விநோத நூலகம் - ஹாருகி முரகாமி
விநோத நூலகம்
ஹாருகி முரகாமி
தமிழில்: ஜி.
குப்புசாமி
1
நூலகம்
வழக்கத்தைவிட ஓசையடங்கி இருந்தது. எனது புதிய தோல் காலணிகள் சாம்பல் நிற லினோலியத்
தரையில் எழுப்பிய கடகடப்பொலி, எனது இயல்பான காலோசையை விட வலுவாக, கடுமையாகக்
கேட்டது. ஒவ்வொருமுறை புதிய ஷுக்களை அணியும்போதும் அதன் ஓசைக்கு
பழக்கப்படுத்திக்கொள்ள கொஞ்ச நாட்கள் ஆகின்றன. விநியோக மேசையில் இதுவரை நான்
பார்த்திராத ஒரு பெண், கனமான புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
எவ்வளவு அகலமான புத்தகம்! அவளைப் பார்க்கும்போது, புத்தகத்தின் வலது பக்கத்தை
அவளுடைய வலது கண்ணாலும், இடது பக்கத்தை இடது கண்ணாலும் படித்துக் கொண்டிருப்பதைப்
போலிருந்தது. “தொந்தரவுக்கு மன்னியுங்கள்,” என்றேன். புத்தகத்தை அடித்து மூடி
மேசைமேல் வைத்துவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள். கையில் வைத்திருந்த புத்தகங்களை
அவளெதிரே வைத்துவிட்டு, “இவற்றைத் திருப்புவதற்காக வந்தேன்,” என்றேன். ஒரு
புத்தகம் ‘நீர்மூழ்கிக் கப்பலை கட்டுவது எப்படி?’ இன்னொன்று ‘ஒரு மேய்ப்பனின்
நினைவுக்குறிப்புகள்.’ நூலகப் புத்தகங்களைப் பிரித்து முதல் பக்கத்தில்
திருப்பவேண்டிய தேதியை சரிபார்த்தாள். காலம் கடந்திருக்கவில்லை. எப்போதுமே சரியான
நேரத்தில் திருப்பிவிடுவேன். எந்த வேலையையும் நான் தாமதப்படுத்துவதில்லை.
அப்படித்தான் அம்மா என்னை பழக்கியிருக்கிறார். மேய்ப்பர்களும் அப்படித்தான்
இருப்பார்கள். கால நேரத்தைப் பின்பற்றாவிட்டால் ஆடுகள் திசைமாறித் தொலைந்துவிடும்.
அட்டையில் ’திருப்பிக் கொடுக்கப்பட்டது’ என்று முத்திரையிட்டுவிட்டு, மூடிவைத்த
புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினாள். “இன்னும் சில புத்தகங்களைத்
தேடிக்கொண்டிருக்கிறேன்,” என்றேன். “நேராகப் போய் அந்தப் படிக்கட்டுகளில் கீழே
இறங்கி வலதுபுறம் திரும்பு,” என்றாள் தலையை நிமிராமல். “அந்தத் தாழ்வாரத்தில்
நேராகப் போனால் அறைஎண் 107 வரும். அங்கே போ.”
2
அந்தப்
படிக்கட்டுகள் முடிவில்லாமல் இறங்கிக்கொண்டே இருந்தன. எவ்வளவு படிக்கட்டுகள்!
இறுதியில் முடிவை அடைந்து வலப்பக்கம் திரும்பி, பாதி இருண்டிருந்த நடைவழியில் நடந்தேன்.
அவள் சொன்னதைப் போல அறைக்கதவு ஒன்றில் 107 என்றிருந்தது. இதுவரை இந்த நூலகத்துக்கு
பலமுறை வந்திருக்கிறேன், ஆனால் இப்படி ஓர் அடித்தளம் இங்கே இருக்கும் என்று
தெரியாது. கதவைத் தட்டினேன். வழக்கமாக, தினமும் கதவை எப்படித் தட்டுவேனோ,
அப்படித்தான் தட்டினேன். ஆனால் யாரோ பேஸ்பால் மட்டையால் நரகத்தின் வாசற்கதவை ஓங்கி
அடிப்பதைப் போல சத்தம் எழுந்தது. தாழ்வாரத்தில் அது மேலும் பயங்கரமாக எதிரொலிக்,
திரும்பி ஓடிவிடலாமென்று யத்தனித்தேன். ஆனால் கட்டுப்படுத்திக்கொண்டேன். நான்
அப்படி வளர்க்கப்படவில்லை. அம்மா எனக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார், கதவைத்
தட்டினால் அவர்கள் வந்து திறக்கும்வரை காத்திருக்க வேண்டும் என்று. “உள்ளே வரலாம்”
என்று உள்ளேயிருந்து குரல் கேட்டது அடங்கின, ஆனால் கூர்மையான குரல். கதவைத்
திறந்தேன். அறையின் மத்தியில் ஒரு சிறிய பழைய மேசைக்குப் பின்னால் அந்தக் குள்ளமான
கிழவர் உட்கார்ந்திருந்தார். முகத்தில் ஈ மொய்த்திருப்பதைப் போல சிறிய
கரும்புள்ளிகள். வழுக்கைத் தலை. கனமான கண்ணாடி அணிந்திருந்தார். முழு வழுக்கை
என்று சொல்ல முடியாமல் தலையின் பக்கவாட்டில் வெள்ளை முடிக்கற்றைகள் சுருள் சுருளாக
ஒட்டிக்கொண்டிருந்தன. பெரிய காட்டுத்தீக்குப் பிறகான மலையைப் போலிருந்தது அவர்
தலை.
“நல்வரவு, சிறுவனே,” என்றழைத்தார் கிழவர்.
“என்ன
உதவி என்னிடமிருந்து வேண்டும்?”
“சில
புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன்,” என்றேன் பலவீனமான குரலில். ”நீங்கள்
வேலையாக இருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நான் பிறகு வருகிறேன் . . .”
“அபத்தம்!” என்று வெடித்தார். “இது என் வேலை.
பிஸி எல்லாம் ஒன்றும் கிடையாது! சொல்லு, என்ன மாதிரியான புத்தகங்களைத் தேடிக்
கொண்டிருக்கிறாய்? அவை எங்கே இருக்குமென்று இடத்தைக் காட்டுகிறேன்.”
சுவர்
பேசும் விதமே வேடிக்கையாக இருப்பதாகத் தோன்றியது. அவர் முகமே முழு வினோதம்.
செவிமடல்களிலிருந்து நீளமான முடிகள் துருத்திக் கொண்டிருந்தன. காற்றுப்போன
பலூனைப்போல முகவாய்க்குக் கீழே தோல் மடிப்புகள் தளர்ந்திருந்தன.
“நீ
தேடிக்கொண்டிருப்பது என்னவென்று சரியாகச் சொல், என் இளம் நண்பனே.”
“ஆட்டமன்
சாம்ராஜ்ஜியத்தில் வரிவசூல் எப்படி செய்யப்பட்டது என்று தெரிந்துகொள்ள வேண்டும்,”
என்றேன்.
கிழவரின்
கண்கள் பளிச்சிட்டன.
“ஓ
அப்படியா?” என்றார். “ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தில் வரிவசூல்! ஆச்சரியமூட்டும்
ஆர்வம்தான் உனக்கு. இதுவரை யாரும் கேட்டதில்லை!”
3
அவர்
சொன்னது என்னை நெளிய வைத்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால், ஆட்டமன் வரி வசூலைப்
பற்றித் தெரிந்துகொள்வதில் எனக்கு அந்தளவுக்கு ஆர்வமெல்லாம் ஒன்றும் கிடையாது.
பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென்று முளைத்த
சிந்தனைதான் அது: ஆட்டமன்கள் எப்படி வரிவசூல் செய்திருப்பார்கள்? இப்படி ஒரு
யோசனை. மிகவும் சின்னவனாக இருந்த காலத்திலிருந்தே அம்மா சொல்லி வந்திருக்கிறார்,
எதையாவது தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், நூலகத்துக்குச் சென்று தேடு.
“பரவாயில்லை,” என்றேன். “அதுவொன்றும் அவ்வளவு முக்கியம் இல்லை. சும்மா தெரிந்துகொள்ளலாமே
என்றுதான் . . .”
இந்த
அமானுஷ்யமான சூழலிலிருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ வெளியேறிவிட வேண்டும் என்ற
துடிப்பில் அங்கிருந்து இடத்தை காலி செய்யத் தயாரானேன்.
“என்ன
விளையாடுகிறாயா?” கிழவர் இடைமறித்தார். “ஆட்டமன் சாம்ராஜ்ஜிய வரிவசூல் குறித்து
நிறைய நூல்கள் எங்களிடம் இருக்கின்றன. நூலகத்தில் குறும்பு விளையாட்டு விளையாடலாம்
என்ற எண்ணத்தோடு வந்திருக்றாயா? கிண்டலா உனக்கு?”
“இல்லை சார்,” நான் திக்கித் திணறினேன். “அது
என் நோக்கம் அல்ல. யாரையும் கிண்டல் செய்வதற்காக வரவில்லை.”
“அப்படியானால் நல்ல பையனாக இங்கேயே காத்திரு.”
“சரி, சார்.”
கிழவர்
நாற்காலியிலிருந்து எழுந்தார். கூனல் முதுகோடு, அறையில் பின்னால் இரும்புக்கதவைத்
திறந்து மறைந்து போனார். அவர் திரும்பி வருவதற்காக அங்கேயே பத்து நிமிடங்களுக்கு
நின்றிருந்தேன். விளக்கின் மேல்தட்டின் அடியில் குட்டியான கருவண்டுகள் ஊர்ந்து
கொண்டிருந்தன. கடைசியில் மூன்று கனமான புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு கிழவர்
வந்தார். அவையெல்லாமே பயங்கரப் பழசானவை. புராதன காகித நெடி அறைக்குள் பரவியது.
கிழவர் பெருமிதத்தோடு, “உனக்கு விருந்துதான்,” என்றார். “ஆட்டமன் வரிவிதிப்பு
முறைகள், ஆட்டமன் வரித்தண்டலரின் நாட்குறிப்புகள், ஆட்டமன்-துருக்கிய
சாம்ராஜ்ஜியத்தில் எழுந்த வரி கலகமும் முறியடிப்பும். அபாரமான நூல்கள்தான், நீயே
ஒப்புக்கொள்வாய்.”
பணிவுடன் “மிகவும் நன்றி,” என்றேன். புத்தகங்களை
எடுத்துக்கொண்டு கதவை நோக்கி நடந்தேன்.
“நில்!”
என்றார் கிழவர் பின்னாலிருந்து. “இந்த மூன்று புத்தகங்களும் வெளியே கொண்டு
செல்வதற்கானவை அல்ல. இந்த வளாகத்துக்குள்ளேயே வைத்து வாசிக்க வேண்டும்.”
4
ஆம்.
அந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றின் முதுகிலும் ‘வளாகப் பயன்பாட்டுக்கு மட்டும்’ என்று
சிவப்பு அட்டை ஒட்டப்பட்டிருந்தது. “இவற்றை உள் அறையில் வைத்து வாசிக்க வேண்டும்,”
என்றார் கிழவர். கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். 5.20.
“நூலகத்தின்
வேலை நேரம் முடியப்போகிறதே. அம்மாவும் கவலைப்படுவார்கள். நான் போக வேண்டும்.”
கிழவரின்
மயிரடர்ந்த புருவங்கள் நெரித்து ஒரே கோடாகின. “வேலைநேரம் முடிவதெல்லாம் பிரச்சனையே
கிடையாது,” என்று முகம் சுளித்தார். “நான் சொல்வதைத்தான் செய்வார்கள் - இருக்கட்டும்
என்று நான் சொன்னால் இருக்கட்டும்தான். கேள்வி என்னவென்றால், நான் செய்யும்
உதவிக்கு உரிய மரியாதை தருகிறாயா இல்லையா என்பதுதான். இவ்வளவு கனமான புத்தகங்களை
எதற்காக நான் சுமந்து வந்ததாக நினைக்கிறாய்? என் தேகப் பயிற்சிக்காகவா?”
“மன்னியுங்கள்,
உங்களைத் தொந்தரவு செய்வது என் நோக்கம் அல்ல. புத்தகங்களை வெளியே கொண்டு செல்லக்
கூடாதென்று எனக்குத் தெரியாது.”
கிழவர்
கொல்லென்று இருமி, கைக்குட்டையில் எதையோ கெட்டியாகத் துப்பினார். முகத்தில் இருந்த
கரும்புள்ளிகள் வெறியோடு நடனமாடிக் கொண்டிருந்தன.
“உனக்கு
என்ன தெரியும், தெரியாது என்பதைப்பற்றி அக்கறை இல்லை,” என்று சீறினார். “உன்
வயதில் நான் இருந்தபோது இப்படியொரு வாய்ப்பு படிப்பதற்குக் கிடைக்காதா என்று
ஏங்கியிருக்கிறேன். ஆனால் இங்கே நீ நேரமாகிவிட்டது, சாப்பாட்டுக்கு தாமதமாகிவிடும்
என்று சிணுங்கிக் கொண்டிருக்கிறாய். என்ன தைரியம் உனக்கு!”
“சரி, நான் இங்கேயே இருந்து படிக்கிறேன். ஆனால்
வெறும் முப்பது நிமிடங்களுக்கு மட்டும்,” என்றேன். யாரிடமும் உறுதியாக முடியாது
என்று சொல்வதில் நான் சமர்த்தன் இல்லை. “ஆனால் அதற்கு மேல் என்னால் தங்கியிருக்க
முடியாது. நான் சின்னவனாக இருந்தபோது, பள்ளியிலிருந்து திரும்பும் வழியில் ஒரு
கருப்பு நாய் என்னை கடித்துவிட்டது. அப்போதிலிருந்து நான் வீட்டுக்கு வரத்
தாமதமானால் அம்மா வினோதமாக நடந்துகொள்ளத் தொடங்குவார்”.
கிழவரின்
முகத்தில் இறுக்கம் சற்று தளர்ந்தது. “ஆகவே, இங்கே தங்கி படிக்கிறாய்?”
“ஆம்,
ஆனால் முப்பது நிமிடங்களுக்கு மட்டும்.”
“சரி,
இந்தப் பக்கமாக வா,” என்று கிழவர் தலையை அசைத்தார்.
உள்
கதவுக்குப் பின்னால் இருட்டான நடைவழியில் ஒரேயொரு விளக்கு கண்சிமிட்டிக்
கொண்டிருந்தது. அந்த ஏறக்குறைய இருட்டுக்குள் நுழைந்தோம்.
5
”என்
பின்னால் வா,” என்றார் கிழவர். கொஞ்சதூரம் நடந்தவுடனேயே, நடைவழி இரண்டாகப்
பிரிந்தது. கிழவர் வலப்பக்கம் திரும்பினார். அந்த வழியில் கொஞ்சதூரம் சென்றதும்
இன்னொரு பிரிவு. இம்முறை இடதுபக்கம் திரும்பினார். அந்த நடைவழி இன்னும் செல்லச்
செல்ல, இரண்டிரண்டாகப் பிரிந்து கொண்டே நீண்டுகொண்டிருக்க, கிழவர் சற்றும்
தயங்காமல் வலமும் இடமுமாகத் திரும்பித் திரும்பி சென்று கொண்டேயிருந்தார். சில
சமயங்களில் ஏதோ ஒரு கதவைத் திறந்து, முற்றிலும் வேறான இன்னொரு நடைவழிக்குள்
நுழைந்தார்.
என் மனம் கலவரத்தில் இருந்தது. இது எல்லாமே
அதீதமான விநோதம்தான். எங்கள் ஊர் நூலகத்திற்கு இப்படி ஒரு அடித்தளமும், அதில்
இவ்வளவு விஸ்தார சிக்கலாக திருகுப்பாதைகளும் இருக்குமா? சாதாரணமாக பொது நூலகங்கள்
எப்போதுமே பணப்பற்றாக்குளையில் இயங்குபவையாகவே இருக்கும். சின்னதாக ஒரு
திருகுப்பாதையை அமைப்பது கூட அவர்களுக்கு கட்டுப்படியாகாது. இதைப்பற்றி கிழவரிடம்
கேட்கலாமாவென்று யோசித்து, அவர் சத்தம் போடுவார் என்று பயந்து நிறுத்திக்கொண்டேன்.
கடைசியாக,
இந்தப் பாதைப் பின்னால் ஒரு பெரிய இரும்புக் கதவில் முடிந்தது. கதவில் ‘வாசிப்பறை’
என்ற பலகை. அந்த வட்டாரமே நடுராத்திரியில் மயானம் போல படுநிசப்தத்தில்
உறைந்திருந்தது.
கிழவர்
பாக்கெட்டிலிருந்த கணகணவென்று ஒலிக்கும் ஒரு சாவிக் கொத்தை எடுத்து, இருப்பதிலேயே
பெரிய, பழங்கால சாவியைத் தேர்ந்தெடுத்தார். சாவித்துளைக்குள் செருகிவிட்டு என்னைத்
திரும்பி அர்த்த புஷ்டியோடு பார்த்தபடியே சாவியை வலப்புறமாகத் திருகினார். பூட்டு
திறக்கும் சத்தம் பலமாக ஒலிக்க, கதவு நீளமாகக் கிறீச்சிட்டுக் கொண்டே திறந்தது.
“ம்,
ம், வந்தாகிவிட்டது,” என்றார் கிழவர். “உள்ளே போ.”
“உள்ளே வா?” என்று கேட்டேன்.
“ஆம், உள்ளேதான்.”
“கும்மிருட்டாக
இருக்கிறதே?”
உள்ளே
செல்ல மறுத்தேன். அண்டவெளியில் கருந்துளை ஒன்றை குத்தி வைத்திருப்பதைப்போல
கதவுக்குப் பின்னால் இருட்டாக இருந்தது.
6
கிழவர்
என்னே நோக்கித் திரும்பி, நிமிர்ந்து முழு உயரத்துக்கு நின்றார். இப்போது திடீரென
மிகவும் உயரமாக, பெரும் உருவத்தில் இருந்தார். அடர்ந்த புருவங்களுக்குக் கீழே அவர்
கண்கள் கீழே அந்திக்கருக்கலில் வெள்ளாட்டின் கண்களைப் போல பளிச்சிட்டன.
“அற்பத்தனமான
விஷயங்களுக்கெல்லாம் குற்றம் கண்டுபிடித்து புலம்புகிற பயலா நீ?”
“இல்லை
சார், நான் அப்படிப்பட்டவன் அல்ல. ஆனால் இது எனக்கென்னவோ-”
“போதும்
உன் மழலைப் பேச்சு,” என்று கிழவர் கததினார். “ஏதாவது சாக்கு போக்கு, சமாதானம்
சொல்லிக்கொண்டு, மற்றவர்கள் அக்கறையோடு உதவும் செயல்களை அலட்சியப்படுத்துபவர்களை
என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது, தெரிந்துகொள். அப்படிப்பட்டவர்கள் எல்லாம்
உதவாக்கரைகள் என்பேன்.”
“தயவு
செய்து மன்னித்துக்கொள்ளுங்கள். உள்ளே செல்கிறேன்.”
நான்
ஏன் இப்படி இருக்கிறேன்?
உடன்படாத விஷயங்களுக்கு உடன்பட்டுப் போவதும்,
செய்ய விருப்பமில்லாத விஷயங்களை மற்றவர்களின் கட்டாயத்துக்காக செய்வதும் என்று
நான் இப்படி இருக்கிறேன்?
“கதவுக்கு
வலதுபக்கத்தில் ஒரு படிக்கட்டு இருக்கும். கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு அதில்
கீழே இறங்கிச்செல். ஜாக்கிரதை, விழுந்துவிடாதே.”
நான்
முதலில் மெதுவாக அடியெடுத்துச் சென்றேன். பின்னாலிருந்த கதவை கிழவர் மூடினதும்,
மொத்தமும் கும்மிருட்டாகிப் போனது. அவர் பூட்டும் சத்தம் தெளிவாக, உரக்கக்
கேட்டது.
“ஏன்
கதவைப் பூட்டுகிறீர்கள்?”
“அதுதான்
விதி. கதவுகள் எப்போதும் பூட்டப்பட்டு இருக்க வேண்டும்.”
நான்
என்ன செய்ய முடியும்? படியில் இறங்கினேன். அடித்தளத்துக்கு அடியில் இன்னொரு
அடித்தளமா? முடிவின்றி படிகள் இறங்கிக் கொண்டே பிரேஸில்தான் வந்து முடியுமோ என்று
தோன்றியது. கைப்பிடி துருவேறி சொரசொரப்பாக இருந்தது. சுற்றிலும், ஒரேயொரு
ஒளித்துணுக்கும் தென்படவில்லை.
இறுதியில்
படிக்கட்டின் முடிவை அடைந்தோம். தூரத்தில் ஒரு வெளிச்ச மினுங்கல் தெரிந்தது. உண்மையில்
மிகவும் மங்கலான வெளிச்சம்தான், ஆனாலும் வெகுநேர இருட்டுக்குப் பழகியிருந்த என்
கண்களைக் கூசவைக்கும்படி இருந்தது. அறையின் பின்னாலிருந்து யாரோ அணுகி என் கையைப்
பற்றினர். அவன் குள்ளமாக இருந்தான். ஆட்டுத்தோலை உடையாக போர்த்தியிருந்ததை பார்க்க
முடிந்தது.
“ஹேய்,
உன் வருகைக்கு நன்றி.” என்றான் அந்த ஆட்டு மனிதன்.
“குட்
ஆஃப்டர்நூன்” என்ற பதிலளித்தேன்.
7
அது
உண்மையான ஆட்டுத்தோல்தான். அந்த ஆட்டு மனிதனின் உடம்போடு அது ஒவ்வொரு
அங்குலத்திலும் முழுமையாகப் பொருந்தி மூடியிருந்தது. முகத்துக்கு மட்டும் திறப்பு
இருந்தது. அதன் வழியே ஒரு ஜோடி நட்பார்ந்த கண்கள் எட்டிப்பார்த்தன. இந்த உடை
அவனுக்கு கச்சிதமாகப் பொருந்தியிருந்தது. ஆட்டுமனிதன் என்னை ஒரு கணம்
உற்றுப்பார்த்துவிட்டு, என் கையில் வைத்திருந்த மூன்று புத்தகங்களுக்கு பார்வையை
திருப்பினான்.
“கடவுளே! நீ இங்கே படிப்பதற்காகத்தான் வந்தாயா?
நிஜமாகவா?”
“ஆம்,”
என்றேன்.
“அதாவது,
உண்மையாகவே, நிஜமாகவே இந்தப் புத்தகங்களைப் படிப்பதற்காகவா வந்தாய்?”
ஆட்டு
மனிதன் பேசும் விதத்தில் ஏதோ விளங்க முடியாத விநோதமான தன்மை இருந்தது. எனக்கு
பதிலளிக்க வார்த்தைகள் கிடைக்கவில்லை.
“ம்,
சொல்லு,” என்று கிழவர் மிரட்டினார். “நீ இங்கே படிப்பதற்காகத்தானே வந்தாய்? அது
உண்மைதானே? அவனுக்கு நேராகப் பதிலைச் சொல்லு.”
“ஆம்,
நான் இங்கே படிப்பதற்காகத்தான் வந்தேன்,”
கிழவர்
ஆட்டு மனிதனிடம், “நன்றாகக் கேட்டுக் கொண்டாயா?” என்று சீறினார்.
ஆட்டு
மனிதன் தயங்கினான்: “ஆனால், ஐயா . . . இவன் மிகவும் சிறுவன் அல்லவா?”
“பேசாதே!”
கிழவர் இடியென வெடித்தார். பின்னால் வைத்திருந்த பையிலிருந்து ஒரு பிரம்பை
உருவியெடுத்து ஆட்டுமனிதனின் முகத்துக்கு குறுக்காக அடித்தார்.” வாசிப்பறைக்கு
இவனை கூட்டிச்செல்!”
அந்த
அடியில் ஆட்டு மனிதன் கலங்கி, என் கையைப் பற்றிக் கொண்டான். பிரம்பு அவனுடைய
உதட்டுக்குப் பக்கத்தில் சிவப்பு வடுவை ஏற்படுத்தியிருந்தது. “சரி, போகலாம்.”
“எங்கே?”
“வாசிப்பறைக்கு. படிப்பதற்காகத்தானே
வந்திருக்கிறாய்?”
ஆட்டுமனிதன்
ஒரு குறுகலான நடைவழியாக கூட்டிச் சென்றான். கிழவர் எங்களுக்குப் பின்னாலேயே
ஒட்டிக்கொண்டு வந்தார். ஆட்டு மனிதனின் பின்புறத்தில் குட்டையாக வால் ஒன்று
பொருத்தப்பட்டு, ஒவ்வொரு தப்படிக்கும் பெண்டுலம் போல அப்படியும் இப்படியுமாக
ஆடிக்கொண்டு வந்தது.
நடைவழியின்
முடிவை அடைந்ததும் ஆட்டுமனிதன், “ஆ, வந்து சேர்ந்தாகவிட்டது நண்பனே,” என்றான்.
“ஒரு நிமிடம் பொறுங்கள், இது என்ன சிறைக்கூடமா?”
என்று பயத்துடன் கேட்டேன்.
“ஆம்,” என்றான்.
“சரியாகச்
சொல்லிவிட்டாயே!” என்றார் கிழவர்.
8
“நீங்கள் இப்படிச் சொல்லவேயில்லை,” என்றேன்
கிழவரிடம். ”இவ்வளவு தூரம் நான் வந்ததே நாம் வாசிப்பறைக்குச் செல்கிறோம் என்று
நீங்கள் சொன்னதால்தான்.”
“நீ
பிடிக்கப்பட்டிருக்கிறாய்,” என்றான் ஆட்டுமனிதன். கூடவே தலையையும் ஆட்டினான்.
“ஆம், உன் கண்ணைக்கட்டி தூக்கிக் கொண்டு
வந்துவிட்டேன்,” என்றார் கிழவர்.
“நீங்கள்
எப்படி . . .”
“பேசாதே, முட்டாளே,” என்று சீறியபடியே
பையிலிருந்து பிரம்பை எடுத்து என் தலையை நோக்கி வீசினார். சட்டென்று பின்னால்
நகர்ந்து கொண்டேன். முகத்துக்குக் குறுக்கே தழும்பு வரவழைத்துக் கொள்ள
விரும்பவில்லை நான்.
“உள்ளே போ. மேலே எதுவும் பேசக்கூடாது. இந்த
மூன்று புத்தகங்களையும் முன் அட்டையிலிருந்து பின் அட்டைவரை படித்து மனப்பாடம்
செய்துகொள்ள வேண்டும். இன்றிலிருந்து ஒருமாதம் கழித்து நானே உன்னை
சோதித்துப்பார்ப்பேன். இந்த மூன்று புத்தகங்களையும் மனப்பாடம் செய்து
ஒப்பித்துவிட்டாய் என்றால் உனக்கு விடுதலை.”
“இவ்வளவு
பெரிய புத்தகங்களை மனப்பாடம் செய்வது சாத்தியமில்லை. என் அம்மாவும் என்னைக்
காணவில்லையென்று ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள் . . .”
கிழவர்
பல்லைக் கடித்தபடி, பிரம்பை உருவியெடுத்து வேகமாக வீசினார். நான் துள்ளிக்கொண்டு
விலக, அடி ஆட்டுமனிதனின் முகத்தில் விழுந்தது. மிகவும் பலமான அடி. நான்
தப்பித்துவிட்ட கோபத்தில் ஆட்டுமனிதனை மீண்டும் அடித்தார். குரூரம்.
“இவனை
சிறையில் தள்ளு. இந்த வேலை உன்னுடையது,” கிழவர் உத்தவிட்டு அகன்றார்.
ஆட்டுமனிதனிடம்,”
வலிக்கிறதா?” என்று கேட்டேன்.
“பரவாயில்லை.
ஹேய், எனக்கு இதெல்லாம் பழக்கம்தான்.” என்றான். அவனைப் பார்த்தால் நன்றாகத்தான்
தெரிந்தான்.
“எனக்குப்
பிடிக்கவில்லைதான், ஆனாலும் உன்னை உள்ளே வைத்து பூட்டியாக வேண்டும்.”
“நான்
முடியாது என்றால்? உள்ளே போக மறுத்தால்? என்ன ஆகும்?”
“அப்புறம்
அவர் என்னை மேலும் பலமாக அடிப்பார்.”
அந்த ஆட்டு மனிதனைப்பார்க்கப் பாவமாக இருந்தது.
சிறைக்குள் சென்றேன். ஒரு சாதாரண படுக்கை, ஒரு மேஜை, கை அலம்புமிடம், கழிப்பறை
எல்லாம் உள்ளேயே இருந்தது. கை கழுவுமிடத்துக்குப் பக்கத்தில் டூத் பிரஷ்ஷும், ஒரு
கப்பும் இருந்தன. இரண்டுமே புதிதாகவோ, சுத்தமாகவோ தெரியவில்லை. ஸ்ட்ராபெர்ரி
சுவையில் இருந்த பற்பசை எனக்குப் பிடிக்காத ஒன்று. ஆட்டுமனிதன் மேஜை விளக்கை
போட்டு, நிறுத்தி விளையாடிக் கொண்டிருந்தான்.
“ஹேய்,
இங்கே பாரேன்,” என்னிடம் திரும்பி பல்லிளித்தான். “எல்லாமே நல்லாயிருக்கு இல்லே?”
9
“உனக்கு
தினமும் மூன்றுவேளை உணவு எடுத்து வருவேன். மூன்று மணிக்கு சிற்றுண்டிக்காக டோநட்
கேக்குகள் தருவேன். நானே சுட்டு எடுத்து வருவேன் மொரமொரப்போடு நல்ல சுவையில்
இருக்கும்.”
புதிதாகச்
சுட்ட டோநட்டுகள் என் அபிமான பண்டங்களில் ஒன்று.
“சரி, காலை நீட்டு.” காலை நீட்டினேன்.
கட்டிலுக்கு
அடியிலிருந்து கனமான இரும்பு குண்டையும் அதனோடு இணைந்திருந்த சங்கிலியையும்
எடுத்தான். சங்கிலியை என் கணுக்காலில் சுற்றிப் பூட்டினான். சாவியை சட்டைப்பையில்
போட்டுக் கொண்டான்.
“எனக்கு
பயங்கரமாகக் குளிருகிறது,” என்றேன். “கவலைப்படாதே, பழகிவிடும்.”
“ஆட்டுமனிதரே, நான் உண்மையிலேயே இங்கு ஒரு முழு
மாதத்துக்கு தங்கியிருக்க வேண்டுமா?”
“ம்ம், அதுதான் கால அளவு.”
“ஆனால்
இந்தப் புத்தகங்களை நான் முழுசாக மனப்பாடப்படுத்திவிட்டால் என்னை
விடுவித்துவிடுவார், இல்லையா?”
“அப்படி
நடக்குமென்று தோன்றவில்லை.” “அப்படியானால் என்னை என்ன செய்வார்கள்?”
ஆட்டுமனிதன்
தலையை ஒருபக்கமாக சாய்த்தான். “பையா அதையெல்லாம் கேட்காதே.”
“தயவுசெய்து
சொல்லுங்கள். என் அம்மா வீட்டில் காத்துக் கொண்டிருக்கிறார்.”
“சரி,
பையா. நேராகவே சொல்லிவிடுகிறேன். உன் உச்சந்தலையை வெட்டி, உன் மூளையை உறிஞ்சி
சாப்பிட்டுவிடுவார்.”
விக்கித்து
ஸ்தம்பித்தேன். நா எழவில்லை.
மெதுவாக
சமாளித்துக்கொண்டு, “அதாவது . . . அதாவது, அந்தக் கிழவர் என் மூளையை சாப்பிடப்
போகிறாரா?”
“ஆம்,
எனக்கு உண்மையிலேயே வருத்தமாக இருக்கிறது, ஆனால் அப்படித்தான் இங்கே
நடந்துகொண்டிருக்கிறது,” என்றான் ஆட்டுமனிதன் தயக்கத்தோடு.
10
படுக்கையில்
சரிந்து உட்கார்ந்து முகத்தை கைகளில் புதைத்துக்கொண்டேன். எதற்காக எனக்கு
இப்படியெல்லாம் நடக்கவேண்டும்? நான் செய்த ஒரே தவறு இந்த நூலகத்துக்கு வந்து சில
புத்தகங்களை எடுக்க வந்தது.
“கவலைப்படாதே,” என்று ஆட்டுமனிதன் என்னைத்
தேற்றினான். “உனக்கு சாப்பாடு எடுத்து வருகிறேன். நல்ல சூடான உணவு எனக்கு ஆறுதல்
அளிக்கும்.”
“ஐயா
ஆட்டுமனிதரே, அந்தக் கிழவர் எதற்காக என் மூளையைச் சாப்பிட விரும்புகிறார்?”
“ஏனென்றால்
அறிவு நிரம்பிய மூளைகள் உண்பதற்கு சுவையானவை, அதனால்தான் அவை மிகவும் ருசியாக,
பாலேடுபோல இருக்கும். அதே நேரத்தில் ஒருவித மொரமொரப்போடும் இருக்கும்.”
“பிற்பாடு
சாப்பிடலாம் என்பதற்காகத்தான் என்னை ஒரு மாதத்துக்கு மனப்பாடம் செய்யச்
சொல்லியிருக்கிறாரா?”
“அதற்காகத்தான்.”
“என்னைப் பற்றி கொஞ்சம் யோசித்துப்பார். இது
குரூரம் இல்லையா?”
“ஹேய்,
இதைப்போன்ற விஷயங்கள்தான் எல்லா இடங்களிலும் நூலகங்களில் நடைபெற்றுக்
கொண்டிருக்கிறதே, தெரியாதா? அதாவது கிட்டத்தட்ட இதைப்போலவே.”
இந்தச்
செய்தி என்னைத் துணுக்குற வைத்தது. “எல்லா நூலகங்களிலுமா?” என் குரல் திக்கியது.
“உனக்கு
எல்லா அறிவுச்செல்வத்தையும் இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தால் அவர்களுக்க
என்னதான் ஆதாயம் கிடைக்கப் போகிறது?”
“அதற்காக
வருபவர்களில் தலையைப் பிளந்து மூளையைச் சாப்பிடுவதற்கு அவர்களுக்கு என்ன உரிமை
இருக்கிறது? அத்துமீறிய செயலல்லவா?”
ஆட்டுமனிதன்
என்னை சோகமாகப் பார்த்தான். “உன்னுடைய துரதிருஷ்டம். அனுபவித்துதான் ஆகவேண்டும்,
வேறென்ன?”
“என் அம்மா நான் இன்னும் வீட்டுக்குச்
செல்லாததால் கவலையிலும் பயத்திலும் துடித்துக் கொண்டிருப்பார். இந்த இடத்தைவிட்டு
தப்பிச்செல்ல உதவுவீர்களா?”
“இல்லை,
அது நடக்காத காரியம். அதற்கு நான் உதவினால் என்னை கம்பளிப்பூச்சிகள் நிறைந்த ஒரு
பெரிய ஜாடிக்குள் போட்டு அடைத்துவிடுவார். அது ஒரு மகாபெரிய ஜாடி. உள்ளே
பல்லாயிரக்கணக்கான கம்பளிப்பூச்சிகள் ஊர்ந்து கொண்டிருக்கும். மூன்று நாட்களுக்கு
அடைத்து வைத்திருப்பார்.”
“பயங்கரம்.”
“அதனால், உன்னைத் தப்பியோட வைக்க என்னால் முடியாது, புரிகிறதா பையா?
மன்னித்துக்கொள்.”
11
அச்சிறிய
சிறை அறையில் என்னைத் தனியாக விட்டுவிட்டு ஆட்டுமனிதன் அகன்றான். அந்தக் கடினமாக
மெத்தையில் குப்புறப் படுத்துக்கொண்டு முழுசாக ஒரு மணி நேரத்துக்குத்
தேம்பித்தேம்பி அழுதேன். கோதுமை உமியால் நிரப்பப்பட்டிருந்த அந்த நீலநிறத் தலையணை
தொப்பலாக நனைந்தது. கணுக்காலில் கட்டப்பட்டிருந்த இரும்புக் குண்டு ஒரு டன்
இருக்கும்போல கனத்தது.
கைக்கடிகாரத்தைப்
பார்த்தேன். சரியாக 6:30. அம்மா இரவு உணவை தயாரித்து முடித்துவிட்டு எனக்காகக்
காத்துக்கொண்டிருப்பர். சமையலறைக்குள் குறுக்கம் நெடுக்குமாக கவலையோடு
நடந்துகொண்டு நொடிக்கொருதரம் கடிகாரத்தை அவர் ஏறிட்டுப் பார்த்துக்கொண்டிருப்பது
மனக்கண்ணில் தோன்றியது. இன்னும் ஒருசில மணிநேரத்துக்கு நான் போகாவிட்டால் அவர்
உடைந்து போய்விடுவார். அப்படிப்பட்ட அம்மாதான் அவர். எது நடந்தாலும் இருப்பதிலேயே
மோசமானதை கற்பனை செய்துகொள்வார். இந்தக் கற்பனை வளர்ந்துகொண்டே போகும். ஒன்று
எல்லாவற்றையும் கெடுதலாகவே முடியுமென்று நம்பிக் கொண்டிருப்பார், இல்லாவிட்டால்
சோபாவில் அசையாமல் உட்கார்ந்து தொலைக்காட்சியை வெறித்துக்கொண்டிருப்பார்.
ஏழு
மணிக்கு யாரோ கதவைத் தட்டினர். சுருக்கமான மெல்லிய தட்டல்.
“உள்ளே
வரலாம்,” என்றேன்.
பூட்டில்
சாவி திருகப்படுவது கேட்டது. ஒரு இளம்பெண் சின்ன தள்ளுவண்டியில் உணவு வகைகளை
அடுக்கி தள்ளிக்கொண்டு வந்தாள். மிகவும் அழகான பெண். பார்க்கும்போதே கண்கள் கூசும்
அளவுக்கு அதீத அழகு. என் வயதுதான் இருப்பாள். கழுத்து, மணிக்கட்டுகள்,
கணுக்கால்கள் எல்லாமே லோசாக இறுக்கினாலே உடைந்துவிடும் போலத் தோன்றினாள். அவளது
நீண்ட நேரான கூந்தல் நகை இழைகளால் பின்னப்பட்டவைபோல மின்னின. என் முகத்தை ஒரு கணம்
உற்றுப்பார்த்தாள். எதுவும் பேசாமல் வண்டியில் இருந்த உணவுப்பதார்த்தங்களை எடுத்து
மேசையின் மேல் வைத்தாள். அவள் அழகில் ஸ்தம்பித்து, பேச்சிழந்து அமர்ந்திருந்தேன்.
உணவு
வகைகள் உற்சாகம் எழுப்பக்கூடியனவாக இருந்தன. கடல் அர்ச்சின் சூப் கொதிக்கக்
கொதிக்க இருந்தது. ஸ்பானிய மேக்கெரல் மீன் வறுவல் (துவர்ப்பு கிரீமோடு), எள்ளுவிதை
தூவலோடு வெண்ணிற ஆஸ்பாரகஸ், பச்சடிக் கீரையும் வெள்ளரிக்காயும் சேர்ந்த கூட்டு,
வெண்ணெயில் வறுத்த ரொட்டி. ஒரு பெரிய கிளாஸில் திராட்சைச் சாறு. எல்லாவற்றையும்
அழகாக மேசையில் அடுக்கி வைத்துவிட்டு, என் பக்கம் திரும்பி, தன் கைகளினால்
பேசினாள்: <<கண்ணீரைத் துடைத்துக்கொள். சாப்பிடத் தொடங்கு.>>
12
“உன்னால்
பேசமுடியாதா?” என்று அவளிடம் கேட்டேன்.
<<இல்லை,
என்னால் முடியாது. நான் சின்னவளாக இருந்தபோதே என் குரல்வளை
அழிக்கப்பட்டுவிட்டது.>>
“அழிக்கப்பட்டதா?” என்று வியப்போடு கூவினேன்.
“யார் செய்தது?”
அவள்
பதில் அளிக்காமல் இனிமையாகப் புன்னகைத்தாள். மிகவும் ஜகஜ்ஜோதியான புன்னகை அது.
சுற்றியுள்ள காற்று அதில் ஜொலிப்பதைப் போலிருந்தது.
<<தயவுசெய்து
புரிந்துகொள்,>> என்றாள். <<அந்த ஆட்டுமனிதன் கெட்டவர் அல்ல.
இரக்கமனம் கொண்டவர். ஆனால் அந்தக் கிழவர்தான் அவரை பயமுறுத்தி
வைத்திருக்கிறார்.>>
“புரிகிறது,
ஆனாலும் . . .”
அவள்
நெருங்கி வந்தாள். என் கை மீது அவள் கையை வைத்தாள். சிறிய, மிக மென்மையான கை. என்
இதயம் இரண்டாக உடையப்போகிறது என்று நினைத்தேன்.
<<சூடாக
இருக்கும்போதே சாப்பிட்டு விடு,>> என்றாள். <<சூடான உணவு சக்தி
தரும்>>
தள்ளுவண்டியை
தள்ளிக்கொண்டு கதவைத் திறந்து வெளியேறினாள். மே மாதக் காற்றைப்போல இலேசாக, வேகமாக
வீசிவிட்டு மறைந்து போயிருந்தாள்.
உணவு
சுவையாகவே இருந்தது. ஆனால் அவற்றில் பாதியைத்தான் சாப்பிடமுடிந்தது. நான் இப்போது
வீட்டுக்குப் போகாவிட்டால், அம்மாவுக்கு கவலை அதிகமாகி இன்னொரு மனக்குலைவு ஏற்படும்.
நான் வளர்த்துவரும் என் பிரியமான கரும்பச்சை குருவிக்கு உணவளிக்க மறந்து போவார்,
அது பட்டினியில் செத்துப் போகும்.
இங்கிருந்து
எப்படி தப்பிப்பது? கணுக்காலில் கனமான இரும்புக்குண்டு கட்டப்பட்டிருக்கிறது, கதவு
பூட்டப்பட்டிருக்கிறது. எப்படியோ கதவைத் திறந்துவிட்டாலும்கூட, அந்தச் சிக்கலான
திருகுவழிப் பாதையில் புகுந்து எப்படி வெளியே வருவது? பெருமூச்செறிந்தேன்.
மீண்டும் அழுகை வந்தது. படுக்கையில் சுருண்டு தேம்பியழுது கொண்டிருந்தால் எதுவும்
நடக்கப் போவதில்லை. என்னைத் தேற்றிக்கொண்டு மிச்ச உணவை சாப்பிட்டு முடித்தேன்.
13
பேசாமல்
மேசையில் அமர்ந்து படிக்கத் தொடங்குவதுதான் நான் செய்யக்கூடிய நல்ல விஷயமாக
இருக்குமென்று முடிவெடுத்தேன். தப்பித்துச்செல்ல ஏதாவது ஒரு வழியை கண்டுபிடிக்க
வேண்டுமானால், முதலில் என் எதிரியின் கண்ணில் மண்ணைத் தூவ வேண்டும். அதாவது அவரது
உத்தரவுக்கு கீழ்படிந்து நடப்பதைப்போல காட்டிக்கொள்ள வேண்டும். அதுவொன்றும்
அவ்வளவு கடினமாக இருக்கப் போவதில்லை என்று தோன்றியது என்ன இருந்தாலும். நான்
உத்தரவுகளுக்கு உடனடியாகக் கீழ்படியும் பையன்தானே.
‘ஆட்டமன் வரித்தண்டலரின் நாட்குறிப்புகள்’
புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். அந்தப்புத்தகம் துருக்கிய செம்மொழியில்
எழுதப்பட்டிருந்தது; இருந்தாலும் விநோதமாக அதை என்னால் எளிதாகப் படித்துப்
புரிந்துகொள்ள முடிந்தது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பக்கமும், ஒவ்வொரு சொல்லும்
என் ஞாபகத்தில் பதிந்து கொண்டே வந்தது. என்ன காரணத்துக்காகவோ, படிக்கும்
எல்லாவற்றையும் என் மூளை உறிஞ்சிக்கொண்டே வந்தது. பக்கங்களைப் புரட்டப் புரட்ட,
இடுப்பில் கொடுவாளோடு இஸ்தான்புல்லின் தெருக்களில் வரிவசூல் செய்கின்ற துருக்கிய
வரித்தண்டலர் இபின் அர்மத் ஹஸீராக மாறினேன். காற்றில் பழவாசனையும், கோழிகளும்,
புகையிலையும் காபியும் கலந்த மணம் தேங்கிப்போன ஆறைப்போல நகரத்தின் மீது கனமாக
போர்த்தியிருந்தது. வணிகர்கள் தெருவோரங்களில் அமர்ந்து பேரீச்சம் பழங்களையும்,
துருக்கிய ஆரஞ்சுப் பழங்களையும் கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தனர். ஹஸீர்
அமைதியான, அலட்டிக்கொள்ளாத இயல்பினன். அவனுக்கு மூன்று மனைவிகள், ஆறு பிள்ளைகள்.
என்னிடம் இருக்கும் வளர்ப்புக் குருவியைப் போலவே அவனிடமும் ஒரு பேசும் கிளி
இருந்தது.
ஒன்பது மணி கழித்து சற்று நேரத்தில் ஆட்டுமனிதன்
கதவைத் திறந்து கொண்டு கோக்காவும் பிஸ்கட்டுகளும் எடுத்து வந்தான்.
“பரவாயில்லையே, மாறிவிட்டாய்!” என்றான். “ஹேய்,
புத்தகத்தை மூடிவைத்துவிட்டு கொஞ்சம் கோக்கா சூடாகக்குடி.”
புத்தகத்தை
வைத்துவிட்டு கோக்காவையும் பிஸ்கட்டையும் எடுத்தேன்.
“ஆட்டுமனிதரே,
கொஞ்சநேரத்துக்கு முன் ஒரு அழகான இளம்பெண் வந்தாளே, யார் அது?”
“என்னது?
இன்னொருமுறை சொல்லு. அழகான பெண்ணா?”
“எனக்கு இரவு உணவு கொண்டு வந்தாளே-அவள்.”
ஆட்டுமனிதன்
முகம் குழம்பியது. “விநோதம் உனக்கு இரவு உணவு நான்தானே எடுத்து வந்தேன்? நீ
படுக்கையில் படுத்து தேம்பித்தேம்பி அழுது கொண்டிருந்தாய். நன்றாகப் பார், நான்
அழகான பெண்ணா? நான் வெறும் ஆட்டுமனிதன்.
ஒருவேளை நான் கனவு கண்டு கொண்டிருந்தேனோ?
14
ஆனாலும் அடுத்தநாள்
மாலையே அந்த மர்மப்பெண் மீண்டும் வந்தாள். இம்முறை சாலட்டோடு டூ லௌஸ் சாசேஸ்,
ஸ்டஃப்டு ஸ்நாப்பர், முள்ளங்கி சாலட் பெரிய க்ரவாஸே ரொட்டி, தேன் கலந்த பிளாக் டீ.
பார்க்கும்போதே பசியெடுத்தது.
<<நிதானமாக
சாப்பிடு. மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும்>> அவள்
கைகளினால் பேசினாள்.
“தயவுசெய்து நீ யார்
என்று சொல்,” என்றேன்.
<<நான், நான்தான். வேறென்ன?>>
“ஆனால் அந்த
ஆட்டுமனிதர் உன்னை ஒரு கற்பனைத் தோற்றம் என்கிறார். நீ என்ற ஒன்று இல்லவே
இல்லையென்று-”
அந்தப் பெண் விரலை
உயர்த்தி அவளுடைய மெல்லிய உதட்டின் மேல் வைத்தாள். உடனே மௌனமானேன்.
<<ஆட்டுமனிதனுக்கென்று
ஓர் உலகம் இருக்கிறது. எனக்கென்று ஒன்று. உனக்கென்று ஒன்று. நான் சொல்வது
சரியா?>>
“சரிதான்.”
<<ஆட்டுமனிதனின்
உலகத்தில் நான் இருக்கவில்லை என்பதற்காக நான் இல்லவேயில்லை என்று சொல்லிவிட
முடியாதல்லவா?>>
“புரிகிறது,” என்றேன். “நமது உலகங்கள்-உனது
உலகம், எனது உலகம், ஆட்டுமனிதரின் உலகம், எல்லாமே ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்றன.
சில நேரங்களில் அவை ஒன்றின் மேல் மற்றொன்று கவிந்துகொள்கின்றன, சில நேரங்களில்
தனித்திருக்கின்றன. இதுதானே நீ சொல்வது?”
அவள் சின்னதாக இருமுறை
தலையசைத்தாள்.
நான் ஒன்றும் முழு
மூடன் அல்ல. அந்தப் பெரிய கருப்புநாய் என்னைக் கடித்ததற்குப் பிறகு என் மனம்
சற்றுக் குழம்பிவிட்டது. அதற்கப்புறம் முற்றிலுமாக சரியாகவே இல்லை.
அந்தப் பெண் கட்டிலில்
உட்கார்ந்துகொண்டு மேசையில் நான் இரவு உணவை உண்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் கைகள் முட்டிகளின் மீது அழகாக கோர்த்துக் கொண்டிருக்க, உதய ஞாயிறின்
கதிர்களில் தோய்ந்தபடி அமர்ந்திருக்கும் கண்ணாடிச் சிலை போலத் தெரிந்தாள்.
15
“உனக்கு என் அம்மாவையும் என் வளர்ப்புக்
குருவியையும் அறிமுகம் செய்தாக வேண்டும்,” என்றேன். “என் வளர்ப்புக்குருவி ரொம்ப
கெட்டிக்காரக்குருவி. அழகாக இருக்கும்.”
அந்தப்பெண் தலையை லேசாக
ஒரு பக்கம் சாய்த்தாள்.
“என் அம்மாவும்
இனிமையானவர். ஆனால் என்னைப்பற்றி அதீதமாகக் கவலைப்படுவார். அதற்குக் காரணம் நான்
சின்னவனாக இருந்தபோது ஒரு நாய் என்னைக் கடித்துவிட்டதுதான்.”
<<என்ன மாதிரியான
நாய்?>>
“கருப்புநாய், அதன்
கழுத்தில் நகைகள் பதித்த தோல்பட்டை கட்டப்பட்டிருந்தது. பச்சை நிறத்தில் கண்கள்.
கனமான கால்கள். அவை ஒவ்வொன்றிலும் ஆறு கூரான நகங்கள். அதன் காதுகள் முனையில்
இரண்டாகப் பிளந்திருந்தன. வெயிலில் கன்றிப்போனதைப் போல மூக்கு நுனி செம்பழுப்பில்
இருந்தது. உன்னை எப்போதாவது நாய் கடித்திருக்கிறதா?”
<<இல்லை,
கடித்ததில்லை. சரி, நாயைப்பற்றி பேசாமல், சாப்பிட்டு முடி>>
பேச்சை நிறுத்திவிட்டு,
சாப்பிட்டு முடித்தேன். தேன் கலந்த டீயை குடித்தேன். இலகுவாக, இனிமையாக உணரத்
தொடங்கினேன்.
“இந்த இடத்திலிருந்து நான் தப்பித்தாக வேண்டும்
என் அம்மா கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். என் குருவிக்கு நான் தீனி
போடாவிட்டால், சாப்பிடாமல் செத்துப் போகும்.”
<<என்னையும்
உன்னோடு கூட்டிச் செல்கிறாயா?>>
“நிச்சயமாக. ஆனால் எப்படி தப்பிப்பது என்று
தெரியவில்லை. இரும்பு குண்டை காலில் கட்டிவைத்திருக்கிறார்கள். வெளியே செல்லும்
வழி வலைப்பின்னலாக இருக்கிறது. நான் தப்பிச் சென்றுவிட்டால் அந்தக் கிழவர்,
ஆட்டுமனிதருக்கு பயங்கரமான தண்டனை கொடுப்பார். என்னைத் தப்பவிட்டதற்காக.”
<<ஆட்டு
மனிதனையும் நம்மோடு கூட்டிச் சென்றுவிடலாம் நாம் மூவரும் ஒன்றாகத்
தப்பித்துவிடுவோம்.>>
“அவர் நம்மோடு சேர்ந்து
கொள்வார் என்று நினைக்கிறாயா?”
அவள் பளிச்சென்று
புன்னகைத்தாள்.
பின், முந்தைய
நாளைப்போலவே சற்றே திறந்திருந்த கதவின் இடைவெளியில் லாவகமாகப் புகுந்து
வெளியேறினாள்.
16
மேசையில் அமர்ந்து
படித்துக் கொண்டிருந்தபோது பூட்டில் சாவியைத் திருகும் சத்தம் கேட்டது.
ஆட்டுமனிதன் ஒரு தட்டில் டோநட்டுகள் லெமனேட் சகிதம் உள்ளே நுழைந்தான்.
“உன்னிடம் முன்பு வாக்களித்திருந்த டோநட்டுகள்.
அடுப்பிலிருந்து நேராக எடுத்து வருகிறேன்.”
“நன்றி, ஆட்டுமனிதர்
அவர்களே.”
புத்தகத்தை
மூடிவைத்துவிட்டு ஒரு டோநட்டை எடுத்துக் கடித்தேன். மேலே மொரமொப்பாகவும், உள்ளே
மெத்தென்றும் அற்புதமான சுவையுடன் வாயிலிட்டவுடன் கரைந்தது.
“நான் சாப்பிட்டதிலேயே
மிகவும் சுவையான டோநட் இதுதான்,” என்றேன்.
“இப்போதுதான் இவற்றை
சுட்டு முடித்தேன். ஆரம்பத்திலிருந்து ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து
கவனத்துடன் செய்வேன்.”
“நீங்கள் மட்டும் டோநட் உணவகம் திறந்தால்
அமோகமாக நடக்கும்,” என்றேன்.
“நானும் அதைப்பற்றி
யோசித்திருக்கிறேன். நன்றாகத்தான் இருக்கும், இல்லையா?”
“உங்களால் முடியும்.”
“ஆனால் யார் என்னுடைய கடைக்கு வருவார்கள்? நான்
விநோதமாக உடையணிபவன். அப்புறம் என் பற்களைப்பார். சுத்தமாகப் பராமரிப்பதே
கிடையாது.”
“நான் உங்களுக்கு உதவுகிறேன்,” என்றேன். டோநட்டுகளை
நான் விற்கிறேன். வாடிக்கையாளர்களை நான் கவனித்துக் கொள்கிறேன். பண
விவகாரங்களையும், விளம்பரம் தருவதையும்கூட நான் பார்த்துக்கொள்வேன். நீங்கள்
கடையின் பின்கட்டில் டோநட்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தால் மட்டும் போதும்.
எப்படி பல் விளக்குவது என்று உங்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன்.”
“ஆஹா, இது நல்ல யோசனை,” என்றான் ஆட்டுமனிதன்.
17
ஆட்டுமனிதன் கிளம்பிச்
சென்றதும் புத்தகத்தை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். முன்பைப்போலவே ஆட்டமன்
வரித்தண்டலரின் நாட்குறிப்புகள் நூலின் ஆசிரியர் இபின் அர்மூத் ஹஸீராக மாறினேன்.
பகல் முழுக்க இஸ்தான்புல் வீதிகளில் வரிவசூல் செய்து கொண்டிருந்தேன். மாலையானதும்
வீட்டுக்குத் திரும்பி எனது பேசும் கிளிக்கு உணவளித்தேன். இரவு வானில் மெல்லி
கோடாக பிறைச்சந்திரன் மிதந்து கொண்டிருந்தது. தூரத்தில் யாரோ புல்லாங்குழல்
வாசிப்பது கேட்டது. என்னுடைய ஆப்பிரிக்க வேலையாள் அறையில் ஊதுவத்தி ஏற்றி
வைத்துவிட்டு, கொசுவிரட்டி போன்ற ஏதோவொன்றை வைத்து பூச்சிகளை வைத்து விரட்டிக்
கொண்டிருந்தான்.
என் மூன்று மனைவிகளில்
ஒருத்தியான அந்த மிக அழகான இளம்நங்கை எனக்காக படுக்கையறையில் காத்திருந்தாள்.
ஒவ்வோரிரவும் எனக்கு உணவு பரிமாறுவது அவள்தான்.
<<அழகான
நிலா>> என்றாள். <<நாளை அமாவாசை. வானம் முழு இருட்டாக
இருக்கும்.>>
“கிளிக்கு உணவளிக்க
வேண்டும்,” என்றேன்.
<<கொஞ்ச நேரத்துக்கு முன்னால் நீங்கள்
கிளிக்கு உணவிட்டுவிடவில்லையா?>> என்று கேட்டாள்.
“நீ சொல்வது சரிதான்.
நான் உணவிட்டுவிட்டேன்,” என்றேன் இபின் அர்மூத் ஹஸீராகிய நான்.
அவளுடைய பட்டுமேனி
பிறைநிலவொளியில் மின்னியது. நான் மெய்மறந்திருந்தேன்.
<<அழகான நிலா>>, அவள் திரும்பவும்
சொன்னாள். <<அமாவாசை நமது தலைவிதியை மாற்றும்>>
“அப்படியானால் நல்லது,” என்றேன்.
18
குருட்டு டால்ஃபினைப்போல
அமாவாசை இரவு மௌனமாக நெருங்கி வந்தது.
அன்று மாலை கிழவர்
என்னைப் பார்ப்பதற்கு வந்தார். நான் புத்தகத்தில் சூழ்ந்திருப்பதைக் கண்டு
மகிழ்ந்தார். அவரது மகிழ்ச்சியைக் கண்டு எனக்கும் மகிழ்ச்சி கூடியது. எப்படிப்பட்ட
சூழ்நிலையிலும் மற்றவர்கள் மகிழ்ச்சியடைவதைப் பார்த்தால் எனக்கு மகிழ்ச்சியாக
இருக்கும்.
தாடையைச் சொறிந்து கொண்டே, “உன்னைப் பாராட்ட
வேண்டும்,” என்றார். “நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படித்துவந்திருக்கிறாய்.
நல்ல பையன்தான் நீ.” என்றார்.
“நன்றி சார்’” என்றேன்.
மற்றவர்கள் பாராட்டினாலும் எனக்குப் பிடிக்கும்.
“நீ எவ்வளவு வேகமாக இந்தப்புத்தகங்களை மனப்பாடம்
செய்து முடிக்கிறாயோ, அவ்வளவு சீக்கிரமாக உனக்கு விடுதலை கிடைக்கும்,” என்றார்.
கிழவர் ஒரு விரலை உயர்த்திக்காட்டி, “புரிகிறதா?” என்றார்.
“ஆம்,” என்றேன். “வேறு ஏதாவது வேண்டுமா?”
“ஆம், என் அம்மாவும்,
என் வளர்ப்புக் குருவியும் எப்படி இருக்கிறார்கள் என்று விசாரித்து சொல்வீர்களா?
அதுதான் எனக்கிருக்கும் கவலை.”
கிழவர் முகத்தை
சுளித்தார். “உலகம் தனக்கான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது, தெரிகிறதா?” என்றார்.
“ஒவ்வொருவருக்கும் அவரவர் நினைவுகள், ஒவ்வொருவரும் அவரவர் பாதையில் செல்கின்றனர்.
உன் அம்மாவும் அப்படியே, உன் குருவியும் அப்படியே. எல்லோருக்கும் அப்படியே. உலகம்
தனக்கான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது.”
அவர் என்ன சொல்கிறார்
என்று புரியாவிட்டாலும், அவர் பேசி முடித்ததும் கீழ்படிந்து, “ஆம், ஐயா” என்றேன்.
19
கிழவர் கிளம்பிச்சென்ற சிறிதுநேரத்தில்
அந்தப்பெண் வந்தாள். எப்போதும் போலவே, சற்றே திறந்த கதவின் பிறவு வழியே
வழுக்கிக்கொண்டு உள்ளே வந்தாள்.
“இன்றிரவு அமாவாசை,”
என்றேன்.
படுக்கையின் மீது மௌனமாக அமர்ந்தாள். மிகவும்
சோர்வுற்றிருப்பவள் போல காணப்பட்டாள். அவளுடைய நிறம் மங்கிவிட்டிருந்தது. முழு
உடலும் மெல்லீடாக மாறி, அவளுக்குப் பின்னால் இருந்த சுவர் ஊடுருவித் தெரிந்தது.
<<இது
அமாவாசையால்தான்>> என்றாள். <<பல விஷயங்களை இந்தநாள் நம்மிடமிருந்து
இழக்க வைத்து விடுகிறது.>>
“இதனால் என் கண்கள்தான்
கூசுகின்றன,” என்றேன்.
அவள் என்னைப்பார்த்து
அழகாகத் தலையை அசைத்தாள். <<நிலவு உன்னை பாதிப்பதில்லை. அதனால் உனக்கு எந்த
சிக்கலும் வராது. நிச்சயமாக நீ தப்பிச் சென்றுவிடுவாய்.>>
“அப்படியானால் நீ?”
<<என்னைப்பற்றி கவலைப்படாதே. நாம்
இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தப்பிக்க முடியுமாவென்று தெரியவில்லை. ஆனால் நிச்சயமாக
நான் பின்னால் வந்து சேர்ந்து கொள்வேன்.>>
“நீ இல்லாமல்
திரும்பிச் செல்லும் வழியை நான் எப்படி கண்டுபிடிப்பேன்?”
அவள் பதில்
அளிக்கவில்லை. பதிலாக அருகில் வந்து என் கன்னத்தில் சின்னதாக முத்தமிட்டாள்.
பின்னால் நழுவிச் சென்று, கதவுப் பிளவின் வழியே புகைபோல நுழைந்து வெளியேறினாள்.
ஸ்தம்பித்து, வெகுநேரம் கட்டிலிலேயே உட்கார்ந்திருந்தேன். அந்த முத்தம் என்னை
முற்றிலுமாக உலுக்கியெடுத்துவிட்டதில், எதையுமே தெளிவாக சிந்திக்க
முடியாதிருந்தது. அதே நேரத்தில் என் கவலை அனைத்துமே கவலை தவிர்த்த கவலையாக மாறிவிட்டிருந்தது.
குறிப்பாக கவலையென்ற ஒன்று இல்லாத எந்தக் கவலையும் இறுதியில் குறிப்பிட்டுச்
சொல்லமுடியாத கவலையாகத்தான் ஆகிவிடுகிறது.
20
கொஞ்சநேரத்தில்
ஆட்டுமனிதன் திரும்பிவந்தான். தட்டில் டோநட்டுகளை உயரமாக அடுக்கி வைத்திருந்தான்.
“ஹேய், என்ன விஷயம்? ரொம்பவும் சோர்வாகத்
தெரிகிறாய். உடம்பு சரியில்லையா, என்ன?”
“இல்லை, யோசித்துக்
கொண்டிருந்தேன்.”
“நான் கேள்விப்பட்டது
நிஜமா? இன்றிரவு இங்கிருந்து தப்பிக்கப் போகிறாயாமே? நானும் கூட வந்துவிடட்டுமா?”
“தாராளமாக, நீங்களும் வரலாம். சரி, உங்களுக்கு
யார் சொன்னது?”
“கொஞ்சநேரத்துக்கு
முன்னால் தாழ்வாரத்தில் ஒரு பெண் கடந்துபோனாள். அவள்தான் சொன்னாள். நீங்கள்
இருவரும் தப்பித்துப் போகப் போவதாகச் சொன்னாள். இந்த இடத்தில் இப்படி ஒரு அழகான
பெண் இருப்பது இதுவரையில் எனக்குத் தெரியாது. அவள் உன் தோழியா?”
“அது . . . ம் ம் ம் .
. .” என்று இழுத்தேன்.
“ஓஹோ . . . அய்யோ, என்ன அழகு அந்தப் பெண்!
இப்படி ஒரு பெண் தோழியாகக் கிடைப்பது அதிருஷ்டம்தான்.”
“ஆட்டு மனிதரே, இங்கிருந்து நாம்
தப்பிச்சென்றுவிட்டால், உங்களுக்கு இவளைப்போல எவ்வளவோ அழகான தோழிகள்
கிடைப்பார்கள்.”
“ஆஹா, நினைக்கவே இனிக்கிறது. ஆனால் நமது
தப்பிக்கும் முயற்சி மட்டும் தோல்வியடைந்துவிட்டால் நாம் இரண்டு பேரும் மிக மோசமான
விளைவுகளை சந்திக்க நேரும்.”
“மோசமான விளைவு என்றால், பத்தாயிரம்
கம்பளிப்பூச்சிகள் கொண்ட ஜாடியா?”
ஆட்டுமனிதன் சோகமாக,
“ஆமாம், அவ்வளவு பெரிய ஜாடிதான் நமக்கு,” என்றான்.
பத்தாயிரம் கம்பளிப்பூச்சிகளோடு நானும்
ஆட்டுமனிதனும் ஒரு ஜாடிக்குள் மூன்று நாட்களுக்கு அடைத்து வைக்கப்பட்டிருக்கும்
காட்சியை கற்பனை செய்து பார்த்தபோது முதுகுத்தண்டு சில்லிட்டது. ஆனாலும் சூடான
டோநட்டுகளும், அந்தப்பெண் என் கன்னத்தில் பதித்த முத்தமும் பயத்தை கலைப்பனவாக
இருந்தன. நான் மூன்று டோநட்டுகளும், ஆட்டுமனிதன் ஆறும் சாப்பிட்டோம்.
“வயிறு காலியாக
இருந்தால் என்னால் ஒரு அடி நகர முடியாது,” என்றான் ஆட்டுமனிதன் மன்னிப்பு கேட்கும்
தொனியில், வாயோரத்திலிருந்து சர்க்கரைத் துணுக்குகளை அவனுடைய தடித்த விரல்களால்
துடைத்துக் கொண்டான்.
21
எங்கேயோ மணி ஒன்பது
அடித்தது. ஆட்டுமனிதன் எழுந்து சட்டையின் கைப்பகுதியை பலமுறை தட்டி, உதறிக்கொண்டு
ஆட்டு உடையை சரிப்படுத்திக்கொண்டான். நாங்கள் கிளம்பவேண்டிய நேரம் வந்துவிட்டது.
என் காலில் கட்டப்பட்டிருந்த இரும்புக்குண்டையும் சங்கிலியையும் கழற்றினான்.
அறையிலிருந்து
வெளிவந்து மங்கலான இருட்டில் தாழ்வாரத்தில் நடந்தோம். வெறும் காலில்
நடக்கும்போதுதான் அவசரத்தில் என் ஷுக்களை அறையிலேயே விட்டுவிட்டது உறைந்தது. அம்மா
வானத்துக்கும் பூமிக்குமாக குதிக்கப் போகிறார். அது மிக அருமையான, தோல் ஷு.
பிறந்தநாள் பரிசாக அளித்திருந்தார். ஆனால் இதுவும் நல்லதுக்குத்தான். காலணி சத்தம்
கிழவரை எழுப்பிவிட்டிருக்கும்.
அந்த உலோகத்தரையில் நடக்கும்போது என் காலணிகளைப்
பற்றி யோசித்துக் கொண்டே வந்தேன். ஆட்டுமனிதன் வழிகாட்டியபடியே முன்னால் சென்றான்.
அவனைவிட நான் சற்று உயரம் என்பதால் நடக்கும்போது அவனுடைய இரண்டு காதுகளும் என்
மூக்கிற்கு எதிரே மேலும் கீழும் குதித்துக்கொண்டே வந்தன.
“ஹே, ஆட்டு மனிதரே,” என்று கிசுகிசுப்பாக
கூப்பிட்டேன்.
“என்ன?” அவனும்
கிசுகிசுத்தான். “கிழவருக்கு காது நன்றாகக் கேட்குமா?”
“இன்று அமாவாசை
என்பதால் அறைக்குள் நன்றாகத் தூங்கிக் கொண்டிருப்பார். ஆனால் எவ்வளவு கெட்டிக்கார
ஆசாமி என்று உனக்கே இதற்குள் தெரிந்திருக்கும். ஷுக்களைப் பற்றி கவலைப்படாதே.
எப்போது வேண்டுமானாலும் இன்னொன்று வாங்கிக்கொள்ளலாம். ஆனால் மூளையையோ, உயிரையோ
வாங்கமுடியாது.”
“உண்மைதான் ஆட்டு
மனிதரே.”
“இப்போது மட்டும் அவர்
எழுந்து வந்து அந்தப் பிரம்புக்குச்சியோடு எதிரே நின்றாரென்றால், அவ்வளவுதான்
ஆட்டம் முடிந்தது என்று அர்த்தம். அதன் பிறகு உனக்கு எந்த விதத்திலும் உபயோகமாக
இருக்கமாட்டேன். அவர் விளாச ஆரம்பித்துவிட்டால் நான் அவ்வளவுதான். உடனடியாக
பரிபூர்ண அடிமையாகிவிடுவேன்.”
“அந்தப் பிரம்புக்கு அப்படி ஏதாவது விசேஷ சக்தி
இருக்கிறதா என்ன?”
“சரியாகச்
சொல்லிவிட்டாய்,” என்றான் ஆட்டு மனிதன் ஒரு கணம் யோசித்தான். “அது பார்ப்பதற்கு
சாதாரணப் பிரம்பு போலத்தான் இருக்கிறது. ஆனால் என்னவோ தெரியவில்லை.”
22
“அந்தப் பிரம்பைக் கொண்டு உங்களை அடிக்க
ஆரம்பித்தால், செயலிழந்து போய்விடுகிறீர்கள், அப்படித்தானே?”
“அதேதான். அதனால் உன் ஷுக்களை மறந்துவிடு.”
“அதை நான் எப்போதோ மறந்துவிட்டேன்.”
அந்த நடைவழியில்
இன்னும் சற்று தூரத்துக்கு எதுவும் பேசாமல் நடந்தோம்.
பின் திடீரென, “ஹே?”
என்றான்.
“என்ன?”
“உன் ஷுக்களை
மறந்துவிட்டாய்தானே?”
“ஆமாம்,
மறந்துவிட்டேன்,” என்றேன். அவனது கேள்வியினால், மறந்துபோன ஷுக்களின் ஞாபகம்
மீண்டும் மனதில் புகுந்துகொண்டது.
படிக்கட்டுகள் சில்லிட்டு இருந்தன. ஏறும்போது
கால்கள் வழுக்கின. கற்படிக்கட்டுகளின் விளிம்புகள் தொடர்ந்த பயன்பாட்டில்
மழுங்கியிருந்தன. அவ்வப்போது பாதத்துக்கடியில் வண்டைப்போல ஏதோ மிதிபட்டுக்
கொண்டேயிருந்தது. வெறும் காலோடு கும்மிருட்டில் நடப்பது பெரிய இம்சை.
சிலநேரங்களில் காலில் மிதிபடுபவை மெத்தென்று இருந்தன. மிதிபட்டவுடனே ‘பச்சக்கென்று
நசுங்கின. சில முறை நறநறவென்று நொறுங்கின. அடச்சே,
ஷுக்கள் அணிந்து வந்திருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
கடைசியில்
படிக்கட்டுகளின் முடிவில் அந்த இரும்புக்கதவை அடைந்தோம். ஆட்டுமனிதன்
சட்டைப்பையிலிருந்து பெரிய சாவிக்கொத்தை எடுத்தான்.
“சத்தமெழுப்பாமல்
திறக்க வேண்டும். கிழவர் எழுந்து விடுவார்.”
“ஆமாம்,” என்றேன்.
அவன் ஒரு சாவியை
பொருத்தி இடதுபுறமாகத் திருகினான். ‘கச்சங்க்’ என்று பலமாக சத்தம் எழுந்து, கதவு
நீளமாக கிரீச்சிட்டபடியே திறந்தது. இதுவா சத்தமெழுப்பாமல் திறப்பது?
“இந்த இடத்திலிருந்து சிக்கலான வலைப்பாதை
ஆரம்பித்துவிடும்,” என்றேன்.
“ஆம். இந்தத் திருகுவழி
எனக்குக்கூட அதிகம் பரிச்சயம் இல்லை. பரவாயில்லை, சமாளிப்போம்.”
இதைக்கேட்டதும்
எனக்குக் கொஞ்சம் பதற்றம் ஏற்பட்டது. இதைப்போன்ற வலைப்பாதையில் செல்லும்போது
சரியான பாதையில் திரும்பினோமாவென்று கடைசியில்தான் தெரியவரும். தப்பான பாதையில்
திரும்பியிருந்தால், திரும்பி வந்து மீண்டும் ஆரம்பிப்பதற்கு மிகவும்
தாமதமாகிவிடும். வலைப்பாதைகளின் பிரச்சனை அதுதான்.
23
எதிர்பார்த்ததைப்
போலவே, ஆட்டுமனிதன் பலமுறை தேர்ந்தெடுத்த வழியை புறக்கணித்து, திரும்பி வந்து
வேறுவழிகளில் கூட்டிச் சென்றான். இருந்தாலும் எனக்கென்னவோ கடைசி வாசலை மெல்ல,
மெல்ல நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்றே தோன்றிக் கொண்டிருந்தது. அவ்வப்போது
வழியில் நின்று விரலை சுவரின் மீது ஓட்டிப் பார்த்து, வாயில் வைத்து தீர்க்கமாக
யோசித்தான். சிலமுறை கீழே குத்துக்காலிட்டு உட்கார்ந்து, தரையில் காதை வைத்து
கேட்டான். கொஞ்சதூரம் சென்றதும், கூரையில் வலை பின்னியிருந்த சிலந்திகளிடம்
தாழ்ந்த குரலில் ஏதோ பேசினான். பல வழிகளாகப் பிரியும் முனைகளில் சரியான பாதையைத்
தேர்ந்தெடுப்பதற்கு விநோதமான முறையை கையாண்டான். இருந்த இடத்திலேயே வேகமாக
பம்பரமாக சுற்றிச் சுழன்றான். சட்டென்ற நின்று எதிரில் இருக்கும் வழியை
தேர்ந்தெடுத்தான். அந்த திருகுப்பாதையின் வழியை இப்படித்தான் நினைவுக்கு கொண்டு
வரமுடிவதாகச் சொன்னான். ஞாபகப்படுத்திக் கொள்வதற்கு இப்படிப்பட்ட உத்தியை
எத்தனைபேர் கையாள்வார்கள்?
நேரமாகிக் கொண்டே
சென்றது. விடியல் நெருங்கிக்கொண்டே வர, அமாவாசை இருட்டு மெதுவாகத் தளர்ந்து
கொண்டிருந்தது. ஆட்டுமனிதனும் நானும் வேகவேகமாகச் சென்றோம் விடிவதற்குள்
அடைந்துவிடவேண்டும். இல்லாவிட்டால் கிழவர் எழுந்து, தேடிக்கொண்டு வந்துவிடுவார்.
“நம்மால் முடியுமென்று நினைக்கிறீர்களா?” என்று
கேட்டேன்.
“ஆம் சுலபம்தான். இங்கிருந்து கொஞ்ச தூரம்தான்.”
அவனுக்கு இனிமேல் வழி
நன்றாகத் தெரிந்திருக்கிறது என்பதை புரிந்துகொண்டேன். தீர்மானத்தோடு அப்படியும்
இப்படியுமாகத் திரும்பித் திரும்பி, நிற்காமல் அந்த நடைவரியில் ஓடினோம். இறுதியில்
கடைசி தாழ்வாரம் எதிரே வந்தது. அதன் முடிவில் இருந்த கதவு தெரிந்தது. கதவின்
இடுக்கின் வழியே வெளிச்சம் கசிந்தது.
ஆட்டுமனிதன் பெருமையாக,
“சொன்னேன், பார்த்தாயா?” என்றான். “வழியை சரியாகக் கண்டுபிடித்துவிட்டேன். இனி,
அந்தக் கதவைத் திறந்துகொண்டு வெளியே போகவேண்டும். அப்புறம் உனக்கும் எனக்கும்
விடுதலை,” என்றான்.
கதவைத்திறந்தான்.
கிழவர் அங்கே எங்களுக்காக காத்துக் கொண்டிருந்தார்.
24
அது நான் அவரை
முதன்முதலாகப் பார்த்த அதே அறை. நூலகத்தின் அடித்தளத்தில் இருந்த அறை எண் 107.
அவரது மேஜைக்குப் பின்னால் என்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி
அமர்ந்திருந்தார்.
கிழவருக்குப்
பக்கத்தில் ஒரு மிகப்பெரிய கருப்புநாய் உட்கார்ந்திருந்தது. பச்சை நிறக் கண்களும்,
நகைகள் பதித்த கழுத்துப் பட்டையும் கொண்டிருந்த நாய். தடிமனான கால்கள். ஒவ்வொரு
பாதத்திலும் ஆறு கூர் நகங்கள். காதுகளின் முனைகளில் பிளவுண்டிருந்தது. மூக்கு
செம்பழுப்பு நிறத்தில் கன்றிப்போயிருந்தது. பல வருடங்களுக்கு முன் என்னைக் கடித்த
அதே நாய். என்னருமை வளர்ப்புக்குருவி அதன் பற்களுக்கிடையில் சிக்கியிருந்தது.
நான் வீறிட்டலறி
பின்னால் சாய, ஆட்டுமனிதன் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
“வெகு நேரமாகக் காத்துக்கொண்டே இருந்தோம். ஏன்
இவ்வளவு நேரம்?” என்றார் கிழவர்.
“ஐயா, எல்லாவற்றையும்
உங்களுக்கு விளக்குகிறேன்,” என்று ஆட்டுமனிதன் ஆரம்பித்தான்.
“பேசாதே, முட்டாளே, என்று கிழவர் வெடித்தார்.
பிரம்பை பின் பாக்கெட்டிலிருந்து உருவியெடுத்து மேஜையின் மேல் அடித்தார். நாய் தன்
செவிகளை உயர்த்தி, விறைத்துக்கொண்டது. ஆட்டுமனிதன் வாயை மூடிக்கொண்டான். அறைக்குள்
மரண அமைதி கவிந்தது.
“ சரி, உங்கள்
ரெண்டுபேரையும் இப்போது எப்படி தீர்த்துக்கட்டுவது?” என்றார் கிழவர்.
“அமாவாசையென்று நீங்கள் நன்றாகத்
தூங்கிவிடுவீர்கள் என்று நினைத்தோம்,” என்றேன் ஹீனமாக.
“நீ ரொம்ப கெட்டிக்காரன்தான்,” கிழவர் சீறினார்.
“இதைப்போன்ற தகவல்களை எங்கிருந்து பெற்றாய் என்று தெரியவில்லை. ஆனால் என்னை
ஏமாற்றுவது அவ்வளவு எளிதல்ல. உச்சிவெயில் நேரத்தில் தர்பூசணிப் பழத்தைக் கண்டுபிடிப்பதைப்
போல உங்கள் இரண்டுபேருடைய மனதையும் சுலபமாக என்னால் அறிந்துகொள்ள முடியும்.”
அறை என் கண்முன்னால்
இருண்டது.
எனது அஜாக்கிரதை
எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. என்னருமை வளர்ப்புக்குருவி கூட இதற்கு
பலியாகியிருக்கிறது. எனது நல்ல ஷுக்களை தொலைத்துவிட்டேன். என் அம்மாவை இனி
ஏறெடுத்தும் பார்க்க முடியாது.
“உன்னை என்ன
செய்யப்போகிறேன் தெரியுமா?” கிழவர் பிரம்பை ஆட்டுமனிதனை நோக்கி நீட்டினார்.” உன்னை
சின்னச் சின்னத் துண்டுகளாக நறுக்கி பூரான்களுக்கு உணவாகப் போடப் போகிறேன்.”
ஆட்டுமனிதன் உடல் முழுக்க விதிர்விதிர்த்தபடி
என் பின்னால் பதுங்கினான்.
25
கிழவர் என் பக்கம்
திரும்பினார். “என் இளம் நண்பனே, உன்னை என்ன செய்வதாக உத்தேசம் தெரியுமா?”
என்றார். “இந்த நாய்க்கு உன்னை தீனியாகப் போடப்போகிறேன். இது உன்னை உயிரோடு
கிழித்து தின்னப்போகிறது. மெதுவாக, நிறுத்தி நிதானமாக சாகப்போகிறாய். வீறிட்டு
கத்திக்கொண்டே சாகப் போகிறாய். ஆனால் உன் மூளை மட்டும் எனக்குச் சொந்தம். அந்தப்
புத்தகங்கள் எல்லாவற்றையும் நீ படித்து முடித்திருந்தால் உன் மூளை நல்ல சுவையோடு
இருந்திருக்கும். ஆனாலும் பரவாயில்லை. ஒரு துளி விடாமல் மொத்த மூளையையும் வழித்து
சாப்பிட்டுவிடுவேன்.”
கிழவர் பற்களைக்காட்டி
கோரமாக சிரித்தார். நாயின் பச்சைக்கண்கள் ஆர்வத்தில் பளிச்சிட்டன.
இதே நேரத்தில்தான்,
அந்த நாயின் பற்களுக்கிடையில் சிக்கியிருந்த குருவி அளவில் பெரிதாக வீங்கிக்கொண்டே
வருவதை கவனித்தேன். ஒரு கோழியின் அளவுக்குப் பெருத்தும் நாயின் தாடைகள் காரின்
ஜாக்கிபோல மேலும் மேலும் விரிந்து பிளந்து கொண்டிருந்தன. நாய் ஊளையிட
முயற்சிக்கும்போதெ, அதன் வாய் முழுசாக கிழிக்கப்பட்டது. எலும்புகள் உடையும் சத்தம்
கேட்டது. கிழவர் திடுக்கிட்டு, பிரம்பை உருவி குருவியின்மேல் வெறித்தனமாக அடிக்கத்
தொடங்கினோம். ஆனால் குருவி தொடர்ந்து பெருத்துக் கொண்டே வந்தது. எருதின்
அளவுக்குப் பெரிதாகியது. கிழவரை சுவரோடு சுவராக வைத்து அழுத்தியது. அச்சிறிய அறை
முழுக்க வலுவான சிறகுகள் படபடக்கும் சத்தம் நிரம்பியது.
<<ஓடு. இதுதான்
உனக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு>> என்றது குருவி.
இது அந்தப் பெண்ணின் குரல்.
“நீ எப்படி
தப்பிப்பாய்?” என்றேன் பெண்ணாக இருந்த அக்குருவியிடம்.
<<என்னைப்பற்றிக்
கவலைப்படாதே. நான் பின்னாலேயே வந்துவிடுவேன்>> நான் தயங்கினேன்.
<<சீக்கிரம். இப்போது வேகமாக ஓடாவிட்டால்,
ஒருபோதும் தப்பிக்கவே முடியாது,>> என்றது பெண்ணாக இருந்த குருவி.
அவள் சொன்னபடியே
செய்தேன். ஆட்டுமனிதனின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு அறையைவிட்டு ஓடினேன்.
திரும்பிப் பார்க்கவேயில்லை.
அது அதிகாலை நேரம். நூலகம் வெறிச்சோடியிருந்தது.
படிகளைத் தாவி மையக்கூடத்தைக் கடந்து, வாசிப்பறையின் சன்னலை அடித்துத் திறந்து
வெளியே குதித்தோம். எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடி பூங்காவை அடைந்து,
புல்தரையில் தொப்பென்று விழுந்தோம். கண்களை மூடி, மூச்சிரைக்க அப்படியே கிடந்தோம்.
கொஞ்ச நேரத்துக்கு நான் கண்களையே திறக்கவில்லை.
கண்ணைத்திறந்தபோது, ஆட்டுமனிதனை காணவில்லை.
எழுந்து நின்று சுற்றுமுற்றும் பார்த்தேன். அவன் பெயரை அடித்தொன்ணடையிலிருந்து
கத்தி கூப்பிட்டேன். பதிலே இல்லை. காலைச் சூரியனின் முதற்கிரணங்கள் மரங்களின்
இலைகளை ஜொலிக்க வைத்துக் கொண்டிருந்தன. ஆட்டுமனிதன் என்னிடம் ஒரு வார்த்தைகூட
சொல்லாமல் மறைந்துவிட்டிருந்தான். அதிகாலைப் பனி ஆவியாவதைப் போல.
26
வீட்டை அடைந்தபோது
அம்மா எனக்காக உணவு மேஜையில் சூடான காலை உணவை தயாரித்து எனக்காக
காத்துக்கொண்டிருந்தார். என்னை ஒரு வார்த்தை கேட்கவில்லை. ஏன் பள்ளியிலிருந்து
நேராக வீட்டுக்கு வரவில்லை, கடந்த மூன்று நாட்கள் இரவு எங்கே தங்கினேன், எங்கே
எனது ஷுக்கள்-ஒரு கேள்வியும் கேட்கவில்லை. திட்டவும் இல்லை. இது அம்மாவின் இயல்பே
அல்ல.
என் வளர்ப்புக்
குருவியைக் காணவில்லை. காலியான கூண்டுதான் இருந்தது. என்ன நடந்தது என்று நானும்
கேட்கவில்லை. இந்த விஷயத்தை எடுக்காமல் இருப்பதே நல்லது என்று நினைத்தேன்.
அம்மாவைப் பார்க்க சற்று கருத்திருப்பதைப் போல இருந்தது. அவரைச் சுற்றி ஏதோ
நிழல்கள் சூழ்ந்திருப்பதைப்போல. ஆனால் இது என் கற்பனையாகக்கூட இருக்கலாம்.
அதற்குப்பிறகு அந்த நகர நூலகத்துக்கு நான்
செல்லவேயில்லை.
இந்த இடத்தை
நிர்வகிக்கும் பெரிய மனிதர்களிடம் எனக்கு நடந்ததைப் பற்றியும், நூலகத்தின்
அடித்தளத்துக் கீழே பாதாளச்சிறை இருப்பதைப்பற்றியும் நான் சொல்லியிருக்க வேண்டும்
என்றே நினைத்தேன். இல்லாவிட்டால் நான் அனுபவித்ததைப் போல இன்னொரு குழந்தைக்கும்
நடக்கலாம். ஆனாலும் அந்திக்கருக்கலில் அந்த நூலகக் கட்டிடத்தைப் பார்க்கும்போதே,
என் கால்கள் அதை நோக்கி நகராமல் ஸ்தம்பித்துவிடும்.
அடித்தளத்தில் விட்டுவிட்டு வந்த அப்புதிய தோல்
ஷுக்களைப்பற்றி அவ்வப்போது நினைப்பேன். உடனே அந்த ஆட்டுமனிதன், குரலில்லாத அந்த
அழகிய பெண் ஞாபகங்கள் தொடர்ந்து வரும். அவர்கள் உண்மையிலேயே இருந்தவர்கள்தானா? என்
ஞாபகத்தில் இருப்பவற்றில் எந்தளவுக்கு உண்மையிலேயே நடந்தவை? உண்மையைச்
சொல்லப்போனால் எனக்கே உறுதியாகத் தெரியவில்லை. நிச்சயமாகத் தெரிந்தவையென்றால், என்
ஷுக்களை தொலைத்ததும், என் செல்லக் குருவியை இழந்ததும்தான்.
சென்ற செவ்வாய்க்கிழமை
என் இறந்துபோனார். அவருக்கு ஏதோ மர்மமான நோய் பீடித்திருந்தது. அன்று காலை
அமைதியாக அணைந்து போனார். ஈமச்சடங்குகள் எளிமையாக நடந்தன. இப்போது நான் முற்றிலும்
தனியனாக இருக்கிறேன்.
அம்மா இல்லை. செல்லக்குருவி இல்லை. ஆட்டுமனிதன்
இல்லை. அந்தப்பெண் இல்லை.
பின்னிரவு இரண்டுமணி
இருட்டில் இங்கே படுத்துக்கொண்டு அந்த நூலகத்தின் பாதாளச் சிறையைப்பற்றி, இந்தத்
தனிமையைப்பற்றி, என்னை சூழ்ந்திருக்கும் அடர்ந்த இருட்டைப்பற்றி சிந்தித்துக்
கொண்டிருக்கிறேன். இருட்டு. அமாவாசை இரவைப்போல கும்மிருட்டு.
கருத்துகள்
கருத்துரையிடுக