ருசிகர் - கசுவோ இஷிகுரோ

 

ருசிகர்

கசுவோ இஷிகுரோ

தமிழில் : ஜி.குப்புசாமி


1. லண்டன் தெரு ஒன்றில் ஒரு தேவாலயம். 1904 இரவு

தெருவிலிருந்து உள்ளடங்கியிருக்கும், மிகப் பெரியதொரு தேவாலயம். குதிரை வண்டி ஒன்று வெளியே நிற்கிறது.

Close Shot: தேவாலயக் கதவில் மாட்டப்பட்டிருக்கும் மரப்பலகையில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள்.

பசியாயிருந்தேன், எனக்கு போஜனங்கொடுத்தீர்கள்;

தாகமாயிருந்தேன், என் தாகத்தைத்

தீர்த்தீர்கள்;

அந்நியனாயிருந்தேன், என்னைச்

சேர்த்துக் கொண்டீர்கள்;

மத்தேயு 25:35

2. தேவாலயத்தின் நிலவறை. இரவு

Point of View: லாந்தர் விளக்கைப் பிடித்துக்கொண்டு அந்த இருண்ட நிலவறையைச் சுற்றித் தேடும் பிரதான பாத்திரங்கள். லாந்தர் வெளிச்சம். கந்தல் உடைகளில் ஒருவர்மேல் ஒருவர் சாய்ந்துகொண்டு, எல்லாவித நிலைகளிலும் தூங்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள். கதம்பமாகக் குறட்டை ஒலிகள்.

3. தேவாலயம். இரவு

பிரசங்க மேடையிலிருந்து தெரியும் காட்சிகள். நிழல்கள். ஜன்னல்களின் வழியாகக் கீழே சரியும் நிலவொளியால் அங்கே காலியாக இருக்கும் சாய்மானத் திண்ணைகளைப் பார்க்கிறோம்.

கனத்த மூச்சிறைப்பு மட்டும் கேட்கிறது. முக்கி முனகிக்கொண்டு வரும் இருமனிதர்களின் ஒலிகள் குழப்பமாக கேட்கின்றன. மெதுவாகத் தெளிவாகிறது. அவர்களது வடிவங்கள் நிழலிலிருந்து வெளிப்பட்டு பக்கவாட்டு நடைவழியாக நம்மை நோக்கி மெதுவாக வருகின்றன. கனமான எதையோ அவர்கள் தூக்கி வருகிறார்கள்.

சதித்தொனியில் கிசுகிசுக்கப்படுவதை மறுபடியும் கேட்கிறோம்; வார்த்தைகள் ஓரளவே புரிகின்றன.

முதல் கிசுகிசுப்பு: ஒருவேளை அங்கேதானா? (கனமான மூச்சிறைப்பு) அந்தக் கதவு

இரண்டாம் கிசுகிசுப்பு: ஆமாம் ஆமாம் (கனத்த மூச்சிரைப்பு) ஆடையறை வழியாக எடுத்துப்போய் விடலாம்.

முதல் கிகிகிசுப்பு: இன்னும் கொஞ்சதூரம். நீ சொன்னதைப் போல ஆடையறை.

4. ஆடையறை, பின்னறைக்கான கடைவாயில்

ஜன்னல்வழியாக வரும் நிலவெளிச்சத்தில் அந்த ஆடையறை சிறிய காலியான அறை என்பது தெரிகிறது. தற்சமயம் பின்னறைக்குச் செல்லும் கடைவாயிலில்தான் நமது ஆர்வம். இந்தக் கடைவாயிலுக்குக் கதவுகள் இல்லை. இருட்டாக, வேறொரு உலகிற்கு இட்டுச் செல்வதைப்போல ஒரு தீக்குறியை ஏற்படுத்துகிறது.

இடையில் கிசுகிசுப்புகள் தொடர்கின்றன.

முதல் கிசுகிசுப்பு: ஆமாம், நீ சொல்வது சரிதான். முதலில் இதை வெட்டித் துண்டாக்கிவிடலாம்.

இரண்டாம் கிசுகிசுப்பு: ஆமாமாம். (கனமான மூச்சிறைப்பு) ஆடையறைக்குள் கொண்டு சென்றுவிடலாம்.

முதல் கிசுகிசுப்பு: இன்னும் கொஞ்சம். நீ சொன்ன மாதிரி ஆடையறை.

5. தேவாலயம். இரவு

Long Shot தேவாலயம். நாம் மெதுவாக நெருங்குகிறோம். தூரத்தில் குதிரையின் குளம்பொலிகள்.

6. ஆடையறை. பின்னறையின் கடைவாயில்

அந்தக் கரிய கடைவாயிலை நோக்கி இன்னமும் சென்றுகொண்டிருக்கிறார்கள். கிசுகிசுப்புகள் தொடர்கின்றன.

முதல் கிசுகிசுப்பு: ஆமாமாம். இதே வழிதான் நினைக்கிறேன்.

இரண்டாம் கிசுகிசுப்பு: இங்கே திரும்ப வேண்டுமா?

முதல் கிசுகிசுப்பு: ஆமாம், இதே வழியாகத்தான்.

இப்போது கடைவாயில்வரை வந்துவிட்டோம், ஆனால் வாயிலூடாகக் கும்மிருட்டுதான் புலப்படுகிறது.

பின் மெதுவாக நாம் கீழே இறங்குகிறோம். ஆடையறையின் தரையில் மெல்லிய கோடாக ரத்தம் நம்மை நோக்கி இருட்டிலிருந்து வருகிறது.

7. விமான நிலைய ஓடுதளம். பகல். 1985

ஜெட் விமானம் இறங்கிக் கொண்டிருக்கிறது.

8. விமான நிலைய கார் நிறுத்துமிடத்தின் மேற்தளம். பகல்.

கார்ட்டர் மேற்தளத்தின் ஓரத்தில் நின்றுகொண்டு விமானம் இறங்குவதைக் கவனிக்கிறான்.

கார்ட்டர், 25 வயது மதிக்கத்தக்க, ஒல்லியான, நேர்த்தியான வாகன ஓட்டி சீருடையில் கருப்புக் கண்ணாடியும், முகத்தின் மேல்பாதிவரை சரிந்திருக்கிற தொப்பியும் அணிந்திருக்கும் இளைஞன். தொப்பி மறைத்தாலும் அந்த முகத்தின் உணர்ச்சியற்ற பாவம் அவனுக்கு ஒருவித கொலைகாரத்தனத்தை ஏற்படுத்துகிறது.

தனது கைக்கடிகாரத்தைப் பார்த்துவிட்டு ஓடுதளத்தை நோக்கித் திரும்பி நடக்கிறான். அவன் எதிர்பார்த்திருந்த விமானம் அதுவாகத்தான் இருக்க வேண்டும். வேண்டுமென்றே நிதானமாக நடக்கிறாற்போல் அலட்டலில்லாமல் நடந்து காட்சிக்கு வெளியே செல்கிறான்.

9. வாகனப்பாதை. பகல்.

ரோல்ஸ் ராய்ஸ் சென்றுகொண்டிருக்கிறது.

10. கார்

கார்ட்டர் ஓட்டிக் கொண்டிருக்கிறான். இன்னமும் கறுப்புக் கண்ணாடிதான் அணிந்திருக்கிறான். படம் முழுக்கவே அதுபோல்தான் இருக்கப்போகிறான்.

மான்லி கிங்ஸ்டன் பின்னிருக்கையில் தன் மடியில் இருக்கும் எதிலேயோ கவனமாக இருக்கிறார்.

மான்லி ஐம்பதுகளில் இருப்பவர். பருமனான, பிரிட்டிஷ் மேற்தட்டு மனிதர்களுக்கான தோற்றம். முகத்தில் ஆணவமும், சலிப்பும் ஸ்திரமாகப் பதிந்திருக்கிறது.

இந்தப் பெரிய மனிதத் தோற்றத்திலும் ஒருவித அயோக்கியத்தனமும், திருட்டுத்தனமும் எப்படியோ கலந்திருக்கிறது.

Close up: மான்லியின் கையில் தேவாலயத்தின் புகைப்படம். முன்பே நாம் பார்த்திருக்கும் தேவாலயம்தான். மான்லியின் மடியிலிருக்கும் கைப்பெட்டியிலிருந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

மான்லியின் முகம் Close up :

புகைப்படத்தில் இருக்கிற விபரங்களை நுணுக்கமாக ஆராய்கிற பாவம்.

Close up: திறந்திருக்கும் கைப்பெட்டிக்குள் மற்ற ஆவணங்களுடன் படத்தை வைக்கிறார். வேறு எதையோ தேட வந்து இப்படத்தை எடுத்ததைப் போலத் தெரிகிறது. பெட்டிக்குள் இருப்பவற்றை ஆராய்கிறார். தேவாலயத்தின் இரண்டு வரைபடங்கள் நமக்குத் தெரிகின்றன. வளையத்தில் மாட்டிய மூன்று சாவிகள், அவற்றில் அடையாள அட்டைகள் மாட்டப்பட்டுள்ளன. ஒன்றில் ஆடையறைஎன்றிருக்கிறது. மான்லி அவற்றை ஒதுக்கிவிட்டு தொடர்ந்து தேடுகிறார். கார்ட்டர் மௌனமாக வண்டியை செலுத்திக்கொண்டிருக்க, மான்லி கைப்பெட்டியில் கவனமாக இருக்கிறார்.

வரப்போகும் உரையாடலில் கார்ட்டரின் குரலில் விரோதமும், ஏளனமும் மெலிதாகத் தெரிகிறது. மான்லிக்கு, அவை உறைக்காத அளவிற்கு யோசனை. கார்ட்டருக்கு லண்டனின் தொழிலாள வர்க்கத்தின் பேச்சு வழக்கு.

கார்ட்டர்: பிரேஸிலில் நல்ல சீதோஷ்ணமா சார்?

மான்லி: (பெட்டியிலிருந்து தலை நிமிராமல்) பராகுவே.

கார்ட்டர்: என்ன சார்?

மான்லி: பராகுவே. பராகுவேயிலிருந்து வருகிறேன்.

கார்ட்டர்: மன்னிக்க வேண்டும், சார். மேடம் நீங்கள் பிரேஸிலில் இருப்பதாகச் சொன்னார்கள்.

மான்லி: இருந்தேன். அந்த இடம் எனக்கு அலுத்துவிட்டது.

மான்லி தான் தேடிக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்துவிட்டார். ஒரு விலாச அட்டை. முன்னால் குனிந்து கார்ட்டரிடம் அதை நீட்டுகிறார்.

மான்லி: வீட்டிற்குப் போகுமுன் இந்த விலாசத்திற்குப் போய்விட்டுச் செல்ல வேண்டும். கார்ஸன்.

கார்ட்டர் தலையைத் திருப்பாமல் வாங்கிக் கொள்கிறான். அதைப் பார்த்துவிட்டு டாஷ் பேர்டின்மேல் வைக்கிறான்.

மான்லி இருக்கையில் பின்நகர்ந்து சௌகரியமாகச் சாய்ந்துகொண்டு ஜன்னலுக்கு வெளியே வெறிக்கிறார். இன்னமும் முகத்தில் பலத்த யோசனை.

கார்ட்டர்: கார்ட்டர், சார்.

மான்லி: என்ன?

கார்ட்டர்: பெயர் கார்ட்டர், சார்.

மான்லி: (பொறுமையின்றி சன்னலுக்குத் தலையைத் திருப்பிக்கொண்டு)

, சரி, சரி.

கார்ட்டர் முகத்திற்கு வருகிறோம். அந்தக் கருப்புக் கண்ணாடிக்குப் பின்னால் நிகழும் மாற்றங்களை ஊகிக்க முடிவதில்லை.

11. லண்டன்

லண்டனுக்குள் ரோல்ஸ் செல்லும் வரிசையான காட்சிகள்.

12. டாக்டர் கிராஸ்வெனர் வீடு. பகல்.

ரோல்ஸ் மிகப் பகட்டானதொரு வீட்டின்முன் நிற்கிறது. மான்லி வெளியே வந்து விலாச அட்டையைச் சரிபார்க்கிறார். காரை நோக்கி அலட்சியமாகக் கையசைத்துவிட்டு வீட்டினுள் செல்கிறார்.

13. டாக்டர் கிராஸ்வெனரின் முகப்பறை

வீட்டிற்குள்ளிலிருந்து அடங்கின பேச்சுக்குரல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அழைப்புமணி அடிக்கிறது.

காட்சிக்குள் வாட்கின்ஸ் வருகிறான். பின்தோற்றம். முகம் தெளிவாகத் தெரிவதில்லை. கதவைத் திறக்கிறான். வாசலில் மான்லி.

வாட்கின்ஸ்: (திரும்பி: மலர்ச்சியுடன்) குட் ஆஃப்டர்நூன் சார்.

மான்லி: ம், என் பெயர் மான்லி கிங்ஸ்டன். டாக்டர் கிராஸ்வெனர் என்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

வாட்கின்ஸ்: வாருங்கள் திரு கிங்ஸ்டன். (மான்லியின் பார்வையைக் கவனித்து)ஓ, நாங்கள் ஒரு சிறிய வரவேற்பு நடத்திக் கொண்டிருக்கிறோம். எடுவார்டோ பெரஸ் லண்டன் வந்திருக்கிறார். தனது புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்த விரும்பினார்.

மான்லி: (கவனம் கலைந்து) அப்படியா?

மான்லி உள் அறையையே உற்றுப்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரை அழைத்துச் செல்ல வேண்டிய வாட்கின்ஸ், பிரபலஸ்தர் ஒருவரின் அண்மையில் தான் இருப்பதைப் பரவசத்துடன் ரசித்துக்கொண்டு அவரையே புளகாங்கிதமாகப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். மான்லி வீட்டின் உள்ளே செல்ல யத்தனிக்கிறார்.

மான்லி: டாக்டர் கிராஸ்வெனர் இப்போது....?

வாட்கின்ஸ்: (திடீரெனச் சுயநினைவிற்கு வந்தவனாக) ஆ, ஆமாம். முதலில் நீங்கள் அருந்துவதற்குத் தருகிறேன், திரு. கிங்ஸ்டன். பிறகு நான் சென்று அவரைப் பார்க்கிறேன்.

14. டாக்டர் கிராஸ்வெனரின் இல்லம். வரவேற்பறை

அழகான, விசாலமான அறை. இருபது பேர்களுக்கு மேல் விருந்தினர்கள் பங்கெடுக்கும் அளவிற்கு விசாலம். நடுத்தர வயதிலிருந்து முதியவர்கள் வரை இருந்த அவ்விருந்தினர்கள், சம்பிரதாயமான உடைகளில் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் அல்லது இசை விமரிசகர்கள் மாதிரி தோற்றமளிக்கின்றனர். ஆண்கள் அதிகம்பேர் காணப்படுகிறார்கள். மூன்று நான்கு பேர்கள் கொண்ட குழுக்களாக நின்றுகொண்டு ஒயின் அருந்திக் கொண்டிருக்கின்றனர்.

வாட்கின்ஸ், மான்லியை ஒயின் அடுக்கப்பட்டிருக்கும் இடம் நோக்கி அழைத்துச் செல்கிறான். மான்லியும், வாட்கின்சும் தங்களைக் கடக்கையில் இரண்டுபேர் பேசுவதை நிறுத்தி விடுகின்றனர். மான்லியைத் திருட்டுத்தனமாகத் திரும்பிப் பார்க்கின்றனர். மேலும் கீழும் அவரை உன்னிப்பாகக் கவனிக்கும் அவர்கள் முகங்கள் மாறுகின்றன. லேசான அருவருப்பு அவர்களிடம் தெரிகிறது. அந்தப் பொதுவான உரையாடல்களுக்கு மத்தியில் இந்தக் குரல் மட்டும் அடங்கித் தனியாகக் கிசுகிசுக்கப்படுவது கேட்கிறது.

ஆண்குரல் 1 : மொத்தமாகப் பார்க்கும்போது உங்களுடன் நானும் உடன்படுகிறேன். நீங்கள் சொல்வது வாஸ்தவம். அந்தத் தலைமுறை மொத்தத்திற்கும் மையநோக்கம் புரதம் சம்மந்தப்பட்டதாகவே இருந்தது. (குரலைத் தாழ்த்தி) இங்கே பார், அது மான்லி கிங்ஸ்டன் தானே? அதோ, அங்கே...

15. வரவேற்பரை. ஒரு மூலை

வாட்கின்சும் மான்லியும் ஒயினுடன் ஒரு மேசையை அடைகின்றனர். வாட்கின்ஸ் மான்லிக்கு ஒரு கண்ணாடிக் கோப்பையை நீட்டுகிறான்.

வாட்கின்ஸ்: நான் போய் டாக்டர் கிராஸ்வெனரைப் பார்த்து வருகிறேன். கொஞ்சநேரத்தில் வந்துவிடுகிறேன் திரு.கிங்ஸ்டன்.

காட்சியைவிட்டு வாட்கின்ஸ் மறைகிறான். மான்லி தீவிரமான யோசனையில் இருக்கும் பாவத்துடன் திரும்பி மேசையில் அமர்கிறார். காமிராவிற்கும், அறையின் மற்ற பகுதிக்கும் முதுகைத் திருப்பி அமர்ந்திருக்கிறார்.

இதற்கிடையில் அந்த அறையின் பொதுவான சலசலப்பிற்கு மத்தியில் இந்தக் குரல் பிரிந்து கேட்கிறது.

ஆண்குரல் 2 : அதெல்லாம் இல்லை, அதெல்லாம் இல்லை; என்னைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள். டி மாண்டேரின் கைவண்ணம் எனக்கு எப்போதுமே பிடிக்கும். நுண்ணிய ரசனை கொண்டவர் அவர்... ஆனால் இந்த ஆள் நடந்துகொள்வதைப் பார்த்தால் ஏதோ இசைவில்லாமல் தெரிகிறதல்லவா?

இதுவரை நாம் பார்க்காத இரு விருந்தினர்கள் மான்லியை நெருங்குகின்றனர். நரைத்த தலையுடன் உள்ள கனவான் பெயர் ப்ரொட்டெர்ஸ்டன். கூட இருக்கும் ஜப்பானியன் பெயர் டகேடா. அவர்கள் முதலில் தமது கோப்பைகளை நிரப்பிக் கொள்ள வந்தார்களா அல்லது மான்லியைப் பார்க்கவா என்பது தெளிவாகத் தெரிவதில்லை.

மான்லி முதுகைத் திருப்பிக்கொண்டு அமர்ந்திருக்கிறார். ப்ரொட்டெர்ஸ்டன் அவர் கவனத்தை ஈர்க்க முயல்கிறான். இதற்கிடையில் டகேடா மான்லியை ஏதோ ஒரு அருங்காட்சியகப் பொருளைப் பார்க்கிற மாதிரி பார்த்துக்கொண்டிருக்கிறான்.

பெண்குரல்: டி மாண்டேர் தனது சிறந்த படைப்புகளையெல்லாம் அறுபதுகளின் மத்தியிலேயே செய்து முடித்துவிட்டார் என்றே எனக்குத் தோன்றுகிறது. நீங்கள் சொல்வதை நானும் ஒப்புக்கொள்கிறேன்... (பொது சலசலப்பில் குரல் தேய்கிறது)

ப்ரொட்டெர்ஸ்டன்: (இறுதியில் நேரடியாகவே கேட்டுவிடுகிற முடிவோடு) மன்னிக்கவும், திரு.மான்லி கிங்ஸ்டன் தானே?

மான்லி திரும்பி சிந்தனைகளிலிருந்து கலைகிறார். தனது ஒயினை அவர் தொட்டேயிருக்கவில்லை. ப்ரொட்டெர்ஸ்டன் மென்மையாகப் புன்னகைக்கிறான். டகேடா இன்னமும் அவரையே முறைத்துக்கொண்டிருக்கிறான்.

மான்லி: அ? ஆமாம்.

ப்ரொட்டெர்ஸ்டன்: இது உண்மையிலேயே சந்தோஷமளிக்கிறது. என் பெயர் ப்ரொட்டெர்ஸ்டன்.

ப்ரொட்டெர்ஸ்டன் தனது பெயரை அடையாளம் கண்டுகொள்வார் என எதிர்பார்க்கிறான்.

மான்லி: (அடையாளம் கண்டுகொண்டதற்கான அறிகுறியின்றி) ஓ, அப்படியா?

ப்ரொட்டெர்ஸ்டன்: (ஒரு சிறிய சிரிப்புடன்) சொல்லப்போனால் உங்களைப் பற்றி எனது Gourmet Academicaவின் வேனிற்பருவ இதழில் கட்டுரை ஒன்று வெளியிட்டிருக்கிறேன். நீங்கள் அதைப் பார்த்திருக்கக் கூடுமென்று நினைத்தேன்.

மான்லி: (ஆர்வமேயில்லாமல்) நான் பார்க்கவில்லை.

மான்லி இப்போது டகேடா தன்னை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனிக்கிறார். அவனை எரிச்சலோடு பார்க்கிறார்.

ப்ரொட்டெர்ஸ்டன்: ஓ - இது திரு. டகேடா.

டகேடா: (கனமான உச்சரிப்புடன்) பெரிய கௌரவம் (தனது கையை நீட்டாமல் இன்னமும் அவரை முறைத்துக் கொண்டே) பெரிய கௌரவம், மான்லி கிங்ஸ்டன், மாபெரும் கௌரவம் உங்களைச் சந்தித்தது.

ப்ரொட்டெர்ஸ்டன்: உங்களிடம் இதைக் குறிப்பிட்டாக வேண்டும், திரு. கிங்ஸ்டன். எனது கட்டுரை உங்கள் -ம்... - அணுகுமுறையை முழுதாக ஆதரித்தே இருந்தது, சிலகாலமாகவே உங்களைப் பார்த்து வியந்து வந்திருக்கிறேன். ஏதோ, என்னாலான சிறிய வழியில் உங்கள் ஆதரவாளர்களுக்கு உதவுகிற மாதிரி நானும் குரல் கொடுத்தேன்.

மான்லி வாட்கின்ஸை அறையைச் சுற்றிலும் பார்த்துத் தேடுகிறார்.

மான்லி: நன்றி. கிடைத்தால் படித்துப் பார்க்கிறேன்.

டகேடா இப்போது தனது தாய்மொழியில் படுவேகமாகப் பேசுகிறான். மான்லியைச் சுட்டிக்காட்டி ப்ரொட்டெர்ஸ்டனிடம் பலமாகக் கையை, தலையை ஆட்டிப் பேசிக்கொண்டிருக்க, ப்ரொட்டெர்ஸ்டன் மௌனமாகத் தலையை மட்டும் அசைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறான். மான்லி காமிராவைத் தாண்டி இருக்கும் எதையோ கவனித்துக்கொண்டிருக்கிறார்.

ப்ரொட்டெர்ஸ்டன்: திரு டகேடா நீங்கள் லண்டனுக்கு என்ன காரணத்திற்காக வந்திருக்கிறீர்களென்று கேட்கிறார். லண்டனில் பிரத்யேகமாக ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா எனக் கேட்கிறார்.

ப்ரொட்டர்ஸ்டன் அவரது பதிலை அறிவதில் ஆர்வமாக இருக்கிறான் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் அறையின் அந்தப் பக்கத்திலிருந்து மான்லிக்குச் சைகை கிடைக்கிறது. கோப்பையை மேசையில் வைத்துவிட்டு உடனே எழுந்துசெல்கிறார். கடைசி கணத்தில் ப்ரொட்டெர்ஸ்டனும் டகேடாவும் நினைவிற்கு வர,

மான்லி: ஓ, மன்னியுங்கள். பார்த்ததில் சந்தோஷம்.

16. வரவேற்பரை:

மான்லி விருந்தினர்களூடாக நடந்து வாட்கின்ஸை நோக்கிச் செல்கிறார். அவன் இரட்டைக் கதவருகில் ஆர்வத்துடன் புன்னகைத்துக் கொண்டு கையைப் பவ்யமாக நீட்டி அவரை உள்ளே விடுகிறான்.

17. டாக்டர் கிராஸ்வெனரின் வீடு, ஹால்.

மான்லி, வாட்கின்ஸ் திறந்த கதவுகளைத்தாண்டி உள்ளே நுழைந்து மாடிப்படிகளை நோக்கி நடக்கிறார்.

18. டாக்டர் கிராஸ்வெனரின் தனியறை. முன்மாலை.

டாக்டர் கிராஸ்வெனர் இருட்டறைகளில் பணியாற்ற விழைகிறவர். இன்னும் இருட்டத் துவங்காவிட்டாலும் ஜன்னல் மறைப்புகள் இறக்கிவிடப்பட்டுள்ளன. பிரகாசமான மேஜை விளக்கிலிருந்து வெளிச்சம் சிக்கனமாக டாக்டரை மட்டும் சூழ்ந்திருக்கிறது.

இந்த அறை நோயாளிகளைப் பார்வையிடுவதற்கும், டாக்டரின் தனிப்பட்ட பணிகளுக்குமாக ஒதுக்கப்பட்டது. பார்வையாளர் நாற்காலி டாக்டரை நோக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. மேசைக்குப் பின்னாலிருக்கும் புத்தக அலமாரியில் உள்ள புத்தகங்கள் உணவு சம்மந்தப்பட்டதாக இருக்கின்றன. சமையல் புத்தகங்களல்ல. ஆழமான, தீவிரமான ஆய்வு நூல்கள்: பத்தொன்பதாம் நூற்றாண்டின் பழங்குடியாளர்களின் உணவுமுறைச் சடங்குகள், புரதமும் கலாச்சாரமும், மாமிச பட்சிணியின் பரிணாமம்.

டாக்டர் கிராஸ்வெனர், ஐம்பத்தைந்து வயதிற்கு அழகாகவே இருக்கிறார். தன்னம்பிக்கை தெரியும் தோற்றம். இருந்தும் அவரிடம் ஏதோவோர் ஒழுக்கங்கெட்டத் தன்மை இருக்கிறது. தனிப்பட்ட முறையில் சிகிச்சை நடத்திக்கொண்டு, நிழலான காரியங்களைச் செய்கிற, வசதிபடைத்த மருத்துவராக அவர் இருக்கக்கூடும்.

மான்லி: டாக்டர், உங்கள் கடிதத்தில் நான் கேட்டிருந்தவற்றில் ஒன்றைப் பெறுவதில் சிரமம் இருப்பதாக எழுதியிருந்தீர்கள்...

டாக்டர் கிராஸ்வெனர்: (குறுக்கே வெட்டி) இல்லை, இல்லை. அது ஒரு சின்ன பிரச்சினை. நீங்கள் கேட்ட அத்தனையும் வைத்திருக்கிறேன்.

மான்லி: ஆ.

டாக்டர் கிராஸ்வெனர்: ஒன்று சொல்லட்டுமா திரு கிங்ஸ்டன், உங்களுக்கு உதவியாக இருப்பது பெரும் கௌரவம் எனக்கு.

மான்லி: ம்ம்ம்.

டாக்டர் கிராஸ்வெனர்: (சிறியதொரு சிரிப்புடன்) மன்னிக்கவும், நீங்கள் பொறுமையற்றிருப்பதாகத் தோன்றுகிறது.

மேசையின் இழுப்பறையை அவர் திறக்கிறார். எதையும் எடுப்பதற்குமுன் மான்லியைக் குறும்பாக ஒரு பார்வை பார்க்கிறார்.

டாக்டர் கிராஸ்வெனர்: (தொடர்ந்து) உங்களைப் பார்க்க ஒரு வேட்டைக்காரரைப் போல் இருக்கிறது, திரு கிங்ஸ்டன். ஒரு பெரிய இரையை அடைந்துவிட்டதைப் போல...

அவர் சிரித்துக்கொண்டே ஒரு சிறிய கைப்பெட்டியை எடுத்து மேசைமேல் வைத்து மூடியைத் திறந்து மான்லியின் பக்கம் திரும்புகிறார்.

டாக்டர் கிராஸ்வெனர்: (தொடர்ந்து) நீங்கள் கேட்ட அனைத்தும் இருக்கிறது.

மான்லி: ஆ.

மான்லி ஆர்வத்துடன் முன்னால் குனிந்து பார்க்கிறார்.

Over the Shoulder: கைப்பெட்டியில் ஒழுங்காக அடுக்கப்பட்ட காகிதங்களும், ஆவணங்களும், எல்லாவற்றுக்கும் மேலே காட்சி 1ல் நாம் பார்த்த தேவாலயத்தின் பெரிய புகைப்படம் ஒன்றும் இருக்கிறது. ஒரு சிறிய உலோகப் பெட்டியும் இருக்கிறது.

மான்லி மேசை விளக்கைச் சரியாகத் திருப்பிக்கொண்டு பெட்டியில் இருப்பவற்றைச் சோதிக்கிறார். டாக்டர் கிராஸ்வெனர் பின்னால் சாய்ந்துகொண்டு புன்னகைக்கிறார்.

டாக்டர் கிராஸ்வெனர்: இன்றைய இரவின் சாகசம் மட்டும் வெற்றிகரமாக முடிந்தால், உங்களது தரத்திற்கேகூட அது ஒரு மிகப்பெரிய சாதனையாகத்தான் இருக்குமில்லையா திரு கிங்ஸ்டன்? தலையாய சாதனை என்று அதைக் கூறலாமா?

மான்லி: (பெட்டியில் கவனமாக) சொல்லலாம், சொல்லலாம்.

டாக்டர் கிராஸ்வெனர் மான்லியைச் சில கணங்களுக்குக் கவனித்துவிட்டுப் புன்னகைக்கிறார்.

டாக்டர் கிராஸ்வெனர்: உங்கள் செயல்பாடுகள் ரொம்ப நாட்களாகவே என்னைக் கவர்ந்து வந்திருக்கின்றன, திரு கிங்ஸ்டன்.

அமைதி. மான்லி அவற்றில் மூழ்கியிருக்கிறார். பதில் அளிப்பதில்லை.

டாக்டர் கிராஸ்வெனர்: சராசரி ஐரோப்பியன் எவனுக்கும் குமட்டல் எடுக்கக்கூடிய பலவித உணவுகளையும் ரசித்து நான் சுவைத்திருக்கிறேன். ஆனால் திரு கிங்ஸ்டன், உங்களுடைய துணிச்சலை ஒப்பிட்டுப் பார்க்கையில் உங்களுக்கு அருகில்கூட என்னால் நெருங்க முடியாது.

மான்லி: (சிரத்தையின்றி) ம்ம்ம்ம்.

டாக்டர் கிராஸ்வெனர் மான்லியைச் சில கணங்களுக்கு மௌனமாகக் கவனித்துக்கொண்டு புன்னகைக்கிறார்.

டாக்டர் கிராஸ்வெனர்: உங்களுக்குத் தெரியுமா திரு கிங்ஸ்டன், உங்கள் பெருமையைக் குலைக்கிற ஆசாமிகளை நான் பொருட்படுத்துவதேயில்லை.

Close up: திறந்திருக்கும் கைப்பெட்டி, டாக்டர் கிராஸ்வெனர் பேசிக்கொண்டிருக்க, மான்லியின் கைகள் பெட்டியில் இருப்பவற்றைப் பிரித்து அடுக்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

மான்லியின் கைகள் அந்த உலோகப் பெட்டியை எடுக்கின்றன. அதன் உள்ளே சுத்திகரிக்கப்பட்ட நிலையில் சோதனைக் குழாய்களும், பொட்டலங்களும், குட்டிகுட்டியாகச் சில டப்பாக்களும் இருக்கின்றன. இதற்கு நடுவே டாக்டர் கிராஸ்வெனர் சுயலயிப்புடன் உரையாற்றிக்கொண்டிருக்கிறார்.

டாக்டர் கிராஸ்வெனர்: (தொடர்ந்து) பாருங்கள், நான் எப்போதுமே உங்கள் செயல்பாட்டில் ஒரு பெருந்தன்மையைக் கவனித்து வந்திருக்கிறேன். பெருந்தன்மைதான் அடிப்படையான உணவு, ஆதிகாலத்தில் மனிதன் பழக்கமில்லாக் காட்டுவெளிக்குள் சென்று இரையைத் தேட வேண்டியிருந்தது. எவ்வெவற்றை உண்ண வேண்டுமென்றெல்லாம் எந்த நெறிகளும் அப்போது அவனைக் கட்டிப் போட்டிருக்கவில்லை. கையில் கிடைக்கும் எதையும் அவன் சாப்பிட்டு வந்தான். சுவையைத் தேடிச் செல்வதில் நீங்கள், திரு கிங்ஸ்டன்தான், நமது மகத்தான முன்னோர்களின் உண்மையான நவீன வாரிசு. மற்றபடி நாங்களெல்லாம் அந்த ஆதிகால மனிதனின் பெண் துணைகளைப் போல, குகைகளில் அவன் எதைக்கொண்டு வருவானென்றும், அதை எப்படிச் சமைப்பதென்றும் கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பவர்கள் மாதிரி...

கைப்பெட்டியின் மூடியை மான்லி மூடித்தாழிடுகிற சப்தத்தில் டாக்டர் கிராஸ்வெனர் தடைபடுகிறார்.

மான்லி: நான் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறேன், டாக்டர் கிராஸ்வெனர்.

டாக்டர் கிராஸ்வெனர்: அப்படியெல்லாம் இல்லை. உங்களுக்கு உதவியதில் எனக்குத்தான் மகிழ்ச்சி.

மான்லி கைப்பெட்டியுடன் வருகிறார். கதவை நோக்கி நடக்கிறார்.

மான்லி: நான் கிளம்புகிறேன்.

டாக்டர் கிராஸ்வெனர் மான்லியை வழியனுப்ப எழுந்திருக்கிறார்.

டாக்டர் கிராஸ்வெனர்: திரு கிங்ஸ்டன், இன்னும் சற்றுநேரம் இருந்து சென்யோர் பெரஸ்ஸின் அற்புதமான புதிய உணவு வகைகளைச் சுவைத்துவிட்டுச் செல்லலாமே! இன்னும் இருபது நிமிடங்களில் பரிமாறி விடுவார்.

மான்லி: (ஏளனத்துடன் இகழ்ச்சியாக) அப்படியா, வேண்டாம். நன்றி.

டாக்டர் கிராஸ்வெனர்: சென்யோர் பெரஸ்ஸின் படைப்புகளில் உங்களுக்குப் பரிச்சயமுண்டா?

மான்லி: (தலையை ஆட்டிக் கொண்டு; இத்தகைய சமாச்சாரங்களிலிருந்து எப்போதோ தான் கடந்து வந்துவிட்ட பாவத்தில்) ம்ம்ம்.

டாக்டர் கிராஸ்வெனர்: ஆச்சரியமான திறமை. தனிப்பட்ட முறையில் நான் நினைப்பது என்னவென்றால், அழகுணர்ச்சிக்காக அவர் சேர்க்கும் சில விஷயங்கள்தான் அவரது படைப்புகளைச் சிறிது பாதிக்கிறது என நினைக்கிறேன். மொத்தத்தில் ஆச்சரியப்படத்தக்கதொரு திறமை. அவரது சொந்த நாடான மத்திய அமெரிக்காவில் அவரை ஒரு புரட்சிக்காரர் போலவே மதிக்கிறார்கள். நிச்சயமாகவே நீங்கள் தங்கி சுவைக்கப் போவதில்லையா? (மான்லி இதற்குப் பதிலளிக்குமுன் டாக்டர் சிரிக்கிறார்) ஆனால் உங்களுக்கு வேறு திட்டங்கள் இருக்கிறதல்லவா?

மான்லி: ஆம்.

19. கார். பகல்

நின்றுகொண்டிருக்கும் ரோல்ஸின் முன்னிருக்கையில் கார்ட்டர், ஹாம்பர்கர் ஒன்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். மெதுவாக, வேண்டுமென்றே நிதானமாக, ஏதோ ஆழ்ந்த திட்டத்தை உக்கிரமாக யோசித்துக்கொண்டே மெல்வதைப்போல. வெளியில் அவன் பார்த்த எதுவோ அவன் அசை போடுவதை நிறுத்துகிறது. மிச்ச பர்கரைக் கவனமாக மீண்டும் மடித்துச் சுற்றி அட்டைப்பெட்டியில் வைக்கிறான்.

20. டாக்டர் கிராஸ்வெனரின் இல்லம். பகல்

ரோல்ஸ் நாம் கடைசியாகப் பார்த்த அதே இடத்தில் இருக்கிறது.

கார்ட்டர் கவனித்து, மான்லி அந்த வீட்டிலிருந்து கையில் ஒரு பெட்டியுடன் வெளியில் வருவதை என்று தெரிகிறது. கார்ட்டர் காரிலிருந்து வெளிப்பட்டு மான்லிக்காகக் கதவைத் திறக்கிறான். மான்லி உள்ளே செல்கிறார். ரோல்ஸ் கிளம்புகிறது.

21. படுக்கையறை. பகல்

மான்லி இரட்டைப் படுக்கையின் ஓரத்தில் சப்பாரி ஜாக்கெட் அணிந்து அமர்ந்திருக்கிறார். அவரது பெல்ட்டிலிருந்து சமையலறை உபகரணங்கள் போல் தோற்றமளிக்கும் வினோதமான வஸ்துகள் மாட்டப்பட்டிருக்கின்றன. படுக்கையிலிருக்கும் எதையோ, தன் மனைவி வின்னிக்கு முதுகைத் திருப்பியபடி ஆராய்ந்துகொண்டிருக்கிறார். தரைவிரிப்பில் முட்டி போட்டுக்கொண்டு அவள் மான்லியின் பெல்ட்டில் ஒரு சிறிய வாணலியை மாட்டிக் கொண்டிருக்கிறாள்.

வின்னிக்கு நாற்பத்தியேழு வயது. சிறிய உருவம். வீட்டிலேயே அடைந்து கிடப்பவள். கணவன் பல நாட்களாக வராதிருக்கும்போது கள்ள உறவு ஏற்படுத்திக்கொள்கிற ரகமில்லை. வரப்போகும் காட்சியில் தெரியும். அவளது பயபக்திக்குக் காரணம் மான்லியின் மீது அச்சமல்ல; மரியாதை. அவளது படுக்கையறை சுத்தமாக, சௌகரியமாக, பழமைத்தனமாக இருக்கும். ஆனால் தற்போது படுக்கை மேலெல்லாம் அறுவைசிகிச்சைக்கு மாதிரி பல்வேறு கருவிகள்’ - அவற்றைப் பார்த்தால் சமையலறைப் பாத்திரங்கள் மாதிரி தெரியவில்லை - பரப்பப்பட்டிருக்கின்றன. அவை எடுத்து வைக்கப்படும் பெரியதொரு சூட்கேஸ் திறந்து, அதில் ஒரு சிறிய கேம்ப் ஸ்டவ் ஒன்றும், வினோதமான பெரிய வலை (பட்டாம்பூச்சி பிடிப்பதைப்போல) ஒன்றும் இருக்கின்றன. தரையில் - தற்போது இதை நாம் காணத் தேவையில்லையென்றாலும் - ஒரு பெரிய காலி கூடாரப்பை இருக்கிறது.

வரப்போகும் உரையாடல் முழுவதிலும், மான்லி இந்தக் கருவிகளிலேயே கவனமாக இருக்கிறார், எதுவும் விட்டுவிடக்கூடாது என்றும், அவை வேலை செய்கிறதா என்றும் அதீதக் கவனத்தோடு.

வின்லி அந்த வாணலியை மாட்டி முடித்துவிட்டாள். இப்போது மான்லியின் முதுகில் தவா ஒன்றை மாட்டுகிறாள். அவள் வேலைகளை அவர் மதிக்கிறாற்போலத் தெரியவில்லை. அங்குமிங்கும் நகர்ந்து கொண்டேயிருக்கிறார். எரிச்சலூட்டும் இந்த அவமதிப்பு வரும் உரையாடல்களிலும் தொடர்ந்தாலும் வின்னியைப் பொறுத்தவரை கிஞ்சித்தும் புண்பட்டாற்போல் தெரியவில்லை.

வின்னி: ஐஸ்லாந்திற்குச் சென்றது பயனுள்ளதாக இருந்ததா?

மான்லி: ம்ம்ம்? ஓ... நான் அங்கே போகவில்லை. இப்போதெல்லாம் அங்கே சுவாரஸ்யமாக எதுவுமில்லை.

வின்னி: அடப்பாவமே! திரு நட்ஸனுக்கு மிகவும் ஏமாற்றமாகப் போய்விட்டிருக்கும்.

மான்லி: நட்ஸன்? ஆமாமாம்.

சொல்லிக்கொண்டே மான்லி, வின்னியை நோக்கித் திரும்புகிறார். அவள் தவாவை மாட்டுவது தடைபடுகிறது.

வின்னி: (சங்கடமான புன்னகையுடன்) நீங்கள் ஐஸ்லாந்தில் இருப்பதாகத்தான் கடைசிதடவை எழுதியிருந்தீர்கள். திரு. நட்ஸனைப் பற்றியும், அவர் வைத்திருக்கும் சுவாரஸ்யமான அடுப்பைப் பற்றியும் கூறியிருந்தீர்கள்.

மான்லி: (மீண்டும் சிந்தனைவயப்பட்டு) ம்ம்ம்.

வின்னி: (அன்பாக) இரண்டு வருடங்களுக்கு முன்னால், 1984ல்.

மான்லி: ம்ம்ம்.

மான்லி பல்வேறு கருவிகளையும் நன்றாக ஒருமுறை பார்த்துவிட்டு அவரது கூடாரப்பையில் இடுகிறார். இதற்கிடையில் மான்லியின் முதுகில் அந்த தவாவை மாட்ட இன்னமும் வின்னி முயன்றுகொண்டிருக்கிறாள்.

மான்லி: நான் நினைக்கிறேன் (தவாவை மாட்டுவதை மீண்டும் கெடுக்கிறமாதிரி அவர் திரும்புகிறார்) இன்றிரவு நான் எங்கே போகிறேன் என்று உனக்கு ஆர்வமாக இருக்கிறது, இல்லையா?

வின்னி: (சிரிக்கிறாள்) துருவித் துருவி உங்களைக் கேட்பதுதான் உங்களுக்குப் பிடிக்காதே.

மான்லி: (பையைக் கட்டுவதில் மீண்டும் முனைந்து போகிறார்) ம்ம்ம்.

வின்னி இறுதியாகத் தவாவை மாட்டி முடிக்கிறாள்.

வின்னி: அப்பாடா!

Another angle: மான்லி எழுந்து அறையில் வேறெதையாவது விட்டுவைத்து விட்டோமா எனக் கவனிக்கிறார். முழுதும் நிரம்பிவிட்டிருக்கும் கூடாரப்பையை எடுத்துக் கொள்கிறார்.

மான்லி: (இறுதியாக அறையை ஒருமுறை நோட்டம் விட்டு) ஹ்ம்ம். எல்லாம் இருக்கிறதில்லையா?

வின்னியும் அறையை அக்கறையுடன் கவனிக்கிறாள். மான்லி திரும்பி வெளியேறுகிறார்.

22. மான்லியின் மாளிகை முகப்பு

கார்ட்டர் ரோல்ஸின் மீது சாய்ந்துகொண்டு, ஹாம்பர்கரை முன்பு நாம் பார்த்ததைப் போலவே நிதானமாக மென்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். பார்வை கிங்ஸ்டன் மாளிகை முகப்பிலேயே பதிந்திருக்கிறது.

Point of view: கார்ட்டர், கிங்ஸ்டன் மாளிகையின் பகட்டான முகப்பு வளைவின் முன்னால் அப்படியும் இப்படியுமாக நிதானமாக நடை பழகுகிறான். கார்ட்டரின் முழுத்தோற்றம்: அந்த முகப்பு வளைவின் அடையாளங்களை அசைபோடுகிறாற்போல மெதுவாக பர்கரை மென்றுகொண்டு நடக்கிறான். வழக்கம்போல எந்த உணர்ச்சியையும் காட்டாத இறுகிய முகம்.

23. ஹால்

மான்லி தனது கோட்டை அணிந்துகொள்கிறார். முதுகிலும், இடுப்பிலும் மாட்டிக்கொண்டிருக்கும் பொருட்களால் அணிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. கதவை அவர் நெருங்குகையில் வின்னியும் ஹாலுக்கு வருகிறாள். அவருக்குப் பின்னால் வின்னி வேகமாகத் தொடர, கதவு அறைந்து சாத்தப்படுகிறது. வின்னியின் மேல் காமிரா நிலைக்கிறது. உணர்ச்சியற்ற பாவத்தில் முகம்.

24. மான்லியின் மாளிகை முகப்பு

மான்லி நடையைக் கடந்து ரோல்ஸை நோக்கி வருகிறார். கார் நாம் முன்பு பார்த்த அதே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறது. அவர் அந்தக் கூடாரப்பையையும் தூக்கிக்கொண்டு, இன்னமும் தனது கோட்டைச் சரியாக அமைத்துக்கொள்வதில் சிரமப்பட்டுக்கொண்டிருக்கிறார். கார்ட்டர், மான்லிக்காகக் கதவைத் திறக்கிறான்.

25. ஒரு தெரு. வெஸ்ட் எண்டின் வடக்குப்பகுதி.

சாலையில் ரோல்ஸ் ராய்ஸ் போய்க்கொண்டிருந்தது.

26. கார்

கார்ட்டர் ஓட்டிக்கொண்டிருக்கிறான். மான்லி பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு, ஆழ்ந்த சிந்தனையுடன் வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

27. தென்அமெரிக்காவில் ஒரு வீட்டின் முன்னறை. இரவு.

Close Shot: ரோஸ்ஸி.

28. கார். பகல்

On Manley: ஆழ்ந்த சிந்தனையில்

மான்லி: உனக்குத் தெரியுமா கார்ஸன், இந்த முயற்சியில் ஒன்பது வருடங்களாக ஈடுபட்டிருக்கிறேன்.

On Carter

கார்ட்டர்: கார்ட்டர் ஸார். (றிணீusமீ) பெயர் கார்ட்டர் ஸார்.

On Manley:

இன்னமும் சிந்தனை வசத்திலேயே இருக்கிறார். கார்ட்டர் சொன்னது காதில் விழுந்த அடையாளமே இல்லை. மான்லியின் முகத்தை காமிரா நெருங்குகிறது - கார் ஒரு சுரங்கப்பாதையில் நுழைகிறது.

29. தென்அமெரிக்காவில் ஒரு வீட்டின் முன்னறை. இரவு.

Close Shot: ரோஸ்ஸி.

மான்லி (Voice Over)  : ம்ம்ம். இதற்குமுன் மூன்றுமுறை முயன்று தோற்றிருக்கிறேன். ஆனால் இம்முறை அனைத்தையும் துப்புரவாகக் கவனித்து செய்திருக்கிறேன்.

30. கார்

Close shot: மான்லி இன்னும் சிந்தனையில் மூழ்கியிருக்கிறார்.

மான்லி: சோதிப்பதும் தவறுவதும். தோல்விகளைப் பொருட்படுத்தாது தொடர்ந்து முயல்வது, கார்ஸன். அது இறுதியில் வெற்றி பெற்றே தீரும்.

On Carter: எதையும் பிரதிபலிப்பதில்லை.

மான்லி: ஒன்பது வருடங்கள்...

31. தென்அமெரிக்காவில் ஓர் அறை. இரவு.

மான்லி: ரோஸ்ஸியைப் பார்த்து ஒன்பது வருடங்கள்.

பின்னணி இசை துவங்குகிறது. நான்கு ஆடவர்களும் இரண்டு அழகான பெண்களும் அந்த அறையில் இருக்கின்றனர்.

வரும் காட்சிகளில் பின்னணி இசை கூடிக்கொண்டே செல்கிறது. காட்சிகள் மௌனமாக நகர்கின்றன. இசையைத் தவிர வேறெதும் கேட்பதில்லை.

கதவு: சங்கிலியால் கட்டப்பட்டுத் தாழ்ப்பாள் போடப்பட்டிருக்கிறது. இதன்மேல்தான் அந்த ஆண்களின் கவனம் இருக்கிறது. இந்தக் கதவு தட்டப்பட்டிருக்க வேண்டும். நாற்பது வயதுள்ள ஒரு வேலையாள் காட்சியில் வந்து பார்வைத் துளை வழியாக வந்திருப்பவரைப் பார்க்கிறான். பின் சங்கிலியை அவிழ்த்து, தாழ்ப்பாளை நீக்கி, கதவைத் திறந்து ரோஸ்ஸியை உள்ளே அனுமதித்து, பின் உடனே கதவை அடைக்கிறான். ரோஸ்ஸி, எழுபது வயது மதிக்கத்தக்க, தலைநரைத்த மனிதர். வெள்ளை உடை அணிந்திருக்கிறார். விஞ்ஞானியாக அவர் இருக்கக்கூடும். அமைதியும், வியப்புமாக அந்த அறையை நோட்டமிடுகிறார்.

Point of view: ரோஸ்ஸி. அறையைப் பார்த்தால் சூதாட்ட அல்லது விபச்சார விடுதியின் பின் அறையைப் போல தோற்றமளிக்கிறது. பணமும், தரங்கெட்ட நடத்தையும் புழங்கும் தன்மை அங்கே எப்படியோ கலந்திருக்கிறது. ஐந்து ஆண்கள் அந்த அறையில் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். நால்வருக்கு 45லிருந்து அதற்கும் கொஞ்சம் மேற்பட்ட வயதிருக்கலாம். லத்தீன் இனத்தைச் சேர்ந்தவர்கள். அதிகாரத்தில் இருப்பவர்களைப் போலத் தோற்றமளித்தாலும், தற்போது தங்களது பதற்றத்தைத் தளர்த்திக்கொள்ள உக்கிரமாகப் புகைபிடித்துக்கொண்டிருக்கின்றனர். காமிராவை நோக்கி கள்ளத்தனமாக பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் காணப்படும் குற்றவுணர்ச்சி, அந்த இடத்தின் போதைப்பொருள் - அல்லது செக்ஸ் தொடர்பால் இருக்கலாம்.

ரோஸ்ஸியின் பார்வை ஐந்தாவது மனிதர் மேல் நிலைக்கிறது. அது மான்லி. எரிச்சலோடு உட்கார்ந்துகொண்டு தொப்பியால் விசிறிக்கொண்டிருக்கிறது.

ஒரு மின்விசிறி: இழுப்பறைகள் கொண்ட மேசையின்மேல் சுற்றிக் கொண்டிருக்கிறது.

மிகப்பெரியதொரு மாமிசத்துண்டு: ஒரு பெரிய தட்டில் கொண்டுவரப்பட்டு விருந்தினர்களுக்கெதிரே ஒரு தாழ்வான மேசையில் வைக்கப்படுகிறது. எதனுடைய மாமிசம் என்பதை அறியமுடியவில்லை.

லத்தீனியன்: ஒரு கத்தோலிக்கப் பையன் முதன்முதலாக ஒரு பெண்ணை நிர்வாணமாகப் பார்ப்பதைப் போல, அதிர்ச்சியோடும், வியப்போடும், பயத்தோடும், சங்கடத்தோடும் அம்மாமிசத்தைப் பார்க்கிறான்.

மேசையைச் சுற்றியிருக்கும் இதர முகங்கள்: இம்முகங்களில் பதற்றத்தையும், கிளர்ச்சியையும் மறைக்க முயன்று இயலாமல் தவிப்பது தெரிகிறது. ஒருவரையொருவர் பார்த்துப் பயத்துடன் சிரித்துக்கொள்கின்றனர். மான்லி இவற்றிற்கு மாறாக, எந்தச் சங்கடமும் இன்றி இயல்பாகச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். ரோஸ்ஸியை நிமிர்ந்து பார்க்கிறார். ரோஸ்ஸி இதெல்லாம் அனுபவப்பட்ட கிழம். சலிப்புற்ற பாவனையில் அமர்ந்திருக்கிறார்.

மாமிசம்: துண்டுகளாக்கப்பட்டிருக்கிறது. மெத்தென்று, இளம் சிவப்பில், ரத்தக் கறையுடன்...

மாமிசத்தை உண்ணும் முகங்கள். மென்றுகொண்டு, அதன் ருசியைச் சகித்துக்கொண்டு ரசிக்க முயலும் அந்த முகங்களில் குற்றவுணர்ச்சி, சந்தோஷம், பதற்றம்.

மான்லி அலட்டிக்கொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். ரோஸ்ஸியை அவர் நிமிர்ந்து பார்க்க, அவர் இதெல்லாம் என்ன பெரிய விஷயம்என்கிற பதில் பார்வையை அளிக்கிறார்.

32. முன் அறை. இரவு

பின்னணி இசை தேய்கிறது. பூச்சிகளின், பறவைகளின் சப்தங்களும் கூடவே தேய்கின்றன.

மான்லி சன்னலுக்கு வெளியே சுருட்டு ஒன்றைப் புகைத்தவாறு பார்த்துக்கொண்டிருக்கிறார். சிடுசிடுப்புடன் காணப்படுகிறார். ரோஸ்ஸி அவருக்குப் பின்னால் நின்றுகொண்டு புகைத்துக்கொண்டிருக்கிறார். மான்லியிடம் ஏதோ சொல்ல முயன்றுகொண்டிருக்கிறார். அடுத்த அறையின் கதவு பாதி திறந்திருக்க அதன் வழியாக மாமிசத்தை உண்ட பதற்றத்தைத் தணிக்கும்விதமாக சந்தோஷக் கூச்சல்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. வரப்போகும் உரையாடல் முழுக்கவும் இந்தச் சிரிப்பும், குதூகலச் சத்தங்களும் கேட்டுக்கொண்டேயிருக்கின்றன. பேச்சில் குறுக்கிடாத அளவில் இரைச்சல்.

ரோஸ்ஸி: (இத்தாலிய உச்சரிப்புடன்) தப்பு செய்துவிட்டதைப் போல் காணப்படுகிறீர்கள் திரு கிங்ஸ்டன். (ஆதரவாகப் புன்னகைக்கிறார்) தயவுசெய்து உங்களைக் குறைத்து மதிப்பிட்டு விட்டதாக எண்ணாதீர்கள். பெரிய சாதனையாளர் நீங்கள். என்னை உங்கள் குருவாக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென நான் விழைவது மனப்பூர்வமாகத்தான். (குரலைத் தாழ்த்தி) இதோ பாருங்கள் திரு கிங்ஸ்டன், எனக்கு வயதாகிவிட்டது. இதயமும் பழுதுபட்டிருக்கிறது. வெகுகாலம் நான் இருக்கப்போவதில்லை.

மான்லி ரோஸ்ஸியின் பக்கம் திரும்புகிறார். சிரத்தையோ பரிவையோ காட்டாமல் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

ரோஸ்ஸி: என்மேல் பரிதாபப்பட வேண்டாம் திரு. கிங்ஸ்டன். ரொம்ப நாட்கள் வாழ்வதற்கு எனக்கு ஆசையில்லை. செய்ய வேண்டிய அனைத்தையும் செய்தாகிவிட்டது. உலகில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் சுவைத்தாகிவிட்டது. (நிறுத்துகிறார். பின் அர்த்த புஷ்டியுடன்) ஏன், ஒருமுறை இந்த உலகத்தையே சேர்ந்திராத ஒன்றையும்கூட.

ரோஸ்ஸி இறுமாப்புடன் புன்னகைக்கிறார். மான்லியின் ஆர்வம் தூண்டப்படுகிறது. சுருட்டை வாயிலிருந்து எடுத்துவிட்டு ரோஸ்ஸியின் பக்கம் திரும்புகிறார்.

மான்லி: இந்த உலகத்தைச் சேர்ந்திராததா?

ரோஸ்ஸி: இதோ பாருங்கள் திரு. கிங்ஸ்டன், நான்தான் உங்களது உண்மையான தகப்பன். நீங்கள்தான் எனது உண்மையான மைந்தன். எனது தன்னிகரற்ற சாதனைக்கு வாரிசாக நீங்கள் இருப்பதை நான் விரும்புவேன். அதனால்தான் இதை உங்களுக்குச் சொல்கிறேன். ஆம், இந்த உலகத்தைச் சேர்ந்திராத ஒன்றை நான் சுவைத்திருக்கிறேன். நான் ஒரு பிசாசைக் சாப்பிட்டிருக்கிறேன்.

மான்லி அதிர்கிறார். இந்தச் செய்தி அவரை ஒரே நேரத்தில் கவர்ந்ததாகவும், அவமானப்படுத்திவிட்டதாகவும் தெரிகிறது. தயக்கத்துடன் கேட்கிறார்.

மான்லி: அது - அது, எப்படி இருந்தது?

ரோஸ்ஸி: (வெற்றிக்களிப்புடன் சிரிக்கிறார்) இந்த உலகத்தில் எத்தனை பேருக்கு நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கிற பாக்கியம் கிடைத்திருக்கும், திரு. கிங்ஸ்டன்?

மான்லி அடங்கிப்போகிறார். அவமானத்துடன் திரும்பி வெளியேறுகிறார்.

மான்லி: சரி, சரி.

ரோஸ்ஸி: (சட்டென்று தீவிரமாகி) திரு கிங்ஸ்டன், .... தயவுசெய்து மன்னியுங்கள்.

ரோஸ்ஸி மான்லியை அழைத்து வருகிறார். மான்லி தயங்குகிறார்.

ரோஸ்ஸி: இல்லாததற்கெல்லாம் அலட்டிக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு உதவவே விரும்புகிறேன். எனது உண்மையான வாரிசல்லவா நீங்கள்...!

மான்லி திரும்ப வந்து ஜன்னலுக்கு வெளியே மீண்டும் வெறிக்கிறார். வாயில் சுருட்டைப் பொருத்திக்கொண்டு ரோஸ்ஸியைப் பார்ப்பதைத் தவிர்க்கிறார். ரோஸ்ஸியும் வெளியே பார்க்கிறார். சுருட்டை ஆழமாக இழுத்துக்கொள்கிறார்.

ரோஸ்ஸி: ஒரு பிசாசைப் பிடித்து சாப்பிடுவதென்பது சுலபமான காரியமல்ல. அதற்காகப் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்திருக்கிறேன் திரு. கிங்ஸ்டன், அவற்றையெல்லாம் உங்களுக்கு - உங்களுக்கு மட்டும்... கற்றுத்தர விரும்புகிறேன். பதிலாக உங்களிடமிருந்து நான் எதிர்பார்ப்பது ஒன்றேயொன்றுதான். வரும் காலங்களில் என்னை உங்களது குருவாக அங்கீகரித்து அறிவிக்க வேண்டும். உங்களுக்கு இந்த விஷயத்தில் ஆர்வம் உள்ளதா இல்லையா?

ரோஸ்ஸியின் கண்களில் நம்பிக்கையின் பளிச்சிடல் தெரிகிறது. மான்லியை மாட்டவைத்துவிட்டார்.

ரோஸ்ஸி: நல்லது. என் அறைக்கு நாளை வாருங்கள். இதைப் பற்றி விரிவாக அலசலாம். (புன்னகையுடன் ரோஸ்ஸி திரும்புகிறார். பின் நின்று) நீங்கள் கேட்டதற்கு .... அந்தச் சுவை அபாரம்! (கைகளால் சைகை காட்டிக்கொண்டு) உலகத்திலுள்ள எதுவும் அதற்கு ஈடாகாது.

33. மத்திய லண்டன். இரவு.

ரோல்ஸ்ராய்ஸ் போய்க்கொண்டிருக்கிறது. பின்னணி இசை முடிகிறது.

34. கார். இரவு

On Manley: இப்போது துடிப்புடன் இருக்கிறார். முன்னால் தலையை நீட்டிப்பார்க்கிறார்.

மான்லி: அங்கேதான் கார்ஸன். மெதுவாகப்போ.

35. தேவாலயத்திற்கு வெளியே ஒரு தெரு. இரவு.

Point of view: காரில் இருக்கும் மான்லி. அழுக்கான, குப்பைகள் சிதறியிருக்கும் தெரு. புராதன வீடுகள். சுவரொட்டிகளும், கண்டமேனிக்கு வாசகங்களும் பரவியிருக்கும் சுவர்கள். முன்னால் நாம் 1904ல் (காட்சி 1ல்) பார்த்த தேவாலயம். அதற்கு வெளியே சுற்றிவரும் மதில் சுவரை ஒட்டி வரிசையாக ஆட்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

Reverse angle: வந்துகொண்டிருக்கும் கார் ஜன்னல்களினூடாக மான்லி, கார் வேகம் குறைந்து ஊர்கிறது. மான்லி உன்னிப்பாக வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்.

Point of view: காரில் இருக்கும் மான்லி. நாம் தேவாலயத்தின் வாயிலைக் கடக்கிறோம். கதவில் மரப்பலகை பளபளக்கிறது. காட்சி 1ல் நாம் பார்த்த மரப்பலகை அல்ல இது. வடிவமும், மொழியும் நவீனமாக மாற்றப்பட்டிருக்கின்றன.

நான் பசியாய் இருந்தேன், நீங்கள்

உணவு கொடுத்தீர்கள்;

தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத்

தணித்தீர்கள்;

அன்னியனாக இருந்தேன், என்னை

ஏற்றுக் கொண்டீர்கள்.

மத்தேயு 25:35

36. கார். இரவு.

சன்னல் வழியாக மான்லி உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

37. தேவாலயத்திற்கு வெளியேயுள்ள ஒரு தெரு. இரவு

Point of view:  காரிலிருக்கும் மான்லி, வீடற்ற நடைபாதைவாசிகள் - இருபது பேர்கள் இருக்கலாம் - வரிசையாக நின்றுகொண்டிருப்பதை நாம் கடந்து செல்கிறோம். சிலர் சுவரில் சாய்ந்துகொண்டும், தரையில் குந்திக் கொண்டும், நடைபாதையில் அமர்ந்துகொண்டுமிருக்கின்றனர்.

வெறும் ஆண்கள் மட்டும்தான் இருக்கின்றனர், தேவாலயத்தில் ஆண்கள் மட்டுமே அனுமதி என்பதால். மற்றபடி கதம்பமான மனிதர்கள் - பல இனத்திலும், எல்லா வயதிலும், ஒரு சிலர் மட்டுமே அசல் நாடோடிகளாகத் தெரிகின்றனர். மற்றவர்கள் பெரும்பாலும் மதிப்பான வாழ்க்கையை நடத்தும் முயற்சியில் தோல்வியுற்றவர்களாகவே தெரிகின்றனர். இருபது வயதிற்குட்பட்டோர் பலர் தென்படுகின்றனர். சலிப்படைந்த, களைத்த முகங்கள். கடந்து செல்லும் ரோல்ஸை ஆச்சரியமோ, ஆர்வமோ இன்றிக் கவனிக்கின்றனர்.

மான்லி: இன்னும் கொஞ்சதூரம் ஓட்டு, கார்ஸன். அந்த மூலைவரை போகலாம்.

Colse shot: எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத கார்ட்டரின் முகம்.

Another angle: அந்த மனித வரிசையைக் கடக்கும் ரோல்ஸ்.

38. ஒரு முட்டுச்சந்து. இரவு.

குப்பைக்கூளங்கள் மண்டியிருக்கின்றன. காட்சிக்குள் கார் நுழைந்து முட்டுச்சந்தின் முடிவில் நிற்கிறது.

மான்லிக்காகக் கதவைத் திறந்துவிட கார்ட்டர் வெளியே வருகிறான். அதற்குள் மான்லியே கதவைத் திறந்துகொண்டு வந்துவிடுகிறார்.

மான்லி தன்னுடைய பெரிய கோட்டுடனும், கூடாரப்பையைத் தூக்கிக் கொண்டும் தடுமாறி நடக்கிறார்.

மான்லி: நாளைக் காலை ஐந்து மணிக்கு இங்கே இரு, கார்ஸன், சரியா?

மான்லி திரும்பி, பையை தோளின்மேல் ஏற்றிக்கொண்டு, அந்த மூலையை நோக்கி நடக்கிறார். கார்ஸனைத் திரும்பிப் பார்க்காமல் கையை மட்டும் உயர்த்தி விடைபெறுகிறார்.

On Carter: எப்போதும்போல உணர்ச்சிற்ற முகம்.

39. தேவாலயத்திற்கு வெளியேயுள்ள தெரு. இரவு.

அந்த ஆட்கள் வரிசையை நோக்கி மான்லி தீர்மானத்துடன் நடந்து செல்கிறார்.

Another angle on a section of the queue:  மான்லி காட்சிக்குள் வருகிறார். வரிசையில் நின்றுகொண்டிருப்பவர்களைச் சற்றும் பொருட்படுத்தாமல் கடந்து செல்கிறார். காட்சியைவிட்டு அவர் வெளியேறியதும், வரிசையில் இருப்பவர்களை மட்டும் காட்சி வைத்திருக்கிறது. அவர்கள் மான்லியைச் சுவாரஸ்யமின்றி கவனிக்கின்றனர். அவர்களுக்கு ஆர்வமூட்டுகிறாற்போல் அவர் இல்லை.

A few further angles on men in the queue: அவர்களிடையே அதிகம் பேச்சு காணப்படவில்லை. புதிய தோழமைகளை ஏற்படுத்திக்கொள்ளும் திராணி அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. பலரும் களைத்து - நாளெல்லாம் இலக்கின்றி நடந்து திரிந்ததால் - நோயுற்றுக் காணப்படுகின்றனர். இத்தகைய மந்தமான வரிசையில் நின்றுகொண்டிருப்பவர்களிடம் இருக்கும் சுய கவனம் மட்டும் அவர்களிடம் காணப்படுகிறது.

40. தேவாலய வாசலின் முன் பகுதி.

வரிசையின் முன்னால் நின்றிருக்கும் இரண்டு மூன்று பேர் வாசற்கதவில் சாய்ந்துகொண்டு நின்றிருப்பது காட்சியில் வருகிறது.

மான்லி காட்சிக்குள் வருகிறார். பூட்டியிருக்கும் கதவைத் திறக்க முயல்கிறார். அதைத் தள்ளுகிறார்.

வரிசையில் நிற்பவன்: இங்கே க்யூ வரிசை இருக்கிறது, நண்பரே.

மான்லி: (திரும்பி) என்னது?

வரிசையில் நிற்பவன்: க்யூ. (வரிசையை நோக்கி தலையாட்டிக் காண்பிக்கிறான்).

மான்லி வரிசையைப் பார்க்கிறார்; பின் பூட்டிய கதவைப் பார்க்கிறார். எரிச்சலுறுவது தெரிகிறது.

மான்லி: ம்ம்ம்.

வெறுப்புடன் வரிசையின் கடைசியை நோக்கிச் செல்கிறார். காட்சியை விட்டு விலகுகிறார்.

41. தேவாலயத்திற்கு வெளியிலிருக்கும் தெரு. இரவு.

மான்லி அந்த வரிசையின் முடிவை நோக்கி நடந்து செல்கிறார். வரிசையில் இருப்பவர்களைக் கவனிக்காமல் செல்கிறார்.

42. நடைபாதை

வரிசையின் கடைசியில் இருக்கும் டேவிட் நடைபாதையில் அமர்ந்துகொண்டு தேவாலயச் சுவரில் சாய்ந்து கொண்டிருக்கிறான்.

டேவிட்டிற்கு முப்பது வயதிருக்கலாம். கார்டுராய் ஜாக்கெட்டும், சட்டையும் அணிந்து, பார்க்க ஓரளவு நாகரிகமாகவே தெரிகிறான். பொருந்தாத கால்சராயில் அங்கங்கே கிழித்துவிடப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் போலவே இவனும் சலிப்பாக, களைப்பாகத் தெரிகிறான். அந்த அகௌரவமான, அசௌகரியமான சூழலில் ஒருவிதச் சங்கடம் அவனிடம் இருக்கிறது.

மான்லி காட்சிக்கு வந்து டேவிட்டிற்குப் பின்னால் வரிசையில் நிற்கிறார். அவ்வரிசையின் நீளத்தைக் கவலையுடன் கவனித்து எரிச்சலுடன் நெளிகிறார்.

டேவிட் மான்லியைத் திரும்பி கவனிக்கிறான். வரும் உரையாடலை டேவிட் அலட்சியத்துடன் பேசுகிறான்.

டேவிட்: கவலை வேண்டாம், நமக்குக் கிடைக்கும்.

மான்லி: (அவனை முதல் முறையாகக் கவனித்து) என்னது?

டேவிட்: முதல் ஐம்பதுபேரை எப்படியும் உள்ளே விட்டுவிடுவார்கள்.

மான்லி: ஓ, ஆமாமாம். (வரிசையை மீண்டும் கவனித்து) ஆனால் எப்போது நாம் உள்ளே போகமுடியும்? எட்டுமணிக்குத் திறந்துவிடுவதாகச் சொன்னார்களே.

டேவிட்: அதுதான் வழக்கம். ஆனால் இப்போது மாறிவிட்டது. இந்த இடத்தை ஏற்று நடத்த நிறையப் பேர் இல்லை.

மான்லி: ம்ம்ம். இப்படி வரிசையில் வந்து நிற்பேன் என நான் நினைத்துப் பார்த்ததில்லை.

டேவிட்: ராத்திரி ஆக வரிசை நீண்டுவிடும். பாருங்கள், இன்னும் சில பேர் வருகிறார்கள்.

43. தெரு

Long shot: மான்லி வந்த திசையிலிருந்து மேலும் இருவர் வரிசையில் சேர வருகின்றனர்.

44. நடைபாதை. இரவு.

மான்லி, டேவிட் இருவரும் நடைபாதையில் அமர்ந்துகொண்டு எதிரே வெறித்துக்கொண்டிருக்கின்றனர், வரப்போகும் உரையாடலின்போது மேலும் பலர் வரிசையில் சேர்கின்றனர். மான்லி, தனக்கு முன்னால் வரிசையில் இருப்பவர்களைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

டேவிட்: நிறையச் சுற்றுவீர்களா?

மான்லி: என்ன?

டேவிட்: நிறையப் பயணம் செய்வீர்களா?

மான்லி: ஓ - ஆமாம், ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான மைல்கள்....

டேவிட்: (இரக்கத்துடனும், களைப்புடனும் தலையை அசைத்துக்கொண்டே) ஆம், அதே நிலைதான் இங்கேயும் (சற்றுநேரம் நிறுத்தி) கடந்த ஒரு வாரத்தில் மட்டும், மான்செஸ்டருக்குப் போய், பிறகு அங்கிருந்து இங்கே ஸ்கன்தார்ப் வரை வந்து... கொஞ்சநாளிலேயே எல்லாம் சலிப்பாகி விடுகிறது. (நிறுத்துகிறான்) நீங்கள் லண்டனா?

மான்லி: (அவன் கேட்டதைக் கவனிக்காமலிருந்துவிட்டு) என்ன?

டேவிட்: நீங்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவரா? லண்டனில்?

மான்லி: ஓ - ஆமாமாம். இங்கே நான் அதிகம் தங்குவதில்லை. (இகழ்வாக) என்னைப் போன்ற ஒருவனுக்கு அளிக்க இங்கே எதுவுமில்லை.

டேவிட்: (மீண்டும் இரக்கத்துடன் தலையை அசைத்து) ஆம், உண்மைதான். இந்த அசிங்கம்பிடித்த தேசம் முழுக்க இதேபோல்தான். சரி, இங்கே லண்டனில் மறுபடியும் என்ன செய்கிறீர்கள்?

மான்லி: (தோள்களைக் குலுக்கிக்கொண்டு) மற்ற இடங்களுக்குச் செல்வதற்கான அதே காரணம்தான். பசி.

டேவிட்: வாஸ்தவம்தான். சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்.

மான்லி: (வெளியே வெறித்துக்கொண்டு) பசி... அதைத் திருப்திப்படுத்த நான் சென்ற தூரங்கள்... ஆனாலும் திரும்பத் திரும்ப வந்துகொண்டேயிருக்கும்.

டேவிட்: நீங்கள் சொல்வது புரிகிறது. போனவாரம் ஒருதடவை நான் குப்பைத் தொட்டிகளில்கூடத் தேடிக்கொண்டிருந்தேன் (சிரித்து)... உண்மைதான்.

மான்லி: (களைப்புடன் தன்னைக் குலுக்கிக்கொண்டு) எல்லாம் தெரிந்த விஷயம்தான், ஆனால் நான் அதைச் சிபாரிசு செய்வேன்.

டேவிட்: அங்கே என்ன கிடக்கும் என்று நீங்கள் பார்த்தால்தான்...

மான்லி: குப்பைத்தொட்டிக்குள் சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்கின்றன. கண்டதையும் கலந்துசெய்கிற ஒருவித அவியல். சாதாரணக் கற்பனைகளில் தட்டுப்படாத ஆச்சரியமான கலவையில் சாப்பிடக் கிடைக்கும்.

முதல்முறையாக டேவிட்டின் மனதில், மான்லி லேசான கிறுக்கோ என்று தோன்றுகிறது. இருந்தும் ஒப்புக்கொள்கிறான்.

டேவிட்: உண்மைதான், ஒப்புக்கொள்கிறேன். வெறும் ஜம்பத்தில் பசியாலேயே செத்துப்போவது என்ன பிரயோஜனம்? எப்படியும் நல்லதொரு இரவு உணவு உங்களுக்குக் கிடைக்கப்போகிறது. மான்லி நிதானமாகத் திரும்பி டேவிட்டை முதல் முறையாகப் பார்ப்பதைப்போலப் பார்க்கிறார்.

மான்லி: உனக்கு எப்படித் தெரியும்?

டேவிட்: அதற்காகத்தான் இங்கே காத்துக்கொண்டிருக்கிறீர்கள், இல்லையா?

மான்லி: ஆனால் இதைப் பற்றி உனக்கு எப்படித் தெரிந்தது?

டேவிட்: (சாவகாசமாக) ரொம்ப நாட்களாகவே தெரியுமே.

மான்லி: அதுதான் எப்படி என்கிறேன்.

டேவிட்: ஆலோசனை மையம் ஒன்றில் சொன்னார்கள். பிகாடில்லி சர்க்கஸ் பக்கத்தில்.

மான்லி: (கடுங்கோபத்துடன்) பிகாடில்லி சர்க்கஸ்? (பின் தனது தவறை உணர்ந்தவராக) ஆ, , சரி சரி. (தலையைத் திருப்பிக்கொண்டு) வாஸ்தவம்தான்... சரி சரி.

45. தேவாலயத்திற்கு வெளியே தெரு.

Long shot: சுவரையொட்டி நீண்டிருக்கும் வரிசை.

46. தேவாலயத்தின் வாசலுக்கு முன்புறம்.

கதவைத் திறக்கும் ஒலிகள் உள்ளேயிருந்து கேட்கின்றன. கதவு திறக்கிறது.

47. தேவாலயத்தின் முற்றம்.

தேவாலயக் கட்டடத்தின் பக்கவாட்டுச் சுவரோரமாக அவர்கள் வரிசையமைத்து நிற்கிறார்கள். தேவாலயத்தின் பிரதான வாசல் அடைத்தேயிருக்கிறது.

48. தேவாலயம். பின்நடை.

வெளியிலிருந்து ஜனங்கள் பீறிட்டு சிறியதொரு நடையைக் கடந்து, மற்றொரு கதவைத் தாண்டி ஓடுகின்றனர்.

அதிகம் அவர்களுக்குள் பேச்சு இல்லை. பேசினாலும் கவனத்துடன் குரலைத் தாழ்த்தியே கிசுகிசுக்கிறார்கள்.

அந்த வரிசையில் மான்லியும், டேவிட்டும் சுயமுயற்சியின்றி செலுத்தப்படுகின்றனர். டேவிட் எதிரே மட்டும் பார்த்துக்கொண்டு நகர்ந்தாலும், மான்லி சுற்றுமுற்றும் கவனத்துடனும், ஆர்வத்துடனும் கவனித்துக்கொண்டு செல்கிறார்.

49. நிலவறைக்கு இறங்கும் படிக்கட்டுகள்.

அந்த வரிசை பழங்கற்களான படிகளில் இறங்கிச் செல்கிறது. சுரங்கத்திற்குள் இறங்குவதைப் போல.

50. தேவாலய நிலவறை.

தள்ளுவண்டி ஒன்று உருட்டப்பட்டு வருகிறது. அதில் பெரியதொரு பாத்திரத்தில் சூப், அகன்ற ட்ரேக்களில் பிஸ்கட் வரிசைகள், இரண்டு சூப் கரண்டிகள், சில உயரமான பிளாஸ்டிக் கோப்பைகள்.

அந்த மங்கலான செயற்கை வெளிச்சத்தில் இந்த உணவு வண்டி தள்ளப்பட்டு வரும் இடத்தைப் பற்றி தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கட்டடத்தின் அடித்தளம் அது என்ற அடையாளம் மட்டும் புலப்படுகிறது. வண்டி நிற்கிறது. காமிரா பின்னால் நகர, இரட்டைக்கதவுகள் அங்கே மூடப்பட்டிருப்பதால்தான் வண்டி நிற்கிறது என்பது தெரிகிறது. முதல் ஊழியர் - சட்டையும், ஜீன்சும் அணிந்த ஒரு இளம்பெண் - காட்சியில் வந்து ஒரு கதவைத் திறக்கிறாள். அவ்வாசல் வழியே வண்டி கடக்கையில், இரண்டாவது ஊழியர் - ஓர் இளைஞன் - காட்சியில் வருகிறான். வண்டியைத் தள்ளிக்கொண்டு செல்வது அவன்தான். அவர்களும் அந்த வண்டியும் நிலவறைக்குச் செல்வதைப் பின்தொடர்கிறோம்.

நாம் காட்சி இரண்டில் பார்த்த அதே நிலவறைதான். இடம் என்று பார்த்தால் அங்கு ஐம்பதிற்கும் கூடுதலாக இருக்கும் இவர்களனைவரையும் தங்க வைக்கலாம். இருந்தும் இங்கே பொதுவானதொரு அசௌகரியமும், காற்றோட்டமற்ற சூழ்நிலையும் இருக்கிறது. சுவர்களையொட்டி இப்போது பாய்விரிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர 1904 இருந்ததற்கு அதிகம் மாற்றமில்லை. கனத்த நிழலுருவங்களை உருவாக்கும்படியான விளக்குகள்.

வெளியே வரிசையில் நின்றிருந்த பொழுதைவிடவும் இப்போது பாயில் அமர்ந்திருக்கையில் அதிகம் சலசலத்துக் கொண்டிருக்கின்றனர். உணவு வண்டி உள்ளே வந்ததும் விசித்திரமானதொரு நிசப்தம் உடனே கவிகிறது. அவர்கள் எழுந்து அறையின் நடுப்பகுதிக்கு - அங்கேதான் வண்டி வந்து நிற்குமெனத் தெரிந்து - வருகின்றனர். தள்ளுமுள்ளு இல்லாமல் பொதுவான அவசரம் மட்டும் இருக்கிறது.

51. நிலவறை. ஒரு மூலை.

Over the shoulder: தேவாலயத்தின் வரைபடம், நாம் ஏற்கனவே கைப்பெட்டியில் பார்த்தது.

Another angle:  மான்லி பாய் மேல் அமர்ந்து, சுவரில் சாய்ந்துகொண்டு வரைபடத்தை ஆராய்ந்துகொண்டிருக்கிறார். உணவு வண்டி வருவதைப் பொருட்படுத்தவில்லை.

அவருக்குப் பக்கத்தில் இருக்கும் டேவிட் முட்டிபோட்டு எழுகிறான். உணவு இருக்கும்பக்கம் ஆர்வத்துடன் பார்த்துவிட்டு, பின் தயக்கத்துடன் மான்லியைத் திரும்பிப் பார்க்கிறான். அவர்களைக் கடந்துசெல்லும் நிழல்கள், எழுந்து செல்லாமல் இருக்கும் கடைசி ஆட்கள் அவர்கள்தான் எனக் காட்டுகின்றன.

டேவிட்: உங்களுக்கு நல்ல பசி என்றல்லவா நினைத்தேன்...

மான்லி: என்ன? ஓ... இல்லையில்லை. நான் அப்புறம் சாப்பிடுகிறேன்.

டேவிட்: அப்புறம் எதுவும் மிச்சமிருக்காது.

ஆனால் மான்லி வரைபடத்தில் கவனமாக இருக்கிறார். உன்னிப்பாகப் பார்த்துவிட்டு முகத்தைச் சுளிக்கிறார். கழுத்தை நீட்டி அந்த அறையின் அடுத்த கோடியில் எதையோ தேடுகிறாற்போல் பார்க்கிறார்.

டேவிட் தோள்களைக் குலுக்கிக்கொண்டு, எழுந்து காட்சிக்கு வெளியே செல்கிறான்.

52. நிலவறை. ஒரு மூலை.

மான்லி இன்னமும் சுவரையொட்டி அமர்ந்துகொண்டு வரைபடத்தை வைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டிருக்கிறார்.

53. நிலவறை.

வண்டியில், அந்த இரு ஊழியர்களும் வேலையில் மும்முரமாக உள்ளனர்.

பின் அம்மனிதர்கள் சாப்பிடும் காட்சிகள் வரிசையாக வந்து செல்கின்றன.

வண்டிக்கருகில் சிலர் நின்றுகொண்டும், சிலர் பாயில் அமர்ந்துகொண்டும் சாப்பிட்டுக்கொண்டிருக்கின்றனர்.

அந்தச் சூழல் மட்டுமல்ல, அங்கே உணவு வழங்கும் முறையும், அவர்கள் சாப்பிடும் விதமுமே அருவருக்கத்தக்கதாக இருக்கிறது. பட்டாணி சூப்பை மடக் மடக்கென்று குடித்துக்கொண்டு, ரொட்டித்துண்டை விள்ளலாகக் கடித்துக்கொண்டு, பெரும் பசியோடும், சிலர் சிரத்தையின்றி கடமைக்காகவும், சிலர் பெரும் அலைச்சலோடும் சாப்பிடுகிற முறையே சகிக்கவியலாமல் இருக்கிறது. பலரும் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சோர்ந்து காணப்படுகின்றனர். இடையில் சலசலப்பாக உரையாடல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. அனைத்தையும் மீறி இதைக் கேட்கிறோம்.

முதல் ஊழியர்: (பின்னணியிலிருந்து) உங்கள் கோப்பைகளைத் தயவுசெய்து தரையில் வைக்காதீர்கள். நாங்கள் பையோடு வந்து வாங்கிக் கொள்கிறோம். தரையில் வைக்காதீர்கள், இங்கேதான் நீங்கள் தூங்கப்போகிறீர்கள்.

இளைஞன் ஒருவன் சாப்பிடாது தனது கோப்பையை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

ஒரு கிழவன் அசிங்கமாகத் தனது மோவாயின் மீதெல்லாம் சூப் வழிய நச்நச்சென்று மென்றுகொண்டிருக்கிறான்.

54. நிலவறை.

விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கின்றன, இருந்தும் எங்கிருந்தோ கொஞ்சம் வெளிச்சம் கசிந்து, அங்கே தரையில் முடிச்சு முடிச்சாகத் தூங்கிக்கொண்டிருப்பவர்களின் நிழல் வடிவங்கள் புலப்படுகின்றன.

வினோதமான கலவையில் குறட்டை ஒலிகள்.

55. நிலவறை. இரட்டைக் கதவுகளுக்கு முன்பு.

குறட்டைகள் தொடர்ந்து கேட்கின்றன. இரட்டைக் கதவுகளில் ஒன்று திறந்து மான்லி வருகிறார். பின்பக்கமாகவே நடந்து வருகிறார். கதவிற்கு அப்பால் எதன்மீதோ அவரது கவனம் சிக்கியிருக்கிறது. அவரது கூடாரப்பை இப்போது தோளில் மாட்டப்பட்டிருக்கிறது.

மௌனமாகக் கதவை மூடிவிட்டுத் திரும்புகிறார். வரைபடத்தைக் கையில் வைத்திருக்கிறார். அந்த மங்கலான வெளிச்சத்தில் கண்களுக்கருகில் அப்படத்தை வைத்து, தாழ்த்தி, உன்னிப்பாக நோக்குகிறார். பதற்றத்துடன் சுற்றுமுற்றும் கவனிக்கிறார்.

56. நிலவறை.

உறங்கும் மனிதர்கள்மீது காமிரா படர்ந்து செல்ல, பின்னணியில் குறட்டை ஒலிகள்.

57. நிலவறை. ஒரு மூலை. இரவு.

Close shot: டேவிட் ஒருக்களித்து படுத்து தூங்கிக்கொண்டிருக்கிறான். காட்சிக்குள் ஒரு கை வந்து டேவிட்டின் தோளைப் பிடித்து உலுக்கி எழுப்புகிறது. பொது இடங்களில் உறங்கி, எந்நேரத்திலும் உலுக்கி எழுப்பப்படுகிற வழக்கத்தில் டேவிட் திடுக்கிட்டு விழிக்கிறான். தலையை உயர்த்திப் பார்க்கிறான்.

Point of view: டேவிட். மான்லியின் முகம் குனிந்து அவனை நோக்கிக்கொண்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மான்லியின் முகம் அமானுஷ்யமாக, அச்சமூட்டுவதாகத் தெரிகிறது.

மான்லி: (கிசுகிசுக்கிறார்; இதுவரை நாம் பார்த்திராத அளவிற்கு பதற்றத்துடன் காணப்படுகிறார்). உன் உதவி தேவைப்படுகிறது.

டேவிட்: என்ன விஷயம்?

மான்லி: (வரைபடத்தைப் பிடித்துக்கொண்டு) எனக்குக் கிடைத்த தகவல் எதிர்பார்த்த அளவிற்கு அவ்வளவு துல்லியமாக இல்லை. இந்தக் கட்டடத்தில் எல்லா இடங்களுக்கும் உனக்கு வழிதெரியுமா

டேவிட்: (முழங்கையை ஊன்றி பாதி எழுந்து அமர்ந்த நிலையில் மான்லியை மலங்க மலங்கப் பார்க்கிறான்) என்ன? என்ன செய்யப் போகிறீர்கள்?

மான்லி: நான் ஆடையறைக்குப் போக வேண்டும். முதலில் நான் பிரதான ஆலயத்திற்குச் செல்ல வேண்டும்.

டேவிட்: (சுட்டிக்காட்டி) சரி, இப்படியே நேராகப் போய்... (சட்டென்று நிறுத்தி) பாருங்கள், என்ன செய்யப் போகிறீர்கள் நீங்கள்?

மான்லி: எனக்குப் பசி, சாப்பிட வேண்டும். பிரதான தேவாலயத்திற்குப் போக உன்னால் வழிகாட்ட முடியும். வா.

டேவிட்: நீங்கள் பசியோடிருப்பது ஆச்சரியமில்லை. அப்போதே நீங்கள் எல்லோருடனும் சேர்ந்து சாப்பிட்டிருக்க வேண்டும். இப்போது ஆடையறையைப் பற்றி என்ன?

மான்லி: (பொறுமையின்றி) எனக்கு அங்கேதான் உணவு இருக்கிறது.

டேவிட்: நிச்சயமாகத் தெரியுமா?

மான்லி: அந்தவரைக்கும் எனக்குக் கிடைத்த தகவல்கள் நம்பகமாகத்தான் இருக்க வேண்டும். இப்போது நீ எனக்கு உதவியே தீர வேண்டும். மிகவும் பசியாக இருக்கிறேன்.

டேவிட்: நான் சொன்னபோதே நீங்கள் சாப்பிட்டிருக்க வேண்டும்.

டேவிட் திரும்பி மீண்டும் படுத்துக்கொள்கிறான். அவனுக்குத் தான் பசியுடன் இருந்த தினங்கள் நினைவிற்கு வருகின்றன. உடனே திரும்பி மான்லியைப் பார்க்கிறான். பெருமூச்சுடன் எழுந்திருக்கிறான்.

டேவிட்: இப்போது எதுவும் மிச்சமிருக்கப் போவதில்லை.

58. மாடிப்படிகள்

முன்பு நாம் இறங்கிவந்த படிகளில் மான்லியும் டேவிட்டும் ஏறிச் செல்கின்றனர். இருட்டில் சரியாகத் தெரியாவிட்டாலும் மான்லியின் மூச்சிறைப்பு மட்டும் கேட்கிறது. இது உடல் அசதியாலும் இருக்கலாம், அல்லது அவருக்குக் கூடிக்கொண்டே செல்லும் பதற்றத்தாலும் இருக்கலாம்.

59. படிகளின் முடிவில்.

இப்போது போதுமான ஒளியில் மான்லி தனது கூடாரப்பையை இன்னமும் சுமந்துகொண்டிருப்பது தெரிகிறது.

டேவிட்: (தாழ்ந்த குரலில்) அடுத்தமுறை தெரிந்துகொண்டிருப்பீர்கள். வயிறு எப்போதுமே விரட்டிப்பிடித்து விடும்.

மான்லி கனமாக மூச்சிறைத்துக்கொண்டு தனது வரைபடத்தில் சரிபார்க்கிறார்.

மான்லி: ம்ம்ம்ம்.

மான்லி ஒரு திசையில் நடக்கத் துவங்குகிறார். டேவிட் அவர் கையைத் தொட்டு எதிர்திசையைக் காட்டுகிறான்.

டேவிட்: இந்தப் பக்கம்.

60. தேவாலயம்.

பிரசங்க மேடையிலிருந்து நிழல்கள் பின்னிக்கொண்டிருக்கின்றன. ஜன்னல் வழியாக நீளும் நிலவெளிச்சம் விரல்களைப் போல ஆலயத் திண்ணை மேல் வருடிக்கொண்டிருக்கின்றன.

காட்சி மூன்றைப் போலவே நாம் முதலில் மான்லியின் கனத்த மூச்சிறைப்பைக் கேட்கிறோம். பின் மெதுவாக மான்லி, டேவிட்டின் உருவங்கள் இருட்டிலிருந்து வெளிப்படுகின்றன. தாழ்ந்த குரலில் பேசுவதைக் கேட்கிறோம்.

டேவிட்: (voice - over)  இப்போது நாம் மாட்டினால், இந்த இடத்திற்கு நாம் வருவதற்கே தடைவிதித்து விடுவார்கள். இருந்தாலும், எல்லாம் பூட்டித்தான் இருக்கிறது.

மான்லி: (voice - over) என்னிடம் எல்லாச் சாவிகளும் இருக்கின்றன.

டேவிட்: (voice - over) கடவுளே, எப்படி உங்களுக்குக் கிடைத்தது?

61. ஆடையறையின் கதவின் முன்னால்.

Close up:மான்லியின் கைகள் சாவிக்கொத்துகளினூடாகத் தேடுகின்றன. சாவிகளில் அடையாள அட்டைகள் கோக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நாம் காட்சி 10ல் பார்த்தவைதான்.

Wider angle:  மான்லி ஒரு சாவியைத் தேர்ந்தெடுத்து ஆடையறையின் கதவில் பொருத்துகிறார். டேவிட் அவருக்குப் பின்னால் பயத்துடன் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டு நிற்கிறான்.

மான்லி: (சாவி திரும்ப) ஹா.

மான்லி கதவைத் திறக்கிறார். டேவிட் வாசலை அவசரமாகப் பார்க்கிறான். பின் திருட்டுத்தனமாக அங்குமிங்கும் நோக்குகிறான்.

டேவிட்: சரி, ஜமாயுங்கள்.

டேவிட் திரும்பிச் செல்ல யத்தனிக்கிறான். மான்லி அவன் கையை முரட்டுத்தனமில்லாமல் பற்றுகிறார்.

மான்லி: நீயும் என்னோடு சேர்ந்துகொள்ளலாமே. உண்மையில் உன் உதவி மேலும் எனக்குத் தேவைப்படுமென்றே நினைக்கிறேன். தயவு செய்து கூட வா.

மான்லி தயங்கிக்கொண்டிருக்கிற டேவிட்டை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

62. ஆடையறை.

டேவிட் அவரை உற்றுப் பார்க்கிறான். மான்லி அவனுக்குப் பின்னால் சென்று கதவைமூடி பூட்டுகிறார். டேவிட் இதைக் கவனிப்பதில்லை. மான்லியும் ஆடையறையை நோட்டமிடுகிறார்.

Point of view: மான்லியும் டேவிட்டும், காட்சி நான்கில் வந்த அதே சிறிய அறை. வெளியிலிருந்து வரும் வெளிச்சம் வாசல் வழியாக பின்அறையின் கடைவாயில் வரை செல்கிறது. இப்போதும் 1904ஐப் போலவே கடைவாயிலுக்குக் கதவுகள் இல்லை. இருட்டாக, மர்மமாக, வேறோர் உலகத்திற்கான வாசலைப் போல.

டேவிட்: (பயத்தை மறைக்கும் விதமாக) இங்கே ஏதும் சாப்பாடு இருக்கிறமாதிரி இல்லையே. எப்படியிருந்தாலும் நான் சாப்பிட்டாகிவிட்டது.

டேவிட் திரும்பி ஆடையறையின் கதவிற்குச் சென்று பூட்டப்பட்டிருப்பதைக் காண்கிறான். திறக்க முயல்கிறான். அவன் எந்தளவிற்குப் பயத்தோடு அங்கிருந்து வெளியேறிவிடத் துடிக்கிறானோ அது தெரிகிறது. திரும்பி மான்லியைப் பார்க்கிறான்.

மான்லி இதையெல்லாம் பொருட்படுத்தால் அந்த அறையை ஆர்வத்துடன் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

டேவிட்: நீங்கள் பூட்டிவிட்டிருக்கிறீர்கள்.

மான்லி தனது கூடாரப்பையைக் கீழே வைத்துவிட்டுத் தனது கோட்டைக் கழற்றுகிறார். அவரது சஃபாரி உடையும், இடுப்பில் மாட்டிவிடப்பட்டிருக்கும் வாணலி, கரண்டி முதலான உபகரணங்களும் தெரிகின்றன. கோட்டைத் தரையில் போடுகிறார்.

டேவிட் ஒருகணம் பார்த்துவிட்டுப் பின்னறையின் கடைவாயிலைக் கவனித்து செல்கிறான்.

டேவிட்: (சகஜமான குரலில் பேச முயன்று) அங்கே என்ன என்று பார்த்து வருகிறேன்.

டேவிட் அந்தக்கரிய வாசலை நோக்கி, மான்லியைத் தாண்டிச் செல்கிறான். மான்லி தனது பையைத் திறந்து பொருட்களை அடுக்குவதில் டேவிட்டைக் கவனிப்பதில்லை.

On black doorway: வாசலில் டேவிட் தயங்கி, இருட்டிற்குள் உற்றுப் பார்க்கிறான். பின்னால் திரும்பி மான்லியைப் பார்க்கிறான். பின் தீர்மானித்து இருட்டிற்குள் நடந்து மறைகிறான்.

On Manley: நிமிர்ந்து கடைவாயிலைப் பார்க்கிறார். அவர் எதிர்பார்த்தது நடக்கப்போவதை உறுதி செய்து கொள்கிற மாதிரி.

On black doorway:  காமிரா அந்த இருட்டு முகப்பின் மீதே நெடுநேரம் நிலைத்து நிற்கிறது. ஒரு கூக்குரலையோ ஏதோ உள்ளேயிருந்து வரப்போவதையோ நாம் எதிர்பார்க்கிறோம்.

டேவிட் வெளியே வருகிறான். வியர்த்து தொப்பலாக நனைந்திருக்கிறான்.

மான்லி: (புன்னகைத்து) ம்? அங்கே என்ன பார்த்தாய்?

டேவிட்: (அதிர்ச்சியுடன்) அங்கே எதுவுமே இல்லை. சுத்தமாக இருட்டு. (பயத்துடன் சிரிக்கிறான்) ஒரு நிமிஷம் என்னால் வெளியே வரவே முடியாது என்று தோன்றியது.

மான்லி: பையா, இப்படிச் சும்மா சுற்றிக்கொண்டிருப்பதைவிட்டு எனக்குக் கொஞ்சம் உதவேன். நல்ல பையன் இல்லையா?

மான்லி கைநீட்டி வரவேற்கிறார்.

Another angle:அந்தப் பாதி வெளிச்சத்தில், மான்லி தரையில் பரப்பி வைத்திருக்கும் பொருட்கள் தெரிகின்றன. நாம் ஏற்கனவே காட்சி இருபத்திரெண்டில் பார்த்த பொருட்கள்தாம். அடுப்பு, பல்வேறு சமையல் கருவிகள், வலை, ஜாடி, பாத்திரங்கள் - பிறகு டாக்டர் கிராஸ்வெனரின் பெட்டி.

On David: பின்னறை அனுபவம் அவனை உலுக்கி விட்டிருக்கிறது. மறுப்புச் சொல்ல இயலாதவனாக இருக்கிறான். அந்தக் கருவிகளைப் பயத்துடன் பார்க்கிறான். பின் திடீரென்று நினைவிற்கு வந்தவனாகத் திரும்பி அந்த இருட்டு கடைவாயிலைப் பார்க்கிறான். அத்திசையிலிருந்து தள்ளி நிற்கிறான். Dissolve to:

 

63. ஆடையறை

Close shot:தரையில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு தட்டின் மீது எரிந்துகொண்டிருக்கும் மெழுகுவர்த்தி.

Another angle:மான்லி கடைவாசலருகில் தரையில் எதையோ மாற்றியமைத்துக்கொண்டிருக்கிறார். அவர் எதை எடுத்துவைக்கிறார் என்பது நமக்குத் தெரியவில்லை. மண்டியிட்டு, வேறொரு கோணத்திலிருந்து கவனிக்கிறார். கால்ஃப் விளையாட்டில் குறிபார்த்து அடிக்கக் கணிப்பதைப் போல அங்குமிங்கும் முட்டிபோட்டு, தரையில் எதையோ உற்றுக் கவனிக்கிறார்.

டேவிட் அவருக்குப் பின்னால் சுவரில் சாய்ந்துகொண்டு தனது மேற்சட்டையைப் பிடித்துக்கொண்டு நிற்கிறான்.

மான்லி: ம்ம்ம்.

மான்லி மீண்டும் மண்டியிட்டுத் தரையிலிருக்கிற, நமக்குத் தெரியாத எதையோ மீண்டும் ஆராய்கிறார். எதனாலோ அவர் அதிருப்தியாக இருப்பது தெரிகிறது.

மான்லி எழுதுகிறார். தரையிலிருந்து பார்வையை அகற்றாமல் டேவிட்டைக் கையசைத்து அழைக்கிறார்.

மான்லி: உன் மேற்சட்டை. அது சரியாக இருக்கும்.

டேவிட்: என்ன?

மான்லி: (பொறுமையின்றிக் கையைப் பலமாக ஆட்டிக்கொண்டு, கண்கள் இன்னமும் தரையில் பதிந்திருக்க) உன் மேற்சட்டையைக் கொடு.

டேவிட் இன்னமும் தனது மேற்சட்டையைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டிருக்கிறான்.

டேவிட்: மாட்டேன், உங்களுக்கு என்ன ஆயிற்று? எனக்கு இந்த மேற்சட்டை தேவை.

மான்லி: (பொறுமையின்றி) திருப்பித் தந்துவிடுவேன். இப்போது இது முக்கியம். மேற்சட்டையைத் தா.

மான்லி தரையைச் சோதித்துக்கொண்டே கையை நீட்டிக் கேட்கிறார். அவன் தந்தே தீரவேண்டுமென்ற முழு எதிர்பார்ப்பு அவரிடம் தெரிகிறது.

டேவிட் அவரைக் கவனிக்கிறான். பின் தயக்கத்துடன் தனது மேற்சட்டையைக் கழற்றுகிறான். அவன் தயக்கத்திற்கு காரணம் தெரிகிறது. அவனது சட்பையில் அக்குள் அருகே பெரிய கிழிசல் இருக்கிறது. ஓட்டையை மடித்து அக்குளுக்கடியில் பிடித்துக்கொள்கிறான்.

மான்லி, டேவிட்டை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் அவனது மேற்சட்டையை வாங்கிக்கொண்டு தரையில் மீண்டும் எதையோ மாற்றி அமைக்கிறார். அவனது மேற்சட்டையைப் பிரித்துப் பிடித்துச் சோதிக்கிறார்.

டேவிட்: இதோ பாருங்கள், எனக்கு அந்த மேற்சட்டை வேண்டும். அது இல்லாமல்....

மான்லி: (இடையில் வெட்டி) திருப்பித் தந்து விடுவேன். இப்போது என்னை அமைதியாகக் கொஞ்சநேரம் இருக்கவிடு. மிகத் துல்லியமாக இப்போது கணக்கிட வேண்டும்.

டேவிட் தனது மேற்சட்டையைக் கவலையோடு பார்த்துக்கொண்டிருக்கிறான்.

64. ஆடையறை. சிறிது நேரம் கழித்து.

Close shot: டேவிட்டின் சட்டையில் உள்ள கிழிசல். டேவிட் அதை விரல்களால் மடித்து, முனைகளை சுருட்டிக்கொண்டிருக்கிறான்.

காமிரா பின்னால் நகர, சுவரில் சாய்ந்துகொண்டு மான்லியும், டேவிட்டும் கடைவாயிலை நோக்கித் தரையில் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கு முன்னால் தரையில் மெழுகுவர்த்தி, மான்லிக்கு இப்போது பிசாசு அங்கே வந்துவிடுமென்ற நம்பிக்கை இல்லை. இருந்தும் அந்தக் கடைவாயில் மேல் கவனமாக இருக்கிறார். ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறார். டேவிட்டும் கடைவாயிலைப் பார்த்தபடி இருக்கிறான். அவன் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் அந்தக் கடைவாயிலிலிருந்து தள்ளி இருக்கக் கவனமாக இருப்பதைப் போலிருக்கிறது.

On the black doorway: ஒரு கணம் கடைவாயில்மேல் காமிரா அசைவற்று நிலைக்கிறது. பிறகு அதன் கோணம் கீழே தாழ, அந்த வாசலுக்கு முன்னால் தரையில் என்னென்னவோ விஷயங்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். அரைவட்ட வடிவில் ரொட்டித் துண்டுகள் கோலம் போட்டதுபோல் அமைக்கப்பட்டிருக்கின்றன. அந்த அரைவட்டத்திற்குள், தரையில் வெள்ளையாகப் பவுடர்போல ஏதோ தூவப்பட்டிருக்கிறது. அதன்மேல் ஆலிவ் இலைகள் போல ஏதோ போடப்பட்டிருக்கின்றன. நடுவே டேவிட்டின் மேற்சட்டையை விரித்து அதன் கைகள் பரப்ப போடப்பட்டிருக்கிறது.

மான்லியும் டேவிட்டும்: (தாழ்ந்த குரலில் பேசுகின்றனர்)

மான்லி: சரியாக இருக்கும், பாரேன்.

டேவிட்: என்ன அது?

மான்லி: ஆயிரத்து தொள்ளாயிரத்து நான்காம் வருஷம் ஒரு ராத்திரி நேரத்தில் பிச்சைக்காரன் ஒருத்தன் கொல்லப்பட்டான். இதே இடத்தில்.

மான்லியின் வெறித்த பார்வையை டேவிட் பின்தொடர்கிறான்.

On the black doorway: (பின்னணியில் அவர்களின் குரல்கள்)

டேவிட்: (voice over) ஏன்?

மான்லி: (v/o) என்ன?

டேவிட்: (v/o)  ஏன் அவனைக் கொன்றார்கள்?

மான்லி: (v/o) (இது தேவையற்ற கேள்வி என்ற பாவத்துடன்) ஓ, அது ஏதோ ஆராய்ச்சிக்காக சில மனித உறுப்புகள் தேவைப்பட்டதாம். அந்த மாதிரி ஏதோ காரணம்... எப்படியோ அவன் இங்கே கொண்டுவரப்பட்டு கொல்லப்பட்டான். இதே இடத்தில், எண்பது வருடங்களுக்கு முன்னால்.

மான்லி: (தொடர்ந்து: டேவிட்டை ஒரு முடிவுக்கு வரவழைப்பதற்காக....) இதே தேதியில், இதே இரவில்.

டேவிட்: இப்போது புரிகிறது. நாம் அந்த பிசாசு வருவதற்காகக் காத்திருக்கிறோம்.

மான்லி: சரியாகச் சொன்னாய். அதுவும் நான் கேள்விப்பட்ட வரையில் அது மிகவும் நம்பகமான பிசாசுவாம். (தயங்குகிறார்).

டேவிட்: அதை நீங்கள்...

மான்லி: அதே தான்.

On the black doorway...

மான்லி: (voice - over continuing)நானும் நல்ல பசியில் இருக்கிறேன்.

65. ஆடையறை. ஒருமணிநேரம் கழித்து.

Close shot:டேவிட் சட்டையின் கிழிசல். இப்போது அது கிழிந்து தொடங்கவிடப்பட்டிருக்கிறது. காமிரா பின்னால் நகர, டேவிட் முன்னைப் போலவே சுவரில் சாய்ந்து அமர்ந்திருக்கிறான். இப்போது அவனிடத்தில் பயமில்லை. எதுவந்தாலும் வரட்டும் என்ற விரக்தியும் அலட்சியமும் தெரிகின்றன.

டேவிட்டிற்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மான்லியை காமிரா நெருங்குகிறது. இப்போது அவர் மேலும் பசியுடன், இன்னும் பொறுமையிழந்து காணப்படுகிறார். முன்னால் குனிந்து, மூச்சிறைக்க கடைவாயிலை வெறிக்கப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறார். தீவிரமான இச்சையோடு காத்திருப்பதாகத் தெரிகிறது.

Another angle:  மான்லி திடீரென முன்னால் உற்றுப் பார்க்கிறார். டேவிட் வெறுமனே வெறித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறான். இது ஏனென்றால் மான்லி இதற்குமுன் பலமுறை ஏதோ தெரிகிறாற்போல் திடுக்கிட்டு முன்னால் சென்று பார்த்திருந்ததுதான். எதையும் காணாது மான்லி மீண்டும் பின்னால் நகர்ந்து சாய்ந்து கொள்கிறார்.

மான்லி: ஹம்ம். ஏதோ அங்கே நகர்வது மாதிரி எனக்குத் தெரிந்தது.

டேவிட்: (உணர்ச்சியின்றி) இங்கே இருக்கும் பிசாசு நான்தான். அது நான்தான்.

மான்லி: இப்போது என்ன செய்யவேண்டுமென உனக்குத் தெளிவாக ஞாபகமிருக்கிறதல்லவா? எல்லாமே கச்சிதமாக செய்து முடிக்கப்பட வேண்டும், தெரிகிறதா?

டேவிட்: (வெற்றாக எதிரே முறைத்துக்கொண்டு) இங்கே இருக்கும் பிசாசு நான்தான். இன்றிரவு மறைந்துபோவேன். யாரும் கவனிக்கப்போவதில்லை.

மான்லி: ஷ்ஷ்ஷ்!

மான்லி முன்னால் குனிகிறார்.

On the black doorway:  காமிரா சில கணங்கள் நிலைக்கிறது. எதுவும் நிகழ்வதில்லை.

On Manley and David: மான்லி மீண்டும் சகஜமாகிப் பின் நகர்கிறார். டேவிட் இன்னமும் ஸ்தம்பித்த பார்வையுடன் அமர்ந்திருக்கிறான்.

மான்லி: ம்ம்ம்.

66. தேவாலயம்.

Point of view:  அடையாளமற்ற ஏதோ ஒன்று தேவாலயத்தின் பக்கவாட்டு நடையில் செல்கிறது. ஆடையறையின் கதவைத் தேர்ந்தெடுத்து நுழைகிறது.

67. ஆடையறை.

Close shot:  மான்லியின் முகம் திடீரென பிரகாசிக்கிறது.

மான்லி: (பதற்றமான கிசுகிசுப்பில்) அங்கே!

மான்லி கண்களைக் கடைவாயிலிலிருந்து அகற்றாமல் எழுகிறார். கைகளில் அந்த வலையைப் பற்றியிருக்கிறார். டேவிட் கனவிலிருந்து உலுக்கப்பட்டவன் போல் அவசரமாக எழுந்து நிற்கிறான்.

மான்லி: (கிசுகிசுப்பாக) இந்த முறை நிச்சயம்! ஏதோ நகர்ந்தது. தயாராக இரு.

Hold on the doorway: இருட்டில் ஏதோ அசைவு தெரிகிறது. நம்மால் அடையாளம் காண இயலவில்லை. உள்ளேயிருந்து ஒரு பிச்சைக்காரன் வருகிறான். வாசலில் நிற்கிறான். மெதுவாக அவனது கோட்டும், உடம்பும், அதன்பிறகு முகமும் புலப்படுகிறது. பழங்காலத்தைச் சேர்ந்த பிச்சைக்காரனாகத் தெரிகிறான். பெரிசான தொளதொள கோட் அணிந்திருக்கிறான். நடுத்தர வயதினன். குள்ளமான உருவம். கன்னங்கள் துருத்திய நட்பான முகம். அவனிடம் சுத்தமாக எந்தவொரு பீதியூட்டும் அமானுஷ்யமும் இல்லை. கண்களைக் கசக்கிக்கொண்டு, தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டவன் மாதிரி மலங்கமலங்க விழித்துவிட்டுச் சிரிக்க முயல்கிறான்.

பிச்சைக்காரன்: வணக்கம்.

On Manley and David:  அந்தப் பிச்சைக்காரனை ஏதோ குழப்பத்துடன் பார்க்கின்றனர். மான்லியின் ஒரு கையில் அந்த வலை தயராக இருக்கிறது.

பிச்சைக்காரன்: இங்கே என்ன நடக்கிறது? என்ன இதெல்லாம்?

(தரையில் இறைந்திருக்கும் பவுடரை காலால் ஒதுக்குகிறான்)

எதையாவது இங்கே கொட்டிவிட்டீர்களா?

மான்லி: அதை எதுவும் செய்யாதே!

பிச்சைக்காரன்: (அவமானப்பட்டு) நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லை நண்பரே, ஆனால் இதை வைத்துக் கொண்டு ஒன்றையும் இங்கே பிடிக்க முடியாது, பட்டாம்பூச்சிகள் வேண்டுமென்றால் ஹாம்ப்ஸ்டெட் ஹீத்திற்குப் போ.

மான்லி: (வலையைத் தாழ்த்திவிட்டு, சீற்றத்துடன்) இங்கே நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?

பிச்சைக்காரன்: என்ன செய்துகொண்டிருக்கிறேன்? கிழட்டுப் பயலே, அதையேதான் நான் கேட்க வேண்டும். நான் எப்போதும் இங்கேதான் தூங்குவது, எங்கள் ரெவரெண்டிற்காகத் தரையைக் கழுவி விடுகிறேன். அவர் என்னை இங்கே தங்கிக்கொள்ள அனுமதித்திருக்கிறார். கீழே அந்தக் குறட்டை சத்தத்தில் யார் தூங்க முடியும்? கடவுளே...., என்னதான் நடக்கிறதோ அங்கே! கிறுக்கர்கள், எப்படி இங்கே உங்களால் வரமுடிந்தது என்று விளங்கவில்லையே!

மான்லி: இங்கே முக்கியமானதொரு நிகழ்ச்சி நடக்கப்போவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். நீ குறுக்கே வந்திருக்கிறாய்.

பிச்சைக்காரன்: (தோள்களைக் குலுக்கிக்கொண்டு) மன்னியுங்கள் நண்பரே. இங்கே அதிகம் எதுவுமில்லை. இருந்தால் நான் பார்த்திருப்பேன்.

பேசிக்கொண்டே அந்தப் பிச்சைக்காரன் திரும்பி, அந்த இருண்ட கடைவாயிலைப் பார்த்தபடி நிற்கிறான். காமிரா அந்த பிச்சைக்காரன் மேல் நிலைத்திருக்கிறது. அவன் முதுகு காமிராவை நோக்கி இருக்கிறது.

மான்லி: சரி, இங்கே நிச்சயமாக ஒரு விஷயம் நடக்கப்போகிறது என்பதை மட்டும் கூறுகிறேன். நீ முதலில் இங்கிருந்து கிளம்பு. அந்தப் பிச்சைக்காரன் பதிலளிக்காமல், அசையாமல் நின்றுகொண்டிருக்கிறான். காமிரா இன்னும் சில கணங்கள் அவன்மேலேயே நிலைத்திருக்க, அவன் தலை மெதுவாகப் பின்னால் திரும்ப, காமிரா நெருங்குகிறது. திடீரென ஒரு நொடியின் பிரிவில் அப்பிச்சைக்காரனின் முகம் மாறுகிறது. அது ஓர் இறந்த மனிதனின் முகம் - நிலை குத்திய கண்களோடு, உதடுகளில் ரத்தத்துடன் பயங்கரமானதொரு முகம்.

இம்முகத்தைக் கண்ணிமைக்கும் நேரம் மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. உடனே காமிரா வெட்டப்பட்டு மான்லியும் டேவிட்டும் கடும் அதிர்ச்சியில் திடுக்கிடுவதைக் காண்கிறோம். மான்லிதான் முதலில் தன்நிலைக்கு வருகிறார்.

மான்லி: அந்தத் தீப்பந்தத்தை எடு, சீக்கிரம்! சீக்கிரம் டா, சீக்கிரம்!

Another angle: கடைவாயிலைச் சுற்றி ஒரு நெருப்பு வளையம் சுற்றிக்கொண்டு படார் படாரென வெடிக்கிறது. எதனால் இது நேர்கிறது என நமக்குத் தெரிவதில்லை. அந்தப் பிச்சைக்கார உருவம் சிலைபோல அசையாமல் பாதி திரும்பி நின்று கொண்டிருக்கிறது. தீப்பிழம்புகளினூடாக அதன் முகம் தெரிவதில்லை.

Point of views:  பிசாசு. தீ நாக்குகளினூடாக டேவிட் ஏதோவொரு பவுடரை கிண்ணத்திலிருந்து எடுத்து காமிராவை நோக்கி வீசுகிறான். அவனது அவசரம் மான்லிக்கு உதவுவதற்காகவெனத் தோன்றவில்லை, தற்காப்புக்காகத்தானா எனப்படுகிறது.

மான்லி தனது வலையை உயர்த்தி குறிபார்த்து அதை வீசுகிறார். வலை காமிராவை மூடுகிறது. திரை இருள்கிறது.

68. ஆடையறை / பின் அறை. அரைமணிநேரம் கழித்து.

Fade in: ஆடையறை காலியாக இருக்கிறது. வலையும், டேவிட்டின் மேற்சட்டையும் பின்னறையின் வாசலருகே கிடக்கின்றன. நெருப்போ அதன் சுவடோ தெரியவில்லை.

இப்போது பின்னறையிலிருந்து வெளிச்சம் வருகிறது. மான்லி, மெதுவாக வாசல் வழியாக நகர்ந்து வந்து, ஒரு சிறிய ஸ்டூலில் உட்கார்ந்துகொண்டு, அடுப்பில் வாணலியை ஏற்றி ஏதோ சமைத்துக்கொண்டிருப்பதைக் காண்கிறோம். அந்த அடுப்பின் வெளிச்சம் மட்டுமே அங்கிருக்கிறது. பின்னறையின் விபரங்களை முழுசாகக் கவனிக்க முடியாதபடிக்குக் குறைச்சலான வெளிச்சம். இருந்தும்:

டேவிட் அடுப்பிற்கு அருகில் குத்துக்காலிட்டு சுவரில் சாய்ந்திருக்கிறான். மான்லியை மௌனமாக வெறித்துக் கொண்டிருக்கிறான்.

Close up: மான்லியின் முகம். பொறுமையற்ற, அதீதமாக இச்சைகொண்டுள்ள பாவம். தான் சமைத்துக்கொண்டிருப்பதை எதிர்பார்ப்புடன் பார்த்துப் புன்னகைத்துக் கொள்கிறார்.

மான்லி வாணலியில் மசாலாப்பொருட்களைச் சேர்க்கிறார். வாணலியிலிருந்து கொதிக்கும், களகளக்கும் ஒலிகள். வாணலியில் இருப்பது என்னவென்று நமக்குத் தெரிவதில்லை.

டேவிட், கண்களில் உணர்ச்சியற்று மான்லியை வெறித்துக்கொண்டிருக்கிறான்.

69. மத்திய லண்டன். அதிகாலை.

சேரிங் கிராஸ். ட்ரஃபால்கர் சதுக்கம். நகரம் இன்னும் விழிக்கவில்லை.

70. சேரிங் கிராஸிற்கருகில் ஒரு குறுகிய சந்து. அதிகாலை.

குப்பைக் கூளங்களும், பழைய செய்தித்தாட்களும் கீழே சிதறியிருக்கின்றன. அச்சந்தின் ஓரத்தில் வரிசையாகக் குப்பைத் தொட்டிகள். அச்சந்தின் கோடியிலிருந்து ஒரு வயதானவன் குப்பைத்தொட்டியில் சாப்பிடுவதற்கு ஏதாகிலும் இருக்குமா என ஆராய்ந்து கொண்டு வருகிறான். ஒரு பெரிய பிளாஸ்டிக் பையை வைத்துக்கொண்டு, சாப்பிடக் கூடியது எது கிடைத்தாலும் அவற்றை அதில் போட்டுக்கொண்டு வருகிறான். அவன் ஒவ்வொரு குப்பைத்தொட்டியாகத் தேடிக்கொண்டு நம்மை நோக்கி வந்துகொண்டிருக்கிறான்.

நமது காட்சியின் முன்பகுதியில் மான்லி வருகிறார். தனது ஓவர்கோட்டை இப்போது அவர் அணிந்திருக்கிறார். அவர் தடுமாற்றத்துடன், நின்று, நிதானித்துக்கொள்ள முயன்று, பக்கத்துச் சுவரில் சாய்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டு, காமிராவை நோக்கித் திரும்பி, திணறித்திணறி நடந்து வருகிறார். பெரும் அவஸ்தையில் துடித்துக்கொண்டிருக்கிறார். தனது வயிற்றைப் பிடித்துக்கொண்டு பலமாக மூச்சு வாங்கிக் கொள்கிறார். திரும்பி, பக்கத்திலிருக்கும் குப்பைத்தொட்டியில் வாந்தியெடுக்கிறார்.

இதற்கிடையில், குப்பைத் தொட்டிகளில் தேடிக்கொண்டு வரும் கிழவன் சில குப்பைத் தொட்டிகளுக்கப்பால் இவருக்கு முகத்தைத் திருப்பிக்கொண்டு தேடிக்கொண்டிருப்பதால் மான்லி வாந்தியெடுப்பதைக் கவனிப்பதில்லை. மான்லி வாந்தியெடுத்து முடித்துவிட்டு, நம்மை நோக்கித் திரும்பி, காட்சிக்கு வெளியே செல்கிறார். அந்தக் கிழவன் ஒரு தொட்டியை முடித்துவிட்டு அடுத்ததிற்கு வருகிறான். அவன் பார்வையே அது காலியாக இருப்பதைக் காட்டுகிறது. அடுத்த தொட்டியில்தான் மான்லி வாந்தியெடுத்திருக்கிறார். கிழவன் அந்தத் தொட்டியையும் நம்மையும் நோக்கி, தனது பையை எதிர்பார்ப்போடு திறந்து வைத்துக்கொண்டு வருகிறான். அந்தக் குப்பைத் தொட்டிக்குள் அவன் குனிந்து பார்க்க யத்தனிக்கையில் காட்சி வெட்டப்பட்டு:

71. ஒரு பாலத்திற்கடியில் நடைபாதை. அதிகாலை.

பாலத்திற்கடியில் நடைபாதையில் பதினைந்துபேர் அமர்ந்திருக்கின்றனர். நடைபாதைவாசிகள். இங்கேயே நிரந்தரமாக வசிப்பவர்களென்பதற்குச் சான்றாக அங்கே காலி பாட்டில்கள், கம்பளிப் போர்வைகள், செய்தித் தாட்கள். ஒவ்வொருவரின் இருப்பிடத்தையும் பிரிக்கும்படியாக கார்ட் போர்டு அட்டைப்பெட்டிகள் பிரித்துப் போடப்பட்டிருக்கின்றன. பாதிப்பேர் சுவரில் பாதி சாய்ந்த, பாதி உட்கார்ந்த நிலையில் இருக்கின்றனர்.

அந்தப் பாதையின் கோடியில் மான்லியின் உருவம் தோன்றி நம்மை நோக்கி வருகிறது. அவர்கள் மான்லியை அசிரத்தையாகப் பார்க்கின்றனர். பாதியில் மான்லி நின்று, பக்கத்துச் சுவரில் சாயந்துகொண்டு ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார்.

Another angle:  மான்லி நின்றிருக்கும் இடத்திற்கருகிலேயே வீடற்றவன் ஒருவன் தரையில் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு நாற்பது வயதிருக்கலாம். ஆடையில்லாமல் ஒரு கோட் அணிந்திருக்கிறான். அவன் உடைகள் அழுக்காக, கசங்கிப்போயிருக்கின்றன. அவை ஒழுங்காக இருந்த காலத்தில் இவன் அணிந்து கொண்டிருந்தால் உடனே இவனுக்கு இன்ஷ்யூரன்ஸ் கிடைத்திருக்கும். மான்லியை அவன் ஆதுரத்துடன் பார்த்துத் தன் பக்கத்தில் விரிக்கப்பட்டிருக்கும் அட்டையில் அமரச் சொல்லி சைகை காட்டுகிறான்.

வீடற்றவன்: உட்கார். ஓய்வெடுத்துக்கொள்.

மான்லி: ம்ம்ம்.

மான்லி அமர்கிறார். இன்னமும் மூச்சிறைக்கிறது அவருக்கு. எதிரே கவலையோடு பார்க்கிறார். வீடற்றவன் மான்லியைப் பார்த்து நட்பாகப் புன்னகைக்கிறான். மான்லி அவனைப் பொருட்படுத்தாவிட்டாலும் தொடர்ந்து புன்னகைத்துக் கொண்டேயிருக்கிறான். மான்லி அவனை ஒருமுறை பார்த்துவிட்டு பார்வையைத் திருப்பிக்கொள்கிறார்.

On Manley and homeless man: மான்லி தனது வயிற்றைப் பிசைந்துகொண்டு எதிரே கவலையோடு நோக்குகிறார்.

வீடற்றவன்: அளவிற்கு மிஞ்சிவிட்டதோ?

மான்லி: என்னது?

வீடற்றவன்: (கைகளால் குடிப்பது போலப் பாவம் காட்டி) ரொம்ப அதிகமாகி விட்டதோ?

மான்லி அவனை வெறுப்புடன் பார்க்கிறார். பின் சுயகௌரவத்துடன்:

மான்லி: பசியாய் இருந்தேன். சாப்பிட்டேன். இப்போது வயிறு சரியில்லாமல் ஆகிவிட்டது.

வீடற்றவன்: (தோள்களைக் குலுக்கிக்கொண்டு) சரி, சரி, நீ சொல்வது புரிகிறது.

மான்லி: என்ன புரிந்தது உனக்கு? உனக்குத் தெரியுமா? நான் எப்படிப்பட்ட பசியில் இருந்தேன் என்பதை புரிந்துகொள்ள முடியுமா உன்னால்?

வீடற்றவன்: எல்லோருக்கும்தான் பசிக்கிறது, இல்லையா?

மான்லி மீண்டும் அவனை இழிவாகப் பார்க்கிறார்.

மான்லி: உனக்கு உண்மையான பசி என்றால் என்னவென்று தெரியாது.

வீடற்றவன் தோள்களைக் குலுக்கிக்கொள்கிறான். மான்லி எதிரே வெட்டவெளியை வெறித்துக்கொண்டு வயிற்றைப் பிசைந்து கொண்டிருக்கிறார்.

72. பாலத்திற்கடியில் நடைபாதை. விடியற்காலை. சிறிதுநேரம் கழித்து.

நடைபாதையின் ஒரு கோடியில் ஒரு ரோல்ஸ் ராய்ஸ் வருகிறது. அமர்ந்திருக்கும் வீடற்றவர்களை நிதானமாகக் கடக்கிறது.

73. கார். விடியற்காலை.

கார்ட்டர் நடைபாதையைப் பார்த்துக்கொண்டே ஓட்டி வருகிறான். கொஞ்சநேரமாகவே தேடிக் கொண்டிருக்கிறான். மான்லியைக் கண்டதும் மிகமிக இலேசான புன்னகை அவன் முகத்தைக் கடந்து செல்கிறது. காரை நிறுத்திவிட்டுச் சில கணங்கள் அப்படியே அமர்ந்து மான்லியைக் கூர்ந்து கவனித்தவாறிருக்கிறான்.

74. பாலத்திற்கடியில் நடைபாதை.

மான்லியும் வீடற்றவர்களும் அமர்ந்திருப்பதற்கெதிரே ரோல்ஸ் நிற்கிறது. மான்லி களைப்புடன் காரை நிமிர்ந்து பார்க்கிறார். எழுந்திருக்க முயலவில்லை. அவசரமேயில்லாமல் கார்ட்டர் வெளியே வருகிறான். மான்லி எழுந்திருப்பதற்கு உதவாமல் காரின் பின்கதவைத் திறந்துவிட்டு நிற்கிறான். மான்லி களைப்புடன் எழுந்திருக்கிறார். கார்ட்டர் கதவைத் திறந்து வைத்துக்கொண்டு அமைதியாய் நின்றுகொண்டிருக்கிறான். தள்ளாடித் தடுமாறி காரில் ஏறவரும் மான்லியைக் கைத்தாங்கலாகப் பிடிக்கவோ, உதவவோ முயலவில்லை.

On homeless man:அவன் முகத்தில் வியப்பே இல்லை. வெகுசில விஷயங்களே அவனை வியப்படையச் செய்யும்போல. அதே நட்பார்ந்த புன்னகையுடன் அவர் காரில் ஏறுவதைப் பார்க்கிறான்.

கார் கதவுகள் மூடப்படும் ஒலிகள்.

Another angle: ரோல்ஸ் கிளம்புகிறது. காட்சியில் உள்ள வீடற்றவர்களைக் கடந்து செல்கிறது.

75. ஒரு லண்டன் தெரு.

ஆளரவமற்ற தெருவில் ரோல்ஸ் செல்கிறது.

76. கார்.

வரப்போகும் உரையாடல் முழுக்க மான்லி சோர்வுடன் சன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டே பேசுகிறார். கார்ட்டரிடம் பேசிக்கொண்டிருந்தாலும் உண்மையில் தனக்குத்தானே உரக்கப் பேசிக்கொள்வதாகத்தான் அது இருக்கிறது. கார்ட்டரின் மௌனத்தைக் கவனித்ததாகவோ, பொருட்படுத்துவதாகவோ தெரிவதில்லை.

மான்லி: (வெற்றியுணர்வின்றி) என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள விரும்புவாய் அல்லவா கார்ஸன்? எதற்காக நேற்றிரவு சென்றேனோ அதைச் சாதித்துவிட்டேன்.

கார்ட்டரிடம் எந்த உணர்ச்சியுமில்லை.

மான்லி: எதிர்பார்த்த மாதிரி ஒன்றும் அசாதாரணமாக இல்லை. (தயங்கி) மொத்தத்தில் ஏமாற்றம்தான். ஒருவேளை மீண்டும் ஐஸ்லாந்திற்கு நான் செல்ல வேண்டியிருக்கலாம். (தயங்கி) ம்ம்ம். வெறுப்பாக இருக்கிறது கார்ஸன். (தயங்கி) சாதாரணமாக கிடைப்பது அனைத்தையும் சுவைத்துவிட்டபின் வாழ்க்கை வெறுத்து விடுகிறது.

மான்லி ஜன்னலுக்கு வெளியே சிந்தனைகளில் தொலைந்து வெறித்தபடியே இருக்கிறார்.

77. பின்னறை / ஆடையறை. அதிகாலை.

Close shot: டேவிட். சுவரை ஒட்டியபடி தூங்கிக்கொண்டிருந்தவன் எழுந்திருக்கிறான். சுற்றுமுற்றும் பார்த்தபடி சோம்பல் முறிக்கிறான். அந்தப் பின்னறை, சிறிய தனியான இடம். தேவாலயத்தின் குப்பைக் கூளங்கள் போட்டுவைக்கப்படும் ஸ்டோர் ரூம் அது. இதுவரை நாம் கவனிக்காமலிருந்த, ஆளுயரக் கண்ணாடி ஒன்று சுவரில் மாட்டப்பட்டிருப்பது தெரிகிறது. தரையில் மான்லி விட்டுச்சென்ற அடையாளங்கள். சுத்தப்படுத்தாது பாதியில் விட்டுச்சென்ற முகாம் ஒன்றின் இடம்போலக் காணப்படுகிறது. ஸ்டவ் அடுப்பின் மேல் கோணலாக வாணலி தொற்றிக்கொண்டிருக்கிறது. கரண்டிகள், தவா, காலித்தட்டு, கோப்பைகள், பொட்டலங்கள் என இறைந்து கிடக்கின்றன. மான்லியின் ஸ்டூல் ஓரத்தில் சாய்ந்திருக்கிறது.

நன்றாகக் குடித்துவிட்டு தூங்கி எழுந்தவன்போல டேவிட் காணப்படுகிறான். பலமாகப் பெருமூச்சு விட்டுக்கொண்டு பின்னங்கழுத்தைப் பிசைந்துகொள்கிறான். திடீரென்று தன் சட்டையின் கிழிசல் நினைவிற்கு வந்தவனாக, அந்த விநோத ராத்திரி கிழிசலை ஒட்டவைத்து விட்டிருக்குமோ என்ற ஆவலுடன் சோதித்துப் பார்த்துக்கொள்கிறான். களைப்புடன் எழுந்து அந்த ஓட்டையில் விரலைவிட்டு தன் நினைவேயின்றி ஓரத்தை மடித்து சுருட்டுகிறான். அந்த அறையில் எதையோ தேடுகிறான்.

Point of view:டேவிட்.

அந்த வாணலியில் மூன்று நான்கு மாமிசத் துண்டுகள் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கின்றன. சோர்வுடன் கூடிய ஒருவித ஆர்வத்தில் அதனருகே சென்று கிட்டத்தில் பார்க்கிறான்.

டேவிட் குனிந்து, அந்த வாணலியிலிருந்து ஒரு மாமிசத் துண்டை கையில் எடுக்கிறான். ஏதோ நத்தை ஒன்றை பிடித்திருக்கிறாற்போல அருவருப்புடன் அதைப் பிடித்துக்கொண்டிருக்கிறான். ஜாக்கிரதையாக அதைத் தன் முகத்தருகே கொண்டு வருகிறான். அதன் வாசனை - கடுமையான வயிற்றைப் புரட்டும் துர்நாற்றம், அவனைத் தாக்குகிறது. முகத்தைச் சுளித்துக்கொண்டு அதை வீசியெறிகிறான். மீண்டும் பெருமூச்சுடன் எதிரே வெறிக்கிறான். இன்னமும் சட்டையின் கிழிசலை நோண்டிக்கொண்டே வாசலுக்குச் சென்று சுற்றுமுற்றும் தேடுகிறான். அந்த வாசல் வழியாக ஆடையறையின் கதவு சற்றுத் திறந்திருப்பது தெரிகிறது. அந்தத் தரை வழியாக காமிரா நகர, பின்னறையின் வாசலைத் தாண்டி டேவிட் தேடிக்கொண்டிருந்த அவனது மேற்சட்டை கிடப்பது தெரிகிறது. வெள்ளைச் சாம்பல் இறைந்திருக்க அதன்மேல் அது கிடக்கிறது.

டேவிட் தனது மேற்சட்டையை எடுத்துக்கொண்டு அதில் படிந்திருக்கும் சாம்பலை உதறுகிறான். அதன் தோள்பகுதியில் நெருப்பினால் பெரியதொரு ஓட்டை ஏற்பட்டிருக்கிறது. அதைப்பார்த்து டேவிட் நொந்து போகிறான். அந்த ஓட்டையை அவன் விரல்கள் வருடுகின்றன. அதற்குள் அவனது கவனத்தை பின்னறையிலுள்ள ஏதோவொன்று கவர்கிறது. மேற்சட்டையின் புதிய ஓட்டையை ஏதோ தீக்காயம்போல பிடித்துக்கொண்டு அங்கே செல்கிறான்.

டேவிட் பார்ப்பது அச்சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் ஆளுயரக் கண்ணாடியை, அதன் முன்னால் நின்று, தனது மேற்சட்டையின் ஓட்டையிலிருந்து கையை எடுத்துவிட்டு, தனது கண்ணாடித் தோற்றத்தை உணர்ச்சியற்றுப் பார்க்கிறான். பின் பெருமூச்சுடன் தோள்களைக் குலுக்கிக்கொண்டு திரும்புகிறான். பின்னங்கழுத்தைப் பிசைந்துகொண்டே நடந்து செல்கிறான்.

78. மத்திய லண்டன். அதிகாலை.

அமைதியான காலையின் தெருக்களில் ரோல்ஸ் சென்றுகொண்டிருக்கிறது.

 

தமிழில் : ஜி.குப்புசாமி

THE GOURMET

- Kazuo Ishiguro

SPANTA. 43 / Spring 1993

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாணவனின் மனைவி

எட்கார் கெரெட் - குறுங்கதைகள்

ஒரு சின்ன நல்ல விஷயம் - ரேமண்ட் கார்வர்