மொழிபெயர்ப்புகளினூடாக நவீன தமிழ் இலக்கியம்: மறுவாசிப்புகளும் புதிய தேவைகளும்

 

ஜி.குப்புசாமி

 

“மொழிபெயர்ப்பு என்பது மொழி பெயர்ப்பாளன் காணாமல் போவதும், அவனது படைப்பாக்கமும் ஒருசேர நிகழும் இரட்டை செயற்பாங்கு . எனது மொழி பெயர்ப்புகளில் எனது சொந்தப்பாணியின் சிறு துகள் கூட இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன் . எனது இன்மையின் மூலம் மட்டுமே நான் அங்கீகரிக்கப்பட 'விரும்புகிறேன்.''

- தொமினிக் விதால்யோ 1

 

பல்வேறு தேசிய இனங்களையும், மொழிகளையும் கலாச்சாரங்களையும், பலதரப்பட்ட வாழ்நிலைகளையும் உள்ளடக்கியுள்ள இந்தியா என்பது ஒரே தேசம்தான் என்று நிறுவப்பட்டிருக்கிறது. அரசியல் ரீதியாக இத்தகைய கூற்றுகள் சரியானவையே என்றாலும் தேசியவாதம் என்றதொரு தட்டையான சொல்லாடலில் இந்தியாவிற்குள்ளிருக்கும் வேறுபட்ட கலாச்சாரங்களை ஒற்றை பரிமாணத்தில் அடக்கிவிடவும் இயலாது. மொழியினை மட்டும் வைத்துப் பார்த்தால் இந்திய இலக்கியம் என ஒன்று இல்லைதான். ஆனால் இலக்கியம் என்பது மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருப்பதில்லை. மொழியின் மூலம் வெளிப்பாடு பெற்றாலும் மொழியைத் தாண்டிய அம்சங்கள் இலக்கிய உருவாக்கத்தில் உள்ளன. பொதுவான வேர்சொற்கள், வெளிப்பாடுகள், படிம வளம், கதைகளின் மூலமாதிரிகள் என்ற வகையில் இந்திய மொழிகளுக்கிடையே பொதுவான அம்சங்கள் இழையோடுகின்றன (கே.சச்சிதானந்தன், இந்தியன் லிட்டரேச்சர், 3.4.94).

பல்வேறு இந்திய மொழிகளிலுள்ள நவீன இலக்கியங்கள் அவற்றின் சகோதர மொழிகளில் பெயர்க்கப்பட்டு வருவதற்கு நீண்ட மரபும் நம்மிடையே இருந்து வருகிறது. குஜராத்தி, மலையாளம், மராத்தி, வங்காளம் போன்ற மொழிகளில் முதலாவதாகத் தோன்றிய படைப்புகள் பாரதம், இராமயணம் மற்றும் கீதையின் மொழிபெயர்ப்புகளே. இந்த மொழிகளைப் பேசுவோர் தமக்குரிய

மொழியுடன் தனித்தியங்கத் தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் இது நிகழ்ந்திருக்க வேண்டும். அதே வேளையில் இந்தியாவின் பிற கலாச்சாரங்களுடனான நெருக்கத்தை இவை வெளிப்படுத்தினாலும், இந்தப் பிரதிகளை அப்படியே மொழிபெயர்த்து விடாமல் தம் கலாச்சாரச் சூழலுக்கேற்ற வகையில் தமக்கான பிரதிகளாகவே, பல மாற்றங்களுடன் உருவாக்கிக் கொண்டனர்.

நவீனத் தமிழிலக்கியத்தில் இந்திய மொழிகளிலிருந்தும் பிறநாட்டு இலக்கியங்களிலிருந்தும் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களை கலாச்சார பரிவர்த்தனை என்ற தளத்திலும், அந்நிய இலக்கியங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுதல் என்ற சாத்தியப்பாட்டிலும் இன்று மறுபரிசீலனை அல்லது மறுவாசிப்பு செய்து பார்க்கையில் தமிழ் வாசகனுக்கு உண்டாகும் புதிய தேவைகளைப் பற்றி கவனம் கொள்வதும், சென்ற தலைமுறையின் பிரதிகள் இன்றைய வாசகனிடம் சந்திக்கும் சவால்களை எந்த முறையில் எதிர்கொள்வதென்று விவாதிப்பதும் இன்றைய தினத்தின் முக்கிய தேவையாயிருக்கிறது.

இந்திய மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளில் ஓர் உதாரண நாவலாக அதீன் பந்தோபாத்தியாயவின் வங்க நாவலான ‘நீலகண்ட பறவையைத் தேடி' நாவலைக்கூறலாம்.

விரிவான கதைத்தளம், முரண்பாடான போக்குகள், அடிப்படையான கேள்விகள், பல்வேறு வகையான பாத்திரங்கள் போன்றவற்றுடன் இதிகாசத்தின் பரிமாணங்களை இந்நாவல் கொண்டிருக்கிறது. கிழக்கு வங்காளத்தின் குறிப்பிட்டதொரு காலகட்டத்தைப்பற்றிய இச்சித்திரம் இன்றைக்கும் பொருத்தப்பாடு கொண்டுள்ளது.

இந்நாவலுக்கிணையாக பகவதி சரண்வர்மாவின் 'மறைந்த காட்சிகள்', சிவராம் கரந்த்தின் 'மண்ணும் மனிதர்களும்' குர் அதுல்ஜன் ஹைதரின் 'அக்னி நதி' போன்ற நாவல்களையும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட முக்கிய படைப்புகளாகக் கூறலாம்.

இந்திய மொழிகளிலேயே மலையாளத்திலிருந்துதான் தமிழுக்கு மிக அதிகமான மொழிபெயர்ப்புகள் செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வரும் 'செம்மீன், தகழி சிவசங்கரன் பிள்ளையின் மிகச்சிறந்த கலைப்படைப்பு. தகழியிடம் பொதுவாகக் காணப்படும் சிக்கல் என்னவென்றால் தனது படைப்புகளை ஒன்று, கற்பனை தளத்திற்கு கொண்டு சென்று புனைவியலாக்கிவிடுதல் (ஏணிப்படிகள்), அல்லது மார்க்ஸிய சித்தாந்தப்படுத்தி விடுதல் (தோட்டியின் மகன் மற்றும் ரெண்டிடங்கழி) அல்லது இலட்சியவாதப்படுத்திவிடுதல். ஆனால் செம்மீன் இத்தகைய சிக்கல்களில் தடம் புரளாமல் அவருடைய படைப்புகளிலேயே மிக உன்னதமான படைப்பாகியுள்ளது. இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த சுந்தர ராமசாமி அவரே ஒரு மகத்தான கலைஞன் என்பதால் மிக அற்புதமாக மொழியாக்கம் செய்திருந்தார்.

செம்மீன் பெண்மையைப் பற்றிய கதை. இந்தப் பெண்மை, ஒரு ஆணின் பார்வை வெளிப்படுத்தும் பெண்மை. பெண்ணிற்கும் கடலுக்கும் இடையிலுள்ள உறவு சூட்சுமமிக்கதாயிருக்கிறது. கடலுக்குச் சென்ற கணவன் திரும்புவது மனைவியின் தவத்தை, அவள் தூய்மையைப் பொறுத்தே அமைகிறது. கடல், தாய்மையுணர்வோடு உயிர்கொடுக்கும் சக்தியாக இருக்கும் அதே வேளையில், சமுதாய, கலாச்சாரக் காவல் சக்தியாகவும் விளங்குகிறது. ஒழுக்கக்கேடுகள் சகித்துக் கொள்ளப்படுவதில்லை. ஊனைப் பிளந்து, ரத்த பலி கொண்டு விடுகிறது.

படைப்பாளியின் மொழி கருத்தம்மாவின் உணர்ச்சிகளை, அவளது ஒழுக்க வேலிகளை, அவளது உணர்ச்சிகளை, கணவன் பழனியின் அன்பை, அவளால் மறக்கவே முடியாத பரீக்குட்டியை, அத்தனை வலிகளோடும் இன்பங்களோடும் நுணுக்கமாகச் சித்தரித்துப் போகிறது. பெண்ணிடம் எழும் உடல் சார்ந்த விழிப்புணர்வை, பாலுணர்வுகளை இந்தியப் பண்பாட்டுப் பின்புலத்தின் இறுகிய நெறிமுறைகளுக்கிடையே பதிவு செய்வது சிக்கலான காரியம்தான். மனித நேயமிக்கதொரு கலைஞன் அதனை கலாபூர்வமாக வடித்துக் காட்டும்போது, வாசகனுக்கு புதிய பரிமாணங்கள் கிடைக்கின்றன. உடல் சார்ந்த வேட்கை அதன் மிருகக்கூறுகளோடு கருத்தம்மாவைப் பீடிக்கும் போதும், அவளுக்கும் அவளுடைய அம்மா சக்கிக்கும் நெறிகள் சார்ந்த உராய்வு அதிகரிக்கும் போதும், நாவல் அதன் பெண்மைச் சூழலிலிருந்து, பண்பாட்டுத் தளங்களிலிருந்து வேறொரு வாசலைத் திறந்து கொள்கிறது.

பாத்திரங்களின் இத்தகைய தேடல்களின் உள்நோக்கிய பார்வைகளுக்குள் மொழிபெயர்ப்பாளனின் மொழி ஊன்றிக்கொள்கிறது. ஒவ்வொரு வரிகளுக்கிடையிலும் தனது கூர்மையையும், எடையையும் மாற்றிக் கொண்டேயிருக்கும் மூலப்படைப்பின் மொழியைப் போலவே மொழிபெயர்ப்பு பிரதியிலும் உருமாறுகிறது. சுந்தர ராமசாமியின் மொழி, செம்மீனின் ஒவ்வொரு பாத்திரங்களுக்குள்ளும் சுருங்கி, விரிந்து, எழும்பி, தயங்கி, மருண்டு, கிளர்ந்து மிகத் துல்லியமாக மேலெழுந்து வருகையில் படைப்பிற்கும், மொழிபெயர்ப்புக்கும் இடையே இருக்கும் இடைவெளிகள் அழிந்து போகின்றன.

இதே நாவலை இந்தியில் பாரதி வித்யார்த்தியும், ஆங்கிலத்தில் நாராயண மேனனும் மொழிபெயர்த்திருக்கின்றனர். இம்மொழிபெயர்ப்புகளில் நாவலின் எண்ணற்ற உணர்வடுக்குகளுக்குள் அவர்களது மொழி உட்புகாமல் வெளியிலேயே தங்கிவிடுகிற தோல்வியை ராஜி நரசிம்மன் ஆதாரங்களுடன் விளக்குகிறார்.2

ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நாராயண மேனன் இந்நாவலை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு மொழிபெயர்த்திருக்கிறார். ஆனால் கருத்தம்மா என்ற மலையாளத்து மீனவப் பெண்ணின் மென்மையான மனதையும், குழப்பமான உணர்ச்சிகளையும் ஆங்கிலம் போன்ற, சென்டிமென்ட்டுக்கு இடமளிக்காத, தெளிவான, பட்டவர்த்தனமான மொழியால் அதே நுணுக்கத்துடன் பெயர்த்தெடுக்க முடியாமற் போகிறது. தமிழில் அற்புதமாகக் கொண்டு வரப்படுகிற குழைவு, இலேசாகக் கூட ஆங்கிலத்தின் நேரடியான, சிடுக்குகளற்ற வர்ணிப்புகளில் தென்படுவதில்லை. இதை மொழிபெயர்ப்பாளரின் திறமைக் குறைவென்று கொள்ள முடியாது. ஆங்கிலம் சுமந்து கொண்டிருக்கும் மேற்கத்திய, கிருஸ்துவ கலாச்சார சரித்திரச்சுமை இறக்கி வைக்கக் கூடியதல்ல. அம்மொழியில் கீழை உணர்வுகளை எவ்வளவு இலகுவாக அளக்க முற்பட்டாலும், ஒரு குறிப்பிட்ட தூரம் தாண்டிய பிறகு, ஒன்று வழமையான சொற்றொடர்களில் சிக்கிக்கொள்ள நேர்கிறது, அல்லது வேறோர் இணையான, ஆனால் அந்நியமான தளத்திற்கு கொண்டு சென்றுவிடுகிறது. “தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த எந்தவொரு மீனவனுக்காவது படகோ, வலையோ இருக்கிறதா?" என்றதொரு எளிமையான வாக்கியத்தை ஆங்கிலத்தில் எப்படிக் கொண்டு வரமுடியும்? Wrong Caste என்கிறார் மேனன். தவறான சாதி! எவ்வளவு மொண்ணையான பிரயோகம்!

பாரதி வித்யார்த்தியின் இந்தி மொழிபெயர்ப்புக்கு வேறுவகையான சிக்கல் இருப்பதாக ராஜி நரசிம்மன் எழுதுகிறார். முதல் பிரச்சனை இந்நாவலின் நுட்பத்திற்குள் செல்லவே முடியாத மொழிபெயர்ப்பாளனின் திறமைக்குறைவான வாசிப்பு. அடுத்ததாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஹிந்தி வார்த்தைகளின் பொருத்தமின்மை.

மேற்கண்ட இரு மொழிகள் சந்தித்த அதே பிரச்சனையை தமிழும் சந்தித்திருக்கக் கூடும். மலையாளத்திற்கு நெருக்கமான மொழி என்ற சௌகரியத்தை மீறி மொழிபெயர்ப்பாளனின் துல்லியமான கலையுணர்வும தமிழ் மொழிபெயர்ப்பை முழு வெற்றியடையவைத்திருக்கிறது.

மலையாளப் படைப்புகளை பிரெஞ்சில் தற்போது மொழிபெயர்த்து வரும் தொமினிக் விதால்யோ, “மூல நூலாசிரியரின் குரல் பிரெஞ்சிலேயே என் தலைக்குள் கேட்கத் தொடங்கும் வரை அவருடைய வெளிப்பாடுகள் முழுவதுமாக எனக்கு உள்ளகப்பட வேண்டும் என்பதில் கவனமாயிருக்கிறேன்.” என்கிறார்.

பால் ஸக்கரியாவின் படைப்புகளை சுகுமாரன் தற்போது தமிழில் மொழிபெயர்த்து வருகையிலும் இதே ரசாயனம்தான் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. வைக்கம் முகமது பஷீரின் பல குறு நாவல்கள் தற்போது இரண்டு மூன்று வருடங்களாக தமிழில் வெளிவந்து கொண்டிருந்தாலும், கடந்த முப்பதாண்டுகளில் அவருடைய படைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே மொழிபெயர்க்கப்பட்டு நமக்கு கிடைத்து வந்தன. ஆனால் பால் ஸக்கரியா மலையாளத்தில் எழுத, எழுத அவை உடனுக்குடன் தமிழிலும் வெளிவந்துவிடுகிற அபூர்வச் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது. மதம், சமூக யதார்த்தம், அரசியல் பிரச்சனைகள் இவற்றை திறந்த மனதோடு, மிகக் கூர்மையாக, தனக்கேயுரிய எள்ளல் நடையோடு ஸக்கரியா அணுகும்போது புதிய பரிமாணங்கள் கிடைக்கின்றன.

’கண்ணாடியில் பார்ப்பதுவரை’ யில் இயேசு மறுவாசிப்பு செய்யப்படுவது போலவே 'இதுதான் என் பெய’ரில் கோட்ஸே என்ற ஆளுமை மறுவாசிப்பு செய்யப்படுகிறது. கலைஞன் எந்தக் கொள்கையின் சார்பாகவும் ஒதுங்கி நின்று ஆதரவு கோஷம் எழுப்புவனல்ல. ஆனாலும் மதவெறியையும், தீவிரவாதத்தையும் ஸக்கரியாவின் கலை ஆளுமை தகர்த்தெறிவதுபோல் எந்த வெளிப்படையான பிரச்சாரங்களும் செய்ய முடியாது.

'இதுதான் என் பெயர்' தமிழில் மூன்று முறை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  இம்மூன்று மொழிபெயர்ப்புகளில் சுகுமாரனின் மொழிபெயர்ப்பு அதன் ஒவ்வொரு வாக்கியத்திலும் முழுமையான கலைநிறைவோடு பரிமளிக்கிறது. ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளன் சரியான வார்த்தையை மட்டும் தேர்ந்தெடுப்பதில்லை. அந்த வார்த்தையை வாழ வைக்கவும் செய்கிறான். மூலப்படைப்பாளி இத்தகைய மகத்தான மொழிபெயர்ப்புகளில்தான் பூர்ணத்துவம் பெற்றுவிடுகிறான். "மொழிபெயர்ப்பு என்பதே ஒரு கவர்ச்சியான தோல்வி." என்கிறார் பிரெண்டன் கென்னலி.  ”அது சாத்தியமான அதே நேரத்தில் சாத்தியமற்ற ஒரு செயல். மறை பொருள்வாதத்திற்கேயுரிய மொழியின் பொருள்முரண் மண்டியிருக்கும் சிக்கல் அது."3

 

பிற இந்திய மொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்படுவதைவிட மிக அதிகமாகவே பல அயல்நாட்டு நவீன இலக்கிய படைப்புகள், தமிழில் தேர்ந்த மொழி பெயர்ப்பாளர்களால் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளன. இம்மரபு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. நடுவில் சில பத்தாண்டுகள் மொழியாக்கங்களின் வருகையில் தொய்வு இருந்தபோதிலும் கடந்த ஏழுட்டு வருடங்களாக பெரும்பாய்ச்சல் நிகழ்ந்துள்ளது.

உலக இலக்கியங்களை வெள்ளமாக தமிழில் அறிமுகப்படுத்தி ஒரு தீராத வெறியோடு, தன் வாழ்நாள் முழுக்க திறனாய்வுகள், நவீன இலக்கியப் படைப்புகளை அறிமுகப்படுத்துதல், மொழிபெயர்ப்புகள் என்று இயங்கிக் கொண்டிருந்தவர் க. நா. சுப்பிரமணியம். அவர் அத்தனை முனைப்போடு எழுதித்தள்ளிய பல்லாயிரம் பக்கங்கள் இன்றுவரை அச்சேறாமல் தூங்கிக்கிடக்கின்றன. வெளிவந்திருக்கும் கணக்கற்ற மொழி பெயர்ப்புகளும் எந்த அளவுகோலில் வைத்து சீர்தூக்கிப் பார்த்தாலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விசேஷமான கதைகளே. தன்னுடைய சொந்த ரசனையின் அடிப்படையில் மட்டுமே தேர்ந்தெடுத்து மொழி பெயர்ப்பதாகவும், வேறெந்த இலக்கிய கோட்பாட்டு அளவு கோல்களும் அவற்றை உட்படுத்தக்கூடாதென்றும் அவர் மறுத்துவந்தாலும், அவரது பல மொழிபெயர்ப்புகள் அவசர கோலத்தில் செய்யப்பட்டவைகளாக ஒரு பொதுவான கருத்து உண்டு. இருந்தும் ஸ்வீடீ ஷ் நாவலாசிரியர் ஸெல்மா லாகர்லாவின் மதகுரு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மிகச் சிறந்த நாவலாக இன்றளவும் கருதப்பட்டு வருகிறது. மற்றொரு ஸ்வீடிஷ் எழுத்தாளரும், நோபல் பரிசு பெற்றவருமான பேர் லாகர்க்விஸ்ட்டின் மகத்தான நாவலான அன்பு வழியையும் க.நா.சு மொழிபெயர்த்துள்ளார். தமிழின் மிக முக்கியமான இலக்கியவாதிகள் பலரும் 'அன்புவழி' தமக்கு ஆதர்சமான படைப்பாக இருந்து வருவதை குறிப்பிட்டுள்ளனர். இவ்விரு நாவல்களிலும் மிக அற்புதமாக, உள்ளடக்கத்திற்கு எந்தக்குறையும் ஏற்படாத வகையில் தன் மொழி நடையைக் கையாண்டிருக்கும் க.நா.சு. 'மதகுரு' நாவலை மொழிபெயர்க்கத் தொடங்குமுன் அந்நாவலின் ஆங்கிலமொழிபெயர்ப்பை ஐம்பது முறை படித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்,

க.நா.சு. மொழி பெயர்த்த மற்றொரு குறிப்பிடத்தகுந்த நாவல் நார்வே நாட்டவரான நட் ஹாம்சனின் நிலவளம். அவர் மொழிபெயர்த்து அரைநூற்றாண்டுகாலம் ஆனபிறகும் இந்நாவலை ஒவ்வொரு தலைமுறையின் தமிழ்வாசகனும் பயின்று வருகிறான்.

க.நா.சு. அளவிற்கு உலக இலக்கியங்களை அறிமுகப்படுத்தி அழுத்தமான முத்திரையை பதித்தவர் வேறு எவருமில்லையெனக் கூறமுடியும்,

1960 களில் தொடங்கி தொண்ணூறுகளின் முற்பகுதி வரை நான்கு தலைமுறைகளாக தமிழ் வாசகனுக்கு ருஷிய இலக்கியங்களை சோவியத் ரஷ்யாவில் முன்னேற்ற பதிப்பகமும், ராதுகா பதிப்பகமும் தமிழில் அறிமுகப்படுத்தி வந்திருக்கின்றன.

மக்ஸிம் கார்க்கியின் தாய் லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு மற்றும் அவரது எண்ணற்ற குறுநாவல்கள் மற்றும் சிறுகதைகள், ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்க்கியின் வெண்ணிற இரவுகள் போன்ற குறுநாவல்களும் சிறுகதைகளும், கொரலேன்கோவின் கண் தெரியாத இசைஞன், புஷ்கின்னின் படைப்புகள், துர்கனேவின் தந்தையரும் தனயரும் என சோவியத் இலக்கியங்களின் மூலம் மட்டுமே நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்திக் கொண்ட பெரும் வாசகர் கூட்டம் தமிழில் இருந்து வந்துள்ளது.

எர்னஸ்ட் ஹெமிங்வேவின் கடலும் கிழவனும் நாவலை திருலோக சீதாராமும், அதன் பின் எம்.எஸ். அவர்களும் மொழிபெயர்த்துள்ளனர். தி. ஜானகிராமன் மொழிபெயர்த்த பேர் லாகர்க்விஸ்ட்டின் 'குள்ளன்', அனட்டோல் ஃபிரான்ஸின் 'தாசியும் தபசியும்' வெ. ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு நேரடியாக மொழிபெயர்த்த ஆல்பெர் காம்யு வின் 'அந்நியன்' ஆர். சிவகுமாரின் மொழியாக்கத்தில் வெளிவந்த காஃப்காவின் 'உருமாற்றம்' போன்றவை மிகத்திறமையாக மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகளாகும். ஸாமுவேல் பக்கெட்டின் 'கோடோவிற்காக காத்திருத்தல்' என்ற நவீன நாடக இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பும் தமிழில் கி.அ. சச்சிதானந்தத்தால் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழில் நடிக்கப்பட்டும் வந்துள்ளது.

கதை சொல்லும் முறைகளில் சாத்தியப்படும் அத்தனை புனைவுக் கூறுகளையும் தனது கதைகளில் பயன்படுத்தும் இடாலோ கால்வினோவின் மிக முக்கிய மூன்ற படைப்புகள், 'புலப்படாத நகரங்கள்', 'குளிர்கால இரவில் ஒரு பயணி' மற்றும் 'ஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை' ஆகியவை சா. தேவதாஸ் அவர்களால் மிகத்திறமையாக மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளிவந்துள்ளன. 2003ம் வருடத்திற்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்கநாவலாசிரியர் ஜே.எம். கூட் ஸீயின் பீட்டர்ஸ்பர்க் நாயகனும்' தேவதாஸால் மொழிபெயர்க்கப்பட்டு தமிழில் வெளிவந்துள்ளது. ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்க்கியின் எழுத்துக்கள் உலகெங்கும் பலரையும் தீவிரமாக பாதித்திருக்கும். அம்மாபெரும் கலைஞனின் தனிப்பட்ட வாழ்க்கையை அவர் படைப்புகளுக்கிணையானதொரு தீவிர அழுத்தத்தை ஏற்படுவதுதான். அவரது வாழ்வின் பல சிதறல்கள் தஸ்தயேவ்ஸ்க்கியின் கதைகளெங்கும் புதைந்திருந்தாலும், அவருடைய வாழ்க்கையையே தனது புனைவின் களமாகக் கொண்டு கூட்ஸி படைத்த இந்நாவலோ, அல்லது இன்றைய தலைமுறையின் மிக விசேஷமான எழுத்தாளரான இவரது வேறெந்த நாவலோ இந்தியாவின் வேறெந்த மொழிகளிலோ, மொழிபெயக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இவரது மற்றொரு நாவல் Life and Times of Michael K நா, தர்மராஜனால் மொழிபெயர்க்கப்பட்டு தற்போது வெளியாகியுள்ளது.

மாய யதார்த்தப் புனைவுகளின் நாயகனான காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ்ஸின் நாவல் எதுவும் தமிழில் வெளிவந்ததில்லையென்றாலும் அவருடைய பல சிறுகதைகளும் குறுநாவல்களும் பல வருடங்களாக தமிழின் சிறுபத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்து, மார்க்வெஸ் என்ற பெயர் தமிழ் இலக்கிய உலகில் குடும்பப் பெயராக ஆகிவிட்டிருந்தது. அதேபோல ஜோர்ஜ் லூயிஸ் போர்ஹெஸ்ஸின் முக்கியமான சிறுகதைகள் அனைத்துமே தமிழில் ஆர். சிவகுமார், பிரம்மராஜன் போன்றோரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பெரிய குறுநாவல் ஒன்று அசதாவாலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் தீவிரமாக இயங்கிவரும் ஹாருகி முரகாமி, வொலே சொயிங்கோ, மிலன் குந்தேரா, காசுவோ இஷிகுரோ, ஏ.எஸ், பையட் உள்ளிட்ட எண்ணற்ற படைப்பாளிகளின் எழுத்துக்கள் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு தமிழின் சிறுபத்திரிகைகளில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்தளவிற்கு ஒரு மொழியின் இலக்கிய உலகம் நவீனத்துவமாகியிருப்பது தமிழின் மிக ஆரோக்கிய சூழல் எனலாம்.

இத்தகைய படைப்புகளின் நவீனத்துவ எல்லைகளுக்கு தொடர்ந்து அறிமுகம் கிடைத்துக் கொண்டிருக்கையில், அந்த மொழியில் உலகத்தரத்திற்கும், சில வேளைகளில் அவ்வெல்லைகளைக் கடந்தும் அபூர்வப் படைப்புகள் பலசுயமாக உருவாகிவிடுகின்றன. உலகின் எந்த மொழியிலும் மிகவும் தைரியமாக அறிமுகப்படுத்தக்கூடிய பலநூறு கதைகள் இத்தகைய ஆரோக்கிய சூழலால்தான் தமிழில் உண்டாகியிருக்கின்றன.

உலகின் மூலைமுடுக்குகளிலுள்ள குட்டி தேசங்களிலிருந்தெல்லாம் உன்னதமான படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வரும் சூழலில் தமிழின் அற்புதமான நவீன இலக்கியங்களை கணிசமான அளவில் ஆங்கிலத்திலோ அல்லது பிற இந்திய மொழிகளிலோ மொழிபெயர்த்து கொண்டு செல்லப்படாதிருப்பது தமிழ்ச்சூழலுக்கேயுரிய பிரத்தியேக சிக்கலாகும்.

ஒரு மொழி நவீனத்துவத்தின் எல்லா சவால்களுக்கும் தன்னை ஒப்புவித்துக் கொள்ளும்போது, காலத்திற்கு காலம், தலைமுறைக்குத் தலைமுறை வெவ்வேறு மொழிபெயர்ப்புகளை ஒவ்வொரு முக்கிய படைப்பிற்கும் உண்டாக்கிக் கொள்கிறது. லேவ் தல்ஸ்தோயின் War and Peace நாவலுக்கு ஆங்கிலத்தில் நான்கு மொழி பெயர்ப்புகள் இதுவரை வந்துள்ளன. அன்னா கரீனாவிற்கு 1918ம் ஆண்டு தொடங்கி இன்றுவரை ஐந்து மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன.

தமிழிலும் பல அயல்மொழிப் படைப்புகள் மற்றும் பிற இந்திய மொழி இலக்கியங்களுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன. நோபல் பரிசுபெற்ற ஜெர்மானிய நாவலாசிரியர் ஹெர்மன் ஹெஸ்ஸெவின் சித்தார்த்தாவை திருலோக சீதாராமும், சிவனும் மொழிபெயர்த்துள்ளனர். தற்போது மூன்றாவதாக ஒரு சுருக்கமான மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளது. திருலோக சீதாராமின் மொழிபெயர்ப்பு செறிவானதாகவும், மூலப்பிரதிக்கு விசுவாசமாகவும் இருக்க, சிவனின் மொழிபெயர்ப்பு மேம்போக்காகவும், வேண்டியபடி திருத்தி, எளிமைப்படுத்தி பல இடங்களில் கதைச்சுருக்கமாகவும் விடுதல்களோடும் காணப்படுகிறது.

ஒரு செவ்வியல் படைப்பிற்கு ஒரேயொரு மொழிபெயர்ப்பு போதுமானதாக இருக்காது. காலத்திற்கேற்ப புதிய மொழிபெயர்ப்புகள் தேவைப்படுகின்றன. காலந்தோறும் மொழி என்பது மாறிக்கொண்டே வருகிறது. புதிய வாழ்க்கை முறைகளும், கலாச்சார நகர்வுகளும் புதிய சொல்லாடல்களை தருவிப்பதோடு, கலாச்சாரத்தின் புதிய பரிமாணங்களை உள்வாங்கிக் கொண்டு மொழிபெயர்ப்பில் பிரதிபலிக்க புதிய மொழியாக்கங்களையும் தோற்றுவிக்கிறது.

மொழிபெயர்ப்பாளர்களின் மிகப்பெரிய சவால், ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்ட படைப்பை மீண்டும் மொழிபெயர்ப்பதுதான். தன் மொழியும் கலாச்சாரமும் சார்ந்த பண்பாட்டு அம்சங்களை அயல்நாட்டு இலக்கியத்தை மொழிபெயர்க்கும்போது சேர்த்துவிடுவதால் மொழிகளுக்கிடையேயான பரிவர்த்தனைகளும், பண்பாடுகளுக்கிடையேயான புரிந்து கொள்ளலும் மறுக்கப்படுகிறது. ஒற்றைப் பண்பாட்டுக்குள் அடைத்து விடுதலும், பிற சாத்தியப்பாடுகளை அனுமதிக்காததும் அபாயகரமானதாகும்.

தல்ஸ்தோயின் அன்னா கரீனினா, திணமணி நாளிதழின் அப்போதைய உதவி ஆசிரியர் வெ. சந்தானம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு எளிமைப்படுத்தப்பட்ட தலைப்பாக அன்னா கரீனா என்று 1947ல் வெளிவந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் இது சிறப்பாகவே மொழிபெயர்க்கப்பட்டதொரு முயற்சி என்று கூற முடிந்தாலும், கிருஸ்தவ கலாச்சாரப் பின்னணியில் உள்ள பாத்திரங்களின் அவஸ்தைகளையும், பாடுகளையும் தல்ஸ்தோய் வர்ணிக்கையில் சந்தானம் அவற்றை இந்து சமுதாயத்தில் உள்ள பெண்ணின் அவலங்களாக தொனிக்கும்படி மொழிபெயர்த்துவிடுகிறார்.

ஒரு இடத்தில், “அட ஈஸ்வரா இதென்ன களைப்பு!" என்கிறாள் அன்னா (பக். 359)

அன்னாவின் விவாகரத்து பற்றிய பிரச்சனை முடிவிற்கு வருமானால் அன்னா திருந்தி மாறுதலடைவது மேலும் சிரமமானதாகும் என்ற இடத்தில் 'சன்மார்க்க வழியில்' என்று வருகிறது. (பக். 390) ஆங்கில மொழிபெயர்ப்பு ‘On the path of virtue' என்கிறது. (OUP - P.429) இங்குள்ள பிரச்சனை ஒழுக்கம் சார்ந்தது மட்டுமே மத ஆன்மீகம் தொடர்பானதல்ல.

குடும்ப வாழ்க்கை என்பதைக் குறிப்பிட்ட கிரகஸ்தாரம் என்ற தொடர் பயன்படுத்தப்படுகிறது (II- பக்.33). இத்தொடர் குடும்ப வாழ்க்கையை குறிப்பிடக் கூடியதென்றாலும் இது இந்து மரபு சார்ந்தது - பிரம்மச்சர்யம், கிருகஸ்தாரம், வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்று நான்கு நிலைகளைக் கொண்ட நிலையில் ஒரு வாழ்க்கை கண்ணோட்டத்தை உணர்த்துவது. இந்து தர்மம் சார்ந்த பிரயோகங்கள் ஒரு விஷயத்தை அழுத்தமாக உணர்த்திவிடும் என்ற மொழிபெயர்ப்பாளரின் கற்பிதம் இது.

இந்த எண்ணப் போக்கினால் ஆவிகளைப் பற்றிய உரையாடல் விடுபட்டுள்ளது. ஆப்ளான்ஸ்கியும் வெலினும் உணவகத்தில் இரு அத்தியாயங்களுக்கு உரையாடிக் கொண்டிருக்க, தமிழில் ஒரு அத்தியாயமாக முடிந்து போகிறது. எனவே, முதல் பாகம் 34 அத்தியாயங்களாக இருக்க, தமிழில் 30 அத்தியாயங்களாகி விடுகிறது.

குர் அதுல்ஜன் ஹைதர் எழுதிய உருதுநாவலான 'அக்னி நதி' சௌரியால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மரபு என்ன, இந்திய வரலாற்றின் நடப்புகள் உணர்த்துவது என்ன, இந்தியரின் பயணம் எத்திசை நோக்கியதாக இருக்க வேண்டும் என்பவற்றை ஆழமாகப் பரிசீலிக்கும் நாவல் இது. இந்து மதம் பௌத்தத்தை எதிர்கொள்ளல், இஸ்லாத்தின் வருகை, கிருஸ்துவத்தின் நுழைவு போன்றவை இந்துக்களிடம் அவர்களது கலாச்சாரத்திலும் உண்டாக்கிய தாக்கங்கள், அரேபியர், பாரசீகர், போர்த்துகீசியர், ஃபிரெஞ்சுகாரர், ஆங்கிலேயர் என பல்வேறு நாட்டினரின் நுழைவு இந்திய வரலாற்றில் ஏற்படுத்தின திருப்பங்கள் விவரிக்கப்பட்டு ஒரு மறுபரிசீலனை செய்யப்படுகிறது.

இத்தகைய முற்போக்கானதொரு நாவலில் Proletariate என்ற பதம் "தாழ்ந்த குலத்தவர்" என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சௌரி சொற்செறிவுமிக்க மொழிபெயர்ப்பாளர். மிகச் சரளமான நடையைக் கொண்டவர். ஆனால் அவர் வர்க்கச் சார்பான சொல்லான ப்ரொலெடேரியட் என்பதை ஏற்கனவே பரவலான புழக்கத்தில் இருக்கும் “பாட்டாளி வர்க்கம்" என்ற சரியான சொற்றொடரை விட்டுவிட்டு சமஸ்கிருதச் சார்பாக “தாழ்ந்த குலத்தவர்' என்று மொழிபெயர்ப்பதன் மூலம் அவரது மரபு சார்ந்த சாய்வை வெளிப்படுத்தி விடுகிறார். நேர்மையான மொழிபெயர்ப்பாளன் கவனமாக இருக்க வேண்டிய இடங்கள் இவை போன்றவைதான்.

"ஒரு காலத்தில் ஏற்புடையவையாக இருந்த மொழிபெயர்ப்பு பிந்தைய காலத்தில் ஏற்புடையதல்லாமல் போய்விடும்” என்கிறார் லாரன்ஸ் வெனுதி.4 ஜெர்மானிய மொழியிலிருந்து ஃபிரான்ஸ் காஃப்காவின் The Castle நாவலை முதலில் மொழி பெயர்த்த எட்வின் மற்றும் வில்லாமூரின் பிரதி 1997 வரை ஏற்கப்பட்டிருந்தது. இவர்களின் மொழிபெயர்ப்பிற்கு அடிப்படையாக இருந்த கையெழுத்து படிகள் காஃப்கா பயன்படுத்திய 1926ம் வருடத்திய ஜெர்மானிய மொழியில் எழுதப்பட்டவை. இன்று ஒருங்கிணைக்கப்பட்டு, செவ்வியதாக்கப்பட்டுள்ள நவீன ஜெர்மானிய மொழியல்ல அது. பல கிளை மொழிகளாகப் பிரிந்திருந்த அச்சிக்கலான ஜெர்மனிய மொழியை காஃப்கா தன்னிஷ்டத்திற்கு வாக்கிய அமைப்புகளை சுருக்கி எழுதியிருப்பதாக எட்வின்மூர் கூறுகிறார்.5 “அந்த வினோத வரிசையில் மட்டுமே காஃப்கா தான் விரும்பியதை எழுதியிருக்க முடியும். எங்களுடைய பிரச்சனையே காஃப்கா எழுதிய அதே முறையில் ஆங்கில உரை நடையைக் கொண்டு வருவதாகத்தான் இருந்தது."

மாக்ஸ் பிராட் செய்திருந்த திருத்தங்கள், காஃப்காவின் பிரதியில் அவர் செய்திருந்த நிறுத்தக் குறிகள், எட்வின் மற்றும் வில்லாமூரின் மொழிபெயர்ப்பில் ஏற்பட்டிருந்த தவறுகள் போன்றவற்றைக் களைந்து 1997ல் மார்க் ஹார்மன்,  தன் மொழிபெயர்ப்பை செவ்வியமாகக் கொண்டுவர முற்பட்டார். இவ்விரு மொழிபெயர்ப்புகளையும் ஒப்பிட்டு ஜே.எம். கூட்ஸீ விமரிசிக்கும் போது, "ஹார்மன் சில இடங்களில்யந்திர கதியில் இயங்குகிறார். காஃப்கா குறித்த எட்வின் மற்றும் வில்லாமூரின் வாசிப்பு 'அவநம்பிக்கை மிகுந்த காலத்தின் மதவியல் மேதை' என்றும் 'மானுட அம்சமும் தெய்வீக அம்சமும் பொருத்திப் போகாததான விஷயத்தில் ஆழ்ந்து விட்ட மதவியல் உருவகக் கதை எழுத்தாளர்' என்பதாகவுமே இருந்திருக்கிறது” என்கிறார்.6

இந்தியப் புராண பாத்திரமான சகுந்தலையும் தன் உருவை பல பிரதிகளில் மாற்றிக் கொண்டிருக்கிறாள். மகாபாரதத்தில் இடம் பெறும் கதையில் சகுந்தலை துணிச்சல் மிக்கவளாக, அநீதியை எதிர்ப்பவளாக சித்தரிக்கப்படுகிறாள். ஆனால் அவளை காளிதாசன், கணவனுக்கு அடங்கியவளாக, இலட்சியப்படுத்தப்பட்ட இந்தியப் பெண்மையாக சித்திரமாக்கி விடுகிறார். வில்லியம் ஜேம்ஸ் மற்றும் மோனியர் ஜேம்ஸ் போன்றோர் சகுந்தலையின் கதையை ஆங்கிலத்தில் எழுதுகையில் காளிதாசனின் சகுந்தலையையே கொண்டு வந்தனர். அவர்களுடைய நோக்கத்திற்கேற்ற பாத்திரம் காளிதாசனுடையதாகத்தானே இருக்க முடியும்! ஆனால் ரவீந்திரநாத் தாகூர் சகுந்தலையின் பாத்திரத்தை மறுவாசிப்பு செய்கையில் சரியானபடி மகாபாரத சகுந்தலையை முன்னிறுத்தி விடுகிறார்.

நாமறிந்த கலாச்சாரம், வாழ்வியல் பார்வை போன்றவற்றை அறிந்து கொள்ளத்தான் மொழிபெயர்ப்பு தேவைப்படுகிறது. அந்நியப் படைப்பை தமதாக்கிக் கொள்ளுதல் சரியானதாகாது.

எவ்வளவு நுட்பமாக மொழிபெயர்க்கப்பட்டாலும் அது பரிபூர்ணத்தை எட்டவே முடியாதென்பது மொழிபெயர்ப்பியல் விதி.  மொழிபெயர்ப்பாளன் உணர்ந்தே இருக்கிறான். எந்தவொரு மொழியும் அது விளைந்த மண்ணையும், புழங்கும் கலாச்சாரத்தையும் சார்ந்தே உருக்கொண்டிருக்கிறது. வேறோர் அந்நிய மொழியில் மூலப்படைப்பை அதன் அடிவேரோடு பெயர்த்து உருவாக்கம் செய்திட சாத்தியமேயில்லை. மொழிபெயர்க்கப்படும் மொழி சார்ந்த கலாச்சாரப் பிண்ணணியும், மொழி இலக்கணம் சார்ந்த நுட்பங்களும் மூலப்படைப்பின் படைப் பெழுச்சியையும் உணர்தளத்து எதிர்வினைகளையும், மொழிபெயர்ப்பில் நூறு சதவீதம் தூய்மையாக கொண்டுவர இடமளிப்பதில்லை. ’இலக்கியப் பிரதி தனது மேற்பரப்புப் பிரதியுடன் உட்பிரதி ஒன்றையும் கொண்டிருக்கும். மொழிபெயர்க்கையில் இந்த உட்பிரதிதானாகக் கொண்டுவரப்பட்டுவிடுமா?’ என்று வினவுகிறார் அய்யப்ப பணிக்கர். அதனைக் கொண்டு வருவதுதான் சவால். மொழிபெயர்ப்பின் பலமும் பலவீனமும் இங்கேதான் மையங்கொண்டுள்ளது. இதனை எதிர்கொண்டுவிட்டாலே பிரதான சவால் இல்லாது போய்விடும்.

'மொழிபெயர்க்க முற்படுபவர் யாராக இருந்தாலும் கடன்படுகிறார்; அதனைத் தீர்க்க, அதே நாணயத்தால் இயலாது போயினும், அதே தொகையைச் செலுத்திட வேண்டும்.’7

காலந்தோறும் தன் உருவை மாற்றிக் கொண்டே வரும் மொழிக்கு, மறுவாசிப்பு தோற்றுவிக்கிற புதிய தேவைகளை பூர்த்தி செய்யவும், மூலப்படைப் பின் பூரணத்தை நெருங்கவும் ஒரே படைப்பிற்கு மென்மேலும் புதிய மொழிபெயர்ப்புகள் உண்டாகி புதிய வாசிப்புகளை நிகழ்த்திக் காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

Catching the letter by the spirit of it  என்பது மொழிபெயர்ப்பின் சூத்திரம். மொழியின் உணர்ந்து கொள்ள முடியாத வலிமையும், சக்தியும் மர்மமானவை; மாறிக்கொண்டேயிருப்பவை முன்னறிய முடியாதவை. இந்த வாழ்வைப் போலவே வென்றெடுக்க முடியாத இதற்கு மொழிபெயர்ப்பாளன் தன்னை ஒப்புவித்துக் கொள்கிற போது ஓர் இணையான படைப்பாக்கம் நிகழ்கிறது.

 

 

ஆதாரங்கள் :

 

1. Dominique Vitalyos “Translation as absence" THE HINDU, March 6, 2005.

2. Raji Narasimhian, “Chemmeen : its Passage Through Three Languages" INDIAN LITERATURE : 162, July-Aug'94.

3. Kennclly, Brendan “On Translating fron Gaclic” The World of Translation, P.E.N. American Center, New York, 1987.

4. The Translation Studies Reader/Ed. by Larence Venuti, Routledge, London & Ny., 2000.

5. Edwin and Willa Muir, “Translating from the German" in on Translation Ed. Reuban Brower (NY:OUP, 1966)

6. J.M. Coetzee, 'Stranger Shores', Vintage, London, 2002.

7. The Translation Studies – pp126

 

( சாகித்ய அகாதமியும் திருவண்ணாமலை SKP பொறியியல் கல்லூரியும் இணைந்து 2004ஆம் ஆண்டு நடத்திய கூட்டத்தில் வாசித்த கட்டுரை )

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாணவனின் மனைவி

எட்கார் கெரெட் - குறுங்கதைகள்

ஒரு சின்ன நல்ல விஷயம் - ரேமண்ட் கார்வர்