ஜூலியன் பார்ன்ஸ்
(தமிழில்: ஜி.குப்புசாமி)
ஒவ்வொரு வருடம் கழியும் போதும் ஓர் உணர்வு மட்டும் எனக்குள்
கூடிக்கொண்டே வருகிறது – நாரைகளைக் காணவேண்டுமென்கிற ஏக்கம். வருடத்தின் இந்தப் பருவத்தில்தான்
அவை வரத்துவங்கும். குன்றின் மீது ஏறி நின்று கொண்டு வானத்தைப் பார்க்கிறேன். இன்றும்
அவை வரவில்லை. காட்டுவாத்துகள்தாம் தென்படுகின்றன. வாத்துகள் அழகானவைதான்; நாரைகள்
இல்லாதபோது.
ஓர் இளம் பத்திரிகை நிருபர் பொழுதைக் கழிப்பதற்கு எனக்கு உதவியாக
இருந்தான். ஹோமரைப் பற்றிப் பேசினோம், ‘ஜாஸ்’ஸைப் பற்றிப் பேசினோம்.The Jazz
Singer இல் எனது இசைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. சில
நேரங்களில் இளைஞர்களின் அறியாமை என்னைக் கிளர்ச்சியடையவைக்கிறது. இத்தகைய அறியாமையும்
ஒருவித நிசப்தம்தான்.
   
      இரண்டு மணிநேரம்
கழித்து ஒரு பூடகமான கேலிக்குரலில் எனது புதிய இசையமைப்பைப் பற்றிக் கேட்டான். நான்
புன்னகைத்தேன். எட்டாவது சிம்ஃபொனியைப் பற்றிக்கேட்டான். இசையை பட்டாம்பூச்சியின் சிறகோடு
ஒப்பிட்டுச் சொன்னேன். விமர்சகர்கள் நான் காலாவதியாகிவிட்டதாகச் சொல்வதைப் பற்றிக்
கேட்டான். நான் புன்னகைத்தேன். சிலர் – அவன் கிடையாதாம் – என் மீது குற்றம் சுமத்துகிறார்களாம்,
அரசாங்கத்தின் உதவித் தொகையைப் பெற்று வரும் நான், எனது கடமைகளிலிருந்து தவறுவதாக.
எனது புதிய சிம்ஃபொனி எப்பொழுது முடிக்கப்படும் என்று கேட்டான். நான் புன்னகைக்கவில்லை.
“அதைமுடிக்கவிடாமல் நீதான் என்னைத் தடுத்துக் கொண்டிருக்கிறாய்” என்று மணியை அடித்து
வெளியே செல்லக் கையைக் காட்டினேன்.
      எனது இளம் வயதில்
ஒருமுறை இரண்டு கிளாரிநெட்களுக்கும், இரண்டு பசூன்களுக்கும் மட்டுமான ஓர் இசைத்தொகுப்பை
அமைத்திருந்தேன் என்பதை அவனுக்குச் சொல்ல விரும்பினேன். அக்காலத்தில் எனக்கிருந்த அசாத்தியமான
நம்பிக்கையின் விளைவு அக்காரியம். ஏனென்றால் அப்போது நாட்டிலேயே இரண்டே இரண்டு பசூனிஸ்டுகள்தான்
இருந்தனர். அவர்களில் ஒருவருக்குக் காசநோய்.
குழந்தைகள் படியேறி வந்து கொண்டிருக்கிறார்கள். எனது ஜென்ம எதிரிகள்!
அவர்களுக்கு ஓர் ஆதர்சமான நபராகவே இருக்க நீங்கள் விரும்பினாலும் உங்களைப் பொருட்படுத்துவதே
இல்லை. ஏதோ காரணங்கள் அவர்களுக்கும் இருக்கின்றன.
கலைஞன் எப்போதுமே தவறாகத்தான் புரிந்து கொள்ளப்படுகிறான். இது
இயல்பானதே. கொஞ்சகாலம் கழித்து இதுவும் பழக்கமாகிவிடுகிறது. நான் திரும்பத் திரும்பச்
சொல்வது, வலியுறுத்துவதெல்லாம், சரியான முறையில் என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளுங்கள்
என்றுதான்.
பாரீஸிலிருந்து Kவின் கடிதம். இசை வேகக்குறிப்புகள் பற்றி அவருக்குச்
சந்தேகங்கள். என்னை உறுதிப்படுத்தக் கேட்கிறார். Alegro இசைத்தொகுப்பிற்கு அவர் தாளப்பொறிக்
குறிப்புகள் இடவேண்டும். இரண்டாவது கூறில் இருக்கும் எழுத்து ‘கே’வில் உள்ள doopu
piu lento மூன்று கால அளவுகளுக்கு மட்டும்தான் பொருந்துமா என்று கேட்கிறார். ‘மேஸ்ட்ரோK,
உங்களது உட்கருத்தை நான் மறுக்கவில்லை. மிகவும் தன்னம்பிக்கையோடு கூறுவது போல் தோன்றினால்
மன்னியுங்கள். ஆனால் இறுதியில் உண்மையை ஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட வழிகளில் வெளிப்படுத்த
முடியும்’ என்று பதில் அளித்தேன்.
பீத்தோவனைப்பற்றி N. அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தது நினைவில்
வருகிறது. காலச்சக்கரத்தின் சுழற்சியில் மொஸார்ட்டினுடைய சிறந்த சிம்ஃபொனிகள் எல்லாம்
எந்தக் காலத்திலும் நிலைத்துநின்றிருக்கும். பீத்தோவனுடையதெல்லாம் வழியில் உதிர்ந்துவிட்டிருக்கும்
என்றார் N. எங்களுக்கிடையே இருக்கிற வித்தியாசம் இதுதான்.N வைத்திருப்பதைப் போன்ற கருத்துகள்
எல்லாம் என்னிடம் இல்லை. புசோனியைப் போலவும் ஸ்டென்ஹாமரைப் போலவும் கூட.
திரு.ஸ்ட்ராவென்ஸ்க்கி எனது தொழிலாக்கம் மோசமான தரத்தில் இருப்பதாகச்
சொன்னது வெளியாகி இருக்கிறது. எனது இத்தனைக் கால வாழ்க்கையில் நான் பெற்ற மிகச் சிறந்த
பாராட்டாக இதை எடுத்துக் கொள்கிறேன். திரு.ஸ்ட்ராவென்ஸ்க்கி பாக்கிற்கும் சமீபகாலப்
புதுமைப்பாணிகளுக்கும் இடையே மேலும் கீழும் ஊஞ்சலாடிக் கொண்டிருப்பவர். இசையின் நுட்பங்கள்
பள்ளிகளில் கரும்பலகைகளையும், நிலைச்சட்டங்களையும் வைத்துக்கொண்டு கற்பிக்கப்படுவதில்லை.
இந்தவிஷயத்தில் திரு I.S வகுப்பில் முதலாவதாக வருவார். ஆனால் என்னுடைய சிம்ஃபொனிகளோடு
அவரது குறைப்பிரசவப் பாசாங்குகளையும் ஒப்பிடுவதென்பது...
எனது மூன்றாவது சிம்ஃபொனியைக் குறை சொல்கிற முயற்சியில் இறங்கியுள்ள
ஒரு ஃபிரெஞ்சு விமர்சகர், ‘கடவுளால் மட்டும்தான் சி.மேஜரில் இசையமைக்க முடியும்’ என்று
எழுதியிருக்கிறார். அவர் சொல்லியிருப்பது முழுக்கச் சரிதான்.
மாலரும் நானும் ஒருமுறை இசையமைப்பைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தோம்.
அவரைப் பொறுத்தவரை சிம்ஃபொனி என்பது இந்த உலகத்தைப் போல அனைத்தையும் கொண்டதாக இருக்க
வேண்டுமாம். ‘சிம்ஃபொனிக்கு வடிவம்தான் அதன் சாரம். அதன் தற்செறிவான பாணியும் ஆழமான
தருக்கமும்தான் அதன் கலைப்பண்புகளின் கூறுகளை ஆதாரமாக இணைக்கிறது’ என்று பதில் அளித்தேன்.
இசை என்பது இலக்கியம் என்றால் அது மோசமான இலக்கியம் வார்த்தைகள்
முடிகிறபோதுதான் இசை தொடங்குகிறது. முடிகிறபோது என்னஆகிறது? நிசப்தம். எல்லாக்கலைகளும்
இசையின் ஸ்தானத்தை அடையவே விழைகின்றன. இசையின் விழைவு என்ன? நிசப்தம். இந்த விஷயத்தில்
நான் வெற்றிபெற்றுள்ளேன். எனது இசைக்காக நான் புகழ்பெற்ற அளவிற்கு, இப்போது எனது நீண்ட
மௌனத்திற்காகவும் புகழ்பெற்றுள்ளேன்.
இப்போதுகூட அற்புதமான ஓர் இசைத்தொகுப்பைச் செய்துவிட முடியும்.
என் மைத்துனன் S இன் புது மனைவியின் பிறந்தநாளுக்காக ஓர் ஒற்றை வாத்திய இசைத் துணுக்கை
உருவாக்கித் தந்துவிடுவேன், ஆனால் அவளுடைய பியானோ பெடல்லிங் அவள் நினைத்துக்கொண்டிருக்கும்
அளவுக்கு நேர்த்தியானதல்ல. அரசாங்கத்தின் கோரிக்கையின்படியும், ஏராளமான ரசிகர்களின்
விண்ணப்பங்களின் பேரிலும் உடன்பட்டுவிடலாம். ஆனால் அது என்னை நானே ஏமாற்றிக் கொள்கிற
வேலையாகத்தானிருக்கும். எனது பயணம் ஏறக்குறைய நிறைவடைந்துவிட்டது. எனது இசையை மிக மோசமாக
வெறுக்கிற என் விமர்சகர்கள்கூட இதில் எந்த விதமான தருக்கநியாயமும் இல்லை என்று ஒப்புக்கொள்கிறார்கள்.
இசையின் தருக்கம் இறுதியில் நிசப்தத்தைத்தான் சென்றடைகிறது.
Aவிடம் இருக்கும் திடமானகுணம் என்னிடம் கிடையாது. என்ன இருந்தாலும்
ஒரு ஜெனரலின் மகளல்லவா? மற்றவர்கள் என்னை மனைவியும், ஐந்து மகள்களும் புடைசூழ பெருமிதத்தோடு
நடந்து செல்கிற புகழ்பெற்ற ஒரு மனிதனாகத்தான் பார்க்கிறார்கள். எனது வாழ்க்கை சன்னிதானத்தில்
A தன்னையே பலிகொடுத்து அர்ப்பணம் செய்துகொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். எனது கலையின்
சன்னிதானத்தில் நான்தான் என் வாழ்க்கையைப் பலியிட்டிருக்கிறேன். நான் ஒரு மிகச்சிறந்த
இசையமைப்பாளன்; ஆனால் ஒரு மனிதனாக என்னை எடுத்துக்கொண்டால்... ம்ம்ம்ம், அது வேறு விஷயம்.
இருந்தும் நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். பல சந்தோஷமான தருணங்களை நாங்கள் பகிர்ந்து
கொண்டிருக்கிறோம். நான் அவளை முதன்முதலாகச் சந்தித்தபோது அவள் எனக்கு ஜோசப் சன்னின்
கடல்கன்னியாக, தனது வயலெட் மெத்தையில் என்னை மிருதுவாகப் பொதிந்து சீராட்டுபவளாகத்தான்
இருந்தாள். பிற்பாடுதான் அனைத்தும் கடினமாக ஆரம்பித்தன. உள்ளேயிருப்பவையெல்லாம் பிசாசுகளாக
உருமாறத்துவங்கின. எனது சகோதரி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். மது, நரம்புத்தளர்ச்சி,
மனச்சோர்வு... 
      சரி, போகட்டும் மரணம் சமீபித்துவிட்டது.
ஓட்டோ ஆண்டர்ஸன் எனது குடும்பத்தின் மூதாதையர்களையெல்லாம் ஆராய்ந்து
பரம்பரை விளக்கப்படம் செய்திருக்கிறார். அது என்னை இம்சைப்படுத்துகிறது.
எனது ஐந்து மகள்களை வீட்டிற்குள் பாடவோ, இசைக்கருவிகளை வாசிக்கவோ
நான் அனுமதிப்பதில்லை. இதனால் என்னைச் சிலர் கொடுங்கோலன் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.
திறமையற்ற வயலினிலிருந்து எழுகிற அபசுரக் கீறிச்சிடல்கள், மூச்சு வாங்க ஒலிக்கிற கவலை
தோய்ந்த புல்லாங்குழல்கள் – எதுவும் கிடையாது. என்ன, ஒரு மாபெரும் இசைக்கலைஞனின் வீட்டில்
இசையே கிடையாதா? ஆனால் A இதையெல்லாம் சரியாகவே புரிந்துவைத்திருக்கிறாள். இசை என்பது
நிசப்தத்திலிருந்து வரவேண்டும். அவளுக்குத் தெரியும். நிசப்தத்திலிருந்து புறப்பட்டு
நிசப்தத்தையே அடைவது.
A மௌனத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறாள். என் மீது குறைபட்டுக்
கொள்ளவும், குற்றம் சுமத்தவும் அவளுக்குத்தான் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன! கடவுளுக்கும்,
அவளுக்கும் மட்டுமே அதெல்லாம் தெரியும். நான் ஒன்றும் தேவாலயங்களில் உதாரணம் காட்டப்பட்டு
புகழப்படுகிற மாதிரியான கணவன் இல்லை. கோத்தன்பர்க்கில் நடைபெற்ற சம்பவங்களுக்குப் பிறகு
அவள் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள். நான் இறந்த பிறகு, எனக்குள் ரிகர்மார்டிஸ்
பரவ ஆரம்பித்ததற்கு அப்புறம் எனது பாக்கெட்டுகளை ஆராயும்போது அக்கடிதம் மற்றவர்களுக்குக்
கிடைக்கும். ஆனால் அதைத் தவிர வேறெப்போதும் அவள் என்னிடம் எதுவுமே குறை சொன்னதில்லை.
மற்றவர்களைப் போல எனது எட்டாவது சிம்ஃபொனி எப்போது தயாராகும் என்று கேட்பதில்லை. எதையும்
கண்டுகொள்ளாத பாவனையில் என்னுடன் வாழ்ந்துவருகிறாள். இரவுகளின் தனிமையில்தான் நான்
இசையமைப்பேன். இல்லை, இரவில் ஒரு பாட்டில் விஸ்கியோடு என் மேசையில் அமர்ந்து வேலை செய்ய
முயற்சி செய்வேன். இசைக்குறிப்புகளின் மீது தலைகவிழ்ந்து, வெற்றுக் காற்றை கைகளில்
இறுக்கி தூக்கத்தில் நான் சரிந்ததும்,  விஸ்கியை
அப்புறப்படுத்துவாள். விடிந்த பிறகு இதைப்பற்றி எதுவும் பேசிக்கொண்டதில்லை.
      முன்பு விட்டிருந்த
மதுப்பழக்கம்தான் தற்போது எனது நம்பிக்கையான தோழன். என்னை முற்றாகப் புரிந்து வைத்திருக்கும்
தோழன்! 
சாப்பிடுவதற்காகத் தனியாகக் கிளம்பிச் சென்றேன். மரணத்தைப் பற்றி
எண்ணங்கள் சூழ்ந்து பிரதிபலிக்கின்றன. காம்ப்பிற்கோ, சொசைட்டே சூசேவிற்கோ, கானிக்கிற்கோ
சென்று இந்த விஷயத்தைப் பற்றி மற்றவர்களுடன் விவாதிக்கலாம். Man lebt nur einmal விசித்திரம்.
காம்ப்பில் உள்ள எலுமிச்சை மேசைக்குச் சென்றேன். A வால் இதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
சீனர்களுக்கு எலுமிச்சை என்பது மரணத்தின் சின்னம். ‘கையில் எலுமிச்சம்
பழத்தோடு அடக்கம்’ செய்யப்படுகிற அன்னா மரியா லென்கிரன்னின் கவிதை அற்புதமானது. மரணம்
குறித்த சிந்தனைகள் என்றாலே A விற்கு ரொம்பவும் அருவருப்பு. மரணம் குறித்துச் சிந்திக்க
யாருக்கும் அனுமதி கிடைப்பதில்லை; பிணத்திற்குத்தவிர.
ஒரு நாரைகூட கண்ணில் படவில்லை. ஆனால் அவற்றின் ஒலி மட்டும் கேட்கிறது.
மேகங்கள் தாழ்வாக மிதக்கின்றன. அந்தக் குன்றின்மீது நான் நின்றிருக்க, மேகத்திற்கு
மேலிருந்து நாரைகளின் கத்தல்கள் முழுத்தொண்டையிலிருந்து ஒலிக்க அவை தெற்கு நோக்கிக்
கோடைகாலத்திற்காகச் சென்று கொண்டிருப்பது கேட்கிறது. கண்களுக்குப் புலப்படாதபோது இன்னமும்
அழகாக. இன்னமும் மர்மமாக இருக்கின்றன. ஆழ்ந்த இனிய குரலோசையைச் சொல்லித் தருகின்றன.
அவற்றின்இசை. எனதுஇசை. இசை. இதுதான், இதுவேதான், குன்றின் மீது நின்று கொண்டிருக்கிறீர்கள்.
மேகத்திற்கு அப்பாலிருந்து கேட்கிற சப்தங்கள் உங்கள் இதயத்திற்குள் ஊடுறுவுகின்றன.
இசை - எனது இசைகூட - எப்போதுமே தெற்கு நோக்கியே செல்கின்றன. கண்ணுக்குப் புலப்படாமல்.
இப்போதெல்லாம் எனது நண்பர்கள்கூட என்னைத் தனியாக விட்டுவிட்டுச்
சென்று விடுகின்றனர். இதற்குக் காரணம் எனது வெற்றிகளா அல்லது என் தோல்விகளா? தெரியவில்லை.
இதுதான் முதுமைஎன்பது.
ஒருவேளை நான் கடினமான மனிதன்தான் போலிருக்கிறது. ஆனால் அந்த
அளவிற்குக் கடினமானவனும் அல்ல. இதுவரை நான் எப்போது காணாமல் போனாலும், அவர்களுக்கு
என்னை எங்கே கண்டுபிடிப்பது என்று தெரிந்திருக்கிறது. ஆயிஸ்டரும் ஷாம்பெய்னும் அளிக்கும்
மிகச்சிறந்த உணவகங்களில்.
      நான் யு.எஸ். சென்றிருந்தபோது,
நான் சுயமாக சவரம் செய்துகொண்டதேயில்லை என்று தெரிந்தபோது அவர்களுக்கு ஒரே ஆச்சரியம்.
ஏதோ பிரபு குடும்பவாசி போல நினைத்துக்கொண்டார்கள். அம்மாதிரியான பிரமைகள் எல்லாம் எனக்குக்
கிடையாது. சுயமாக சவரம் செய்துகொண்டு நேரத்தை வீணடிக்க விரும்பாததுதான் காரணம். மற்றவர்கள்
அதை எனக்காகச்செய்யட்டும்.
இல்லை, அது உண்மையல்ல. நான் கடினமான மனிதன்தான். என் அப்பாவைப்
போலவும், என் தாத்தாவைப் போலவும். என் விஷயத்தில் நான் ஒரு கலைஞனாகவும் இருப்பது இதை
இன்னும் சிக்கலாக்குகிறது எனது ’நம்பிக்கையான, முழுமையாகப் புரிந்து வைத்திருக்கும்
தோழனால்’ மேலும் மோசமடைந்திருக்கிறேன். சில நாட்களில் நான் எழுதுகிற இசைக்குறிப்புகளில்
அசாதாரணமான திருத்தங்கள் தேவைப்படுகின்றன. கைகள் நடுங்கிக் கொண்டிருக்கையில் இசைக்குறிப்புகள்
எழுதுவது சிரமம். இசை நிகழ்ச்சியை நடத்துவது சிரமம். பல விதங்களில், என்னோடு வாழ்கிற
Aவின் வாழ்க்கை தியாக வாழ்க்கைதான். ஒப்புக்கொள்கிறேன்.
      கோத்தன்பர்க்.
இசை நிகழ்ச்சி துவங்குவதற்கு முன் நான் காணாமல் போயிருந்தேன். வழக்கமாக நான் இருக்கும்
இடங்கள் எதிலும் காணப்படவில்லை. Aவின் நரம்புகள் சிதறடிக்கப்பட்டன. ஆனாலும் ஏதோ நம்பிக்கையில்
அரங்கத்திற்குச் சென்றிருக்கிறாள். ஆனால் மிகச்சரியான நேரத்தில் நான் அரங்கின் வாசலில்
தோன்றியதும் Aவுக்குப் பெரும் ஆச்சரியம். வில்லை எடுத்து, இசைக்கோலை உயர்த்த, நிகழ்ச்சி
தொடங்கியது. நிகழ்ச்சி துவங்கிய சிறிது நேரத்திலேயே, எனக்குள் ஏதோ அறுந்தது. ஒத்திகைகளில்
நிகழ்கிற மாதிரி என்னுடைய தொடர்புகள் உடைந்து விழுந்தன. பார்வையாளர்களுக்குத் திகைப்பு.
வாத்தியக்காரர்களுக்கு ஒன்றும் புரியாமல் குழப்பம். சட்டென ஒரு புதிய வேகமான தாளகதியை
எடுத்து முதலிலிருந்து மீண்டும் தொடங்கினேன். அதன்பிறகு நடந்ததெல்லாம் பிரளயம்! இவை
அனைத்தையும் A முகத்தில் சலனமின்றி மௌனமாகக் கவனித்துக் கொண்டிருந்தாள். ரசிகர்களிடம்
ஒரே கொந்தளிப்பு.  பத்திரிகையாளர்கள் கௌரவமானதொரு
இடைவெளியில் என்னைக் கவனித்துக்கொண்டிருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் நண்பர்களோடு
அரங்கிற்கு வெளியே நின்றுகொண்டிருந்தேன். எனது பாக்கெட்டிலிருந்து விஸ்கி பாட்டிலை
எடுத்துப் படிக்கட்டில் போட்டு உடைத்தேன். அதன்பிறகு நடந்தவை எதுவும் ஞாபகத்தில் இல்லை
.
      மறுநாள் வீட்டில்
காலை அமைதியாக காபியை அருந்திக் கொண்டிருந்தேன். அவள் என் முன் வந்து ஒரு கடிதத்தை
என்னிடம் தந்தாள். முப்பது வருடத் தாம்பத்தியத்தில், என் வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டு
எனக்கு கடிதம் எழுதித் தருகிறாள். அவளது கடித வார்த்தைகள் இன்னமும் என்னுடன் இருக்கின்றன.
‘எனது பிரச்சினைகளுக்குத் தீர்வை ஆல்கஹாலில் தேடுகிற ஓர் உபயோகமற்ற கோழை நான். குடிப்பதால்
புதிய மாஸ்டர்பீஸ்களை உருவாக்கிவிடமுடியும் என நம்பி ஏமாந்து போகிற முட்டாள். இது மாதிரி
போதையில் வந்து இசை நிகழ்ச்சியைக் கேலிக்கூத்தாக்கி மக்களின் ஏளனத்தைச் சம்பாதிக்கிற
இந்த அவலத்தைக் காண அவளுக்குச் சகிக்கவில்லை, இனி எந்த நிகழ்ச்சிக்கும் என்னுடன் அவள்
வரப்போவதில்லை, 
      எந்த பதிலையும்
அவளுக்குத் தரவில்லை. பேசவும் இல்லை. செய்கையில் காட்ட விரும்பினேன். கடிதத்தில் அவள்
சொன்னமாதிரி அதற்குப் பிறகு எந்த நிகழ்ச்சிக்கும் என்னுடன் வரவில்லை. கோபன்ஹேகன், மார்மோ
என நான் எங்கு செல்கிற போதும் அவளது கடிதத்தை எடுத்துக்கொண்டே செல்கிறேன். அந்தக் கடிதத்தின்
உறையில் எனது மூத்த மகளின் பெயரை எழுதி வைத்திருக்கிறேன். நான் இறந்த பிறகு, அவள் அம்மா
எனக்கு என்ன எழுதினாள் என்பது அவளுக்குத் தெரியட்டும்.
முதுமை என்பது ஒரு இசைக் கலைஞனுக்கு எத்தகைய கொடுமையான விஷயமாக
இருக்கிறது!                               
                           முன்னைப் போல விஷயங்கள் எதுவும் வேகமாக
நடப்பதில்லை. சுயவிமர்சனம் என்பது சாத்தியமில்லா ஆழங்களுக்குச் செல்கிறது. மற்றவர்களுக்குத்
தெரிவதெல்லாம் புகழ், கைத்தட்டல்கள், கடல் தாண்டியும் ஆதரவாளர்கள்.... எனது காலணிகளும்
சட்டைகளும் பெர்லினில் செய்யப்படுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். Homo diurnalis இம்மாதிரியான
வெற்றியின் பந்தாக்களை ரசிக்கக்கூடும். ஆனால் Homo diurnalis மனித இனத்தின் மிகத் தாழ்ந்த
வடிவம் என்று கருதுகிறேன்.
சில்லிட்டுப் போயிருக்கும் மண்ணிற்குள் எனது நண்பர் தாய்வோ கூலா
அடக்கம் செய்யப்பட்ட தினம் நினைவிற்கு வருகிறது. அவர் ஜேகர் படைவீரர்களால் தலையில்
சுடப்பட்டு, சில வாரங்கள் கழித்து இறந்திருந்தார். அவரது இறுதி அஞ்சலியின் போது கலைஞர்களின்
வாழ்வு என்பது அவலமாகவே இருந்து வருவதைப் பற்றிப் பேசினேன். எத்தனை படைப்புகள், எவ்வளவு
திறமையும் துணிவும்.., பிறகு முற்றாக அறுந்து விடுகிறது. தவறாகப் புரிந்துகொள்ளப்படுதலும்
அதன்பின் புமறக்கப்படுதலுமே இத்தகைய கலைஞர்களின் விதியாயிருக்கிறது. கலைஞன் மனநோயிலிருந்து
தப்பிக்கவே தனது கலையை உபயோகிக்கிறான் என ஃபிராய்ட் சொல்வதாக எனது நண்பர் லாகர்போர்க்
கூறுவார். வாழ்க்கையை முழுமையாக வாழ இயலாத கலைஞனுக்கு, படைப்புத்திறனே நிவாரணம். இது
வாக்னருடைய கருத்தின் ஒரு நீட்சிதான். நமது வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வாழ்ந்தால்
கலைகளுக்கு வாழ்க்கையில் அவசியம் இல்லை என வாக்னர் வாதிடுகிறார். எனக்கென்னவோ இவர்கள்
இதனைத் தலைகீழாகப் பார்க்கிற மாதிரி தோன்றுகிறது. கலைஞன் என்பவனுக்கு மனநோய்க்கான கூறுகள்
உண்டு என்பதை நான் அறிவேன். அதுவும் நான் எப்படி அதை மறுக்க முடியும்? நிச்சயமாக நானும்
ஒருவகை மனநோயாளிதான்; அடிக்கடி பெரும் மனச்சோர்வில், துக்கத்தில் அமிழ்ந்து போகிறவன்தான்:
ஆனால் இதற்குக் காரணம் நான் கலைஞனாக இருப்பதுதானே தவிர, எனது கலை இதற்கெல்லாம் காரணமல்ல.
மிக உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்துவிட்டு, அதனை எட்டவியலாமல் பாதியிலே சரிய நேர்கிறவனுக்கு
எப்படி மனநோய் தூண்டப்படாமல் இருக்க முடியும்? நாம் ஒன்றும் ட்ராம் நடத்துனர்கள் அல்ல,
பயணச்சீட்டில் துளையிட்டுக்கொண்டு, நிறுத்தங்களின் பெயரைச் சரியாகக் கூவிக்கொண்டிருப்பதற்கு.
தவிர வாக்னருக்கு நான் சொல்வது இதுதான்: கலைகள் மீதான ரசனை என்கிற மென்மையான பரவசத்தை
விட்டுவிட்டு, வேறு எதனையும் முழுமையாக அனுபவித்து வாழ்கிறதொரு வாழ்க்கை எப்படி சாத்தியம்!
      ஃபிராய்டின் தியரி
இசைக்கலைஞனுக்குப் பொருந்தாது என்றே நினைக்கிறேன். இசைக்குறிப்புகளைக் கொண்டு விதிகளை
உருவாக்குவதென்பது நாட்டுக்காகவும், அரசனுக்காகவும் உயிரிழப்பதைவிட கொஞ்சம் உயர்வானதுதான்.
உருளைக்கிழங்கு பயிர்வைப்பதற்கும், டிக்கெட்டுகளில் துளையிடுவதற்கும், இதுபோன்ற உபயோகமான
வேலைகள் பலவற்றைச் செய்வதற்கும் எத்தனையோ பேர் இருக்கும்போது சில கலைஞர்களும் இங்கு
இருக்கட்டுமே.
வாக்னர்! அவரது கடவுள்களும், நாயகர்களும் என் தசைகளையெல்லாம்
ஐம்பது வருடங்களாகத் தேய வைத்திருக்கிறார்கள்.
ஜெர்மனியில் சில புதிய இசையைக் கேட்க என்னை அழைத்துச் சென்றனர்.
“எல்லா வண்ணங்களையும் ஒன்றாகக் கலந்து காக்டெய்ல் செய்கிறீர்கள். இங்கே நான் வெறும்
குளிர்ந்த நீரை மட்டும் கொண்டு வந்திருக்கிறேன்” என்றேன். உருகிய பனிதான் எனது இசை.
அதைக் கேட்கையில் அதனுடைய உறைந்த ஆரம்பங்களை நீங்கள் கவனிக்கலாம். அதனது ஆழ்ந்த குரலில்
எனது இசையின் ஆரம்பகால நிசப்தத்தை நீங்கள் உணரலாம்.
எனது இசையைப் பெரிதும் ரசிக்கிற நாடு எதுவென்று கேட்டனர். இங்கிலாந்து
என்றேன். குறுகிய நாட்டுப்பற்றும், பிறநாட்டுப் பழிப்புணர்வும் இல்லாத தேசம் அது. எனது
பயணம் ஒன்றின்போது ஒரு குடியேற்ற அலுவலர் என்னை அடையாளம் கண்டுகொண்டிருக்கிறார். திரு.வாகன்
வில்லியம்ஸை நான் சந்தித்த போது நாங்கள் ஃபிரெஞ்சில் பேசிக்கொண்டிருந்தோம். இசையைத்
தவிர்த்து எங்களுக்குத் தெரிந்த ஒரே பாஷை. எனக்கு ஏராளமான நண்பர்கள் இங்கே இருக்கிறார்கள்
என்று ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு குறிப்பிட்டேன். எதிரிகள்கூட இருக்கிறார்கள் என்று
நம்புகிறேன். போர்மௌத்தில் ஓர் இசை மாணவன் வந்து வணக்கம் செலுத்தினான். பிறகு, வெகு
எளிய தொனியில் லண்டனுக்கு வந்து எனது இசைநிகழ்ச்சியைக் கேட்க தனக்கு வசதியில்லை என்று
குறிப்பிட்டான். நான் எனது பாக்கெட்டில் கையைவிட்டு “உனக்குப் பத்து பவுண்ட் ஸ்டெர்லிங்
தருகிறேன்.” என்றேன்.
எனது ஆர்கெஸ்ட்ரேஷன் பீத்தோவனைவிடச் சிறந்தது. நான் எடுத்துக்கொள்கிற
பொருட்களும் உயர்ந்தவையே. ஆனால் அவர் ஒரு ஒயின் தேசத்தில் பிறந்துவிட்டார். நான் யோகர்ட்டைக்
கொண்டாடும் ஒரு தேசத்தில் பிறந்திருக்கிறேன். என்னைப் போன்றதொரு திறமை, மேதமை எல்லாம்
யோகர்ட்டில் வளரமுடியாது.
யுத்தத்தின்போது கட்டிட வடிவமைப்பாளர் நாட்மென், வயலின் பெட்டி
வடிவத்தில் ஒரு பார்சலை அனுப்பியிருந்தார். அது ஒரு வயலின் பெட்டியேதான். அதற்குள்
அற்புதமான பொரிக்கப்பட்ட ஆட்டுக்கால் மாமிசம் இருந்தது. அதற்குப் பிரதியுபகாரமாக ‘ஃப்ரிடோலின்ஸ்
ஃபாலி’ இசையமைத்து நார்ட்மனுக்கு அனுப்பிவைத்தேன். அவர் ஒரு கப்பெல்லா பாடகர் என்பதை
ஏற்கெனவே அறிவேன். ஒரு சுவைமிக்க வயலினுக்காக நன்றி தெரிவித்தேன். அதன் பிறகு வேறொருவர்
ஒரு பெட்டி நிறைய லாம்ப்ரே மீன்கள் அனுப்பி வைத்திருந்தார். அதற்குப் பதிலாக எனது தந்தி
இசைத்தொகுப்பு ஒன்றை அனுப்பி வைத்தேன். கலைஞர்களுக்கும், புரவலர்களுக்கும் பரஸ்பரம்
இருக்க வேண்டிய உறவு தொடர்கிற வரையிலும், கலைஞன் உணவுக்காகத் தனது கவலைகளைத் திருப்பாத
வரையிலும், இசையும் மற்ற கலைகளும் தொடர்ந்து செழித்து வளர்ந்து கொண்டிருக்கும். எனக்கு
உணவு அனுப்பப்பட்டது. இசையாகத் திருப்பித் தந்திருக்கிறேன். ஏறக்குறைய இது தற்செயலான
தொருவிஷயமாக மாறியிருக்கிறது.
      டிக்டோனியஸ் எனது
நான்காவது சிம்ஃபொனியை ‘மரத்தூள் ரொட்டி’ என கிண்டல் செய்திருக்கிறார். மரத்தூள் ரொட்டி
என்றால், பழங்காலத்தில், பஞ்சத்தின் காரணமாக, ரொட்டிமாவோடு மரத்தூள் சேர்த்து ஏழைகள்
ரொட்டி செய்வார்கள். அவை உயர்ந்த தரத்தில் இருக்காவிட்டாலும் பசியை மட்டுமாவது போக்கக்கூடுமே.
காலிஷ், எனது நான்காவது சிம்ஃபொனி வாழ்க்கையைப் பற்றி ஒரு அழுமூஞ்சிப் பார்வையைக் கொண்டிருப்பதாகச்
சொல்லியிருந்தார். 
      நான் இளைஞனாக இருந்தபோது
விமர்சனம் என்னை பாதித்திருக்கிறது. இப்போது நான் மனச்சோர்வடையும் நேரத்திலெல்லாம்
என்னைப் பற்றி மோசமாக எழுதப்பட்ட விமர்சனங்களை எடுத்துப் படிக்கிறேன். உடனே உற்சாகம்
பீறிடத் துவங்குகிறது! எனது சகாக்களிடம் சொல்வேன். ‘எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.
உலகத்தின் எந்த நகரத்திலும் விமர்சகன் எவனுக்கும் சிலை வைத்திருக்கவில்லை.’
      எனது நான்காவது
சிம்ஃபொனியின் மெதுவான இசையை எனது இறுதிச்சடங்கின் போது வாசிக்கவேண்டும். அந்த இசைக்குறிப்புகளோடு
ஒரு எலுமிச்சம்பழத்தையும் என் கையில் வைத்துப் புதைக்கவேண்டும்.
இல்லை, இந்த மாதிரி எலுமிச்சம்பழத்தை என் செத்துப் போன கையில்
திணித்து நான் புதைக்கப்படுவதை A அனுமதிக்கமாட்டாள். எனது அறையில் விஸ்கி பாட்டில்களை
அப்புறப்படுத்துவதைப் போலவே எலுமிச்சம் பழத்தையும் அப்புறப்படுத்திவிடுவாள்.ஆனால்எனது
‘மரத்தூள்ரொட்டி ’சிம்ஃபொனி இசைக்கப்படுவதற்கு எதுவும் ஆட்சேபணை தெரிவிக்கமாட்டாள்.
எனது எட்டாவது சிம்ஃபொனி. இதைத்தான் எல்லோரும் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்.
எப்போது அதை நாம் வெளியிட முடியும்? அதன் ஆரம்பத்தையாவது கொஞ்சம்....? அதை K அவர்களிடம்
தந்து நடத்தித் தரச்சொல்வீர்களா? எதற்காக இத்தனை நாட்கள் பிடிக்கிறது உங்களுக்கு? தங்க
முட்டைகள் இடுவதை வாத்து ஏன் நிறுத்திக்கொண்டது?
      கனவான்களே, ஒரு
புதிய சிம்ஃபொனி வரலாம்; வராமலும் போகலாம். இதை உருவாக்க இதுவரை எனக்குப் பத்து, இருபது,
ஏன் ஏறக்குறைய முப்பது வருடங்கள் பிடித்திருக்கிறது. ஒருவேளை முப்பது வருடங்களுக்கு
மேலும் ஆகலாம். அல்லது முப்பது ஆண்டுகள் கழிந்த பின்பும் முடிக்கப்படாமல் இருக்கலாம்.
ஒருவேளை அனைத்தும் நெருப்பில் பொசுங்கி முடியலாம்.நெருப்பு, அதன்பின் நிசப்தம். இப்படியாகத்தான்
அனைத்தும் முடிகின்றன. ஆனால் என்னைச் சரியான விதத்தில் தவறாகப் புரிந்து கொள்ளுங்கள்.
மௌனத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை. மௌனம்தான் என்னைத் தேர்ந்தெடுக்கிறது.
Aவின் தினம். என்னைக் காளான்களைப் பறித்துவரச் சொல்கிறாள். காளான்கள்
இருப்பது காட்டிற்குள். இம்மாதிரி வேலையெல்லாம் எனக்கு ஆகாது. ஆனாலும் எனது அற்புத
உழைப்பாலும், திறமையாலும், தைரியத்தாலும் ஒரே ஒரு காளானைக் கண்டுபிடித்தேன். அதை மெதுவாகப்
பறித்து என் நாசிக்கருகே கொண்டு சென்று முகர்ந்தேன். Aவின் சிறிய கூடையில் அதை மரியாதையோடு
வைத்தேன். சட்டையின் கைகளில் படிந்திருந்த பைன் மரத்தின் ஊசி ஊசியான முட்களை உதறினேன்.
கடமையைச் செவ்வனே செய்து முடித்துவிட்டதால் வீட்டிற்குத் திரும்பினேன். அதன்பின் டூயட்
இசைத்தோம்.
பண்டைய போர்ச்சுக்கல்லில் குற்றவாளிகளை மக்கள் எதிரே பொது இடத்தில்
உயிரோடு கொளுத்தித் தண்டனையை நிறைவேற்றுவார்கள். Auto-da-fe. எனது இசைக் குறிப்புகளின்
கையெழுத்துப்படிகள் எல்லாவற்றையும் அழுக்குக் கூடையில் சேகரித்துக் கொண்டு Aவின் எதிரிலேயே
சமையல் அறையில் உள்ள கணப்பில் ஒவ்வொன்றாய் இட ஆரம்பித்தேன். கொஞ்ச நேரத்திற்குக்கூட
அவளால் அங்கு நின்று கொண்டிருக்க முடியவில்லை. மௌனமாக வெளியேறினாள். எனது அற்புதமான
தீர்ப்பைத் தொடர்ந்து நிறைவேற்றி முடித்தேன். அனைத்தும் பொசுங்கிய பின்பு எவ்வளவு நிச்சலனமான
அமைதியையும், மிகத் துல்லியமான சந்தோஷத்தையும் உணர்ந்தேன்! இது ஓர் அற்புததினம்.
விஷயங்கள் எப்போதும் போல வேகமாக நடப்பதில்லை. ஆனால் வாழ்வின்
கடைசித் தருணம் rondo allegro வைப்போல இருக்கவேண்டுமென ஏன் எதிர்பார்க்கவேண்டும்? இதை
எப்படி சரியாக அறுதியிட முடியும்? Maestoso? சிலர்தான் அதிர்ஷ்டசாலிகள். Large – கொஞ்சம்
கூடுதலான கண்ணியத்தோடு இருக்கும். Largemente a appassionato? ஒரு கடைசித் தருணம் இதைப்போலத்
துவங்கும்தான் – எனது முதல் சிம்ஃபொனிகூட அப்படித்தான். ஆனால் ஒரு இசை நடத்துனர் ஆர்கெஸ்ட்ராவை
விளாசித் தள்ளிக்கொண்டு பெரும் வேகத்தோடும் இரைச்சலோடும் ஒரு allegro mottoவை நடத்துகிற
மாதிரி வாழ்க்கையில் விஷயங்கள் நடப்பதில்லை. நிஜ வாழ்க்கையில் காணக்கிடைப்பதெல்லாம்
மேடையில் கோமாளித்தனமாக நடந்து கொள்கிற ஒரு குடிகாரனையும், தனது சொந்த இசையைக்கூட அடையாளம்
கண்டுகொள்ள இயலாத, ஒத்திகைக்கும், உண்மை நிகழ்ச்சிக்கும் வித்தியாசம் தெரியாத ஒரு கிழவனையும்தான்.
இதை tempo buffo என குறிக்கலாமா? வேண்டாம். வெறும் Sotenuto என்று மட்டும் குறித்து,
நடத்துனரின் முடிவுக்கு விட்டுவிடலாம். ஏனென்றால் உண்மையை ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட
வழிகளில் வெளிப்படுத்தலாம் அல்லவா.
இன்று வழக்கம் போல காலை நடைக்குச் சென்றேன். குன்றின் மீது ஏறி,
வடக்குத் திசையைப் பார்த்து நின்றேன். “என் இளமைக்காலப் பறவைகளே!” வானத்தை நோக்கி உரக்கக்
கூவினேன். “என் இளமைக்காலப் பறவைகளே!” காத்திருந்தேன். இன்றைய தினம் மேகங்களால் கனத்திருக்கிறது.
தாழ்வான அடர்ந்த மேகங்கள். தொலைவில் நாரைகள் மேகத்திற்குக் கீழே பறந்து வருவது தெரிந்தது.
அருகில் நெருங்கும் தறுவாயில் ஒன்று மட்டும் கூட்டத்திலிருந்து விலகி, நேராக என்னை
நோக்கிப் பறந்து வந்தது. சந்தோஷக் கூவலோடு என் இரு கைகளையும் உயரத் தூக்கி விரிக்க,
என்னைச் சுற்றி தலைக்கு மேலே வளைய வந்தது. அதனிடமிருந்து ஓர் உரத்த பிளிறல். பிறகு
அதன் கூட்டத்தோடு சேர்ந்து கொள்ளத் திரும்பியது. தெற்கு நோக்கி நீண்ட பயணம். எனது பார்வையிலிருந்து
அவை மறைகிற வரை பார்த்துக் கொண்டிருந்தேன். எனது செவிகளில் அவற்றின் ஓசைகள் தேய்ந்து
அடங்கும் வரை கேட்டுக்கொண்டு நின்றிருந்தேன். பின் நிசப்தம் திரும்பியது.
      மெதுவாக திரும்பி
வீட்டிற்கு நடந்தேன். வாசலில் நின்று எலுமிச்சம்பழம் எடுத்துவரச் சொல்லி அழைத்தேன்.
-------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக