

இது அவனை வெகுவாகத் தொந்தரவு செய்ய, பல இரவுகளைத் தூக்கமில்லாமல் கழித்தான்.  இதைப் பற்றி யாரிடமாவது பேசவேண்டுமென்று விரும்பினான், ஆனால் யாரிடம் என்று தெரியவில்லை. பகல் நேரங்களில், வேலைக்குச் செல்லும்போது, எதிரில் வரும் மனிதர்களைப் பதற்றத்தோடு கவனிக்கத் தொடங்கினான். இவனைப் பார்த்ததும் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று அவன் தெரிந்துகொள்ளவேண்டும். ஆனால் காலை நேரங்களில் அவனை ஒருவரும் ஏறெடுத்தும் பார்க்காமல் அவசர அவசரமாகக் கடந்து சென்றுகொண்டிருந்தனர். இவனைப் பார்த்ததும் அவர்கள் திரும்பி சாலையின் குறுக்கே கடந்து செல்வதைவிட, இது அவனை அதிகமாகக் குழப்பியது. ஏன் அவனை ஏறெடுத்துப் பார்க்கமாட்டேனென்கிறார்கள்? அவன் முகத்தில் வித்தியாசமாக இருக்கும் எதையோ பார்த்துவிட்டு அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே அவர்களை அவன் உற்றுப் பார்த்தபடி செல்கிறான். இவன் பார்க்கிறான் என்பதை உணர்ந்திருப்பதால்தான்  பார்க்காமல் செல்கிறார்கள் என்று தோன்றியது. அந்தியிருட்டில் ஒதுங்கி ஓடுகிறார்கள், பகல் வெளிச்சத்தில் பாராமுகமாகச் செல்கிறார்கள். இது புரிந்து கொள்ளமுடியாத முரண்பாடாக அவனைத் தாக்கியது.

அவர்கள் அப்படி நடந்துகொள்வதற்கு உண்மையில் தான்தான் காரணமா, தன்னிடம் இருக்கும் எதைக் கண்டு அவர்கள் ஓடுகிறார்கள் என்பதை சோதித்துப் பார்க்கவேண்டுமென்று சில நாட்கள் கழித்து அவனுக்குத் தோன்றியது. அரையிருட்டில், தூரத்திலிருந்து பார்க்கும்போது ஒரு மனிதனின் முக அடையாளங்கள் நுட்பமாகத் தெரியப்போவதில்லை, அவனுடைய உடலமைப்பு, அவனுடைய உடலசைவு, இவற்றில்தான் ஏதோ இருக்கவேண்டும். அதுதான் அவர்களை ஒதுங்கிச் செல்லவைக்கிறது. அவனுடைய நடைதான் காரணம் என்று ஊகித்தான்.

அதன்பிறகு விதம்விதமான நடைகளை சோதித்துப் பார்க்கத் தொடங்கினான். கால்களை வளைத்துக்கொண்டு நடந்துபார்த்தான். தன்னை அளவில் சுருக்கிகொண்டு, பயமுறுத்தாத வகையில் நடந்து சென்றான். பார்வையில் நேராகப் படாமல் பக்கவாட்டில் ஒருக்களித்து நடந்து சென்றான். இதனாலெல்லாம் மற்றவர்கள் அவனைத் தவிர்ப்பது அதிகமாகத்தான் ஆனது. அவர்கள் மேலும் வேகமாக சாலையைக் கடந்து சென்றனர். ஒருநாள் மாலை அவன் பணியாற்றிக்கொண்டிருந்த சிறிய விளம்பர நிறுவனத்திலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தான். ரம்யமான காலநிலை. அந்தத் தெருவின் இருபுறங்களிலும் இரட்டை வரிசைகளில் பிளேன் மரங்கள் இருந்தன. சில மரங்கள் நடைபாதையையும் ஆக்கிரமித்திருந்தன. ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே அந்த மரங்களைச் சுற்றிக்கொண்டு செல்லும்படியாக இடைவெளி இருக்கும். அவனுக்கு அந்த மரங்களைப் பிடிக்கும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனியான கோணத்தில் வளர்ந்திருக்கும். உலகத்திலேயே அவனிடம் நல்லவிதமாக நடந்துகொள்பவை அவை மட்டுமே. அவை அவனை ஒருபோதும் மதிப்பிட்டதில்லை. அந்த மரங்களைக் கடந்துபோகும்போது அவன் எப்போதும்  அவற்றைத் தொட்டுத் தடவிச் செல்வான்.

மரங்கள் இப்போது பெரிதாக, அமைதியாக இருந்தன. மெதுவாக நடந்தான். தெருவில் தூரத்தில் ஒரு பெண் வருவதைக் கண்டான். தன்னை இன்னும் சின்னதாக சுருக்கிக் கொண்டான். குறுக்குத் தெருவிலிருந்து ஒருவன் வந்து இவனுக்கு முன் சேர்ந்துகொண்டான். அவன் உயரமாக, ரிக்கெட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட கோணல் கால்களோடு அந்தப் பெண்ணை நோக்கி நடந்துசென்றான். அந்தப் பெண் இப்போது என்ன செய்வாள்? இந்த ஆளைப் பார்த்ததும் திரும்பி சாலையைக் கடக்கத் தொடங்கிவிடுவாளா? ஆண்மைதான் பயத்தை உண்டாக்குகிறதா? அவன் அந்தப் பெண்ணைக் கடந்து சென்றான். அந்தப் பெண் சாலையைக் கடக்கவில்லை. அப்படியென்றால், ஆண்மை காரணமல்ல.

அவள் தன்னை கவனிப்பதற்காகக் காத்திருந்தான். பார்த்தவுடன் என்ன செய்வாள்? அதே நேரத்தில் அவள் தலைநிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவளுடைய உடம்பு அருவருப்பில் நெளிவது தெளிவாகத் தெரிந்தது. அவள் அவசரமாகத் திரும்பி தெருவைக் கடக்கத் தொடங்கினாள்.

அவன் புண்பட்டான். பெயரற்ற கோபத்திலும் அவமானத்திலும் மேலே நகர முடியாமல் ஸ்தம்பித்து நின்றான். அவளிடம் என்னென்னவோ சொல்வதற்கு மனதுக்குள் வாசகங்கள் குவிந்தன. “நான் மோசமானவன் அல்ல” என்றோ “நான் ஒன்றும் உன்னை அடித்து பணம் பிடுங்கப் போவதில்லை” என்றோ “உன் உடம்பைப் பார்த்து மயங்கிவிட்டேன் என்று நினைப்பா?” என்றோ ”எனக்கு முன்னால் போனவன் என்னைவிட பார்ப்பதற்கு அபாயகரமானவனாகத் தெரிந்தான், அவனைப் பார்த்து நீ ஒதுங்கவில்லை, ஆனால் என்னைப் பார்த்ததும் ஏன்  ஓடுகிறாய்?” என்றோ கேட்க நினைத்தான்.

இன்னும் நிறைய கேட்க நினைத்தான். தெரு காலியாக இருந்தது. இருட்டத் தொடங்கியிருந்தது. அப்போது அவன் செய்த காரியம் அவனையே ஆச்சரியப்படுத்துவதாக இருந்தது. அவனும் தெருவைக் கடக்கத் தொடங்கினான்.

அவன் தெருவைக் கடப்பதை அந்தப் பெண் கவனித்துவிட்டாள். அவள் முகத்தில் கலவரம் படர்ந்தது.  உடனே வந்த வழியே திரும்பினாள். அவன் அவளை நோக்கி தொடர்ந்து நடந்தான். அவனைத் தவிர்ப்பது வெளிப்படையாகத் தெரியாதபடிக்கு அவள் அவனைக் கண்டுகொள்ளாமல் நடந்துவந்தாள். தெருவின் நடுவில் அவன் அவளை நெருங்கினான்.  கூச்சலிடுவதற்கு ஆயத்தம் போல வாயைத் திறந்தாள். அவளைத் தாண்டிச் செல்லும்போது, “நான் ஒன்றும் மோசமானவன் அல்ல. உன்னை சாப்பிட்டுவிடமாட்டேன்” என்றான்.

இதைச் சொல்லும்போதே அது ஒலிக்கும் விதத்தை உணர்ந்தான். இப்படிச் சொல்லியிருக்கவே கூடாது என்று நினைத்துக்கொண்டான்.

அவனைக் கடந்து விலகியதும், அவளைச் சூழ்ந்த ஆபத்திலிருந்து தப்பித்து, படுவேகமாக ஓடத் தொடங்கினாள், ஏதொவோர் அரக்கன் துரத்துவதைப்போல.  வினோதமாக சத்தமெழுப்பிக்கொண்டே அவள் ஓடுவதை நின்று கவனித்தான். அவனுடைய சோதனையின் முடிவு தெளிவாக இல்லை. எல்லோரும்  ஏன் அவனைத் தவிர்க்கிறார்கள் என்பதற்கு விடை கிடைக்கவில்லை.

                                      ***

அன்று மாலை கண்ணாடியில் அவன் முகம் வேறுமாதிரியாகத் தெரிந்தது. அவனுக்கு வழக்கமானதொரு முகம். சின்னதாகக் குறுந்தாடி, பிரதானமான நெற்றி, நல்ல வலுவான உதடுகள். அவனுடைய தாடை சற்று கூரானது. செவிமடல்கள் துருத்திக்கொண்டிருக்காது. அவனுக்கு அழகான விழிகள் என்று மற்றவர்கள் சொல்வதுண்டு. வெண்மையான பற்கள். அவன் வாழ்நாளில் புகை பிடித்ததேயில்லை.

ஆனால் அந்தப் பெண்ணின் சம்பவத்துக்குப்பின் ஏதோ மாறிவிட்டது. அவனுடைய நிறத்திலோ, முகத்தின் வடிவத்திலோ ஏதோ சற்று உருத்திரிந்திருக்கிறது.

அடுத்த நாள் அலுவலகத்தில் சகாக்களிடம் அவனிடம் ஏதாவது வித்தியாசமாக மாறியிருக்கிறதாவென்று கேட்டான். அவர்கள் உற்றுப் பார்த்துவிட்டு  தீர்மானமின்றி, ஏதோ கொஞ்சம் வித்தியாசம் தெரிகிறது என்றனர். ஆனால் குறிப்பாக என்னவென்று அவர்களால் சொல்ல முடியவில்லை. அவனிடம் என்னவோவொன்று மாறியிருக்கிறது என்ற எண்ணம் அவனைப் பீடித்தது. அவனிடமிருந்து ஒதுங்கிச் செல்பவர்களால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்தான். எந்தவிதத்தில் என்றுதான் தெரியவில்லை.

மற்றவர்களின் பார்வையில் படாமல் இருப்பதற்காக வழக்கத்துக்கு மாறாக நடக்கத் தொடங்கினான். அவனைப் பார்த்தாலே எல்லோருக்கும் பிடிக்காமல் போய்விடுகிறது, அவனைத் தவிர்ப்பதற்காக அவர்கள் மிகவும் பிரயாசைப்பட வேண்டியிருக்கிறது. இனி தெருவில் செல்லும்போது யார் கண்ணிலும் படக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டான். துரத்தில் யாராவது வருவதைப் பார்த்தாலே ஒளிந்துகொண்டான். அல்லது அவர்கள் கடந்து செல்லும்வரை திரும்பி நின்றுகொண்டான்.

பணியிடத்தில் அவனுடைய நடத்தை விநோதமாக மாறியது. அவன் கிறுக்குத்தனமாக நடந்துகொள்வதாக சகாக்கள் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர். அவனை வெகுகாலமாக அறிந்தவர்களுக்கு இதெல்லாம் நம்பமுடியாமல் இருந்தது. யாராவது பார்க்கும்போது அவன் தலையைக் குனிந்துகொள்வதும், உரையாடும்போது எதில் இருப்பவர் கண்களைப் பார்க்கத் தயங்குவதும், தாழ்வாரங்களில் எதிரே யாராவது வந்தால் பதற்றத்தோடு ஓரத்தில் பதுங்குவதும் என்று அவனுடைய விசித்திர செய்கைகள் அவர்களுக்கு முதலில் வேடிக்கையாக இருந்தது. அதன் பிறகு அவனது நழுவல்களும் ஒதுங்கல்களும் அவர்களுக்குப் பழகிவிட்டாலும் போகப்போக சந்தேகம் வலுக்கத் தொடங்கியது. எதிரில் இருப்பவர்கள் இவன் பக்கம்  பார்வையைத் திருப்பினால் அங்கிருந்து மறைந்துபோவதும், அலுவலக் கூட்டங்களில் தலையை மறைத்துக்கொண்டிருப்பதும் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தின. விருந்துகளுக்கு அழைத்தால்  எதனால் அவன் வர மறுக்கிறான், ஏன் பணிநேரம் முடிந்ததும் நண்பர்களோடு மதுவருந்தச் செல்வதில்லை என்றெல்லாம் அவர்களுக்குப் புரியவில்லை.

அலுவலகக் கழிவறையில் அடிக்கடி முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நின்று தன் உருவத்தை வைத்தகண் வாங்காமல் பார்த்துகொண்டிருப்பதையும், சிலநேரங்களில் தனது நிழலையே வெறித்துப் பார்த்தபடி நின்றுகொண்டிருப்பதையும் அவர்கள் கவனித்தனர். மற்றவர்களோடு பேசும்போது எதற்காக முகத்தை மூடிக்கொள்ள முயல்கிறான் என்று குழம்பினர். இப்போதெல்லாம் அவனைப் பார்ப்பதற்கு வினோதமாக இருக்கிறது என்று அவர்கள் அவனிடமே சொல்லத் தொடங்கினர். ஆனால் அவர்கள் யாருமே அவனுடைய முகத்தை நிதானமாக ஆராய்ந்து பார்க்கும் வாய்ப்பையே அவன் தரவில்லை என்பதுதான் உண்மை.

இப்போதெல்லாம் அவன் புகைப்படங்களுக்கு முகம் காட்டுவதில்லை. காமிராவை அவன் பக்கமாகத் திருப்பினல் அங்கிருந்து ஓடிவிடுவான். பிறகு கண்ணாடி பார்ப்பதைத் தவிர்க்கத் தொடங்கினான். அவன் தோற்றத்தைப் பற்றி எந்தளவுக்கு கவலைப்படுகிறானோ, அந்தளவுக்கு அவன் தோற்றம் கவலையளிக்கும்படியாக மாறிவருவதாக பயந்தான்.

ஆனால் எதிரில் அவனைப் பார்த்ததும் சாலையைக் கடந்துசெல்பவர்களை அவன் என்ன செய்வது? எல்லோராலும் தவிர்த்தொதுக்கப்படும் அவலத்தை எப்படி சகித்துக்கொள்வது? வீட்டுக்குத் திரும்பும்போதெல்லாம் இந்தக் கவலை அரித்தெடுத்தது. பிளேன் மரங்கள் இரட்டை வரிசையிட்ட தனது தெருவுக்குள் நுழைந்ததுமே அச்சம் அவனைக் கவ்விக்கொள்ளும். மற்றவர் கண்களில் தென்படும் அச்சம் அது. தன்னைக் கண்டு விலகி ஓடுபவர்களால் உண்டாகும் அவமானத்தால், அவனுக்கு தன் உருவமே கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துபோகக்கூடாதாவென்று அவ்வப்போது தோன்றும்.

                                     ***

பிறகு ஒருநாள் திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை - ஒரு முகமூடியை அணிந்துகொண்டால் தன்னுடைய கவலைகள் எல்லாம் தீர்ந்துவிடும் – என்று தோன்றியது. என்னவொரு பிரமாதமான தீர்வு என்று நினைத்துக்கொண்டான். ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் அங்காடியில் முகமூடிகள் விற்கும் கடை ஒன்றைப் பார்த்திருக்கிறான். அங்கு சென்றான். பலவிதமான, வித்தியாசமான முகமூடிகள் இருந்தன. பெரும்பாலானவை அருவருப்பாகவும் அபத்தமானவையாகவும் இருந்ததால் அவற்றை ஒதுக்கித் தள்ளினான். அவனுக்குத் தேவைப்படுவது கூடியமட்டும் ஒரு சாதாரண மனித முகம் போல இருப்பது.

அதைப்போல ஏழு முகமூடிகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து ஒவ்வொன்றையும் அணிந்து பார்த்தான். முகமூடியை அணிந்துகொண்டுதான் கண்ணாடியில் பார்க்கவேண்டும் என்பதில் கவனமாக இருந்தான். ஏழில் ஐந்து அவனுக்குத் திருப்தியாக இருந்தன. அவற்றில் சிறந்தது எதுவென்று சோதிப்பதற்குச் நல்ல வழி, அதை அணிந்துகொண்டு அலுவலகத்துக்குச் செல்வதும்,  அதை அணிந்துகொண்டு வீட்டுக்குத் திரும்பி வருவதும்.

அலுவலகத்தில் அவனை யாருமே அடையாளம் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. வரவேற்பு மேசையின் முன் நின்று அடையாள அட்டையைக் காட்டியதும் மேலே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டான். அவனுடைய சகாக்கள் அவன்   தோற்றத்தைக்கண்டு குழம்பி பின்வாங்கினார்கள். அவன் தனது இருக்கைக்கு வந்து அமர்ந்ததும் அவர்கள் அது அவன்தானா என்று கேட்டார்கள். அவன் ஒப்புக்கொண்டதும், அவர்கள்  திடுக்கிட்டார்கள். தங்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டார்கள். சிறிது நேரம் கழித்து அவன் அலுவலகத் தலைவரின் அறைக்கு அழைக்கப்பட்டான்.

“என்ன விளையாடிக்கொண்டிருக்கிறாய்?”

“எதுவும் இல்லை, சார்.”

“பின் எதற்காக முகமூடி அணிந்திருக்கிறாய்?”

“இது மற்றவர்களின் நலனுக்காக. என் முகம் அவர்களைத் தொல்லைக்குள்ளாக்குகிறது, சார்.”

தலைவர் அவனை உற்றுப் பார்த்தார்.

“இதை மற்றவர்கள் நலனுக்காகச் செய்வதாகச் சொல்கிறாயா?”

“ஆமாம் சார். நான் யார் என்று இப்போதாவது அவர்கள்  தெரிந்துகொள்வார்கள்”.

“தெரிந்துகொள்கிறார்களா?”

“அப்படித்தான் நினைக்கிறேன். மேலும் இப்போது அவர்களை என் முகத்தைத் தயக்கமில்லாமல் பார்க்கவைக்கிறேன். என்னை முகமூடியோடு அவர்கள் பார்ப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபணையில்லை.”

“ஆனால் இது எல்லோரையும் பயமுறுத்துவதாக இருக்கிறது. இது நீதான் என்று எப்படி நாங்கள் அறிந்துகொள்வது? அலுவலகத்தில் எல்லோரும் முகமூடி அணிந்து வரத் தொடங்கிவிட்டால் பெரும் சிக்கலாகிப் போய்விடும்.”

“ஒரு வாரத்துக்கு மட்டும், சார். அப்புறம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.”

அதன்பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முகமூடியோடு வந்தான். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான விளைவுகள். மேலாளர் தனது அறைக்கு அவனை அழைத்தார். அந்த வாரத்தின் முடிவில் அவருக்கு இதை ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றாகிவிட்டது.

“நீ யாராவது ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கவேண்டும்,” என்று ஆலோசனை சொன்னார்.

”அடுத்த வாரம் எல்லாம் சரியாகிவிடும், சார்,” என்றான்.

“நீ மருத்துவரைச் சென்று பார்க்கவேண்டும், இல்லாவிட்டால் நாங்கள் உன்னை வேலையை விட்டு நீக்கவேண்டிவரும்.”

”ஏன் சார்?”

“நீ எல்லோரையும் பயமுறுத்திக்கொண்டிருக்கிறாய். யாராலும் ஒழுங்காக வேலை செய்ய முடியவில்லை”.

“அடுத்த வாரம் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும்,” என்று உறுதியளித்தான்.

                                    ***

முகமூடி அளிக்கின்ற வசதியை அந்த வாரம் முழுவதும் வீட்டுக்குத் திரும்பும் நேரங்களில் உணர்ந்தான். முதல் நாள், சாதாரணமாக அவனைக் கண்டால் தலைதெறிக்க சாலையைக் கடக்கும் பெண்கள் இப்போது  அவனைத் தாண்டிச் செல்லும்போது வெறுமனே வெறித்து பார்த்தபடியே சென்றனர். இரண்டாம் நாள், சாலையைக் கடக்க உத்தேசித்த பெண் மனதை மாற்றிக்கொண்டு அவனை ஆர்வமிகுதியாலோ என்னவோ கூர்ந்து பார்த்துக்கொண்டே தாண்டிச் சென்றாள். ஐந்து நாட்களுக்குப் பிறகு யாருமே அவனைக் கண்டுகொள்ளவில்லை.

இது அவனை வியப்புக்குள்ளாக்கியது. முகமூடி அணிந்துசெல்வது அவனை அசாதாரணமாகக் காட்டும் என்றே உறுதியாக நினைத்திருந்தான். ஆனால் அவனுடைய சாதாரண முகத்தைக் கண்டு பயந்து ஓடியவர்கள் முகமூடியைப் பார்த்து பயப்படாமல் இருப்பது ஏன்?

இந்தக் கேள்வியை ஞாயிற்றுக்கிழமைகளில் உள்ளூர் அங்காடியில் முகமூடிகளை விற்பவனிடம் கேட்டான்.

“நீங்கள் எதற்காக முகமூடிகளை வாங்குகிறீர்கள் என்று அப்போதே சொல்லியிருக்கலாமே,” என்றான். அவன் விற்கும் முகமூடிகளுக்கு விளம்பரம் செய்வதைப்போல ஒரு முகமூடியை எடுத்து அவனே அணிந்துகொண்டான். அது மெக்ஸிகோவின் தொல்குடி அஸ்டெக் முகமூடி .  கடையைக் கடந்து செல்லும் சிறுவர்கள்  அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே சென்றார்கள். பலரும் அந்தக் கடைக்குமுன் நின்று அவன் விற்கும் கவர்ச்சிகரமான முகமூடிகளால் ஈர்க்கப்பட்டு வாங்கிச் சென்றனர். “இப்போது உங்களுடைய பிரச்சனையை  என்னிடம் சொல்லிவிட்டீர்கள் அல்லவா, கவலையை விடுங்கள். உங்களுக்குத் தேவையான பிரமாதமான முகமூடியைத் தருகிறேன். ஆனால் ஒரேயொரு நிபந்தனை.”

“என்ன.”

“இதை அணிந்திருக்கும் முதல் வாரம் முழுக்க, இந்த முகமூடிதான் உங்கள் உண்மையான முகம் என்று நம்பிக்கொண்டிருக்கவேண்டும்.”

“அவ்வளவுதானா?”

“அவ்வளவேதான். சுலபம்.”

கடைக்காரன் அவனை கடைக்குள்ளே அழைத்துச் சென்றான். பின்பகுதியில் அவன் உலகெங்கிலுமிருந்து தருவித்திருந்த ஏராளமான முகமூடிகள் குவிந்திருந்தன. கடைக்காரன் அவனுடைய கண்களை மூடிக்கொள்ளச் சொன்னான். பிறகு ஒரு முகமூடியை எடுத்து அவனுக்கு அணிவித்துவிட்டு, கொஞ்ச நேரத்துக்கு கண்ணாடியைப் பார்க்கக்கூடாது என்றான். அந்த முகமூடிக்காக அவன் பணம் பெற்றுக்கொள்ள மறுத்தான்.

“நீங்கள் எனக்கு ஆதாயம் செய்திருக்கிறீர்கள். உங்களால்தான் இப்போது ஏராளமானவர்கள் என் கடையில் நின்று நிறைய வாங்கிச்சென்றார்கள். உங்கள் முகத்தால் கவரப்பட்டிருந்தார்கள் போல!” என்றான் சிரித்துக்கொண்டே.

வீட்டுக்குச் சென்றதும் கண்ணாடியில் பார்க்கவேண்டும் போலிருந்தது. ஆனால் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டான். மறுநாள் காலை விழித்தெழும்போது, அந்த முகமூடி அவனுடைய முகத்தோடு முகமாக ஒட்டிக்கொண்டிருந்தது. கன்னத்தைத் தொட்டுப் பார்த்தபோது முகமூடியை உணரவில்லை. அவன் கண்ணாடியைப் பார்க்கவேண்டிய அவசியமே இல்லை.

                                      ***

அலுவலகத்தில் அனைவரும் அவனை வியப்புடன் வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். மேலாளார் அவனைத் தன் அறைக்கு அழைத்து  நெடுநேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு, ஒரு வார்த்தையும் பேசாமல் அவனை இருக்கைக்குப் போகச்சொல்லி கையசைத்தார். வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வழியெங்கும் அவனுடைய அலுவலக சகாக்களின் வழக்கத்துக்கு மாறான எதிர்வினையையே நினைத்துக் கொண்டிருந்ததால் தெருவில் அவனை[ பார்த்ததும் யாராவது  எதிச்சாரிக்கு கடந்து செல்கிறார்களாவென்பதையே அவன் கவனிக்கவில்லை. வீட்டை நெருங்கும்போது, ஒரு மிக அழகான இளம்பெண் அவனை நிறுத்தி வழி கேட்டாள். அவள் வழிதவறிவிட்டாளாம். அவளுக்கு வழி சொல்லிவிட்டு, கவனமாகச் செல்லும்படி வாழ்த்தியனுப்பினான்.

அந்த வாரமுடிவில் அவனது அலுவலகத்தில் மிக நீண்ட கால்களைக் கொண்டிருப்பவளும், பளிச்சென்று உதட்டுச் சாயம் பூசிக்கொண்டிருப்பவளுமான அந்த அழகான பெண் அன்று மதிய உணவுக்கு எங்கே செல்லப்போகிறான் என்று விசாரித்தாள். அதில் பொதிந்திருந்த அழைப்பு அவனுக்கு உறைக்கவில்லை.

இப்போதெல்லாம் தனது முகமூடியை அவன் உணர்வதேயில்லை. ஆனால் மற்றவர்களின் முகமூடிகளை கவனிக்கத் தொடங்கியிருந்தான்.  இதற்குமுன் அவற்றை ஏன் தன்னால் பார்க்கமுடிந்ததில்லையென்று மாலை வேளைகளில் வீட்டுக்குத் திரும்புகையில் யோசித்தபடியே செல்கிறான். இப்போது அவை அவனுக்குத் தெரிகிறது. அவற்றைப் பொருட்படுத்தாமல் இருப்பது அவசியம் என்றும், காலம் கடந்துவிடுவதற்குமுன் சாலையைக் கடந்துவிடவேண்டுமென்றும் அவன் இப்போது அறிந்திருக்கிறான்.

 

 

*********************************************************************************************

பென் ஓக்ரி (1959) நைஜீரியாவின் நட்சத்திர எழுத்தாளர். பின் நவீனத்துவ, பின் காலனிய ஆப்பிரிக்க எழுத்தாளர்களில் முக்கியமானவர்.  இவரது The Famished Road நாவல் 1991-இல் புக்கர் பரிசு பெற்றது. ஓக்ரியின் படைப்புகளில், சமகால சமூக, அரசியல் சிக்கல்கள் ஆப்பிரிக்க தொல்குடி கலச்சார பாதிப்புகளால் புதிய வடிவம் பெறுகின்றன. யோருபா இனக்குழுவின் தொல்கதைகளில் இடம்பெறும் ஆவிகளும், மாய மந்திர நிகழ்வுகளும் இவரது நாவல்களில் தொடர்ந்து இடம்பெறுவதால் ஓக்ரியின் எழுத்து முறையை spiritual realism என்று விமர்சகர்கள் வகைப்படுத்துகிறார்கள்.

இங்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் A Wrinkle in the Realm சிறுகதை Newyorker பிப்ரவரி 1 , 2021 இதழில் பென் ஓக்ரியின் நேர்காணலோடு வெளிவந்தது. பேட்டி கண்டவர் நியூயார்கர் இதழின் இலக்கியப் பகுதிக்கான பொறுப்பாசிரியர் டெபோரா ட்ரீஸ்மன்.

 

 

இந்த இதழில் வெளிவந்திருக்கும் நிலத்தில் ஒரு சுருக்கம் என்ற உங்கள் சிறுகதையில் ஒருவனைப் பார்த்ததுமே பெண்கள் அச்சப்பட்டு சாலையைக் கடந்து ஓடுகிறார்கள். அந்த மனிதன் எந்த இனத்தைச் சேர்ந்தவன் என்று நீங்கள் குறிப்பிடவில்லை, ஆனால் அவனுக்கு நடப்பவை இன்று யு.எஸ்ஸிலும் பிரிட்டனிலும் மற்ற இடங்களிலும் கருப்பர்கள் அனுபவித்து வருவதோடு ஒத்திருக்கின்றன. இக்கதை இன அடையாளம் அல்லது அது சார்ந்த அச்சம் குறித்ததென்று சொல்லலாமா?

ஒரு விஷயத்தைப் பெயர் குறிப்பிடாமல் எழுதுவதும், அந்தக் கதையின் மூலமாகவே அந்த விஷயத்தை வலுவாகச் சொல்லவைப்பதுமே கதை எழுதுவதில் இருக்கும் கவர்ச்சிகரமான அம்சம். ஓர் அனுபவத்தோடு ஆரம்பிக்கிறேன். அது போகப்போக, வாழ்வின் ஒரு பகுதியாக கலந்துவிட்டிருக்கும் யதார்த்த இழைகளில் அரைபட்டு ஒன்றுகலந்துவிடுகிறது. மிகவும் கபடம் வாய்ந்ததாக அது அப்போது மாறி, ஆன்மிக உட்புழைவுகளுக்குள் புகுந்துவிடுகிறது. அதனால் உண்டாகும் பிறழ்வுகளை சரிசெய்வதற்கு எனது கதாபாத்திரம் மேற்கொள்ளும் அபத்த முயற்சிகளைச் சொல்வதற்காக பல வருட இடைவெளிக்குப் பிறகு சற்று விலகிநின்று எழுத முயன்றேன்.  இக்கதை நோக்குநிலை சார்ந்ததாகவும் இருக்கிறது. நாம் எப்படி பார்க்கப்படுகிறோம் என்று உணர்ந்துகொள்ளும் பிரக்ஞை சார்ந்ததாக.

இக்கதையில் ஏதேனும் பூடகத்தன்மை இருக்கிறதா? நிலத்தில் ஒரு சுருக்கம் என்று ஏன் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது?

ஒரு காட்சிப் படிமத்தை வைத்துக்கொண்டு மனித இதயத்தின் வேதனைகளுக்குள் அலைந்து திரிவதில் உள்ள பூடகத்தன்மைதான் இக்கதையிலும் இருக்கிறது. இக்கதைக்கு நிலத்தில் ஒரு சுருக்கம் என்று தலைப்பிட்டதற்குக் காரணம் உண்டு. கண்ணெதிரே தெரிபவற்றை பகுத்தறிவுக்கு மாறாக எதிர்கொள்ளும் மனிதர்களைக் கொண்ட அந்தப் பிரபஞ்சத்தில் ஏதோவொன்று மின்வெட்டாகப் புலப்படுகிறது. பௌதிக விதிகளைவிட பலம்வாய்ந்த கண்ணோட்டங்கள் உலகத்தை ஆள்கின்றன. ஆனால் அவையெல்லாம் மாயைகளே. அந்த மாயையின் கணநேர புலப்படல்தான் அந்த சுருக்கம். நாம் இப்படிப்பட்ட காலகட்டத்தில் இப்போது இருக்கிறோம். வாஷிங்டனில் நடந்த Black Lives Matter ஊர்வலத்தின்போதும், யு.எஸ். Capitol அலுவலகத்தின் மீது ட்ரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல்களின்போதும் காவல்துறை நடந்துகொண்ட விதங்களில் காணப்படும் வேறுபாடு இத்தகைய சுருக்கங்களில் ஒன்று.

இச்சிறுகதை விவரிக்கும் பல விஷயங்களில் ஒன்று, உங்களை வித்தியாசமாகவும், அச்சுறுத்தலாகவும் பார்க்கின்ற ஒரு சமூகத்தில் வாழநேர்ந்திருக்கும் அவலம். அது உங்கள் மனநிலையில் உண்டாக்கும் பாதிப்புகளைச் சொல்லும் விதம் எனக்கு ரால்ஃப் எல்லிஸனின் Invisible Man  நாவலை நினைவூட்டுகிறது. உங்களுடைய சிறுகதை இதைத் தவிர வேறு ஏதாவதொரு படைப்பு, அல்லது ஏதேனும் ஓர் அனுபவத்தின் பதிப்பினால் உருவானதா?

இக்கதை வேறு எந்த படைப்பினாலும் அல்ல, இந்த வாழ்வின் தூண்டுதலால்தான் உருவானது. ஆனால் அதை ஒரு புதிய வழியில் எப்படி திசைமாற்றிச் சொல்வது என்பதுதான் கடினமாக இருந்தது. கதை நிகழ்வுகள் விநோதமாகவும் அதே சமயத்தில் இயல்பாகத் தெரியும்படியாகவும் தோன்றும்படியாக ஒரு சார்பற்ற தொனியில் கதை சொல்லவேண்டுமென்று விரும்பினேன். காஃப்காவின் உள்வாங்கல்களும், எல்லிஸனின் கருத்துசார் மறைகுறிப்புகளும் இக்கதையின் மீது கவிந்திருந்தாலும், பண்டைய வாய்மொழிக் கதை மரபில்தான் எழுதியிருப்பதாக நினைக்கிறேன். விநோதங்கள் நிஜங்களோடு மங்கிக் கலந்துவிடும் மெல்வில்லின் கதைகளைப்போல, நதாலியேல் ஹாத்தோரின் சுருக்கக் குறியீடுகளைப்போல…

உங்கள் கதையின் நாயகனுக்கு முகமூடிக்குப் பின்னால் முகத்தை ஒளித்துக்கொள்வது நிம்மதியளிக்கிறது. இக்கதை கொரானா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் எழுதப்பட்டதா? முகக்கவசம் அணிந்து கொள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தை உண்டாக்கியிருக்கும் இப்புதிய காலச்சூழல் இக்கதைக்கான கருவைத் தூண்டியதாகச் சொல்லமுடியுமா?

வரலாறு கதையைக் கடத்திச் சென்றுவிட்டது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால், கண்ணோட்டத்துக்கும் செயலாக்கத்துக்கும் இடையில் வரலாறு கதைக்குள் வந்துவிட்டது எனலாம். இக் கதைக்கருவை பல வருடங்களாக எனக்குள் சுமந்துகொண்டிருந்தேன். பிறகு எழுதுவதற்கான ஒரு வழியைக் கண்டடைந்தேன். அந்த நேரத்தில்தான் முகமூடி அணிவதைப் பெருந்தொற்று கொண்டுவந்தது. கதையில் இடம்பெறுகின்ற முகமூடிகளின் அதீத இயல்புகள் ஓரிரு விவரக்குறிப்புகள் மூலம் கதையில் சொல்லப்படுவதால் என்னை நான் சலனமின்றி சாந்தமாக வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. வரலாறு தற்செயலாக அளிக்கும் வெகுமதிகளை எழுத்தாளன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவை ஒரு ஸ்வரத்திலிருந்து இன்னொன்றுக்கு தடம் மாறிச் செல்லும் கமகம் போல. ஆனால் உங்கள் கதையோடு நிஜவாழ்வும் கூட்டிணைந்துகொள்வது ஒரு விநோத நிகழ்வுதான். அது 2019-இல் வெளிவந்த எனது The Freedom Artist நாவலில் இதைவிட அழுத்தமாகவும், மிகவும் தொந்தரவூட்டும் வகையிலும் நிகழ்ந்தது. உலகில் நடந்துவரும் நிகழ்ச்சிகள் புனைவுக்கும் நிஜத்துக்கும் இடையில் உள்ள எல்லைக்கோடுகளில் சல்லடைத் துளையிட்டுவிடுகின்றன.

கதையின் கடைசியில் அவன் அணியும் முகமூடி அவனுடைய முகமாகவே ஆகிவிடுகிறது. இதை உருவகமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வீர்களா? அந்த முகமூடிதான் அவனுடைய உண்மையான முகமா? அவனுடைய நிஜமான ஆளுமை மறைந்துவிட்டதா?

இந்த இறுதிப்பகுதியின் வாசலை மூடாமல் திறந்தே வைப்பதிலும், அப்பகுதியை மூட்டமாக, அதே சமயத்தில் கூடியமட்டும் தெளிவாக சித்தரிப்பதிலும் பெரும் அக்கறை எடுத்துக்கொண்டேன்.  அந்த முகமூடி அவனுடைய முகமக மாறிவிடுவதில்தான் இக்கதையின் ஆதார அம்சம் அடங்கியிருக்கக்கூடும். ஆனால் நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். மாய வேலைகள், மந்திர சூனியம் வைப்பது, ஆவியுலகத் தொடர்பு போன்றவற்றுக்காக முகமூடிகள் தயாரிக்கும் ஒரு கலாச்சார மரபிலிருந்து வருபவன் நான் என்பதை நீங்கள் தயவுசெய்து நினைவில் வைத்திருக்கவேண்டும். முகமூடிகள் மூதாதையர்களின் அருளைப் பெறுவதற்கு வழிசெய்பவை. ஆவியுலகத்தோடு தொடர்பு கொள்ளவைப்பவை. பிரபஞ்ச சக்திகளை நம்மிடம் வரவழைப்பவை. துர்சக்திகளை விரட்டுபவை. இந்த விஷயங்களெல்லாம் இக்கதையில் எந்தளவுக்கு தாக்கம் செலுத்தியிருக்கின்றனவென்று வாசகர்கள்தான் தீர்மானிக்கவேண்டும். அந்தக் கடைசி முகமூடிதான் மொத்த கதையிலும் இருக்கின்ற , உண்மையான, உலகத்தின் கண்ணோட்டத்தைவிட , மிகவும் உண்மையான விஷயம் என்று சொல்லலாம். அவனுடைய நிஜ ஆளுமை ஒருவேளை மாறிவிட்டிருக்கலாம்., ஏதோவொருவிதத்தில் அமைதியாக உருமாற்றமடைந்துவிட்டிருக்கலாம். பார்வைக்குப் புலப்படாமல் இருப்பதற்கான அவசியம் மறைந்து, கிரேக்கத் தொன்மக்கதையில் பார்வையாலேயே எதிரில் இருப்பவர்களைக் கல்லாக்கிவிடும்  மெடூஸா  என்ற பெண்ணைப்போல வெறித்துப் பார்க்கும் உலகத்தின்  பார்வையை மட்டுப்படுத்தும் ரகசிய செயல்திட்டம் வந்துவிடுகிறது.   

பிப்ரவரி மாதம் உங்களுடைய புதிய சிறுகதைத் தொகுப்பு Prayer for the Living யு.எஸ்ஸில் வெலியாகியுள்ளது. இக்கதைகள் நிலத்தில் ஒரு சுருக்கத்தோடு எந்த வகையிலவது தொடர்பு கொண்டுள்ளனவா?

Prayer for the  Living தொகுப்பில் உள்ள கதைகள் நாம் யதார்த்தம் என்று நம்புகிறவற்றின் அரசியல் மற்றும் ஆன்மீகச் சிக்கல்களைச் சொல்பவை. அவை நிஜத்தையும் கனவையும் கலந்து மங்கலாக்குகின்றன. இத்தொகுப்பில் 24 கதைகளும் ஒரு கவிதையும் இடம்பெற்றுள்ளன. சிறுகதை மற்றும் ஹைக்கூ வடிவங்களைக் கலந்து சில கதைகளை Stokus என்ற ஒரு வடிவத்தில் எழுதியுள்ளேன். மற்றவை நெடுங்கதைகள். சிலவற்றை ‘மின்னல் கதைகள்’ என்று வகைப்படுத்தலாம். ஆனால் எல்லா கதைகளுமே – அரசியல் கதைகளும் கூட – எப்போதும் விவாதத்துக்குள்ளாக்கப்பட்டுவரும் யதார்த்தங்களின் இயல்பை ஆய்வு செய்பவையாகவே இருக்கும். நமது அதிகாரவுணர்வு, நமது கொள்கைகள், நமது விருப்பங்கள், நமது அச்சங்கள் எல்லாமே அவற்றில் கலந்திருக்கின்றன. பஞ்சம், போகோ ஹராம் இயக்கத்தின் வன்முறைகள், பைஸாண்டியத்தைக் கைப்பற்றும் சாத்தியமற்ற ஆசை, மொத்த உலகத்தையும் கட்டிப்போடும் உக்கிரமானதொரு மர்மக்கதை என்று கதைகள் எதுவாக இருந்தாலும், அவையெல்லாமே தப்பித்துக்கொள்ளமுடியாத யதார்த்த இயல்பை கேள்விக்கு உட்படுத்துவதாகவே இருக்கின்றன. நிலத்தில் ஒரு சுருக்கம் இத் தேடலை உருவக வழக்கில் ஒரு மங்கிய ஒளி கவிந்த தேவதைக் கதையுலகுக்குக் கொண்டுசெல்லும் ஒரு கதை.

 

------------------------------------------------------------------------------------------------------------------

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

     

 

 

 

 

 

   

 

 

 

 

 

  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாணவனின் மனைவி

எட்கார் கெரெட் - குறுங்கதைகள்

ஒரு சின்ன நல்ல விஷயம் - ரேமண்ட் கார்வர்