கனவுகள் - ரேமண்ட் கார்வர்
கனவுகள்
ரேமண்ட்
கார்வர்
தமிழில்; ஜி.குப்புசாமி
என்
மனைவிக்கு தூங்கியெழுந்ததும் அவள் கண்ட கனவுகளைச் சொல்லும் பழக்கம் உண்டு. அவளுக்காக
காபியும் பழங்களும் எடுத்துவந்து கட்டிலுக்கு பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்கிறேன்.
அவள் விழித்தெழுந்து முகத்திலிருந்து முடிக்கற்றையை அகற்றிக் கொள்கிறாள். தூங்கியெழுந்தவுடன்
முகம் எப்படியிருக்குமோ அப்படியேதான் அவள் முகம் இருந்தாலும், அந்தப் பார்வை ஏதோவோரிடத்திலிருந்து
அப்போதுதான் திரும்பி வந்திருப்பதைப்போல தோன்றுகிறது.
“ம், சொல்லு,’’ என்கிறேன்.
“அபத்தம்,’’ என்கிறாள். “முழுசாக ஒரு கனவு, அப்புறம்
ஒரு பாதிக்கனவு. கனவில் நான் பையனாக இருக்கிறேன். மீன் பிடிக்கச் செல்கிறேன். கூடவே
என் சகோதரியும், அவளுடைய சிநேகிதியும் வருகிறார்கள். நான் குடித்திருக்கிறேன். எப்படி
இருக்கிறது பாருங்கள். எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிடுவதாக இல்லை? நான்தான் அவர்களைக்
கூட்டிச்செல்ல வேண்டும், ஆனால் கார் சாவி கிடைக்கவில்லை, அப்புறம் கிடைக்கிறது. ஆனால்
கார் கிளம்பமாட்டேன் என்கிறது. அப்புறம் பார்த்தால் மீன் பிடிக்கும் இடத்தில் இருக்கிறோம்.
ஏரியில் ஒரு படகில். மழை தூரத்தில் வந்து கொண்டிருக்கிறது, ஆனால் படகின் இன்ஜினை என்னால்
ஸ்டார்ட் செய்ய முடியவில்லை.என் தங்கையும் , அவள் சிநேகிதியும் சிரிசிரியென்று சிரிக்கிறார்கள்.
எனக்கு பயமாக இருக்கிறது. அப்புறம் எழுந்துவிட்டேன்.விசித்திரமாக இல்லை? உங்களுக்கு
என்ன தோன்றுகிறது?’’
“அதை அப்படியே எழுது,’’ என்றேன், தோள்களை குலுக்கிக்
கொண்டேன். என்னிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை. நான் கனவு கண்டதில்லை. எனக்கு கனவு வந்து
பல வருடங்களாகின்றன. அல்லது கனவு வந்திருக்கலாம், ஆனால் விழித்தெழுந்ததும் எதுவும்
ஞாபகத்தில் இருந்ததில்லை. கனவுகளில் – அவை என்னுடையதோ அல்லது மற்றவருடையதோ - நான் வல்லுனன்
கிடையாது. எங்களுக்கு மணமாவதற்கு முன்பு டாட்டிக்கு வந்த ஒரு கனவில், தான் குலைத்துக்
கொண்டிருந்ததாக அவளுக்குத் தோன்றியதாம். வலுக்கட்டாயமாக தூக்கத்தை கலைத்துக் கொண்டு
எழுந்ததும், அவளுடைய நாய்க்குட்டி, பிங்கோ, கட்டிலுக்குப் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு
அவளைப் பார்த்துக் கொண்டிருந்ததாம். அது பார்த்துக் கொண்டிருந்த விதம் விநோதமாக இருந்ததாகச்
சொன்னாள். தூக்கத்தில் அவளே குலைத்துக் கொண்டிருந்தது அதனால்தான் என்று அவளுக்குப்
புரிந்தது. அதற்கு என்ன அர்த்தம்? என்று அவள் வியந்தாள். “அது ஒரு கெட்ட கனவு’’ என்றாள்.அவளது
கனவுப்புத்தகத்தில் அந்தக் கனவை சேர்த்துக் கொண்டாள். அதோடு முடிந்தது. பிறகு அதைப்பற்றிப்
பேசவில்லை. அவள் கனவுகளைப் பொருள் படுத்திப் பார்த்துக் கொண்டதில்லை. எழுதி மட்டும்
வைத்துக் கொள்வாள், பின் அடுத்த கனவு வந்ததும், அதையும் எழுதி வைத்துவிடுவாள்.
“சரி, நான் மாடிக்கு செல்கிறேன். பாத்ரூம் போகவேண்டும்,’’என்றேன்.
“நானும் பின்னாலேயே வந்துவிடுவேன். முதலில் முழுசாக
விழித்துக்கொள்ளவேண்டும். இந்தக் கனவைப்பற்றி இன்னும் கொஞ்சம் யோசிக்க விரும்புகிறேன்.’’
அவள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கையில்
கோப்பையை பிடித்துக் கொண்டு காபியை குடிக்காமல் கனவைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள்.
நான் பாத்ரூமுக்கு போக வேண்டியிருக்கவில்லை. கொஞ்சம்
காபியோடு சமையலறை மேஜையில் உட்கார்ந்தேன். அது ஆகஸ்ட். வெப்ப அலை. சன்னல்கள் திறந்திருந்தன.
வெப்பம், ஆம், வெப்பமாக இருந்தது. வெக்கை வாட்டிக் கொண்டிருந்தது. மாதத்தின் பெரும்பாலான
நாட்கள் நானும் என் மனைவியும் தரைத்தளத்தில்தான் தூங்கினோம். அதனால் ஒன்றும் கஷ்டமில்லை.
மெத்தை, தலையணைகள், போர்வைகள் எல்லாவற்றையும் கீழே எடுத்து வந்தோம். ஒரு குட்டி மேஜை,
விளக்கு, ஆஷ்ட்ரே. சிரித்தோம். முதலிலிருந்து குடித்தனம் தொடங்குவதைப் போலிருந்தது.
ஆனால் மாடியில் எல்லா சன்னல்களும் திறந்திருந்தன. பக்கத்து வீட்டிலும் சன்னல்கள் திறந்திருந்தன.
மேசையில் அமர்நது அடுத்த வீட்டிலிருந்து மேரி ரைஸை கேட்டுக் கொண்டிருந்தேன். இவ்வளவு
சீக்கிரமாகவே எழுந்து இரவு உடையில் சமையலறையில் தாழ்ந்த குரலில் பாடிக்கொண்டிருந்தாள்.
நான் காபியை குடித்து முடிக்கும் வரை பாடிக் கொண்டிருந்தாள். பின், அவளுடைய குழந்தைகள்
சமையலறைக்குள் வந்தனர். அவள் அவர்களிடம் சொன்னது இதுதான்:
“குட்மார்னிங் குழந்தைகளே, குட் மார்னிங் செல்லங்களே.’’
உண்மைதான். இப்படித்தான் அவள் அந்தக்குழந்தைகளிடம்
சொன்னாள். பின் அவர்கள் மேஜையில் அமர்ந்துவிட்டிருந்தனர். எதற்காகவோ சிரித்துக்கொண்டிருந்தனர்.
அந்தக் குழந்தைகளில் ஒருவன் நாற்காலியை மேலும் கீழும் இழுத்து சத்தமிட்டுக்கொண்டு சிரித்துக்
கொண்டிருந்தான்.
“மைக்கேல், போதும் நிறுத்து,’’ என்றாள் மேரிரைஸ்.
“சாப்பிட்டு முடி செல்லம்.’’
அடுத்த ஒரு நிமிடத்தில் மேரிரைஸ் குழந்தைகளை சாப்பிட
வைத்துவிட்டு, அவர்களையே உடைமாற்றிக் கொண்டு பள்ளிக்குச் செல்லத் தாயராகும்படி உத்தரவிட்டு
அறையைவிட்டு அனுப்பிவிட்டாள். பாத்திரங்களை துலக்கிக் கொண்டே தாழ்வான குரலில் பாடத்தொடங்குவது
கேட்டது. அவள் பாடுவதைக் கேட்கும்போது நான் பணக்காரன்தான் என்று நினைத்துக் கொண்டேன்.
ஒவ்வோர் இரவும் எதையாவது கனவு காண்கிற மனைவி எனக்கு இருக்கிறாள். தூக்கத்தில் நழுவும்
வரை எனக்கு பக்கத்தில் படுத்திருப்பவள், ஒவ்வோர் இரவும் எங்கெங்கோ தொலைதூரங்களுக்கு
வளப்பமான சொப்பனங்களில் ஏறிச்சென்று விடுகிறாள். குதிரைகளையும், வானிலை மாற்றங்களையும்,
மனிதர்களையும், கனவு காண்கிறாள், சில நேரங்களில் கனவுகளில் தனது பாலினத்தைக் கூட மாற்றிக்
கொள்கிறாள். எனக்கு கனவுகள் வராதது குறையாகவே இல்லை. ஒரு சொப்பன வாழ்வு எனக்கு வாய்க்க
வேண்டுமென்றால், நினைத்துப்பார்க்க அவள் கண்ட கனவுகள் இருக்கின்றன. மேலும் நாளெல்லாம்
பாடுகின்ற, ஹம்மிங் செய்கின்ற பக்கத்து வீட்டுக்காரி ஒருத்தியும் இருக்கிறாள். மொத்தத்தில்
நான் மிகவும் அதிர்ஷ்ட்டக்காரன்.
முன்பக்கச் சன்னலுக்குச் சென்று அந்தப் பக்கத்துவீட்டுக்
குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை வேடிக்கை பார்த்தேன். மேரி ரைஸ் இரண்டு குழந்தைகளுக்கும்
முகத்தில் முத்தமிடுவதைப் பார்த்தேன். “குட்பை சில்ரன்,’’ என்ற அவளது குரலைக் கேட்டேன்.வாசல்
திரையை மூடிவிட்டு, வெளியில் வந்து குழந்தைகளை தெருவில் நடந்து செல்வதை ஒரு நிமிடம்
நின்று கவனித்துவிட்டு திரும்பி வீட்டுக்குள் சென்றாள்.
அவளது பழக்க வழக்கங்கள் எனக்கு அத்துபடி. – இப்போது
ஒரு சில மணிநேரத்திற்குத் தூங்குவாள்- தினமும் வேலையை முடித்து விடியற்காலை ஐந்து மணியளிவில்தான்
வீட்டுக்கு வருவாள். அப்போது அவள் தூங்குவதில்லை. ரோஸ்மேரி பேன்டல் என்ற அண்டைவீட்டுப்பெண்
ஒருத்திதான் அவள் குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் ‘பேபி சிட்டர்’ . மேரி ரைஸ் வேலையிலிருந்து திரும்பும்
வரை காத்திருந்து, அவள் வந்தவுடன் கிளம்பி தெருவைக் கடந்து எதிர்சாரியில் இருக்கும்
அவள் வீட்டுக்குச்செல்வதைப் பார்த்திருக்கிறேன். அதன்பின் மேரிரைஸின் வீட்டில் விளக்குகள்
எரிந்து கொண்டேயிருக்கும். அவள் வீட்டுச் சன்னல்கள் இப்போது இருப்பதைப் போலத் திறந்திருக்கும்
சமயங்களின் கிளாசிக்கல் பியானோ சங்கீதம் கேட்கும். ஒரு முறை அலெக்ஸாண்டர் ஸ்கூம்பி
‘கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ்’ வாசிக்கும் கேஸட் ஒலிப்பதைக் கூட கேட்டிருக்கிறேன்.
சில நேரங்களில் எனக்குத் தூக்கம் வராதபோது - பக்கத்தில்
என் மனைவி தூங்கிக் கொண்டு, கனவுகண்டு கொண்டிருப்பாள் - படுக்கையிலிருந்து எழுந்து
மாடிக்குச் சென்று, மேசையில் அமர்ந்து அவளது இசையை, கதைகள் வாசிக்கும் இசைத்தட்டுகளை
கேட்டுக்கொண்டிருப்பேன், திரைக்குப்பின்னே அவள் கடந்து செல்வதையோ சன்னலுக்கருகே நின்றிருப்பதையோ
பார்ப்பதற்குக் காத்திருப்பேன். அவ்வப்போது, அகால நேரத்தில், அதிகாலையில் தொலைபேசி
ஒலிக்கும். மூன்றாவது சிணுங்கலிலேயே எப்போதும் எடுத்துப் பேசிவிடுவாள்.
அவள் குழந்தைகளின் பெயர்கள் மைக்கேல், சூசன் என்பதைத்
தெரிந்துகொண்டேன். மற்ற அண்டைவீட்டுக் குழந்தைகள் போலத்தான் அவர்களும் எனக்குத்தெரிந்தார்கள்,
ஆனால் அவர்களைப் பார்க்கும்போது, மனதுக்குள் அவர்களிடம் நீங்கள் அதிர்ஷ்ட்டசாலிக்குழந்தைகள்,
உங்களுக்கு அப்பா இல்லாத குறையே வேண்டாம் என்று சொல்லிக்கொள்வேன். ஒருமுறை துணிதோய்க்கும்
சோப்பு விற்றுக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார்கள். இன்னொருமுறை ஏதேதோ செடிகளுக்கு
விதைகள் விற்றுக்கொண்டு. எங்கள் வீட்டில் தோட்டம் இல்லை - நாங்கள் வசிக்கும் இடத்தில்
எதுவும் எப்படி வளரும்? - ஆனாலும் அதனால் என்ன, அவர்களிடம் விதைகள் வாங்கினேன். ஹாலோவீன்
தினத்தன்று, அவர்களுடைய அம்மா வேலைக்குச் சென்றிருந்ததால், அவர்களை கவனித்துக கொள்ளும்
பெண் ரோஸ்மேரி பேன்டலோடு வந்தார்கள். அவர்களுக்கு சாக்லேட்களை எடுத்துவந்து கொடுத்தேன்.
இந்தப்பகுதியில் வசிப்பவர்களிலேயே நாங்கள்தான்
பல ஆண்டுகளாக இருப்பவர்கள். எவ்வளவோ பேர் வந்து போனதைப் பார்த்திருக்கிறோம். மேரி ரைஸும்
அவள் கணவனும் குழந்தைகளோடு மூன்று வருடங்களுக்கு முன் குடியேறினார்கள். அவள் கணவன்
தொலைபேசி அலுவலகத்தில் லைன்மேனாக இருந்தான். வழக்கமாக காலை ஏழுமணிக்கு கிளம்பிச் சென்று
மாலை ஐந்துக்கு திரும்பி விடுவான். பின்பு மாலை ஐந்து மணிக்கு வருவது நின்றுபோனது.
தாமதமாக வருவான், இல்லாவிட்டால் வரவேமாட்டான்.
என் மனைவியும் அதை கவனித்துவிட்டாள். “மூன்று
நாளாக அவன் வீட்டுக்கு வந்ததாகவே தெரியவில்லை,’’என்றாள்.
“நானும் பார்க்கவில்லை,’’ என்றேன். சில நாட்கள்
கழித்து அங்கிருந்து உரத்த குரல்களும், குழந்தைகளில் ஒன்றோ அல்லது இரண்டுமோ அழுகின்ற
சத்தமும் கேட்டது.
பின்னர் என் மனைவி மார்க்கெட்டுககுச் சென்றிருந்துபோது
மேரிரைஸின் வீட்டுக்கு மறுபுறம் உள்ளே வீட்டுப்பெண், மேரியும் அவள் கணவனும் பிரிந்துவிட்ட
தகவலை சொல்லியிருக்கிறாள். “அந்த நாய்க்குப் பிறந்த பயல் அவளையும் குழந்தைகளையும் விட்டு
ஓடிவிட்டான்.“
அதன்பின், அவள் கணவன் வேலையை உதறிவிட்டு, ஊரையும்
விட்டுச்சென்றுவிட்டதால், குடும்பத்தைக் காப்பாற்ற மேரிரைஸ் ஒரு உணவகத்தில் மதுபானம்
பரிமாறுபவளாக வேலைக்குச் சேர்ந்துவிட்டாள். அதன் பிறகுதான் இரவு முழுக்க சங்கீதமும்,
கதைவாசிப்பு இசைத்தட்டுகளையும் கேட்பது ஆரம்பித்தது. கூடவே சிலநேரங்களில் பாடுவதும்,
சில நேரங்களில் ஹம்மிங் செய்வதும். மேரிரைஸின் அந்தப்பக்கத்து வீட்டுககாரி சொன்ன இன்னொரு
தகவல் மேரிரைஸ் பல்கலைகழகத்தின் இரண்டு அஞ்சல் வழி படிப்புகளில் சேர்ந்திருக்கிறாள்
என்பது. தனக்காக ஒரு புதுவாழ்க்கையை அமைத்துக்கொண்டிருக்கிறாள் என்று அப்பெண்மணி சொன்னாள்.
புதுவாழ்க்கை என்பது அவளுடைய குழந்தைகளையும் உள்ளடக்கியது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மழைக்காலம் நெருங்கிவிட்டது. சன்னல்களுக்கு மறைப்புத்திரை
போட முடிவெடுத்தேன். வெளியே ஏணியை வைத்து மேலேறி திரையைப் பொருத்திக் கொண்டிருந்த போது
பக்கத்து வீட்டுக்குழந்தைகள் மைக்கேலும் சூசனும் மேல்கோட்டு அணிந்து அவர்களுடைய நாயோடு
வெளியே ஓடிவந்தனர். திரைக்கதவை படீரென்று அறைந்து சார்த்திவிட்டு பெருக்கி குவித்து
வைத்திருந்த இலைச்சருகுகளை எட்டி உதைத்து, இறைத்துக் கொண்டு நடைபாதையில் தலைதெறிக்க
ஓடினர்.
மேரிரைஸ் அவர்களைக் கூப்பிட்டுக்கொண்டே வாசலுக்கு
வந்தாள். நிமிர்ந்து என்னைப் பார்த்தாள்.
“ஹலோ,’’என்றாள். “ மழைக்காலத்துக்கு தயாராகிவிட்டீர்கள்
போலிருக்கிறது. “ என்றாள்.
“ஆம்.’’ என்றேன். “ மழை சீக்கிரத்தில் தொடங்கிவிடும்.
“
“இல்லை, வராது.’’ என்றாள். வேறுஏதோ சொல்லப் போவதைப்
போல ஒரு நிமிடம் தயங்கினாள். பின். ‘’உங்களோடு பேசியதில் மகிழ்ச்சி,’’ என்றாள்.
“எனக்கும்,’’ என்றேன்.
இது ‘ தேங்ஸ் கிவிங் ‘ கிற்கு சற்று முன்பாக நடந்தது.
ஒரு வாரம் கழித்து மனைவிக்கு காபியும் பழச்சாறும் எடுத்துக்கொண்டு படுக்கையறைக்குள்
நுழைந்தபோது அவள் ஏற்கனவே விழித்துக் கொண்டு அன்றைய கனவை சொல்வதற்காக தயாராக உட்கார்ந்திருந்தாள்.
படுக்கையில் அவளுக்கருகே தட்டிக்காட்ட, அமர்ந்தேன்.
“இதை நிச்சயம் புத்தகத்தில் எழுதவேண்டும்,’’ என்றாள்.
’’ இதைவிட சுவாரஸ்யமாக வேறு எதுவும் இருக்கமுடியாது.’’
“சொல்.’’ என்றேன். அவளது கோப்பையிலிருந்து ஒரு
மிடறு சுவைத்துவிட்டு அவளிடம் தந்தேன். கைகள் குளிரில் விறைத்திருப்பதைப்போல கோப்பையை
இரண்டு உள்ளங்கைகளாலும் சுற்றிப் பொதித்துக்கொண்டாள்,
“நாம் ஒரு கப்பலில் இருக்கிறோம்,’’ என்றாள்.
“நாம் கப்பலில் சென்றதேயில்லை,’’ என்றேன்.
“அது தெரியும். ஆனால் கப்பலில் இருக்கிறோம். பெரிய
கப்பல், சொகுசுக் கப்பல் போல இருக்கிறது. படுக்கையிலோ, கப்பலின் ‘பங்க்‘ கிலோ படுத்திருக்கிறோம்.
யாரோ ஒரு தட்டு முழுக்க கப்கேக்குகளை வைத்துககொண்டு கதவைத் தட்டுகிறார்கள். உள்ளே வந்து
கப் கேக்குகளை வைத்துவிட்டு போய்விடுகிறார். நான் எழுந்து ஒரு கப்கேக்கை எடுக்கிறேன்.
பசியாக இருக்கிறது எனக்கு. ஆனால் கேக்கைத் தொட்டவுடன் விரலில் சுரீரென்று சுடுகிறது.
என் கால்விரல்கள் சுருண்டு கொள்கின்றன – பயப்படும்போது கால்விரல்கள் சுருண்டு கொள்ளுமே,
அதுபோல. படுக்கைக்கு திரும்பிவிடுகிறேன். சத்தமாக பாட்டு கேட்கிறது. ஸ்க்ரியாபின்னின்
சங்கீதம். அப்புறம் யாரோ கண்ணாடி கோப்பைகளை, ஆயிரக்கணக்கான கோப்பைகளை ஒரே நேரத்தில்
மோதி எழுப்புகின்ற சத்தம். நான் உங்களை எழுப்பிச் சொல்கிறேன். நீங்கள் வெளியே சென்று
பார்ப்பதாகச் சொல்லிவிட்டு போகிறீர்கள். நீங்கள் போனதும் கப்பல் சாளரத்தின் வழியே நிலா
ஒரு பக்கமாக நகர்வது தெரிகிறது. கப்பல் திரும்புகிறதோ என்னவோ. பின் நிலா, மீண்டும்
தெரிகிறது. மொத்த அறையும் நிலா வெளிச்சத்தில் நிறைகிறது. நீங்கள் திரும்பி வருகிறீர்கள்.
இரவு உடையில்தான் இருக்கிறீர்கள். ஒரு வார்த்தை கூட பேசாமல் படுத்துக்கொண்டு தூங்கி
விடுகிறீர்கள். சாளரத்திற்கு வெளியே நிலா பிரகாசமாகத் தெரிகிறது. அறையில் உள்ள எல்லாம்
ஜொலிப்பதைப் போல இருக்கிறது. நீங்கள் எதுவுமே சொல்லாமல் படுத்துக்கொண்டதை நினைத்து
பயப்படுகிறேன். என் கால்விரல்கள் மறுபடியும் சுருண்டு கொள்கின்றன. அப்புறம் நானும்
தூங்கி விடுகிறேன். – இதோ எழுந்து விட்டேன். நீங்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்
? விநோதமான கனவுதான், இல்லையா ? கடவுளே. இது எதை உணர்த்துகிறது? உங்களுக்கு கனவே வருவதில்லையா?
‘’ அவள் காப்பியை உறிஞ்சிக்கொண்டே என்னைப் பார்த்தாள்.
நான் தலையை ஆட்டினேன். என்ன சொல்வதென்று தெரியவில்லை.
எனவே இந்தக்கனவை நோட்டுப்புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள் என்று மட்டும் சொன்னேன்.
“கடவுளே எனக்கு ஒன்றும் புரியவில்லை. படுவிசித்திரமாக
இருக்கிறது. என்ன சொல்கிறீர்கள்?’’
“நோட்டில் எழுது.“
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கிறிஸ்துமஸ் விரைவிலேயே வந்துவிட்டது. மரம் ஒன்றை
வாங்கிவந்து கிருஸ்துமஸ் அன்று காலை அதை அலங்கரித்து வைத்தோம். பரிசுகள் பரிமாறிக்
கொண்டோம். டாட்டி எனக்காக ஒரு ஜோடி கையுறைகள், ஒரு பூமியுருண்டை, ’ஸ்மித்ஸோனியன்’ இதழுக்கு
சந்தா ஆகியவற்றைப் பரிசளித்தாள். அவளுக்கு ஒரு பர்ஃபியூமும் - அந்தச் சிறிய பார்சலை
பிரிக்கும்போது அழகாக வெட்கப்பட்டாள் – ஒரு நைட்கவுனும் கொடுத்தேன். என்னை அணைத்துக்கொண்டாள்.
பின் நகரத்துக்குச் சென்று நண்பர்களோடு இரவு உணவுண்டோம்.
கிருஸ்துமஸ்ஸிற்கும் புத்தாண்டுக்கும் இடையில்
குளிர் கடுமையாகியது. பனிப்பொழிவு ஆரம்பித்தது. நின்றது. மீண்டும் பொழிந்தது. மைக்கேலும்
சூசனும் வீட்டுக்கு வெளியே நீண்டநேரம் செலவழித்து ஒரு பனிமனிதன் செய்தனர். ஒரு காரட்டை
அதன் வாயில் செருகி வைத்தனர். அன்றிரவு அவர்களின் படுக்கையறை சன்னலில் டிவியின் வெளிச்சம்
பரவியிருந்தது. மேரிரைஸ் வேலைக்கு போய்க்கொண்டிருந்தாள். ரோஸ்மேரி குழந்தைகளை பார்த்துக்
கொள்ள தினமும் வந்து கொண்டிருந்தாள். தினமும் இரவில் எல்லா விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன.
புத்தாண்டுக்கு முன்தினம் நண்பர்களோடு இரவு உணவருந்த
நகரின் மறுமுனைக்குச் சென்றோம். பிரிட்ஜ் விளையாடிவிட்டு, கொஞ்சம் டிவி நிகழ்ச்சிகளைப்
பார்த்துவிட்டு, சரியாக இரவு பனிரெண்டு மணிக்கு ஷாம்பெய்னைத் திறந்தோம். ஹெரால்டுடன்
கைகுலுக்கினேன். இருவரும் சுருட்டு பிடித்தோம். பின் டாட்டியும் நானும் வீட்டுக்குத்
திரும்பினோம்.
இதற்கு மேல்தான் சோகக்கட்டம் ஆரம்பம் – எங்கள்
பகுதியை நெருங்கியதும் எங்கள் தெரு இரண்டு போலீஸ் கார்களால் அடைக்கப்பட்டிருந்தன. கார்களின்
உச்சியிலிருந்த விளக்குகள் முன்னும் பின்னும் சுழன்று கொண்டிருந்தன. வேடிக்கை பார்க்கும்
ஆர்வத்தில் வேறுசில கார்களும் நின்றிருந்தன. அண்டை வீடுகளிலிருந்தும் வந்து நின்றிருந்தனர்.
பெரும்பாலும் எல்லோரும் மேல்கோட்டுகள் அணிந்தும், சிலர் இரவு உடைகளிலும், அவசரமாக அணிந்துகொண்ட
கனத்த மேலாடைகளிலும் இருந்தனர். தெருவின் மறுகோடியில் இரண்டு தீயணைப்பு வண்டிகள் நின்றிருந்தன.
அதில் ஒன்று எங்கள் வீட்டு முற்றத்தில் இருந்தது. மற்றது மேரிரைஸ் வீட்டின் முகப்பில்.
காவல் அதிகாரியிடம் என் பெயரைச் சொன்னேன். அந்தப்
பெரிய தீயணைப்பு வண்டியை சுட்டிக்காட்டி, “அந்த வண்டி நிற்கும் இடத்திற்கு எதிரில்தான்
எங்கள் வீடு,’’ என்றேன். டாட்டி பதற்றத்தில் கீச்சிட்டாள். அதிகாரி எங்கள் காரை அங்கேயே
நிறுத்தவேண்டும் என்றார்.
“என்ன ஆயிற்று?’’ என்றேன்.
“அறை சூடேற்றிகளில் ஒன்று தீப்பிடித்துக் கொண்டது
என்று நினைக்கிறேன். அப்படித்தான் யாரோ சொன்னார்கள். இரண்டு குழந்தைகள் இருந்திருக்கிறார்கள்.
குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் ஒரு பெண்ணையும் சேர்த்து மூன்று பேர். அந்தப்பெண் தப்பித்துவிட்டிருக்கிறாள்.
குழந்தைகளால் முடியவில்லை. ஒன்றும் புரியவில்லை. புகையில் மூச்சடைத்திருக்கலாம்.’’
எங்கள் வீட்டை நோக்கி நடக்கத்தொடங்கினோம். டாட்டி
என்னோடு ஒட்டிக்கொண்டு கையை பற்றிக்கொண்டாள். ’’கடவுளே, கடவுளே,’’ என்றாள்.
மேரிரைஸின் வீட்டை நெருங்கியதும், தீயணைப்பு வண்டிகள்
பாய்ச்சிக் கொண்டிருந்த வெளிச்சத்தில், அந்த வீட்டுக் கூரையின் மேல் ஒருவன் நீர்க்குழாயோடு
நின்றிருப்பது தெரிந்தது. ஆனால் இப்போது அதிலிருந்து தண்ணீர் சிறுதாரையாக வடிந்து கொண்டுதான்
இருந்தது. படுக்கையறை சன்னல் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ஒரு ஆள் கையில் கோடாரி போல
எதையோ வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. முன்கதவைத் திறந்து கொண்டு
ஒருவன் வெளியே வந்தான். கையில் எதையோ தூக்கிக் கொண்டு வந்தான். அது அந்தக் குழந்தைகளின்
நாய். நான் உடைந்து நொறுங்கினேன்.
உள்ளூர் தொலைக்காட்சி நிலையத்தின் நடமாடும் படபிடிப்பு
வண்டியும் இருந்தது. காமிராவை தோளுக்கு மேலே உயர்த்திப் பிடித்தபடி ஒருவன் படமெடுத்துக்
கொண்டிருந்தான். அண்டை வீட்டார் கும்பலாக நின்றிருநதனர். தீயணைப்பு வண்டி இஞ்சின்கள்
ஓடிக்கொண்டிருக்க, அவ்வப்போது உள்ளேயிருந்த ஒலிபெருக்கிகளில் குரல்கள் உத்தரவிட்டுககொண்டிருந்தன.
ஆனால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் எதுவும் பேசாமல் எதற்காகவோ காத்துக் கொண்டிருப்பதைப்போல
நின்றுகொண்டிருந்தனர். அவர்களிடையே ரோஸ்மேரி அவளுடைய அம்மா அப்பாவோடு இருப்பதை கவனித்தேன்.
அதிர்ச்சியில் அவள் வாய் திறந்திருந்தது. சிறிது நேரம் கழித்து குழந்தைகளை ஸ்ட்ரெட்சர்களில்
கிடத்தி கொண்டுவந்தார்கள். அந்த தீயணைப்பு வீரர்கள் திடகாத்திரமாக, பூட்ஸ், கோட். தொப்பி
அணிந்து, எதுவும் அவர்களை சிதைக்கமுடியாதவர்களைப் போல, இன்னும் நூறுவருடங்கள் வாழப்போகிறவர்களைப்
போல இருந்தார்கள்.
வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பவர்களிடமிருந்து
, “ஓ , நோ,’’ என்று கேட்டது. மேலும் பல “ஓ,
நோ, நோ,’’ க்கள் கேட்டன. யாரோ அழுதார்கள்.
அவர்கள் ஸ்ட்ரெட்சரை தரையில் கிடத்தினார்கள்.
கோட்டும் கப்பளித் தொப்பியும் அணிந்த ஒருவர் முன்வந்து, இரண்டு குழந்தைகளிடமும் நெஞ்சில்
ஸ்டெதாஸ்கோப் வைத்து இதய்த்துடிப்பைத் தேடினார். பின் ஆம்புலன்ஸ் பணியாளர்களை நோக்கித்
திரும்பி தலையைசைக்க, அவர்கள் ஸ்ட்ரெட்சர்களை தூக்கிக்கொண்டு ஆம்புலன்ஸை நோக்கிச் சென்றனர்.
அப்போது ஒரு சிறிய கார் படுவேகமாக வந்த நிற்க,
மேரிரைஸ் பின்கதவைத் திறந்து கொண்டு குதித்தாள். ஆம்புலன்ஸ் ஆட்களை நோக்கிப் பாய்ந்தாள்.
“ அவர்களை கீழே வையுங்கள்!’’ என்று வீறிட்டாள். “கீழே வையுங்கள்!’’
பணியாளர்கள் நின்றனர். ஸ்ட்ரெட்சர்களை கீழே வைத்துவிட்டு
பின்னகர்ந்தனர். மேரிரைஸ் அவளுடைய குழந்தைகளைக் குனிந்து பார்த்தவடி சில நொடிகள் நின்றாள்.
ஊளையிடுவதைப்போல- ஆம் அந்த ஒலிக்கு வேறு சொல் இல்லை – அலறினாள். கூடியிருந்தவர்கள்
ஓரடி பின்னகர்ந்தனர். அவள் அப்படியே சரிந்து, ஸ்டெரச்சருக்கருகில் தெருவில் ஒதுக்கி
வைக்கப்பட்டிருந்த பனிக்குவியலில் உட்கார்ந்தாள். அவள் குழந்தைகளின் முகங்களில் கைகளைப்
பதித்தாள்.
ஸ்டெதாஸ்கோப்புடன் இருந்த கோட் ஆசாமி முன்னால்
வந்து மேரிரைஸுக்கு பக்கத்தில் முட்டியிட்டு அமர்ந்தார். இன்னொருவர் – அவர் தீயணைப்பு
தலைமை அதிகாரியாகவோ, உதவி அதிகாரியாகவோ இருக்கவேண்டும் – ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு
சாடை காட்டிவிட்டு மேரிரைஸின் தோள்களைப் பற்றி எழுப்பி நிற்கவைத்து ஆதுரத்தோடு அணைத்துக்
கொண்டார். கோட் அணிந்த மனிதரும் அவளுக்கு மறுபுறத்தில் நின்று கொண்டார். ஆனால் அவளைத்
தொடவில்லை. அவளை வீட்டுக்கு அழைத்து வந்திருந்த டிரைவர் வண்டியிலிருந்து இறங்கி என்ன
நடந்து கொண்டிருக்கிறது என்று பார்த்தான். அவன் ஒரு சின்னப்பையன். பயந்து காணப்பட்டான்.
பேருந்திலோ அல்லது வீட்டு வேலைகள் செய்யும்
பையனாகவோ இருக்கவேண்டும். மேரிரைஸின் துக்கத்தை அத்தனை கிட்டத்தில் பார்ப்பதற்கு
அவனுக்கு எந்த உரிமையும் இல்லை என்பது அவனுக்கும் தெரிந்திருந்தது. ஸ்ட்ரெட்சர் மீது
பதிந்த கண்களை விலக்காலேயே கூட்டத்திலிருந்து பின்னகர்ந்தான். அவர்கள் ஸ்ட்ரெட்சர்களை
ஆம்புலன்ஸின் பின் கதவைத்திறந்து உள்ளே ஏற்றினார்கள்.
“ நோ,’’ மேரி ரைஸ் துள்ளிக்கொண்டு ஆம்புலன்ஸில்
ஸ்ட்ரெட்சர்களோடு சேர்ந்து ஏறிக்கொள்ள பாய்ந்தாள்.
வேறுயாரும் எதுவும் முயற்சி செய்யாமல் அமைதியாக
நின்றிருக்க, நான் அவளருகே சென்று , அவள் கையை எடுத்து “ மேரி, மேரி ரைஸ்,’’என்றேன்.
அவள் வெடுக்கென்று திரும்பினாள். “ யார் நீ? உனக்கு
என்ன வேண்டும்?’’ என்று கத்தினாள். கையை பிடுங்கிக்கொண்டு
என் கன்னத்தில் பளீரென்று அறைந்தாள். அந்த பணியாளர்களோடு அவளும் ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்டாள்.
ஆம்புலன்ஸ் சைரன் ஒலிக்க நகரத்தொடங்க, வழியிலிருந்தவர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
அன்றிரவு சரியாகத் தூக்கம் வரவில்லை. டாட்டி தூக்கத்தில்
ஏதேதோ புலம்பியபடி புரண்டுகொண்டே இருந்தாள். ஏதோ கனவின் மீதேறி என்னிடமிருந்து தொலைதூரத்திற்கு
சென்றிருக்கிறாள் என்று தெரிந்தது. அடுத்த நாள் காலை எழுந்ததும், என்ன கனவு என்று நானும்
கேட்கவில்லை. அவளும் சொல்லவில்லை. ஆனால் பழச்சாறும் காபியும் எடுத்துக்கொண்டு சென்றபோது
மடியில் நோட்டுப்புத்தகத்தை வைத்துக்கொண்டு பேனாவோடு உட்கார்ந்திருந்தாள். பேனாவையும்
நோட்டையும் மூடிவைத்துவிட்டு என்னைப் பார்த்தாள்.
“பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது?’’ என்று கேட்டாள்.
“எதுவுமில்லை,’’ என்றேன். “வீடு இருட்டாக இருக்கிறது.
பனி முழுக்க வண்டிகளின் சக்கரத்தடங்கள், அந்தக் குழந்தைகளின் படுக்கையறை சன்னல் உடைக்கப்பட்டிருக்கிறது.
அவ்வளவுதான், வேறேதுவுமில்லை. அந்தப் படுக்கையறை சன்னலை மட்டும் பார்க்காவிட்டால் தீவிபத்து
நடந்த வீடுபோலவே தெரியவில்லை. இரண்டு குழந்தைகள் இறந்திருக்கிறார்கள் என்றே தெரியாது.’’
“அந்தப் பெண் பாவம். கடவுளே, ரொம்ப பரிதாபமான
அதிருஷ்டங்கெட்ட பெண். கடவுள்தான் அவளைத் தேற்ற வேண்டும். நம்மையுந்தான்.’’
அன்று காலை முழுக்க கார்களில் செல்பவர்கள் எங்கள்
வீட்டை நெருங்கியதும் மெதுவாகி, அந்த வீட்டைப் பார்த்துக்கொண்டு சென்றார்கள். சிலர்
இறங்கி, வீட்டின் முன்நின்று, அந்தச் சன்னலை, வீட்டுக்கெதிரே உறைபனி காலடிகளிலும் வண்டித்தடித்திலும்
மிதிப்பட்டு கலைந்திருப்பதை பார்த்துவிட்டுச் சென்று கொண்டிருந்தனர். மதியம் போல சன்னல்
வழியாக பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு ஸ்டேஷன் நிலைய வண்டி வந்து நின்றது. மேரி ரைஸும்
அந்தக் குழந்தைகளின் தகப்பனான அவளுடைய முன்னாள் கணவனும் வண்டியிலிருந்து இறங்கி மெதுவாக
வீட்டை நோக்கிச் சென்றனர். படியேறும் போது அவன் அவளைப் பிடித்துக்கொண்டான். நேற்றிரவிலிருந்து
திறந்தேயிருந்த வீட்டின் மூடுமுன்றில் கதவைத் தள்ளிக்கொண்டு அவள் முதலில் உள்ளே நுழைந்தாள்.
அதன்பின் அவன் சென்றான்.
அன்றிரவு உள்ளூர் தொலைக்காட்சியில் எல்லாவற்றையும்
மீண்டும் பார்த்தோம். டாட்டி , “ இதை என்னால் பார்கக முடியாது,’’ என்றாள். ஆனால் என்னுடன்
சேர்ந்து பார்த்தாள். அந்தச் செய்தியில் முதலில் மேரி ரைஸின் வீட்டையும், கூரையின்
மீது ஒருவன் நின்று கொண்டு உடைந்த கண்ணாடி வழியாக தண்ணீரை குழாயில் பீய்ச்சிக் கொண்டிருப்பதையும்
காட்டினார்கள். அப்புறம் குழந்தைகளைத் தூக்கி வருவது. பின்னர் மேரி ரைஸ் மடங்கி விழுவதை
மீண்டும் பார்த்தோம். அதன்பின் ஸ்ட்ரெட்சரை ஆம்புலன்ஸில் ஏற்றும்போது மேரி ரைஸ் யாரையோ
நோக்கி வெடுக்கென திரும்பி கத்துகிறாள் : “உனக்கு என்ன வேண்டும்?’’
அடுத்தநாள் மதியம் ஸ்டேஷன் வண்டி அந்த வீட்டெதிரே
வந்து நின்றது. அவன் இன்ஜினை அணைப்பதற்கு முன்பாகவே மேரி ரைஸ் படிகளில் இறங்கி வந்தாள்.
அவன் வண்டியிலிருந்து இறங்கி, “ஹலோ, மேரி.’’ என்று பயணிகள் பகுதி கதவை அவளுக்காகத்
திறந்தான். அவர்கள் நல்லடக்கத்திற்கு சென்றனர்.
அன்று மாலை டாட்டி அவள் கண்ட கனவைச் சொன்னாள்.
அவள் ஏதோவொரு கிராம வீட்டில் இருக்கிறாள். சன்னல் வழியாக ஒரு வெள்ளைக் குதிரை தலையை
நீட்டிப் பார்க்கிறது. பிறகு அவள் விழித்துக் கொண்டாளாம்.
“நமது துக்கத்தைச் சொல்கிறார்போல எதையாவது செய்ய
வேண்டும்,’’ என்றாள் டாட்டி. “அவளை இரவு உணவுக்கு அழைக்கலாம்.’’
ஆனால் நாட்கள் நகர்ந்தன. டாட்டியும் நானும் அவளை
அழைப்பதற்கு எதுவும் செய்யவில்லை. மேரி ரைஸ் வேலைக்குத் திரும்பினாள். இப்போது ஓர்
அலுவலகத்தில் பகல் நேரத்தில் மட்டுமே பணிபுரிந்தாள். காலையில் வீட்டை விட்டுக் கிளம்பி,
மாலை ஐந்து மணி ஆனதும் திரும்பி வருவதைப் பார்த்தேன். இரவு பத்துமணியளவில் விளக்குகள்
அணைக்கப்பட்டுவிடும். அந்த அறைக்கதவு மூடியே வைக்கப்பட்டிருந்தென்று நினைத்தேன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மார்ச் மாத இறுதியில் ஒரு சனியன்று அந்த மழை மறைப்புத்திரையை
கழற்றுவதற்காக வெளியே வந்தேன். ஏதோ சத்தம் கேட்டுப் பார்த்தபோது மேரி ரைஸ் மண்வெட்டியில்
குப்பை அள்ளிக் கொண்டு, வீட்டுக்குப் பின்னால் கொட்டிக்கொண்டிருந்தாள். அரைக்கை சட்டையும்
ஸ்வெட்டரும், கோடைக்காலத் தொப்பியும் அணிந்திருந்தாள். “ ஹலோ,’’ என்றேன்.
“ஹலோ,’’ என்றாள். “நான் கொஞ்சம் அவசரப்படுகிறேன்
என்று நினைக்கிறேன். நிறைய சமயம் இருக்கிறதுதான், ஆனால் இந்தப் பொட்டலத்தில் வருடத்தின்
இந்தக் காலத்தில்தான் விதைக்க வேண்டும் என்று போட்டிருக்கிறது,’’ என்று சட்டைப்பையிலிருந்து
விதைகள் அடங்கிய பொட்டலத்தை எடுத்துக்காட்டினாள். ’’சென்ற வருடம் என் குழந்தைகள் தெரு
முழுக்கச் சென்று விதைகள் விற்றார்கள். இப்போது இழுப்பறைகளை சுத்தம் செய்யும்போது சில
பொட்டலங்கள் இருந்தன.’’
எனது சமையலறை இழுப்பறையிலும் இந்த விதைப்பொட்டலங்கள்
இருப்பதை நான் சொல்லவில்லை. “ நானும் என் மனைவியும் ரொம்ப நாட்களாக உங்களை இரவு உணவுக்கு
அழைப்பதென்று பேசிக்கொண்டிருக்கிறோம்,’’ என்றேன். “இன்றிரவு வர முடியுமா? வேலை எதுவும்
இல்லாவிட்டால் வருகிறீர்களா?’’
“வரலாம் என்றுதான் நினைக்கிறேன். சரி, ஆனால் உங்கள்
பெயர் கூட எனக்குத் தெரியாது. உங்கள் மனைவியின் பெயர் கூட.’’
என் பெயரையும் அவள் பெயரையும் சொன்னேன். “மாலை
ஆறு மணிக்கு வர முடியுமா?’’
“எப்போது ? ஓ சரி, ஆறு மணிக்கு.’’ அவள் மண்வெட்டியை
நிலத்தில் கொத்தினாள். “நான் இந்த விதைகளை விதைத்து முடிக்கிறேன். ஆறுமணிக்கு வந்து
விடுவேன். நன்றி.’’
நான் டாட்டியிடம் இரவு உணவைப்பற்றிச் சொல்ல வீட்டுக்குள்
சென்றேன். தட்டுகளையும் வெள்ளிப் பாத்திரங்களையும் வெளியில் எடுத்தேன். அடுத்தமுறை
வெளியே வந்து பார்த்தபோது மேரி ரைஸ் தோட்டத்திலிருந்து சென்று விட்டிருந்தாள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கருத்துகள்
கருத்துரையிடுக