அமைதி - ரேமண்ட் கார்வர்

 

அமைதி

ரேமண்ட் கார்வர்

(தமிழில் ; ஜி.குப்புசாமி )

     நாவிதன் எனக்கு முடிவெட்டிக்கொண்டிருந்தான் . நான் உட்கார்ந்திருந்த நாற்காலிக்குப் பின்னால் சுவரையொட்டி மூன்று பேர் உட்கார்ந்திருந்தார்கள் . காத்திருந்த இருவரை இதற்குமுன் பார்த்ததில்லை . மற்றவனின் முகம் பரிச்சயமாக இருந்தாலும் தெளிவாக நினைவுக்கு வரவில்லை . கத்தரி என் கேசத்தில் விளையாடிக்கொண்டிருக்க, நான் அந்த ஆளையே திரும்பத்திரும்ப பார்த்துக் கொண்டிருந்தேன் . அவன் பல் குச்சியால் வாய்க்குள் நோண்டிக் கொண்டிருந்தான் . கட்டுமஸ்தானவன் . குட்டையான சுருட்டை முடி . அப்போது என் மனக்கண்ணில் அவன் தொப்பியும் சீருடையும் அணிந்து வங்கியின் வரவேற்பறையில் இடுங்கிய கண்களால் வருவோர் போவோரை கண்காணித்துக் கொண்டிருக்கும் காட்சி தோன்றியது.

     மற்ற இருவரில் ஒருவன் மற்றவர்களை விடப்பெரியவன் . தலை முழுக்க நரைத்த சுருட்டை முடி . புகைத்துக கொண்டிருந்தான் . மூன்றாமவன் அவ்வளவு வயதானவன் அல்ல . உச்சியில் ஏறக்குறைய வழுக்கை . ஆனால் பக்கவாட்டில் செவிகளை மூடும்படி முடி தொங்கிக் கொண்டிருந்தது . மரம் வெட்டிகளின் பூட்ஸும் , மிஷின் ஆயில் படிந்த பளபளப்பான காலசராயும் அணிந்திருந்தான் .

     நாவிதன் என் உச்சியில் கைவைத்து தலையைத் திருப்பினான . காவலன் பக்கம் திரும்பி , “ என்ன சார்லஸ் , மான் கிடைத்ததா ? ‘‘ என்றான் .

     எனக்கு இந்த நாவிதனைப் பிடிக்கும் .பெயர் சொல்லி கூப்பிட்டுக் கொள்ளும் அளவுக்கு நாங்கள் இருவரும் நெருக்கமானவர்கள் அல்ல . ஆனால் முடிவெட்டிக்கொள்ள வரும்போது சிநேகமாக இருப்பான் . மீன் பிடித்தல் எனது பொழுது போக்கு என்பதை அறிவான் . மீன் பிடித்தலைப் பற்றி பேசுவோம் . அவன் வேட்டையாடச் செல்வானா என்று தெரியாது . ஆனால் அவனால் எதைப்பற்றியும் பேசமுடியும் . இந்த வகையில் அவன் ஒரு நல்ல நாவிதன்தான் .

     “ பில் , அது பெரிய தமாஷ் . பாழாப்போன கதை . “ என்றான்  அந்தக் காவலன் . பல்குச்சியை வெளியில் எடுத்து சாம்பல் குடுவையின் மேல் வைத்தான் . தலையை ஆட்டிக் கொண்டான் . “ அகப்பட்டது என்றும் சொல்லலாம் , அகப்படவில்லை என்றும் சொல்லலாம் . ஆமாம் , இல்லை என்றுதான் உன் கேள்விக்கு பதில் சொல்ல முடியும் .

     எனக்கு அவன் குரலைப் பிடிக்கவில்லை . ஒரு காவலாளிடம் எதிர்பார்க்கக்கூடிய குரலாக இல்லை . அவன் தோற்றத்துககுப் பொருத்தமில்லாத குரல் .

     பத்திரிக்கையைப் புரட்டிக்கொண்டிருந்த பெரியவனும் செய்தித்தாளை வைத்திருந்தவனும் நிமிர்ந்தனர் . படித்துக்கொண்டிருந்ததைக் கீழே வைத்துவிட்டு அந்தக் காவலன் பேசுவதைக் கேட்கத் திரும்பி உட்கார்ந்தார்கள் .

     “ என்ன ஆச்சு  என்று சொல்லு சார்லஸ் , நாங்களும் கேட்கிறோம் “ என்றான் நாவிதன் .

     நாவிதன் என் தலையை மீண்டும் திருப்பி , கத்தரிக்கோலை இயக்கத் தொடங்கினான்.

••••••••••••••••••••••••••••

     “ நாங்கள் ஃபிக்கிள் ரிட்ஜ் முகட்டில் ஏறிக் கொண்டிருந்தோம் . கிழவனும் நானும் அந்தப் பையனும் . இரலை மான்களை வேட்டையாடுவதுதான் நோக்கம் . கிழவன் ஒரு குழுவில் முன்னணியில் இருந்தான் . நானும் இந்தப் பொடியனும் இன்னொன்றில் . பொடியனுக்கு ஹாங்க் ஓவர் . அவன் தோலை உரிச்சிருக்கணும் . போதை தெளியவேயில்லை நாள் முழுக்க தண்ணீராகக் குடித்துக் கொண்டிருந்தான் . விடியற்காலையில் வந்தோம். இப்போது பிற்பகல் ஆகிவிட்டிருந்தது . எதுவும் அகப்படவில்லை , ஆனால் நம்பிக்கை இருந்தது . கீழே இருக்கும் வேட்டைக் காரர்க்ள் நாங்கள் இருக்கும் திசையை நோக்கி மானை விரட்டுவார்கள் என்று மர திமிசுக்குப் பின்னால் உட்கார்ந்து கொண்டு காத்திருந்தோம். கீழே பள்ளத்தாக்கில் சுடுகிற சத்தம் கேட்டது .

     “ கீழே அந்த இடத்தில் பழத்தோட்டங்கள் இருக்கின்றன ,  “ என்றான் செய்தித்தாள்களை வைத்திருந்தவன் . எதற்காகவோ அவன் படபடப்பாகவே இருந்தான் . கால்மேல் காலைப் போட்டுக் கொண்டான்  , பூட்ஸ் பாதத்தை வேகமாக ஆட்டிக் கொண்டிருந்தான் , மீண்டும் காலை மாற்றிப் போட்டுக் கொண்டான் . இந்த இரலைமான்களெல்லாம் அந்தப் பழத்தோட்டங்களுக்குப் பக்கத்தில்தான் சுற்றிக் கொண்டிருக்கும் . “

     “ உண்மைதான் , “ என்றான் காவலாள் . “ இந்தப் பொறுக்கி மான்கள் அங்கே நுழைந்து பச்சை ஆப்பிள் பிஞ்சுகளையெல்லாம் சாப்பிட்டுவிடும் . கீழே துப்பாக்கி சுடுகிற சத்தம் கேட்டதும் , எங்க இடத்துக்குத்தான் ஓடிவரும் என்று குத்துக்காலிட்டு காத்துக்கிட்டிருந்தோம் . அப்போ நுறு அடி தூரத்திலிருந்த புதரிலிருந்து இந்த இரலை பாய்ந்து வந்துச்சு . ரொம்பப் பெரிசு . இந்தப் பொடியனும் நானும் ஓரே நேரத்தில் பார்த்துட்டோம் . அவன்  சட்டுனு துப்பாக்கியை எடுத்து கன்னாபின்னான்னு சுடத் தொடங்கிட்டான் . மரமண்டை . ஒரு குணடுகூட அதுமேல படலை . அதுக்கு எங்கிருந்து சுடறாங்கன்னு தெரியாம , எந்தப்பக்கம் பாயறதுன்னு குழம்பி திணறிக்கிட்டிருந்தது . அப்புறம் நான் சுட்டேன் . இந்தக் குழப்பத்துக்கு மத்தியிலே அதை சரியா ஸ்தம்பிக்க வெச்சுட்டேன் . “

     “ ஸ்தம்பிக்க வெச்சுடறதுன்னா ? “ நாவிதன் கேட்டான் .

     “ அதான் , ஸ்தம்பிக்க வெச்சுட்டேன் , “ என்றான் . “ குண்டு சரியா பாய்ந்துட்டது . அது அந்த மானை அப்படியே ஸ்தம்பிக்க வெச்சுட்டது . தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு , நடுங்கி நடுங்கி திணறிக்கிட்டிருக்கு . இந்தப் பொடியன் விடாம சுடறான் . எனக்கு மறுபடியும் கொரியாவுக்குப் போயிட்ட மாதிரி இருந்தது. மறுபடியும் சுட்டேன். ஆனா படலை . அந்தக் கிடாய் புதருக்குள்ளே போயிருச்சு . அதுக்கு இதுக்குள்ளே எல்லா சக்தியும் போயிட்டிருக்கும் . இந்த முட்டாள் பையன் எதுக்காகவோ புதரைப் பாத்து சுட்டுக்கிட்டே இருக்கான் . ரவையெல்லாம் தீர்ந்துட்டது . சரியா ஒரு குத்து விட்டேன் . அவன் வயத்துலயே . அவனும் ஸ்தம்பிச்சுட்டான் . “

     “ அப்புறம் என்ன ? “ என்றான் செய்தித்தாளை வைத்திருந்தவன் . பேப்பரை சுருட்டி கால்முட்டியில் தட்டிக்கொண்டிருந்தான் . “ அப்புறம் என்ன ? துரத்திக்கிட்டு போயிருப்பீங்க . இதுங்க எல்லாம் எங்கேயாவது கண்டுபிடிக்க முடியாத இடமா பாத்து உயிரை விடும் . “

     பெரியவன் , “ துரத்திக்கிட்டு போனிங்கதானே ? “ என்றான் . அது ஒரு கேள்வியாக தொனிக்காவிட்டாலும் .

     “போனோம் . நானும் பொடியனும் பின்னாலேயே துரத்திக்கிட்டு போனாம். இந்தப் பொடியன் எதுக்கும் லாயக்கில்லாதவன் , அவனால நடக்கவே முடியல . துவண்டுட்டான் . மண்டுப்பயல் . “ அந்தக் காவலன் நடந்ததை நினைத்து இப்போது சிரித்துத்தான் ஆகவேண்டும் . “ பீர் குடிச்சிட்டு ராத்திரி முழுக்க துரத்திகிட்டு ஓடணும்னா எப்படி ? என்னால முடியலேங்கறான் . அது இவனுக்க இப்பத்தான் தெரியுது , கடவுளே ! ஆனாலும் இழுத்துக்கிட்டு ஓடினேன் . ரெண்டு பேரும் துரத்தினோம் . சரியான ஓட்டம் . தரையெல்லாம் , செடி இலையிலெல்லாம் , வழியெங்கும் ரத்தம் . எல்லா இடத்திலும் ரத்தம் . என்னதான் பெரிய இரலைன்னாலும் இவ்வளவு ரத்தம் இருக்குமா ? நான் பார்த்ததேயில்லை . அந்தப் பிசாசு எப்படி ஓடிக்கிட்டேயிருந்ததுனு தெரியலை . “

     “ சில நேரங்களில் அப்படித்தான் ஓடுவதை நிறுத்தவே நிறுத்தாது , “ என்றான் செய்தித்தாள் வைத்திருந்தவன் . “ ஒவ்வொரு முறையும் கண்டுபிடிக்க முடியாத இடமா பார்த்தது உயிரை விடும் . “

     “ அந்தப் பயலை ஒழுங்கா சுடலைன்னு சவட்டி எடுத்தேன். அவன் என்னாடான்னா , எதிர்த்துக்கிட்டு வரான் . விட்டேன் ஒரு குத்து , இங்கே “ காவலாள் தலையின் பக்கவாட்டில் தொட்டுக்காண்பித்து சிரித்தான். “ அவனுக்கு காது கிழிஞ்சிட்டிருக்கும் . உபயோகமத்த பயல் . அவனுக்கென்ன வயசா ஆயிடுச்சு ? அவனுக்கு அந்த அடி தேவைதான் . ஆனா என்னன்னா , இருட்டிவிட்டதாலே தொடர்ந்து தேட முடியலே . இந்தப் பொடியனும் உட்கார்ந்து வாந்தியெடுக்க ஆரம்பிச்சுட்டான் . “

     “ இந்நேரம் அந்த இரலையை ஓநாய் கூட்டம் சாப்பிட்டு காலிசெய்து விட்டிருக்கும் , “ என்றான் செய்தித்தாள் வைத்திருந்தவன் . “ ஓநாய் , காக்கை , பருந்து …………… “

     அவன் செய்தித்தாளை விரித்தன் . ஒழுங்காக மடித்தான் . பக்கத்தில் வ்ததுவிட்டு கால் மேல் கால் போட்டுக கொண்டான். எங்கள் எல்லோரையும் தலையைத் திருப்பி வரிசையாகப் பார்த்தான் . தலையை ஆட்டிக்கொண்டான் .

     பெரியவன் நாற்காலியில் திரும்பி உட்கார்ந்து சன்னலுக்கு வெளியே பார்த்தான் . சிகரெட் பற்றவைத்துக் கொண்டான்.

     “ அப்படித்தான் நினைக்கிறேன் ,  “ என்றான் காவலாள் . “ பாவம் , எவ்வளவு பெரிசு அது !  பில் , உன் கேள்விக்கு பதில் சொல்லணும்னா , மானைப் பிடிச்சேன் , பிடிக்கலை . அப்படித்தான் சொல்லணும் . ஆனா , அன்னிக்கு ராத்திரி எங்களுக்கு மான்கறி விருந்து கிடைச்சது . கிழவன் ஒரு மான் குட்டியை எப்படியோ வேட்டையாடிட்டிருக்கான் .நான் கீழே முகாமுக்குப் போறதுக்குள்ளே அதை வெட்டி தொங்க விட்டிருக்காங்க . ஈரல் , இதயம் , சிறுநீரகத்தையெல்லாம் மெழுகு பேப்பர்ல பொட்டலம் கட்டி வெச்சிருக்காங்க . வேலை சுத்தம் . சரியான வேசிமகன் அந்தக் குள்ளக்கிழவன் . கில்லாடி . “

     அவன் பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ ஞபாகத்துக்கு வந்ததைப்போல சுற்றுமுற்றும் பார்த்தான் . பல் குச்சியை எடுத்து மீண்டும் வாய்க்குள் நோண்டத் தொடங்கினான் .

     பெரியவன் சிகரெட்டை அணைத்துவிட்டு , காவலாள் பக்கம் திரும்பினான் . மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டான் . “ நீ அந்த இரலலைமானைக் கண்டுபிடிக்கறத்துக்குப் பதிலாக முடிவெட்டிக் கொள்ள வந்துவிட்டாயா ? “

     காவலாள் திடுக்கிட்டு , “ அந்த மாதிரியெல்லாம் பேசாதே . “ என்றான் . “ கிழட்டுப்பயலே , அப்புறம் உன்னை கவனிக்க வேண்டிருக்கும் . 

     நாவிதன் குறுக்கிட்டான் . “ போதும் நிறுத்துங்கள் . இது என்னோட இடம் . “

     “ உன் காதுல குத்தியிருக்கணும் , “ என்றான் பெரியவன் .

     “ அப்படியா , முயற்சி செய்து பாரேன் , “ காவலாள் சொன்னான்.

     “ சார்லஸ் , “ என்று நாவிதன் அவனை அடக்கினான் .

     சீப்பையும் கத்தரிக்கோலையும் மேசை மேல் வைத்துவிட்டு , என் தோளின் மீது கைகளை வைத்தான் , ஏதோ நான் துள்ளிக் குதித்து நடுவில் சென்று விடுவேன் என்று நினைத்தவன் போல .

     “ ஆல்பர்ட் , நான் சார்லஸும் , அவன் பையனுக்கும் வருடக்கணக்கா முடிவெட்டிக் கொண்டிருக்கிறேன். இதற்கு மேல் பேச்சு வளரக்கூடாது . “

     நாவிதன் ஒவ்வொருவர் முகத்தையும் தனித்தனியாக நிறுத்தி நிதானமாகப் பார்த்துவிட்டு , மீண்டும் என் தோளை அழுத்தினான் .

     “ வெளியில் வைத்துக் கொள்ளுங்கள் ,  “ என்றான் செய்தித்தாளை வைத்திருந்தவன் . ஏதோ நடக்குமென்ற எதிர்பார்ப்பில் அவன் முகம் சிவந்திருந்தது .

     “ இதோடு போது சார்லஸ் , இதற்கு மேல் ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது . ஆல்பர்ட் , நீதான் அடுத்து வரவேண்டும்  , இப்போது . “ நாவிதன் , செய்தித்தாள் வைத்திருந்தவன் பக்கம் திரும்பினான் . “ நீ இதற்குமுன் பழக்கமில்லைல , மிஸ்டர் , இந்த விவகாரத்தில் நீ எதுவும் மூக்கை நுழைக்காமல் இருந்தால் நல்லது . “

•••••••••••••••••••••••••••••••••••••

     காவலாள் எழுந்தான் . “ நான் அப்புறம் வந்து வெட்டிக் கொள்கிறேன் . கப்பெனி உத்தரவு  . “

     கதவை வேகமாக அறைந்து மூடிக்கொண்டு வெளியேறினான் .

     பெரியவன் தொடர்ந்து சிகரெட் புகைத்தபடி உட்கார்ந்திருந்தான் . சன்னலுக்கு வெளியே பார்த்தான். பின்னங்கையை திருப்பி எதையோ ஆராய்ந்தான் . எழுந்து தொப்பியை அணிந்து கெண்டான் .

     “ ஐயாம் ஸாரி , பில் , “ என்றான் பெரியவன் . “ இன்னும் கொஞ்சநாள் முடி வளரட்டும் . அப்புறம் வரேன் . “

     “ பரவாயில்லை ஆல்பர்ட் . “

     பெரியவன் வெளியில் சென்றதும் , நாவிதன் சன்னலுக்குச் சென்று அவன் செல்வதைப் பார்த்துக கொண்டே பேசினான் ; “ ஆல்பர்ட்டுக்கு எம்ஃபிசிமா வந்தது செத்துப் பிழைத்தான் . நாங்கள் ஒன்றாக மீன் பிடிக்கப் போவோம் . சால்மனை எப்படிப்பிடிப்பது என்றெல்லாம் சொல்லிக்கொடுத்தது அவன்தான் . இந்தப் பெண்கள் இருக்கிறார்களே , கிழவன் மேல் வந்து விழுவார்கள் . அவன் முன்கோபிதான் . ஆனால் எப்போதுமே அவன் கோபத்தைத் தூண்டிவிடுகிறார் போலத்தான் ஏதாவது நடந்து விடுகிறது .

     செய்தித்தாளை வைத்திருந்தவனால் அசையாமல் உட்கார்ந்திருக்க முடியவில்லை . எழுந்து உலாத்தினான் . எல்லாவற்றையும் ஆராய்ந்தான் . தொப்பி ஸ்டாண்ட் , பில்லும் அவன் நண்பர்களும் இருக்கும் புகைப்படங்கள் , ஹார்டுவேர் கம்பெனியின் காலண்டர் . ஒவ்வொரு மாதத்துக்கும் இயற்கை காட்சிகள் இருந்ததை ஒவ்வொன்றாகத் தூக்கிப்பார்த்தான் . அலமாரிக்குச் சென்று சட்டம் போட்டிருந்த பில்லின் முடிதிருத்துநர் லைசன்ஸைக்கூட ஆராய்ந்தான். பின் திரும்பி , “ நானும் போகிறேன் , “ என்று வெளியேறினான் .

     “ சரி, நீங்கள் எப்படி ? “ உங்களுக்கு முடி வெட்டட்டுமா , வேண்டாமா ? “ என்றான் நாவிதன் , ஏதோ நான்தான் எல்லாவற்றுக்கும் காரணம் போல .

•••••••••••••••••••••••••••••••••••••

     நாவிதன் கண்ணாடிக்கு நேராக என் முகத்தைத் திருப்பினான் , என் தலைக்கு இரண்டு பக்கங்களிலும் தன் கைகளைப் பதித்தான் . கடைசி முறையாக என்னைச் சரியாக அமைத்துவிட்டு தன் முகத்தை என் முகத்துக்குப் பக்கத்தில் கொண்டு வந்தான் .

     நாங்கள் இருவரும் ஒன்றாகக் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டிருக்க , அவன் கைகள் இன்னும் என் தலையை அழுத்திக் கொண்டிருந்தன .

     நான் என்னையே பார்த்துக் கொண்டிருந்தேன் . அவனும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் எதையாவது கவனித்ததிருந்தானென்றால் , அது எதனையும் சொல்லவில்லை .

     என் முடிக் கற்றைகளுக்கிடையே விரல்களை ஓட்டினான் . எதையோ யோசித்துக் கொண்டிருப்பவனைப்போல மெதுவாக விரல்களை கேசத்தின் நடுவே துழாவினான் . மென்மையாக , காதலன் வருடுவதைப் போல .

     இது நடந்தது கலிபோர்னியாவில் ஓரிகன் எல்லையோரத்தில் இருந்த கிரஸென்ட் சிடியில் . அடுத்து நானும் உடனே கிளம்பிவிட்டேன் . ஆனால் இன்று அந்த ஊரான கிரெஸென்ட் சிடியையும் , அப்போது என் மனைவியுடன் புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க முயன்று கொண்டிருந்ததையும் ,  அந்தக் காலை வேளையில் அந்த நாவிதனின் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது தீர்மானித்த முடிவையும் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன்.

     அந்த சமயத்தில் என் விழிகள் மூடியிருந்தன . கேசத்துகிடையே அவன் விரல்கள் அளைந்து கொண்டிருந்தன . அதற்குள் முடி வளர்வதைப் போல அப்போது தோன்றியது . அந்த விரல்களின் இனிமையில் என்னிடம் பரவிய அந்த அமைதியை பற்றி இன்று யோசித்துக் கொண்டிருந்தேன் .

 

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாணவனின் மனைவி

எட்கார் கெரெட் - குறுங்கதைகள்

ஒரு சின்ன நல்ல விஷயம் - ரேமண்ட் கார்வர்